“யெகோவா தம்முடைய மக்களை கைவிடமாட்டார்”
“நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.”—சங்கீதம் 34:19.
1, 2. (அ) யெகோவா தம்முடைய மக்களை இன்றைக்கு எவ்வாறு ஆசீர்வதித்து வருகிறார்? (ஆ) கிறிஸ்தவர்கள் அநேகர் எதை எதிர்ப்படுகிறார்கள், மேலும் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, யெகோவாவின் வணக்கத்தார் ஆவிக்குரிய பரதீஸில் வாசம்பண்ணுகிறார்கள். (2 கொரிந்தியர் 12:1-4) அன்பு, ஐக்கியம் போன்ற பண்புகளால் வர்ணிக்கப்படும் சர்வதேச கூட்டுறவைச் சேர்ந்தவர்கள் யெகோவாவின் சாட்சிகள். (யோவான் 13:35) அவர்கள் பைபிள் சத்தியங்களைப் பற்றிய ஆழமான, பரந்த அறிவை அனுபவித்து மகிழுகிறார்கள். (ஏசாயா 54:13) யெகோவா, தம்முடைய ஆவிக்குரிய கூடாரத்தில் விருந்தினர்களாக இருக்கும் சிலாக்கியத்தைக் கொடுத்திருப்பதற்காக அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்!—சங்கீதம் 15:1.
2 யெகோவாவின் அமைப்பிலுள்ள அனைவருமே ஆவிக்குரிய செழுமையை அனுபவிக்கிறபோதிலும், சிலர் ஏதாவது ஒரு வகையான துன்பங்களை அனுபவிப்பது போலவும் மற்றவர்கள் ஓரளவு சமாதானத்துடனும் அமைதியுடனும் வாழ்வது போலவும் தெரிகிறது. கிறிஸ்தவர்கள் அநேகர் நெடுநாட்களாய் பரிதாபகரமான நிலையிலும் விடுதலை வருமென்ற எந்தவொரு நம்பிக்கையுமில்லாமலும் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் சோர்ந்துபோவது இயல்பானதே. (நீதிமொழிகள் 13:12) பெருந்துயரங்கள் கடவுளுடைய வெறுப்பின் அத்தாட்சிகளா? கிறிஸ்தவர்கள் சிலருக்கு விசேஷ பாதுகாப்பை கொடுத்துவிட்டு மற்றவர்களை யெகோவா கைவிட்டுவிடுகிறாரா?
3. (அ) தம்முடைய மக்கள் படும் துன்பங்களுக்கு யெகோவா காரணரா? (ஆ) யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாரும்கூட ஏன் மனித துயரத்தை அனுபவிக்கிறார்கள்?
3 பைபிள் இவ்வாறு பதிலளிக்கிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) யெகோவாவே தம்முடைய மக்களின் பாதுகாவலரும் ஆதரவாளருமானவர். (சங்கீதம் 91:2-6) “யெகோவா தம்முடைய மக்களை கைவிடமாட்டார்.” (சங்கீதம் 94:14, NW) உண்மையுள்ள வணக்கத்தார் துன்பப்பட மாட்டார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தாது. தற்போதைய உலக காரிய ஒழுங்குமுறை, பிறவியிலேயே அபூரணராக இருக்கும் ஆட்களால் ஆளப்படுகிறது. அநேகர் நெறிபிறழ்ந்தவர்களாய் இருக்கிறார்கள், மேலும் சிலர் முற்றிலும் படுமோசமானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரும் ஞானத்திற்காக யெகோவாவை நோக்கியிருப்பதில்லை. இது, மனிதர் பெருந்துயரப்படுவதில் விளைவடைகிறது. மனித அபூரணத்தாலும் பொல்லாப்பாலும் வரும் வருத்தகரமான விளைவுகளை யெகோவாவின் ஜனங்கள் எல்லா சமயத்திலும் தவிர்க்க முடியாது என்று பைபிள் வெளிப்படையாக சொல்லுகிறது.—அப்போஸ்தலர் 14:22.
உண்மைப் பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் துன்பத்தை எதிர்பார்க்கிறார்கள்
4. இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையில் வாழும்வரை எல்லா கிறிஸ்தவர்களும் எதை எதிர்பார்க்கலாம், ஏன்?
4 இயேசுவை பின்பற்றுவோர் இந்த உலகத்தின் பாகமல்லாதவர்களாய் இருந்தபோதிலும், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் வாழ்கிறார்கள். (யோவான் 17:15, 16) சாத்தானே இந்த உலகத்தின் திரைமறைவிலிருந்து ஆதிக்கம் செலுத்தும் சக்தியென பைபிள் அவனை அம்பலப்படுத்துகிறது. (1 யோவான் 5:19) எனவே, அனைத்து கிறிஸ்தவர்களும் ஏதாவதொரு சமயத்தில் பயங்கரமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டே ஆகவேண்டும். அதை மனதிற்கொண்டவராய், அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு சொல்கிறார்: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே.” (1 பேதுரு 5:8, 9) ஆம், கிறிஸ்தவர்களின் முழுக் குடும்பமும் துன்பங்களை எதிர்பார்க்கலாம்.
5. உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் சோக சம்பவங்களை அனுபவிப்பார்கள் என்பதை இயேசு எப்படி தெளிவாக்கினார்?
5 யெகோவாவுக்கு நாம் ஆழ்ந்த அன்புசெலுத்தி அவருடைய நியமங்களுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருந்தாலும்கூட, வாழ்க்கையில் நாம் சோக சம்பவங்களை அனுபவிப்போம். மத்தேயு 7:24-27-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள உவமையில் இயேசு இதை தெளிவுபடுத்தினார்; அதில், அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கும் கீழ்ப்படியாதவர்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்பித்தார். கீழ்ப்படிதலுள்ள சீஷர்களை கற்பாறையின்மீது வீட்டைக் கட்டுகிற புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிட்டார். தம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களை மணலின்மீது வீட்டைக் கட்டுகிற புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிட்டார். கடும் புயலுக்குப்பின், கற்பாறையின்மீது கட்டப்பட்ட வீடே நிலைத்திருக்கிறது. புத்தியுள்ள மனிதனுடைய வீட்டைக் குறித்ததிலோ, “பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை” என்பதை கவனியுங்கள். புத்தியுள்ள மனிதன் எப்பொழுதுமே சமாதானமாயும் செளக்கியமாயும் இருப்பான் என இயேசு வாக்களிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அந்த மனிதனுடைய விவேகம் புயலை எதிர்த்து நிற்பதற்கு அவனை தயார்படுத்தும். இதேபோன்ற கருத்தே விதைக்கிறவனுடைய உவமையிலும் கொடுக்கப்படுகிறது. ‘உண்மையும் நன்மையுமான இருதயம்கொண்ட’ கீழ்ப்படிதலுள்ள வணக்கத்தாரும்கூட, ‘பொறுமையுடனே பலன்கொடுப்பார்கள்’ என இயேசு அதில் விளக்குகிறார்.—லூக்கா 8:4-15.
6. தீயினால் அழிந்துபோகாத பொருட்களைப் பற்றிய பவுலின் உதாரணத்தில், யார் கடும் பரீட்சையை அனுபவிக்கிறார்கள்?
6 கொரிந்தியர்களுக்கு எழுதுகையில், சோதனைகளை எதிர்ப்பட நமக்கு உதவுகிற நிலைத்துநிற்கும் பண்புகளுக்கான தேவையை விளக்க அப்போஸ்தலன் பவுல் உருவக மொழிநடையைப் பயன்படுத்தினார். தீயினால் அழிந்துபோகாத பொருட்களாகிய தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த மணிக்கற்கள் போன்றவை தேவ பக்திக்குரிய குணங்களுக்கு ஒத்திருக்கின்றன. (ஒப்பிடுக: நீதிமொழிகள் 3:13-15; 1 பேதுரு 1:6, 7.) மறுபட்சத்தில், மாம்சத்திற்குரிய பண்புகள் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. பின்பு பவுல் சொல்கிறார்: “அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.” (1 கொரிந்தியர் 3:10-14) இங்கே மறுபடியும், ஏதாவதொரு வகையான கடும் பரீட்சையை நாம் அனைவரும் கண்டிப்பாக எதிர்ப்படுவோமென பைபிள் விளக்குகிறது.
7. ரோமர் 15:4-ன் பிரகாரம், சோதனைகளை சகித்திருப்பதற்கு வேதாகமம் எப்படி நமக்கு உதவிசெய்ய முடியும்?
7 பெருந்துயரங்களை அனுபவிக்க வேண்டியதாயிருந்த, சிலசமயங்களில் நீண்ட காலப்பகுதிக்கு அனுபவிக்க வேண்டியதாயிருந்த, கடவுளுடைய உண்மைப் பற்றுறுதியுள்ள ஊழியர்களைப் பற்றிய எண்ணற்ற விவரப்பதிவுகள் பைபிளில் உள்ளன. என்றாலும், யெகோவா அவர்களைக் கைவிடவில்லை. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொன்னபோது இத்தகைய முன்மாதிரியானவர்களையே தன் மனதில் வைத்திருந்தார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) கடவுளுடன் ஓர் நெருங்கிய உறவை அனுபவித்து வந்தபோதிலும், அநேக பெருந்துயரங்களை அனுபவித்த மூன்று மனிதர்களுடைய உதாரணங்களைக் கவனியுங்கள்.
பைபிள் விவரப்பதிவுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வது
8. யோசேப்பின் விஷயத்தில், யெகோவா எதை அனுமதித்தார், எவ்வளவு காலத்திற்கு?
8 யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு இளம் வயதிலிருந்தே யெகோவாவால் தயவுகூரப்பட்டிருந்தான். இருப்பினும், அவன் எந்தத் தவறும் செய்யாதபோதிலும், ஒன்றன்பின் ஒன்றாக பெருந்துயரங்களை அனுபவித்தான். தன் சொந்த சகோதரர்களாலேயே கடத்தப்பட்டு, கொடூரமாய் நடத்தப்பட்டான். அந்நிய நாட்டில் ஓர் அடிமையாக விற்கப்பட்டான், அங்கே அவன் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு “காவல் கிடங்கில்” போடப்பட்டான். (ஆதியாகமம் 40:15) அங்கே, “அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.” (சங்கீதம் 105:17, 18) அடிமைத்தனத்திலும் சிறையிலும் கிடந்த நாட்களில், விடுதலைக்காக யெகோவாவிடம் யோசேப்பு அடிக்கடி மன்றாடினான் என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும், சுமார் 13 ஆண்டுகளாக, பல்வேறு முறைகளில் யெகோவாவால் பலப்படுத்தப்பட்டபோதிலும், ஒரு அடிமையாகத்தான் அல்லது சிறைக்கைதியாகத்தான் ஒவ்வொரு நாளும் அவனுக்கு விடிந்தது.—ஆதியாகமம் 37:2; 41:46.
9. அநேக வருடங்களாக தாவீது எதைச் சகித்திருக்க வேண்டியிருந்தது?
9 இதேபோன்ற விஷயம்தான் தாவீதுடையது. இஸ்ரவேலை ஆள தகுதிபடைத்த ஒரு மனிதனை யெகோவா தெரிந்தெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் சொன்னதாவது: “ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்.” (அப்போஸ்தலர் 13:22) யெகோவாவின் கண்களில் தயவுபெற்ற ஸ்தானத்தில் இருந்தபோதிலும், தாவீது மிகவும் துன்பப்பட்டார். மரணத்திற்கேதுவான ஆபத்தில் இருக்கையில், வனாந்தரத்திலும் குகையிலும் பாறை இடுக்குகளிலும் அந்நிய தேசத்திலும் பல வருஷங்கள் மறைந்திருந்தார். மூர்க்க மிருகத்தைப் போல வேட்டையாடப்பட்டதால், சோர்வும் பயமும் அவருக்கு ஏற்பட்டது. என்றபோதிலும், யெகோவாவின் பலத்தில் சகித்திருந்தார். தாவீது தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சரியாகவே இவ்வாறு சொல்ல முடிந்தது: “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.”—சங்கீதம் 34:19.
10. நாபோத்துக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் ஏற்பட்ட கொடிய துன்பம் என்ன?
10 தீர்க்கதரிசியாகிய எலியாவின் நாளில், பொய் கடவுளாகிய பாகாலுக்கு முன் தலைவணங்காதவர்கள் 7,000 பேர் மட்டுமே இஸ்ரவேலில் இருந்தார்கள். (1 இராஜாக்கள் 19:18; ரோமர் 11:4) ஒருவேளை தலைவணங்காதவர்களில் ஒருவனாக இருந்த நாபோத், பயங்கரமான ஒரு அநீதிக்கு பலியானான். தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று குற்றஞ்சாட்டப்பட்டு இழிவுபடுத்தப்பட்டான். குற்றவாளியாக தீர்க்கப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படும்படி ராஜாங்க கட்டளையினால் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டான்; அவனுடைய இரத்தத்தை நாய்கள் நக்கியது. அவனுடைய குமாரர்களும்கூட கொல்லப்பட்டார்கள்! ஆனால், அந்தக் குற்றச்சாட்டைப் பொருத்தவரையில் அவன் ஒரு பாவமும் அறியாதவனாயிருந்தான். அவனுக்கு எதிராக சாட்சிசொன்னவர்கள் பொய்யர்களாய் இருந்தார்கள். நாபோத்தின் திராட்சத் தோட்டம் ராஜாவின் கைக்கு வருவதற்காக இந்த எல்லா காரியங்களும் ராணியாகிய யேசபேலால் சதித்திட்டம் தீட்டப்பட்டன.—1 இராஜாக்கள் 21:1-19; 2 இராஜாக்கள் 9:26.
11. பைபிள் சரித்திரத்தில் வரும் உண்மையுள்ள ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன கூறுகிறார்?
11 யோசேப்பு, தாவீது, நாபோத் ஆகியோர், பெருந்துயரங்களை அனுபவித்தவர்களைப் பற்றி பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் உண்மையுள்ள அநேக ஆண்கள் பெண்களில் வெறும் மூவரே. பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்துவந்த யெகோவாவின் ஊழியர்களுடைய சரித்திரப்பூர்வமான சம்பவங்களை அப்போஸ்தலன் பவுல் எழுதினார். அதில் அவர், “நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்த”வர்களைப் பற்றி பேசினார். அவர்கள், “கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.” (எபிரெயர் 11:36-38) ஆனால் யெகோவா அவர்களை கைவிடவில்லை.
துன்புறுகிறவர்களை யெகோவா கவனித்துக்கொள்கிறார்
12. இன்று யெகோவாவின் சாட்சிகள் அனுபவிக்கும் துன்பங்களில் சில யாவை?
12 இன்றுள்ள யெகோவாவின் மக்களைப் பற்றியென்ன? ஓர் அமைப்பாக, கடைசி நாட்களையும் மிகுந்த உபத்திரவத்தையும் கடந்து தெய்வீக பாதுகாப்பையும் நலத்தையும் நாம் எதிர்பார்க்கலாம். (ஏசாயா 54:17; வெளிப்படுத்துதல் 7:9-17) இருப்பினும், தனிப்பட்ட ஆட்களாக, ‘சமயமும் எதிர்பாரா சம்பவமும்’ எல்லா மனிதருக்கும் ஏற்படுவதை நாம் தெளிவாக அறிந்திருக்கிறோம். (பிரசங்கி 9:11, NW) பெருந்துயரங்களை அனுபவிக்கிற உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் அநேகர் இன்று உள்ளனர். சிலர் வறுமையின் எல்லைக்கோட்டில் இருக்கிறார்கள். உபத்திரவப்படுகிற ‘திக்கற்ற [கிறிஸ்தவ] பிள்ளைகளையும் விதவைகளையும்’ பற்றி பைபிள் பேசுகிறது. (யாக்கோபு 1:27) இயற்கைப் பேரழிவுகள், போர்கள், குற்றச்செயல், அதிகார துஷ்பிரயோகம், நோய், மரணம் ஆகியவற்றின் விளைவாக மற்றவர்கள் அவதியுறுகிறார்கள்.
13. சமீபத்தில் அறிக்கை செய்யப்பட்ட கஷ்டங்கள் பற்றிய அனுபவங்கள் யாவை?
13 உதாரணமாக, உவாட்ச் டவர் கிளை அலுவலகங்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும்குழுவுக்கு அனுப்பிய 1996-க்கான அறிக்கையில், பைபிள் நியமங்களைப் பின்பற்றியதன் காரணமாக நம்முடைய சகோதர சகோதரிகளில் சிலர் பரிதாபகரமான சூழ்நிலைமைகளில் சிறைச்சாலையில் துன்பப்படுகிறார்கள் என விவரித்தன. தென் அமெரிக்க நாடு ஒன்றில், நூற்றுக்கணக்கான சாட்சிகளை கொரில்லா கூட்டத்தினர் அந்த இடத்திலிருந்து காலிசெய்யும்படி பலவந்தப்படுத்திய சமயத்தில் அங்கிருந்த மூன்று சபைகள் கலைக்கப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில், உள்நாட்டு போரில் நடந்த பூசலில் சிக்குண்டு சாட்சிகள் சிலர் கொல்லப்பட்டார்கள். மத்திய அமெரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட புயல் சீற்றத்தால், ஏற்கெனவே பணத்துக்கு திண்டாடிக்கொண்டிருந்த சகோதர்கள் சிலருடைய நிலைமை இன்னும் மோசமாகியது. வறுமையும் உணவுப் பற்றாக்குறையும் பெரும் பிரச்சினையாக இல்லாமல் இருக்கும் மற்ற இடங்களில், எதிர்மறையான செல்வாக்குகள் சிலருடைய சந்தோஷத்தைக் குன்றச்செய்யலாம். நவீனநாளைய வாழ்க்கை அழுத்தங்களால் அநேகர் சோர்வூட்டப்படுகிறார்கள். பொதுமக்களுடைய அக்கறையின்மையின் காரணமாக, ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் இன்னும் மற்றவர்கள் ஊக்கமிழந்தவர்களாய் உணரலாம்.
14. (அ) யோபுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) எதிர்மறையாக சிந்திப்பதற்குப் பதிலாக, இன்னல்களை அனுபவிக்கையில் நாம் என்ன செய்யவேண்டும்?
14 இந்தச் சூழ்நிலைமைகளை கடவுளுடைய வெறுப்புக்கு அத்தாட்சியாக அர்த்தங்கொள்ளக் கூடாது. யோபுவின் காரியத்தையும் அவர் பட்ட அநேக துன்பங்களையும் நினைத்துப் பாருங்கள். அவர் ‘உத்தமனாயும் சன்மார்க்கனாயும்’ இருந்தார். (யோபு 1:8) தப்புசெய்திருந்ததாக யோபுவை எலிப்பாஸ் குற்றஞ்சாட்டியபோது அவர் எந்தளவுக்கு மனம் நொந்துபோயிருக்க வேண்டும்! (யோபு, அதிகாரங்கள் 4, 5, 22) ஏதோவொரு முறையில் நாம் யெகோவாவை ஏமாற்றிவிட்டதனாலேயே அல்லது யெகோவா தம்முடைய ஆசீர்வாதத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டதனாலேயே பெருந்துயரப்படுகிறோம் என்ற முடிவுக்கு நாம் உடனடியாக வந்துவிடக்கூடாது. உபத்திரவத்தின்போது எதிர்மறையாக சிந்திப்பது நம்முடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தும். (1 தெசலோனிக்கேயர் 3:1-3, 5) துயரப்படும்போது, என்ன நடந்தாலும்சரி யெகோவாவும் இயேசுவும் நீதிமான்களோடுகூட இருக்கிறார்கள் என்ற உண்மையை தியானிப்பதே மிகச் சிறந்தது.
15. தம்முடைய மக்கள் படும் பெருந்துயரங்களைக் குறித்து யெகோவா ஆழ்ந்த அக்கறைகொள்கிறார் என்பது நமக்கு எப்படி தெரியும்?
15 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்லும்போது நமக்கு உறுதியளிக்கிறார்: “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? . . . மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:36, 38, 39) யெகோவா நம்மீது ஆழ்ந்த அக்கறையுள்ளவராயும் நம்முடைய துன்பத்தை அறிந்தவராயும் இருக்கிறார். தாவீது இன்னும் தப்பியோடிக் கொண்டிருக்கும்போதே இவ்வாறு எழுதினார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிரு[க்கிறார்].” (சங்கீதம் 34:15, 18; மத்தேயு 18:6, 14) நம்முடைய பரலோக தகப்பன் நம்மை கவனித்துக்கொள்கிறார், துன்பப்படுகிறவர்களுக்காக இரக்கப்படுகிறார். (1 பேதுரு 5:6, 7) நமக்கு வரும் துன்பம் எதுவாக இருந்தாலும்சரி, நாம் சகித்திருப்பதற்கு எது தேவையோ அதை அவர் தருகிறார்.
யெகோவாவின் ஈவுகள் நம்மை தாங்குகின்றன
16. யெகோவாவிடமிருந்து வரும் என்ன உதவி சகித்திருப்பதற்கு நமக்கு உதவுகிறது, எப்படி?
16 இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையில் வேதனையில்லா வாழ்வை நாம் எதிர்பார்க்க முடியாதபோதிலும், நாம் “கைவிடப்படுகிறதில்லை.” (2 கொரிந்தியர் 4:8, 9) இயேசு, தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு சகாயரை தருவதாக வாக்களித்தார். அவர் சொன்னார்: “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை [“சகாயரை,” NW] அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (யோவான் 14:16, 17) பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று, “பரிசுத்த ஆவியின் வரத்தைப்” பெற முடியுமென அப்போஸ்தலன் பேதுரு தனக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் சொன்னார். (அப்போஸ்தலர் 2:38) இன்று பரிசுத்த ஆவி நமக்கு உதவிசெய்கிறதா? ஆம்! யெகோவாவின் செயல்நடப்பிக்கும் சக்தி, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற மிகச் சிறந்த கனிகளை நமக்கு தருகிறது. (கலாத்தியர் 5:22, 23) இவையனைத்தும் நாம் சகித்திருப்பதற்கு உதவும் மதிப்புமிக்க பண்புகள்.
17. யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருப்பதற்கு நம்முடைய விசுவாசத்தையும் திடதீர்மானத்தையும் பலப்படுத்தும் பைபிள் சத்தியங்கள் சில யாவை?
17 நித்திய ஜீவ பரிசுடன் ஒப்பிடுகையில், தற்போதைய உபத்திரவங்களெல்லாம், “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான” உபத்திரவங்களே என்பதைப் புரிந்துகொள்ளவும் பரிசுத்த ஆவி நமக்கு உதவிசெய்கிறது. (2 கொரிந்தியர் 4:16-18) கடவுள் நம்முடைய கிரியைகளையும் அவருக்காக நாம் காண்பிக்கிற அன்பையும் மறக்கமாட்டார் என நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்கிறோம். (எபிரெயர் 6:9-12) பைபிளின் ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தைகளை வாசிப்பதன்மூலம், பெருந்துயரங்கள் பலவற்றை சகித்திருந்து ஆனால் சந்தோஷமுள்ளவர்களாக எண்ணப்பட்ட பூர்வகால உண்மையுள்ள ஊழியர்களின் முன்மாதிரியினால் நாம் ஆறுதலளிக்கப்படுகிறோம். யாக்கோபு இவ்வாறு எழுதுகிறார்: “என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே!” (யாக்கோபு 5:10, 11) சோதனைகளை சகித்திருப்பதற்கு நமக்கு உதவ, “இயல்புக்கும் அப்பாற்பட்ட வல்லமையை” பைபிள் வாக்களிக்கிறது. உயிர்த்தெழுதல் நம்பிக்கையாலும் யெகோவா நம்மை ஆசீர்வதிக்கிறார். (2 கொரிந்தியர் 1:8-10; 4:7, NW) பைபிளை தினமும் வாசித்து இந்த வாக்குறுதிகளை தியானிப்பதன் மூலம், கடவுள்மீது பொறுமையாக காத்திருப்பதற்கு நம்முடைய விசுவாசத்தையும் திடதீர்மானத்தையும் பலப்படுத்துவோம்.—சங்கீதம் 42:5.
18. (அ) 2 கொரிந்தியர் 1:3, 4-ல், நாம் என்ன செய்யும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம்? (ஆ) எவ்வாறு கிறிஸ்தவ கண்காணிகள் ஆறுதலுக்கும் புத்துணர்ச்சிக்கும் ஊற்றுமூலமாய் இருக்கலாம்?
18 இதோடுகூட, யெகோவா நமக்கு ஆவிக்குரிய பரதீஸை தந்திருக்கிறார்; அதில் நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடைய உள்ளப்பூர்வமான அன்பை நாம் அனுபவித்து மகிழலாம். ஒருவருக்கொருவர் ஆறுதலளிப்பதில் நம் அனைவருக்குமே ஒரு பங்கு உள்ளது. (2 கொரிந்தியர் 1:3, 4) முக்கியமாய் கிறிஸ்தவ கண்காணிகள், ஆறுதலுக்கும் புத்துணர்ச்சிக்கும் பெரும் ஊற்றுமூலமாய் இருக்கலாம். (ஏசாயா 32:2) ‘மனிதரில் வரங்களாகிய’ இவர்கள், துன்பப்படுகிறவர்களை கட்டியெழுப்பவும் ‘மனச்சோர்வடைந்த ஆத்துமாக்களிடம் ஆறுதலாய் பேசவும் பலவீனரைத் தாங்கவும்’ நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:8, 11, 12; 1 தெசலோனிக்கேயர் 5:14; NW) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால்’ கொடுக்கப்படுகிற மற்ற பிரசுரங்களையும் மூப்பர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) நம்மை கவலைகொள்ளச் செய்யும் பிரச்சினைகள் சிலவற்றை தீர்ப்பதற்கு—தடுப்பதற்கும்கூட—நமக்கு உதவும் பைபிள் அடிப்படையிலான ஆலோசனை இவற்றில் ஏராளமாய் அடங்கியுள்ளன. கஷ்டமான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலளிப்பதன் மூலமும் ஊக்கப்படுத்துவதன் மூலமும் நாம் யெகோவாவை பின்பற்றுவோமாக!
19. (அ) வேதனைகள் சிலவற்றை தவிர்க்க நமக்கு எது உதவிசெய்கிறது? (ஆ) கடைசியாக, நாம் யாரை நம்ப வேண்டும், சோதனைகளை சமாளிப்பதற்கு நமக்கு எது உதவிசெய்யும்?
19 நாம் கடைசி நாட்களின் முடிவைநோக்கி சென்றுகொண்டிருக்கையிலும், தற்போதைய காரிய ஒழுங்குமுறையிலுள்ள நிலைமைகள் அதிக மோசமாகிக்கொண்டு வருகையிலும், பெருந்துயரங்களைத் தவிர்ப்பதற்கு கிறிஸ்தவர்கள் தங்களால் ஆனதை செய்கிறார்கள். (நீதிமொழிகள் 22:3) நல்நிதானிப்பு, தெளிந்த புத்தி, பைபிள் நியமங்களைப் பற்றிய அறிவு ஆகியவை ஞானமான தீர்மானமெடுக்க நமக்கு உதவிசெய்யலாம். (நீதிமொழிகள் 3:21, 22) தேவையில்லாத தவறுகளைத் தவிர்க்க நாம் யெகோவாவின் வார்த்தைக்கு செவிகொடுத்து அதற்குக் கீழ்ப்படிகிறோம். (சங்கீதம் 38:4) என்றபோதிலும், நம்முடைய பங்கில் நாம் எடுக்கும் எந்த முயற்சியும் நம்முடைய வாழ்க்கையிலிருந்து துன்பத்தை முற்றிலும் நீக்க முடியாது என்பதை உணருகிறோம். இந்தக் காரிய ஒழுங்குமுறையில், நீதிமான்கள் அநேகர் கடும் வேதனைகளை எதிர்ப்படுகிறார்கள். எனினும், “யெகோவா தம்முடைய மக்களை கைவிடமாட்டார்” என்ற முழு நம்பிக்கையோடே நம்முடைய சோதனைகளை சமாளிக்கலாம். (சங்கீதம் 94:14, NW) இந்தக் காரிய ஒழுங்குமுறையும் அதன் துன்பங்களும் சீக்கிரத்தில் நீங்கிவிடும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் [உறுதியாய்] இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
◻ கிறிஸ்தவர்களின் முழு குடும்பமும் அனுபவிக்கும் சோதனைகள் யாவை?
◻ பெருந்துயரங்கள் யெகோவாவின் வெறுப்புக்கான அத்தாட்சியல்ல என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் பைபிள் உதாரணங்கள் யாவை?
◻ தம்முடைய மக்கள் படும் வேதனைகளைக் குறித்து யெகோவா எவ்வாறு உணருகிறார்?
◻ சோதனைகளைச் சகித்திருப்பதற்கு நமக்கு யெகோவாவிடமிருந்து வரும் பரிசுகளில் சில யாவை?
[பக்கம் 10-ன் படம்]
தாவீது, நாபோத், யோசேப்பு ஆகியோர், பெருந்துயரங்களை அனுபவித்தவர்களில் மூவர்