நல்ல ஆட்கள் ஏன் துன்பப்படுகின்றனர்?
அந்த ஆண்டு 1914, உலகம், முதல் உலகப்போரில் மூழ்கியிருந்தது. திடீரென, செர்பியாவிலிருந்த, போரில் சிறைப்பட்டோரின் முகாமில் நச்சுக் காய்ச்சல் உண்டாயிற்று. ஆனால் அது வெறும் தொடக்கமாகவே இருந்தது. கிலியூட்டின இந்த நோய் பொதுமக்களுக்குள்ளும் பரவி, ஆறு மாதங்களில் மட்டுமே 1,50,000 ஆட்களின் மரணத்தை உண்டுபண்ணினது. போர்க்கால நிலைமைகளுக்கும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட புரட்சிக்கும் மத்தியில் ரஷியாவில், முப்பது லட்சம் ஆட்கள் நச்சுக் காய்ச்சலில் மாண்டனர். இதற்கு இரையானவர்களுக்குள் நல்ல ஆட்கள் பலரும், இழப்புக்கு ஆளாகி தவித்த அவர்களுடைய குடும்ப உறுப்பினரும் இருந்தனரென நீங்கள் சரியானபடி முடிவுக்கு வரலாம்.
இது மனித துயர் சரிதையின் ஓர் உதாரணமேயாகும். உங்களுக்கு அன்பார்ந்தவர்கள் ஏதோ வகையான நோய்களுக்கு, விபத்துகளுக்கு, பெரும் இடுக்கண்களுக்கு ஆளாகையில், விளைவாக உண்டாகும் துன்பத்தை நீங்கள்தாமே அனுபவித்திருக்கலாம். நேர்மையான ஒருவர் சுகப்படுத்தமுடியாத நோயின் வேதனையால் பாதிக்கப்படுகையில் நீங்கள் மனவேதனையடையலாம். நல்ல ஆளான ஒருவர்—ஒருவேளை கடினமாய் உழைக்கும் குடும்பத் தலைவர்—ஒரு விபத்தில் மாளுகையில் நீங்கள் பெரும்பாலும் வெகுவாய் வருந்தலாம். இழப்புக்கு ஆளாகித் தவிப்பவர்களின் துக்கம், அவர்களுக்காக உங்கள் இருதயத்தை வேதனைப்பட செய்விக்கலாம்.
நன்மை செய்கிற ஒருவர் துன்பத்திலிருந்து விடுதலையானவராய் இருக்கும்படி நேர்பயனளிக்கப்பட வேண்டுமென பலர் உணருகின்றனர். துன்பப்படுதல் அதற்கு ஆளானவர் தவறுசெய்தவரென்பதற்கு நிரூபணமெனவும் சிலர் கருதுகின்றனர். இதுவே, ஏறக்குறைய 3,600 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மூன்று ஆட்களின் விவாதமாக இருந்தது. அவர்கள் யோபு என்ற பெயர்கொண்ட ஒரு நல்ல மனிதனின் காலத்தில் வாழ்ந்தவர்கள். நல்ல ஆட்கள் ஏன் துன்பப்படுகின்றனர் என்ற இந்தக் கேள்விக்குப் பதிலைத் தேட நாம் தொடங்குகையில் அவர்களுடைய காலத்துக்கு நாம் திரும்பலாம்.
யோபின் துன்பங்கள்
யோபின் நண்பர்களாகக் கருதப்பட்டவர்கள் அவரைப் பார்க்கச் சென்றபோது, அவர் விவரிக்க முடியாத வகையில் வேதனையாலும் நோயாலும் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார். தன்னுடைய பத்து பிள்ளைகளை மரணத்தில் இழந்துவிட்டிருந்தார் மற்றும் தன் பொருளுடைமைகள் முழுவதையும் இழந்துவிட்டிருந்தார். யோபை உயர்வாய் மதித்த ஆட்கள் அவரை அறவே வெறுத்தொதுக்கினர். அவருடைய மனைவியுங்கூட அவரை ஆதரிப்பதைவிட்டு, கடவுளைத் தூஷித்து ஜீவனைவிடும்படி அவரிடம் கூறினாள்.—யோபு 1:1–2:13; 19:13-19.
யோபைப் பார்க்க வந்தவர்கள், இரவும் பகலும் ஏழு நாட்கள், அவர் துன்பப்படுவதை அமைதியாய்க் கூர்ந்து கவனித்தனர். பின்பு அவர்களில் ஒருவன், யோபு அநீதியான நடத்தையில் ஈடுபட்டிருந்ததனால் தண்டிக்கப்படுகிறாரென அவரைக் குற்றப்படுத்தினான். எலிப்பாஸ் என்பவன் சொன்னதாவது: “குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப் பாரும். நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.”—யோபு 4:7-9.
ஆகவே, யோபின் பாவங்களினிமித்தமாகவே கடவுள் அவரைத் தண்டித்தாரென எலிப்பாஸ் விவாதித்தான். இடுக்கண்கள் தவறுசெய்ததற்காக ஆட்களைத் தண்டிப்பதற்குத் திட்டமிடப்பட்ட கடவுளுடைய செயல்கள் என்று, இன்றுங்கூட சிலர் விவாதிக்கின்றனர். ஆனால் அநீதியான செயல்களை நடப்பித்ததற்காக யெகோவா யோபைத் தண்டித்துக்கொண்டிருக்கவில்லை. இது நமக்கு எவ்வாறு தெரியுமென்றால், பின்னால் கடவுள் எலிப்பாஸிடம் பின்வருமாறு கூறினார்: “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தொண்டனாகிய யோபைப்போல நீங்கள் என்னைப்பற்றித் தகுதியானவைகளைப் [உண்மையானதைப், NW] பேசவில்லை.”—யோபு 42:7, தி.மொ.
கடவுள் பொறுப்புடையவரல்லர்
இன்று, லட்சக்கணக்கானோர்—நிச்சயமாகவே நல்ல ஆட்கள் பலர் உட்பட—ஏழ்மைப்பட்டு பட்டினி எல்லையை எட்டும் நிலையில் இருக்கின்றனர். சிலர் மனக்கசப்படைந்து தங்கள் துன்பத்துக்காகக் கடவுளைக் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் பஞ்சத்துக்காக அவரைக் குற்றப்படுத்தக்கூடாது. உண்மையில், அவர்தாமே மனிதவர்க்கத்துக்கு உணவளிக்கிறார்.—சங்கீதம் 65:9.
தன்னலம், பேராசை, இன்னும் மனிதரின் மற்றக் காரணங்கள் பசியிலிருப்போருக்கு உணவைக் கொண்டுசென்று வழங்குவதைத் தடுத்து வைக்கலாம். போர், பஞ்சத்தின் காரணங்களில் ஒன்றாயுள்ளது. உதாரணமாக, தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா (The World Book Encyclopedia) பின்வருமாறு கூறுகிறது: “விவசாயிகள் பலர் தங்கள் வயல்களை விட்டுவிட்டு படைக்கலம்பூண்ட படைகளைச் சேர்ந்துகொண்டால், போர், பஞ்சத்தில் விளைவடையச் செய்யும். சில சந்தர்ப்பங்களில், ஒரு படை, சத்துருவைச் சரணடையச் செய்விப்பதற்கு வேண்டுமென்றே பஞ்சத்தை உண்டுபண்ணியிருக்கிறது. சேமித்துவைக்கப்பட்ட உணவையும் வளரும் பயிர்களையும் அந்தப் படை அழித்து சத்துருவின் உணவு போக்குவரத்தைத் தடுத்துப்போட முற்றுகைத்தடை ஏற்படுத்தி வைக்கிறது. நைஜீரியாவின் உள்நாட்டுக் கலகப் போரின்போது (1967-70) கப்பல்களில் வந்த உணவுசரக்குகள் பயாஃப்ரா பகுதியை எட்டாதபடி முற்றுகைகள் தடுத்து வைத்தன. அதன் விளைவாகப் பஞ்சம் உண்டாயிற்று, பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பயாஃப்ரா மக்கள் பெரும்பாலும் பட்டினியால் வருந்த செய்யப்பட்டனர்.”
முக்கியமாய் இரண்டாம் உலகப் போரின்போது, நல்ல ஆட்கள் பலர் துன்புற்று மாண்டபோது, சிலர் தவறாகக் கடவுளைக் குற்றஞ்சாட்டினர். எனினும், மனிதரே ஒருவரையொருவர் பகைத்து ஒருவருக்கெதிராக மற்றவர் போர்செய்வதனால் கடவுளுடைய சட்டங்களை மீறுகின்றனர். “கற்பனைகளிலெல்லாம் முதன்மையான கற்பனை” எதுவென்று இயேசுவைக் கேட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “இஸ்ரவேலே கேள், கர்த்தரே [யெகோவாவே, NW] நமது கடவுள், கர்த்தர் [யெகோவா, NW] ஒருவரே; உன் கர்த்தராகிய கடவுளிடம் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டுமென்பதே முதன்மையான கற்பனை. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூரவேண்டுமென்பது இரண்டாங் கற்பனை. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை.”—மாற்கு 12:28-31, தி.மொ.
மொத்தப் படுகொலையில் ஈடுபடுவதன்மூலம் மனிதர் கடவுளுடைய சட்டங்களை மீறுகையில், துன்பம் விளைவாக உண்டானால், எவராவது கடவுளைச் சரியாய்க் குற்றப்படுத்த முடியுமா? பெற்றோர் ஒருவர் தன் பிள்ளைகளிடம் தங்களுக்குள் சண்டையிட வேண்டாமென சொல்லியும் அவர்கள் அவருடைய நல்ல அறிவுரையைப் புறக்கணித்து, காயப்பட்டு துன்பமனுபவித்தால், அவர் பொறுப்பாளரா? அந்தப் பெற்றோர் பொறுப்பாளரல்லாததுபோல், ஆட்கள் தெய்வீகச் சட்டங்களைப் புறக்கணிக்கையில், மனிதர் துன்பப்படுவதற்கு கடவுள் பொறுப்பாளர் அல்லர்.
யெகோவாவின் சட்டங்களைப் புறக்கணிக்கையில் துன்பம் விளைவாக உண்டானாலும், பொதுவில் விபத்துகள், பொல்லாதவர்களைத் தண்டிக்க திட்டமிடப்பட்ட கடவுளுடைய செயல்களென பைபிள் கூறுகிறதில்லை. முதல் மனிதத் தம்பதிகள் பாவஞ்செய்தபோது, அவர்கள் அவருடைய தனிப்பட்ட ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் இழந்தனர். யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தெய்வீகத் தலையிடுதல் இருந்த காரியங்களைத் தவிர, நாளுக்குநாள் மனிதவர்க்கத்துக்கு நடந்தது பின்வரும் இந்த வேதப்பூர்வ நியமத்தால் ஆளப்பட்டு வந்தது: “ஓட்டத்திற்கெலிப்பது வேகமுள்ளவர்களுக்கேயுரியதல்ல, யுத்தத்தில் வெற்றிகொள்வது பராக்கிரமசாலிகளுக்கேயுரியதல்ல, உணவு சம்பாதிப்பது ஞானவான்களுக்கேயுரியதல்ல, செல்வம் சேர்ப்பது புத்திமான்களுக்கேயுரியதல்ல, தயவைப் பெறுவது அறிவாளிகளுக்கேயுரியதல்ல, அவர்களெல்லாருக்கும் சமயமும் பிராப்தியும் வேண்டும். [சமயமும் எதிர்பாராத சம்பவமும் அவர்கள் எல்லாருக்கும் நேரிடுகின்றன, NW].”—பிரசங்கி 9:11, தி.மொ.
நல்லோரும் தீயோரும் துன்பப்படுகின்றனர்
சுதந்தரிக்கப்பட்ட பாவம் மற்றும் அபூரணத்தின் காரணமாக, நல்ல மற்றும் தீய மானிடர் இருவருமே உண்மையில் துன்பப்படுகின்றனர். (ரோமர் 5:12) உதாரணமாக, நீதிமான்களும் பொல்லாதவர்களும் ஒன்றுபோல் வேதனையான நோய்களை அனுபவிக்கின்றனர். உண்மையுள்ள கிறிஸ்தவன் தீமோத்தேயு “அடிக்கடி ஏற்படும் நோயி”னால் துன்பப்பட்டான். (1 தீமோத்தேயு 5:23, NW) அப்போஸ்தலன் பவுல் தன் சொந்த “மாம்சத்திலே ஒரு முள்”ளைப்பற்றிக் குறிப்பிட்டபோது, அவர் ஏதோ உடல் நோவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். (2 கொரிந்தியர் 12:7-9) தம்முடைய உண்மைத்தவறாத ஊழியர்களுக்குங்கூட, சுதந்தரித்த பலவீனங்களை அல்லது நோயால் பாதிக்கப்படும் தன்மைகளைக் கடவுள் இப்பொழுது நீக்குகிறதில்லை.
சரியான பகுத்துணர்வைப் பயன்படுத்தாததனால் அல்லது சிலசமயங்களில் வேதப்பூர்வ அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தத் தவறுவதால் தெய்வபக்தியுள்ள ஆட்களும் துன்பப்படலாம். உதாரணமாக: கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அவிசுவாசி ஒருவரை மணஞ்செய்யும் ஒருவர் மணவாழ்க்கையில், தான் தவிர்த்திருக்கக்கூடிய துன்பங்களை அனுபவிக்கலாம். (உபாகமம் 7:3, 4; 1 கொரிந்தியர் 7:39) கிறிஸ்தவர் ஒருவர் சரியான உணவைச் சாப்பிடாமலும், போதிய ஓய்வை எடுக்காமலும் இருந்தால், தன் உடல்நலம் கெட்டு அவர் துன்பப்படலாம்.
நாம் பலவீனங்களுக்கு விட்டுக்கொடுத்து தவறான நடத்தையில் ஈடுபட்டால், அதன் விளைவாக உணர்ச்சிவசமாய்த் துன்பப்படலாம். அரசன் தாவீது பத்சேபாளுடன் நடப்பித்த விபசாரக் குற்றம் அவருக்கு மிகுந்த மனவேதனையைக் கொண்டுவந்தது. (சங்கீதம் 51) தவறானச் செயலை மறைக்க அவர் முயன்றபோது, கடுந் துயரவேதனையை அனுபவித்தார். “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. . . . என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல் வறண்டுபோயிற்று.” (சங்கீதம் 32:3, 4) மிகு வறட்சி காலத்தின்போது அல்லது வேனிற்கால வறண்ட வெப்பத்தின்போது ஒரு மரம் உயிர்தரும் ஈரத்தை இழக்கக்கூடியதைப்போல், தன் குற்றப்பழியின்பேரில் கடும் மனத்துயரம் தாவீதின் வலிமையைக் குன்றிப்போகச் செய்தது. அவர் மனதிலும் உடலிலும் துன்பப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஒருவர் மனஸ்தாபப்பட்டுத் திரும்பி பாவத்தை அறிக்கைச் செய்து கடவுளுடைய மன்னிப்பைப் பெறுவதால் அத்தகைய துன்பத்திலிருந்து விடுதலையடையலாமென சங்கீதம் 32 காட்டுகிறது.—நீதிமொழிகள் 28:13.
தீயோர் ஆபாசக் காமப் போக்கை நாடித்தொடருவதனால் பெரும்பாலும் துன்பப்படுகின்றனர், தெய்வீகத் தண்டனையாக அல்ல. மகா ஏரோது தீயப் பழக்கங்களின் காரணமாக நோயால் பீடிக்கப்பட்டான். தன் கடைசி நாட்களில், ஏரோது “பயங்கர வேதனைகளை அனுபவித்தான்” என யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் கூறினார். “தன்னைச் சொறிந்துகொள்ளும்படியான பயங்கர நீடித்த நாட்டம் அவனுக்கு இருந்தது, அவனுடைய குடல்கள் சீழ்ப்புண் பிடித்திருந்தது, அவனுடைய பாலுறுப்புகள் அழுகி புழு பிடித்திருந்தது. கலீரோவாவிலிருந்த வெப்ப நீரூற்றுகளில் தன் மூச்சுத்திணறலையும் நமைச்சல் வெறிகளையும் தணிக்க முயன்றும் பயனில்லாமல் போயிற்று. . . . ஏரோது இப்பொழுது அத்தகைய பயங்கர கடும் வேதனையை அனுபவித்ததால் தன்னைக் கத்தியால் குத்திக் கொன்றுகொள்ள முயன்றான், ஆனால் அவனுடைய மாமன் மகனால் தடுத்துவைக்கப்பட்டான்.”—ஜொஸிஃபஸ்: இன்றியமையாத எழுத்துக்கள் (Josephus: The Essential Writings), பால் L. மேயர் மொழிபெயர்த்துப் பதிப்பித்தது.
கடவுளின் சட்டத்தைக் கடைப்பிடிப்பது பாலுறவால் கடத்தப்படும் நோய்கள்போன்ற இத்தகைய காரியங்களுக்கு எதிராக ஓரளவு பாதுகாப்பை அளிக்கிறது. எனினும், அவருடைய தயவை நாடும் நல்ல ஆட்கள் ஏன் தங்களுக்குப் பொதுவாயுள்ளதற்கு மேலாக மிஞ்சிய அளவில் துன்பப்படுவதாகத் தோன்றுகிறது?
தேவபக்தியுள்ள ஆட்கள் ஏன் துன்பப்படுகின்றனர்
தேவபக்தியுள்ள ஆட்கள் துன்பப்படுவதற்கு முதன்மையான காரணம் அவர்கள் நீதியுள்ளோராய் இருப்பதேயாகும். இது கோத்திரத் தகப்பனான யாக்கோபின் குமாரன் யோசேப்பின் காரியத்தில் விளக்கிக் காட்டப்படுகிறது. போத்திபாரின் மனைவி தன்னோடு பாலுறவுகள் கொள்ளும்படி யோசேப்பைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்தபோதிலும், அவன்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” என்று கேட்டான். (ஆதியாகமம் 39:9) இது அநீதியாய் சிறைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தினது, யோசேப்பு நேர்மையுள்ளவனாக இருந்ததனால் துன்பப்பட்டான்.
ஆனால் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் துன்பப்படும்படி கடவுள் ஏன் அனுமதிக்கிறார்? கலகக்கார தூதன் பிசாசான சாத்தான் எழுப்பின ஒரு விவாதத்தில் இதற்குப் பதில் அடங்கியிருக்கிறது. இந்த விவாதம் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்தல் உட்பட்டதாயுள்ளது. நமக்கு எப்படித் தெரியும்? எப்படியெனில், முன்னால் குறிப்பிட்ட நீதியுள்ள மனிதன் யோபின் காரியத்தில் இது காட்டப்பட்டது.
பரலோகத்தில் கடவுளுடைய தூதக் குமாரர்களின் ஒரு கூட்டத்தில், யெகோவா சாத்தானைப் பின்வருமாறு கேட்டார்: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை.” பிசாசின் பதில், சோதனையின்கீழ் மனிதர் யெகோவாவினிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்வார்களா என்பதைப்பற்றிய ஒரு விவாதம் இருந்ததென நிரூபிக்கிறது. யோபு, தான் அனுபவித்தப் பொருளாதார ஆசீர்வாதங்களினிமித்தமே கடவுளைச் சேவித்தார் அன்பினால் ஏவப்பட்டு அல்ல என்று சாத்தான் பிடிவாதமாக வலியுறுத்தினான். பின்பு சாத்தான் பின்வருமாறு கூறினான்: “உம்முடைய கையை நீட்டி அவனுக்கு [யோபுக்கு] உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.” யெகோவா இவ்வாறு பதிலளித்தார்: “இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே.”—யோபு 1:6-12.
சாத்தான் செய்யக்கூடியதாயிருந்த எல்லாவற்றின் மத்தியிலும், யோபு நீதியுள்ள போக்கைக் காத்துக்கொண்டு தான் யெகோவாவை அன்பினால் ஏவப்பட்டே சேவித்தார் என நிரூபித்தார். மெய்யாகவே, யோபு தன்னைக் குற்றஞ்சாட்டினோரிடம்: “நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று கூறினார். (யோபு 27:5) ஆம், இத்தகைய உத்தமத்தைக் காப்போர் நீதியினிமித்தமாகத் துன்பப்படுவதற்கு எப்பொழுதும் மனமுள்ளோராய் இருந்திருக்கின்றனர். (1 பேதுரு 4:14-16) கடவுளிடம் உண்மைத்தவறாத அன்புடையோராக இருந்து, அவரைக் கனப்படுத்தவும், எல்லா மனிதரையும் யெகோவாவிடமிருந்து தான் திருப்பக்கூடுமென வாதாடும் சாத்தானின் கோரிக்கையைப் பொய்யென்று நிரூபிக்கவும் நீதியுள்ள வாழ்க்கை நடத்தின பலரைப்பற்றி பைபிள் சொல்லுகிறது. கடவுளிடம் உத்தமத்தைக் காப்பதன் காரணமாகத் துன்பப்படும் ஒவ்வொரு நபரும், தான் பிசாசைப் பொய்யனாக நிரூபித்து யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறானென மகிழ்ச்சியாய் இருக்கலாம்.—நீதிமொழிகள் 27:11.
தம்முடைய உண்மையுள்ள ஊழியர் துன்பப்படுவதைப்பற்றிக் கடவுள் அக்கறையற்றவராக இல்லை. சங்கீதக்காரன் தாவீது கூறினதாவது: “யெகோவா விழுகிற யாவரையும் தாங்குகிறார்; தோய்ந்துபோன யாவரையும் தூக்கி விடுகிறார்.” (சங்கீதம் 145:14, தி.மொ.) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பவர்கள், வாழ்க்கையின் துன்பங்களையும் அவருடைய ஜனமாக அனுபவிக்கும் துன்புறுத்தலையும் தாங்கள் சகிக்க போதிய சொந்த பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கடவுள் அவர்களைப் பலப்படுத்தித் தாங்கி, தங்கள் எல்லா இக்கட்டுகளையும் சகித்து நிலைத்திருக்கத் தேவைப்படும் ஞானத்தை அவர்களுக்கு அருளுகிறார். (சங்கீதம் 121:1-3; யாக்கோபு 1:5, 6) துன்புறுத்துவோர், யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர் சிலரைக் கொன்றால், கடவுள் கொடுத்திருக்கும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) அந்த அளவுவரையாகவுங்கூட, கடவுள், தம்மை நேசிப்போர் அனுபவித்த எந்தத் துன்பத்தின் பாதிப்புகளையும் மாற்றக்கூடும். யோபின் துன்பத்தை அவர் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து அந்த நேர்மையான மனிதனை நிறைவாய் ஆசீர்வதித்தார். நம்முடைய நாளிலும் யெகோவா தம்முடைய ஜனத்தைக் கைவிடமாட்டாரென நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம்.—யோபு 42:12-16; சங்கீதம் 94:14.
சீக்கிரத்தில் —இனிமேலும் துன்பம் இராது!
ஆகவே, சுதந்தரித்த அபூரணத்தினாலும் இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் மத்தியில் வாழ்வதாலும் எல்லாரும் துன்பத்தை அனுபவிக்கின்றனர். தேவபக்தியுள்ள ஆட்களும் யெகோவாவிடம் உத்தமத்தைக் காத்துவருவதன் காரணமாகத் துன்பப்படும்படி எதிர்பார்க்கலாம். (2 தீமோத்தேயு 3:12) ஆனால் அவர்கள் களிகூரலாம், ஏனெனில் சீக்கிரத்தில் கடவுள், கண்ணீருக்கும், மரணத்துக்கும், துக்கத்துக்கும், அலறுதலுக்கும், வேதனைக்கும் ஒரு முடிவைக் கொண்டுவருவார். இதைக் குறித்து, அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினார்:
“நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:1-5.
இதற்கு ஒப்பாக, அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு அறிவித்தார்: “அவருடைய [யெகோவா தேவனுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) எத்தகைய மகத்தான எதிர்பார்ப்புகள் சமீப எதிர்காலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன! பரதீஸான பூமியில் வாழ்க்கை உங்கள் மகிழ்ச்சிநிறைந்த சிலாக்கியமாக இருக்கக்கூடும். (லூக்கா 23:43) ஆகையால், தற்கால துன்பம் உங்களை மனக்கசப்புற விடாதீர்கள். அதற்கு மாறாக, எதிர்காலத்தை நம்பிக்கையார்வத்துடன் நோக்குங்கள். அவ்வளவு மிக சமீபத்தில் நெருங்கியிருக்கும் கடவுளுடைய புதிய உலகத்தில் உங்கள் நம்பிக்கையையும் பற்றுறுதியையும் வையுங்கள். யெகோவா தேவனுக்கு ஏற்கத்தக்கப் போக்கைப் பின்தொடருங்கள், எல்லா துன்பமும் நீக்கப்பட்டிருக்கும் ஓர் உலகத்தில் நீங்கள் என்றென்றுமாக வாழலாம்.
[பக்கம் 4-ன் படம்]
யோபு துன்பப்பட்டபோதிலும், அவர் கடவுளுக்கு ஏற்கத்தக்க ஒரு போக்கைப் பின்தொடர்ந்தார்
[பக்கம் 7-ன் படம்]
எல்லா துன்பமும் நீக்கப்பட்டிருக்கும் ஓர் உலகத்தில் நீங்கள் வாழலாம்
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Collier’s Photographic History of the European War