“ஒரே வாயினால்” தேவனை மகிமைப்படுத்துங்கள்
‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துங்கள்.’—ரோமர் 15:5.
1. கருத்து வேற்றுமைகளை கையாளுவதில் என்ன பாடத்தை பவுல் தன் உடன் விசுவாசிகளுக்குப் புகட்டினார்?
கிறிஸ்தவர்கள் அனைவருடைய தெரிவுகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை; அவர்களுடைய விருப்பங்களும் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. என்றாலும், ஜீவனுக்கு போகும் பாதையில் அவர்கள் அனைவருமே கையோடு கைகோர்த்துத்தான் நடக்க வேண்டும். இது சாத்தியமா? ஆம், சிறிய சிறிய வேறுபாடுகளை பெரிதுபடுத்தாமல் இருந்தால் அது சாத்தியமே. இந்தப் பாடத்தையே அப்போஸ்தலன் பவுல் முதல் நூற்றாண்டிலிருந்த சக விசுவாசிகளுக்கு புகட்டினார். இந்த முக்கிய குறிப்பை அவர் எவ்வாறு விளக்கினார்? கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு அவர் சொன்ன ஆலோசனையை இன்று நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
கிறிஸ்தவ ஒற்றுமையின் முக்கியத்துவம்
2. ஒற்றுமையின் அவசியத்தை பவுல் எப்படி வலியுறுத்தினார்?
2 கிறிஸ்தவ ஒற்றுமை இன்றியமையாதது என்பதை பவுல் அறிந்திருந்தார், ஆகவே, அன்பினால் ஒருவரையொருவர் தாங்குவதற்கு உதவும் அருமையான ஆலோசனையை கிறிஸ்தவர்களுக்கு அவர் வழங்கினார். (எபேசியர் 4:1-3; கொலோசெயர் 3:12-14) எனினும், ஒற்றுமையைக் கட்டிக்காப்பது சவாலான விஷயம் என்பது அவருக்கு தெரிந்திருந்தது, ஆம் 20 வருடங்களுக்கு மேலாக அநேக சபைகளை ஸ்தாபித்து மற்ற அநேக சபைகளுக்கு விஜயம் செய்திருந்த அவருக்கு அது தெரிந்திருந்தது. (1 கொரிந்தியர் 1:11-13; கலாத்தியர் 2:11-14) அதனால், ரோமிலிருந்த சக விசுவாசிகளை இவ்வாறு தூண்டினார்: “நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன் . . . உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக.” (ரோமர் 15:5, 6) அதுபோலவே இன்றும், யெகோவா தேவனுடைய ஜனங்களின் ஐக்கியப்பட்ட தொகுதியாக நாம் அவரை “ஒரே வாயினால்” மகிமைப்படுத்த வேண்டும். இதை நாம் எந்தளவுக்கு செய்து வருகிறோம்?
3, 4. (அ) ரோமிலிருந்த கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட வித்தியாசமான பின்னணிகளிலிருந்து வந்திருந்தனர்? (ஆ) ரோமிலிருந்த கிறிஸ்தவர்களால் எப்படி “ஒரே வாயினால்” யெகோவாவை சேவிக்க முடிந்திருக்கும்?
3 ரோமிலிருந்த அநேக கிறிஸ்தவர்கள் பவுலுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். (ரோமர் 16:3-16) அவர்களுடைய பின்னணி வித்தியாசமாக இருந்தபோதிலும், பவுல் எல்லா சகோதரர்களையுமே ‘தேவனுடைய பிரியமான’ பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். அவர் எழுதியதாவது: “உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.” ரோம கிறிஸ்தவர்கள் அநேக விதங்களில் முன்மாதிரியாக திகழ்ந்தனர் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. (ரோமர் 1:2, 8; 15:14) என்றாலும் சபையிலிருந்த ஒரு சிலருக்கு சில விஷயங்களின் பேரில் வித்தியாசமான கருத்துகள் இருந்தன. இன்றும்கூட கிறிஸ்தவர்களாகிய நாம் வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் வந்திருப்பதால், கருத்து வேற்றுமைகளை எப்படி கையாளுவது என்பது பற்றிய பவுலின் ஏவப்பட்ட புத்திமதியை ஆராய வேண்டும், அவ்வாறு ஆராய்வது “ஒரே வாயினால்” பேச நமக்கு உதவும்.
4 ரோமில் யூத கிறிஸ்தவர்களும் யூதரல்லாத கிறிஸ்தவர்களும் இருந்தனர். (ரோமர் 4:1; 11:13) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி கடைப்பிடித்து வந்த சில பழக்கவழக்கங்கள் இரட்சிப்புக்கு அவசியமில்லை என்பதை அந்த யூத கிறிஸ்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும், என்றபோதிலும் அவர்களில் சிலர் அவற்றைக் கடைப்பிடிப்பதை நிறுத்தவில்லை. மறுபட்சத்தில், அவர்களில் அநேகர் கிறிஸ்தவர்களாகும் முன் தாங்கள் கடைப்பிடித்து வந்த சட்டங்களிலிருந்து கிறிஸ்துவின் பலி தங்களை விடுவிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவாக, தங்களுடைய சில பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டனர். (கலாத்தியர் 4:8-11) என்றாலும், பவுல் கூறியபடி அவர்கள் அனைவருமே ‘தேவனுடைய பிரியமான’ பிள்ளைகளாக இருந்தனர். ஒருவருக்கொருவர் சரியான மனப்பான்மையை தொடர்ந்து காட்டியிருந்தால், அவர்கள் எல்லாராலும் கடவுளை “ஒரே வாயினால்” துதிக்க முடிந்திருக்கும். நமக்கும்கூட சில விஷயங்களின் பேரில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். எனவே இந்த முக்கியமான நியமத்தை பவுல் எப்படி விளக்குகிறார் என்பதை நாமும் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.—ரோமர் 15:5.
“ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்”
5, 6. ரோம சபையில் ஏன் கருத்து வேற்றுமைகள் இருந்தன?
5 ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில், கருத்து வேற்றுமைகள் நிலவிய ஒரு சூழ்நிலையைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். “ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான்” என்று எழுதினார். ஏன் அப்படி எழுதினார்? ஏனெனில், மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, பன்றி இறைச்சியை சாப்பிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. (ரோமர் 14:2; லேவியராகமம் 11:7) எனினும், இயேசுவின் மரணத்துக்குப் பின் நியாயப்பிரமாணம் அமலில் இல்லை. (எபேசியர் 2:15) மேலும், கடவுளுடைய கண்ணோட்டத்தில் எந்தவொரு உணவும் தீட்டானது அல்ல என்பதை இயேசு மரித்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் தேவதூதர் ஒருவர் அப்போஸ்தலன் பேதுருவிடம் சொல்லியிருந்தார். (அப்போஸ்தலர் 11:7-12) இந்த விஷயங்களை மனதில் வைத்து, சில யூத கிறிஸ்தவர்கள் தாங்கள் பன்றி இறைச்சியை அல்லது நியாயப்பிரமாணம் தடைசெய்த மற்ற சில உணவு வகைகளைச் சாப்பிடலாம் என்று நினைத்திருக்கலாம்.
6 ஆனால், அசுத்தமானவையென்று கருதப்பட்ட உணவு வகைகளைச் சாப்பிடுவது பற்றி நினைத்தாலே மற்ற யூத கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அருவருப்பாயிருந்திருக்கலாம். எளிதில் புண்பட்டுவிடும் சுபாவமிருந்த அத்தகையோர், தங்களுடைய கிறிஸ்தவ யூத சகோதரர்கள் அதுபோன்ற உணவு வகைகளை சாப்பிடுவதை பார்த்த மாத்திரத்திலேயே சினமடைந்திருக்கலாம். மேலும், யூதரல்லாத சில கிறிஸ்தவர்கள், உணவுக்கட்டுப்பாடில்லாத மத பின்னணியிலிருந்து வந்திருந்ததால், சாப்பாட்டு விஷயத்தைப் போய் மற்றவர்கள் ஏன் பெரிதுபடுத்த வேண்டுமென நினைத்து குழம்பியிருப்பார்கள். உண்மைதான், ஒருவர் சில உணவு வகைகளை தவிர்த்ததில் எந்தத் தவறும் இருக்கவில்லை, ஆனால் அப்படி தவிர்த்தால் மட்டுமே இரட்சிப்பை பெற முடியுமென்று வலியுறுத்துவதுதான் தவறாக இருந்தது. சபையில் இந்தக் கருத்து வேற்றுமைகள் எளிதில் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கக்கூடும். எனவே, இத்தகைய கருத்து வேற்றுமைகள், “ஒரே வாயினால்” கடவுளை மகிமைப்படுத்துவதிலிருந்து தங்களைத் தடுக்காதபடிக்கு ரோமிலிருந்த கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது.
7. ஓய்வு நாளை ஒவ்வொரு வாரமும் ஆசரிக்கிற விஷயத்தில் என்ன கருத்து வேற்றுமைகள் நிலவின?
7 பவுல் இப்பொழுது இரண்டாவது உதாரணத்தை கொடுக்கிறார்: “அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்.” (ரோமர் 14:5அ) ஓய்வுநாளன்று எந்தவொரு வேலையும் செய்யக்கூடாதென்று மோசேயின் நியாயப்பிரமாணம் தடை விதித்திருந்தது. ஏன், பிரயாணம் செய்வதற்கும்கூட கடுமையான தடை இருந்தது. (யாத்திராகமம் 20:8-10; மத்தேயு 24:20; அப்போஸ்தலர் 1:12) ஆனால், நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்தபோது அந்தத் தடைகள் தகர்க்கப்பட்டன. என்றாலும், தாங்கள் முன்பு பரிசுத்தமாக கருதிய நாளில் எந்தவொரு வேலை செய்வதற்கும், நீண்ட பயணத்தை மேற்கொள்வதற்கும் சில யூத கிறிஸ்தவர்கள் ஒருவேளை சங்கடப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவர்களாக ஆன பிறகும்கூட, ஏழாவது நாளை ஆவிக்குரிய காரியங்களுக்காக மட்டுமே ஒதுக்கி வைத்திருக்கலாம். கடவுளுடைய நோக்குநிலையில் ஓய்வுநாள் இனிமேலும் செல்லாததாக இருந்தபோதிலும் அவ்வாறு செய்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்ததில் தவறு இருந்ததா? இல்லை, ஓய்வுநாளை ஆசரிக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறாரென சொல்லி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாத வரை அதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. இதனால், கிறிஸ்தவ சகோதரர்களின் மனசாட்சிக்கு மதிப்பு காண்பிப்பவராய் பவுல் இவ்வாறு எழுதினார்: “அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன்.”—ரோமர் 14:5ஆ.
8. ரோமிலிருந்த கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்பு காட்ட முடிந்திருந்தாலும், அவர்கள் எதைத் தவிர்க்க வேண்டியிருந்தது?
8 என்றாலும், மனசாட்சிக்கு விடப்பட்ட விஷயங்களைக் குறித்து அல்லாடிக் கொண்டிருந்தவர்களிடத்தில் பொறுமையாக இருக்குமாறு சகோதரர்களை பவுல் தயவுடன் உற்சாகப்படுத்தினார்; அதேசமயத்தில், மோசேயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொண்டால்தான் இரட்சிப்பு கிடைக்குமென்று சொல்லி சக விசுவாசிகளை பலவந்தப்படுத்தினவர்களை அவர் வன்மையாய் கண்டித்தார். உதாரணமாக, சுமார் பொ.ச. 61-ல், யூத கிறிஸ்தவர்களுக்கு வலிமைமிக்க கடிதமான எபிரெயர் புத்தகத்தை பவுல் எழுதினார்; மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதால் எந்தவொரு பயனுமில்லை ஏனெனில், இயேசுவின் கிரயபலியின் அடிப்படையில்தான் கிறிஸ்தவர்கள் தங்களுடைய மேம்பட்ட நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தக் கடிதத்தில் அவர் தெள்ளத் தெளிவாக விளக்கினார்.—கலாத்தியர் 5:1-12; தீத்து 1:10, 11; எபிரெயர் 10:1-17.
9, 10. கிறிஸ்தவர்கள் எதைத் தவிர்க்க வேண்டும்? விளக்குக.
9 நாம் பார்த்தபடி, கிறிஸ்தவ நியமங்கள் மீறப்படாதவரை வித்தியாசமான தெரிவுகளைச் செய்வது ஒற்றுமையைக் குலைத்துவிடாது என்றே பவுல் வாதிடுகிறார். எனவே, பலவீன மனசாட்சியை உடைய கிறிஸ்தவர்களை பவுல் இவ்வாறு கேட்கிறார்: “நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன?” அதோடு, பலமானவர்களை (ஒருவேளை நியாயப்பிரமாணத்தால் தடைசெய்யப்பட்ட சில உணவு வகைகளை சாப்பிட அல்லது ஓய்வுநாளன்று மற்ற வேலைகளை செய்ய அனுமதிக்கும் மனசாட்சி உடையவர்களை) இவ்வாறு கேட்கிறார்: “நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன?” (ரோமர் 14:10) பலவீன மனசாட்சி உடைய கிறிஸ்தவர்கள் பரந்த மனப்பான்மையுடைய தங்கள் சகோதரர்களைக் கண்டனம் செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும், பலமானவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் பலவீன மனசாட்சி உடையவர்களை ஏளனமாக பார்க்கக்கூடாதென்றுமே பவுல் இங்கே சொல்கிறார். ஆக, நாம் எல்லோருமே மற்றவர்களுடைய சரியான உள்நோக்கங்களை மதித்து, ‘[நம்மைக் குறித்து] எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாதிருக்க’ வேண்டும்.—ரோமர் 12:3, 18.
10 இதைக் குறித்த சமநிலையான நோக்குநிலையை பவுல் இவ்வாறு விளக்கினார்: “புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக. தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.” அதுமட்டுமல்ல, ‘தேவனுக்கு மகிமையுண்டாக கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டார்’ எனவும் அவர் சொன்னார். பலமானவர்கள், பலவீனமானவர்கள் ஆகிய இருதரப்பினரையுமே கடவுளும் கிறிஸ்துவும் ஏற்றுக்கொள்கிறார்கள், எனவே நாமும்கூட ‘ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளும்’ அதே பரந்த மனப்பான்மையைக் காண்பிக்க வேண்டும். (ரோமர் 14:3; 15:7) இதை எவரேனும் மறுக்க முடியுமா என்ன?
சகோதர அன்பு இன்று ஒற்றுமையை பிறப்பிக்கிறது
11. என்ன ஒரு பிரத்தியேக சூழ்நிலை பவுலின் நாட்களில் இருந்தது?
11 ரோமர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஒரு பிரத்தியேக சூழ்நிலைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். அந்தச் சமயத்தில்தான் யெகோவா பழைய உடன்படிக்கையைப் புறக்கணித்துவிட்டு புதிய உடன்படிக்கையை அமல்படுத்தியிருந்தார். அப்புதிய உடன்படிக்கையோடு ஒத்துப்போவது சிலருக்கு கடினமாக இருந்தது. அதே சூழ்நிலை இன்று இல்லையென்றாலும், அது போன்ற பிரச்சினைகள் சிலசமயம் எழலாம்.
12, 13. இன்று கிறிஸ்தவர்கள் என்னென்ன சூழ்நிலைகளில் தங்களுடைய சகோதரர்களுடைய மனசாட்சியை மதிக்கிறார்கள் என்பதைக் காட்டலாம்?
12 உதாரணத்திற்கு, ஒரு கிறிஸ்தவ பெண் எளிமையான உடையையும் தோற்றத்தையும் வலியுறுத்துகிற மதத்தை சேர்ந்தவளாக முன்பு இருந்திருக்கலாம். ஆனால், சத்தியத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, தகுந்த சமயங்களில் அடக்கமான, வண்ண ஆடைகளை அணிவதும் அளவாக மேக்கப் செய்துகொள்வதும் தவறல்ல என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது அவளுக்கு கடினமாக இருக்கலாம். இதில் எந்தவொரு பைபிள் நியமமும் உட்படாததால், தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாய் செயல்படும்படி எவரேனும் அவளை இணங்க வைக்க முயலுவது சரியாக இருக்காது. அதே சமயத்தில், இவற்றையெல்லாம் செய்ய அனுமதிக்கும் மனசாட்சியுடைய மற்ற கிறிஸ்தவ பெண்களை தான் விமர்சிக்கக் கூடாது என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும்.
13 மற்றொரு உதாரணத்தை கவனியுங்கள். மதுபானம் அருந்துவதை வெறுப்புடன் பார்க்கும் ஒரு சூழலில் கிறிஸ்தவர் ஒருவர் வளர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், சத்தியத்தைப் பற்றிய அறிவை பெற்ற பிறகு, திராட்சரசம் கடவுளிடமிருந்து கிடைத்த பரிசு, அதை மிதமாக அருந்துவது தவறல்ல என்ற பைபிளின் கருத்தை அவர் கற்றுக்கொள்கிறார். (சங்கீதம் 104:15) அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டாலும், தான் வளர்ந்த சூழலின் காரணமாக மதுபானத்தைத் தொடாமல் இருக்கவே விரும்புகிறார். என்றாலும், அதை மிதமாக அருந்தும் மற்றவர்களைப் பார்த்து அவர் விமர்சிப்பதில்லை. இவ்வாறு, “சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம்” என்ற பவுலின் புத்திமதியை கடைப்பிடிப்பவராக இருக்கிறார்.—ரோமர் 14:19.
14. ரோமர்களுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையின் சாரத்தை கிறிஸ்தவர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் பொருத்தலாம்?
14 ரோம கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையின் சாரத்தைப் பொருத்த வேண்டியுள்ள மற்ற சூழ்நிலைகள் இன்று எழுகின்றன. கிறிஸ்தவ சபை பல நபர்களால் ஆனது, அவர்களுக்கு வித்தியாச வித்தியாசமான விருப்பங்கள் உள்ளன. இதன் காரணமாக, ஒவ்வொருவரும் வித்தியாசப்பட்ட தெரிவுகளைச் செய்யலாம்; உதாரணத்திற்கு, உடை மற்றும் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவ்வாறு வித்தியாசப்பட்ட தெரிவுகளை செய்யலாம். உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டிய தெளிவான நியமங்களை பைபிள்தானே அளிக்கிறது. ஆம், இவ்வுலகிலுள்ள மோசமான ஆட்களோடு நம்மை சம்பந்தப்படுத்திக் காட்டுகிற அடக்கமற்ற விசித்திரமான உடைகளை அல்லது சிகை அலங்காரங்களை நாம் அனைவருமே ஒதுக்கித் தள்ளுவது அவசியம். (1 யோவான் 2:15-17) கிறிஸ்தவர்களான நாம் எல்லா சமயங்களிலும், ஏன் ஓய்வு நேரங்களிலும்கூட சர்வலோகப் பேரரசரை பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். (ஏசாயா 43:10; யோவான் 17:16; 1 தீமோத்தேயு 2:9, 10) என்றபோதிலும், அநேக அம்சங்களில் ஏற்கத்தக்க ஏராளமான தெரிவுகள் கிறிஸ்தவர்களுக்கு இருக்கின்றன.a
மற்றவர்களை இடறச் செய்யாதீர்
15. ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய சகோதரர்களின் நலனுக்காக, எப்போதெல்லாம் தன் உரிமைகளை விட்டுக்கொடுப்பார்?
15 ரோம கிறிஸ்தவர்களுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையில் கடைசியும் முக்கியமுமான இன்னொரு நியமம் இருக்கிறது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியை உடைய ஒரு கிறிஸ்தவர், எந்தத் தவறுமில்லாத ஒரு காரியத்தை செய்யாமல் இருந்துவிட தீர்மானிக்கலாம். ஏன்? ஏனென்றால் அப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒருவேளை தீங்கிழைக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். அது போன்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் நமக்கு வரும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்? பவுல் இவ்வாறு சொல்கிறார்: “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” (ரோமர் 14:14, 20, 21) “பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.” (ரோமர் 15:1, 2) நம்முடைய செயல் சக கிறிஸ்தவரின் மனசாட்சியைப் புண்படுத்திவிடுமென்றால், அவரை மனதில் வைத்து கட்டுப்பாட்டுடன் நாம் தெரிவுகளைச் செய்ய வேண்டும், இதற்கு சகோதர அன்பு நம்மை உந்துவிக்கும். உதாரணத்திற்கு மதுபானங்களைப் பயன்படுத்தும் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கிறிஸ்தவர் திராட்சரசத்தை மிதமாக குடிப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் அப்படி செய்வது தன்னுடன் இருப்பவரை இடறச் செய்யுமென்றால், தன்னுடைய உரிமைகளில் அவர் விடாப்பிடியாக இருக்க மாட்டார்.
16. நம் பிராந்தியத்தில் உள்ளவர்கள் மீது நாம் எப்படி அக்கறை காண்பிக்கலாம்?
16 கிறிஸ்தவ சபைக்கு வெளியே உள்ளவர்களிடம் நாம் நடந்துகொள்கிற விதத்திலும்கூட இந்த நியமத்தை பொருத்தலாம். உதாரணத்திற்கு, நாம் வசிக்கும் இடத்திலுள்ள முக்கிய மதம், வாரத்தின் ஒரு நாளை ஓய்வு நாளாக கடைப்பிடிக்கும்படி அதன் அங்கத்தினர்களுக்கு கற்பிக்கலாம். ஆகவே, அம்மதத்தைச் சேர்ந்த நமது அயலகத்தாரைப் புண்படுத்தும் எந்தவொரு செயலையும் அந்நாளில் செய்யாமலிருக்க முடிந்தவரை நாம் முயற்சி செய்வோம்; இவ்வாறு, அவர்களை இடறச் செய்யாதபடியும் நம்முடைய பிரசங்க வேலைக்கு தடை வராதபடியும் பார்த்துக்கொள்வோம். இப்போது மற்றொரு சூழ்நிலையை எடுத்துக்கொள்ளலாம். தேவை அதிகமுள்ள பிராந்தியத்திற்கு, அதுவும் ஏழை எளியோர் வாழும் பிராந்தியத்திற்கு ஒரு பணக்கார சகோதரர் மாறிச் செல்லலாம். அப்படி மாறிச் செல்லும் அவர், மிகவும் எளிய உடையை உடுத்துவதன் மூலம் தன்னுடைய புதிய அயலகத்தார் மீது அக்கறை காண்பிக்க தீர்மானிக்கலாம், அல்லது தன் வசதிக்கேற்ப வாழாமல் மிக எளிமையாக வாழ்வதன் மூலம் அவ்வாறு அக்கறை காண்பிக்க தீர்மானிக்கலாம்.
17. நாம் தெரிவுகள் செய்யும்போது மற்றவர்களைக் கருத்தில் கொள்வது ஏன் நியாயமானது?
17 ‘பலமானவர்கள்’ இவ்வாறெல்லாம் அனுசரித்துப்போக வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயம் தானா? இந்த உதாரணத்தை சிந்தியுங்கள்: ஒரு நெடுஞ்சாலையில் நாம் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும்போது, நம் எதிரே சில பிள்ளைகள் சாலையின் அபாய எல்லையைத் தாண்டி நடந்து செல்வதை பார்க்கிறோம். அப்போது என்ன செய்வோம்? அந்தச் சாலையில் வேகமாக போவதற்கு சட்டப்பூர்வ உரிமையிருக்கிறது என்பதற்காக நாம் தொடர்ந்து மின்னல் வேகத்தில் வண்டியை ஓட்டுவோமா? மாட்டோம், பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படாதிருக்க வேகத்தை குறைத்துவிடுவோம். சில சமயங்களில் இதுபோல் வேகத்தைக் குறைப்பது, அதாவது நிதானத்தோடும் வளைந்துகொடுக்கும் தன்மையோடும் நடந்துகொள்வது சக விசுவாசிகளுடனும் மற்றவர்களுடனும் நல்ல உறவை வைத்துக்கொள்ள தேவைப்படுகிறது. ஒருவேளை எவ்வித ஆட்சேபணையுமில்லாத ஒரு காரியத்தை நாம் செய்து கொண்டிருக்கலாம். அதில் எந்தவொரு பைபிள் நியமமும் மீறப்படாதிருக்கலாம். இருப்பினும், அந்தக் காரியம் மற்றவர்களைப் புண்படுத்தும் என்றால், அல்லது பலவீன மனசாட்சி உடையவர்களுக்கு தீங்கிழைக்கும் என்றால், நாம் கவனமாக செயல்பட வேண்டும், இதற்கு கிறிஸ்தவ அன்பு நம்மைத் தூண்டும். (ரோமர் 14:13, 15) நம்முடைய தனிப்பட்ட உரிமைகளின்படி செயல்படுவதைவிட ஒற்றுமையைக் கட்டிக்காப்பதும், ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதும்தான் மிகவும் முக்கியம்.
18, 19. (அ) மற்றவர்களிடம் அக்கறை காட்டும் விஷயத்தில், நாம் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம்? (ஆ) எந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒத்திசைவாக செயல்படுகிறோம், பின்வரும் கட்டுரையில் எதை கலந்தாராய்வோம்?
18 இவ்வாறு செய்கையில், மிகச் சிறந்த முன்மாதிரியை நாம் பின்பற்றுபவர்களாக இருப்போம். பவுல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.” நமக்காக தம் ஜீவனையே கொடுக்க இயேசு மனமுள்ளவராக இருந்தார். அப்படியானால், ‘பலவீனர்களும்’ நம்மோடு சேர்ந்து தேவனை மகிமைப்படுத்தும்படிக்கு நாமும்கூட சில உரிமைகளை விட்டுக்கொடுக்க நிச்சயம் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். உண்மையில், பலவீன மனசாட்சியுடைய கிறிஸ்தவர்களைப் பொறுத்துக்கொண்டு பெருந்தன்மையாக நடப்பது—அல்லது நம்முடைய உரிமைகளை விடாப்பிடியாய் பற்றிக்கொண்டிராமல் மனமுவந்து விட்டுக்கொடுப்பது—‘கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே . . . ஏக சிந்தையுள்ளவர்களாயிருக்கிறோம்’ என்பதைக் காட்டுகிறது.—ரோமர் 15:1-6.
19 வேதப்பூர்வ நியமங்கள் உட்படாத சில விஷயங்களின் பேரில் நம்முடைய கருத்துகள் சற்று வேறுபட்டாலும், வணக்க விஷயத்தில் நாம் முழு ஒத்திசைவுடன் செயல்படுகிறோம். (1 கொரிந்தியர் 1:10) உதாரணத்திற்கு, உண்மை வணக்கத்தை எதிர்ப்பவர்களிடம் நாம் நடந்துகொள்கிற விதம் இந்த ஒற்றுமையைத் தெளிவாக காட்டுகிறது. இவ்வாறு எதிர்ப்பவர்களைக் கடவுளுடைய வார்த்தை அந்நியர்கள் என்று அழைக்கிறது. ‘அந்நியருடைய சத்தத்திற்கு’ ஜாக்கிரதையாய் இருக்கும்படி அது நம்மை எச்சரிக்கிறது. (யோவான் 10:5) அப்படிப்பட்ட அந்நியர்களை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்? அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? இந்தக் கேள்விகள் பின்வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a சிறு பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கேற்ப உடைகளை தெரிவு செய்கிறார்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• தனிப்பட்ட விஷயத்தில் கருத்து வேற்றுமைகள் இருப்பது ஏன் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இல்லை?
• கிறிஸ்தவர்களாக நாம் ஏன் ஒருவருக்கொருவர் கனிவான அக்கறையைக் காட்ட வேண்டும்?
• ஒற்றுமையின் பேரில் பவுல் கொடுத்த ஆலோசனையை இன்று என்னென்ன வழிகளில் நாம் பொருத்தலாம், அவ்வாறு செய்ய எது நம்மைத் தூண்டும்?
[பக்கம் 9-ன் படம்]
ஒற்றுமையின் பேரில் பவுல் கொடுத்த ஆலோசனை சபைக்கு இன்றியமையாததாக இருந்தது
[பக்கம் 10-ன் படம்]
வெவ்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றனர்
[பக்கம் 12-ன் படம்]
வண்டியை ஓட்டுபவர் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?