வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள 1,44,000 என்ற எண்ணிக்கையை யெகோவாவின் சாட்சிகள் அடையாள அர்த்தத்தில் அல்லாமல் ஏன் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள்?
“முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; . . . இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (வெளிப்படுத்துதல் 7:4) ‘முத்திரை போடப்பட்டவர்கள்’ என பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர், சீக்கிரத்தில் வரவிருக்கும் பரதீஸ் பூமியின் மீது ஆட்சி செய்யப் போகிறவர்களைக் குறிக்கிறது; ஆம், பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய மனிதகுலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. (2 கொரிந்தியர் 1:21, 22; வெளிப்படுத்துதல் 5:9, 10; 20:6) 1,44,000 என்ற அவர்களுடைய எண்ணிக்கை அநேக காரணங்களுக்காக சொல்லர்த்தமாய் புரிந்துகொள்ளப்படுகிறது. அதில் ஒரு காரணத்தை வெளிப்படுத்துதல் 7:4-ன் சூழமைவிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.
1,44,000 பேர் அடங்கிய இந்தத் தொகுதியைப் பற்றி தரிசனத்தில் சொல்லப்பட்டதை அப்போஸ்தலன் யோவான் கேட்ட பிறகு இன்னொரு தொகுதியினரை அந்தத் தரிசனத்தில் பார்த்தார். இந்த இரண்டாம் தொகுதியினரை ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்’ என்று யோவான் விவரிக்கிறார். சீக்கிரத்தில் வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ தற்போதைய பொல்லாத உலகம் அழிக்கப்படும். அதிலிருந்து தப்பிப்பிழைக்கும் ஆட்களையே இந்தத் திரள் கூட்டத்தார் குறிக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
என்றாலும், வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்திலுள்ள 4 மற்றும் 9-வது வசனங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை யோவான் குறிப்பிடுவதை கவனியுங்கள். ‘முத்திரை போடப்பட்ட’ முதல் தொகுதி, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் என்று அவர் சொல்கிறார். ஆயினும் ‘திரள் கூட்டம்’ என்றழைக்கப்படும் இரண்டாம் தொகுதி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு உட்படாதவர்கள் என்று சொல்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது, 1,44,000 என்ற எண்ணிக்கையை சொல்லர்த்தமாய் எடுத்துக்கொள்வதே சரியானது. ஒருவேளை 1,44,000 என்ற எண் கணக்கிலடங்கா ஒரு தொகுதியினரை அடையாள அர்த்தத்தில் குறிப்பிடுவதாக இருந்தால் இவ்விரண்டு வசனங்களுக்கிடையே உள்ள ஆழமான வேறுபாடு புலப்படாமலேயே போய்விட்டிருக்கும். எனவே 1,44,000 என்ற எண்ணிக்கையை சொல்லர்த்தமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் சூழமைவு வலியுறுத்துகிறது.
அன்றும் சரி, இன்றும் சரி, பலதரப்பட்ட பைபிள் கல்விமான்கள் இதே முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள், அதாவது இந்த எண்ணிக்கை சொல்லர்த்தமானதே என்ற முடிவுக்குத்தான் வந்திருக்கிறார்கள். உதாரணமாக, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் எத்தால்பார்ட் டபிள்யு. புல்லிங்கர் என்ற பிரிட்டிஷ் சொற்களஞ்சிய ஆசிரியர் வெளிப்படுத்துதல் 7:4, 9 பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “இது ஓர் எளிய உண்மை: இந்த ஒரே அதிகாரத்தில் திட்டவட்டமான ஒரு எண்ணிக்கையும் அதற்கு நேர்மாறாக திட்டவட்டமில்லாத எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.” (அப்பாக்கலிப்ஸ் அல்லது “கர்த்தருடைய நாள்,” [ஆங்கிலம்] பக்கம் 282) சமீபத்தில், அமெரிக்காவிலுள்ள மாஸ்டர்ஸ் செமினரியில் நியூ டெஸ்டமென்டின் பேராசிரியரான ராபர்ட் எல். தாமஸ், ஜூனியர் என்பவர் இவ்வாறு எழுதினார்: “1,44,000 என்ற எண்ணை அடையாள அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.” “[7:4]-ல் உள்ளது திட்டவட்டமான ஓர் எண்ணிக்கை; அதற்கு நேர்மாறாக, [7:9]-லுள்ள எண்ணிக்கையோ திட்டவட்டமில்லாதது. ஒருவேளை இந்த எண்ணிக்கையை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் இப்புத்தகத்திலுள்ள எந்த எண்ணிக்கையையும் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றும் அவர் சொல்கிறார்.—வெளிப்படுத்துதல்: விளக்கவுரை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 474.
வெளிப்படுத்துதல் புத்தகம், நிறைய இடங்களில் அடையாள அர்த்தத்தில் பேசுவதால் இந்தப் புத்தகத்திலுள்ள 1,44,000 என்ற எண் உட்பட எல்லா எண்களுமே அடையாள அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று சிலர் வாதாடுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 1:1, 4; 2:10) ஆனால் அந்த முடிவு சரியானதே அல்ல. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் நிறைய எண்கள் அடையாள அர்த்தத்தில் கொடுக்கப்பட்டிருப்பது என்னவோ உண்மைதான், என்றாலும் சொல்லர்த்தமான எண்களும் அதில் இருக்கின்றன. உதாரணத்திற்கு ‘பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்கள்’ பற்றி யோவான் பேசுகிறார். (வெளிப்படுத்துதல் 21:14) இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள 12 என்ற எண் அடையாள அர்த்தமுடையது அல்ல, அது சொல்லர்த்தமானது. மேலும் கிறிஸ்துவினுடைய ‘ஆயிர வருட’ அரசாட்சியைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் எழுதுகிறார். பைபிளை கவனமாக ஆராயும்போது அந்த எண்ணையும் சொல்லர்த்தமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தெரிகிறது.a (வெளிப்படுத்துதல் 20:2, 3, 5-7) எனவே, வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள ஓர் எண்ணை அடையாள அர்த்தத்தில் எடுத்துக்கொள்வதா அல்லது சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்வதா என்பது அதன் சூழமைவின் பேரிலேயே சார்ந்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, 1,44,000 என்ற எண்ணிக்கை சொல்லர்த்தமானது, அது குறைவான எண்ணிக்கையுள்ள நபர்களை, அதாவது ‘திரள் கூட்டத்தாரோடு’ ஒப்பிட சிறு தொகுதியாக உள்ள நபர்களை குறிக்கிறது என்ற கருத்து பைபிளிலுள்ள மற்ற வசனங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக அப்போஸ்தலன் யோவானுக்கு கிடைத்த தரிசனத்தின் பிற்பகுதியில், 1,44,000 பேர் ‘மனுஷரிலிருந்து முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்’ என விவரிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:1, 4) ‘முதற்பலன்’ என்ற இந்தப் பதம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிறிய தொகுதியை குறிக்கிறது. அதோடு, தம்முடன் பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்யவிருந்த தொகுதியினரைப் பற்றி ஒருமுறை பேசியபோது இயேசுவும்கூட அவர்களை ‘சிறு மந்தை’ என்றே அழைத்தார். (லூக்கா 12:32; 22:29) ஆம், வரவிருக்கிற பரதீஸிய பூமியில் குடியிருக்கப் போகிறவர்களோடு ஒப்பிட பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யப் போகிறவர்கள் வெகு சிலரே.
எனவே, வெளிப்படுத்துதல் 7:4-ன் சூழமைவும் அது தொடர்பான மற்ற பைபிள் வாக்கியங்களும், 1,44,000 என்ற எண்ணை சொல்லர்த்தமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி காட்டுகின்றன. அந்த எண் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்யப் போகிறவர்களையே குறிக்கிறது; ஆம், சந்தோஷமிக்க திரளான எண்ணிக்கையானோர் நிறைந்த பரதீஸ் பூமியின் மீது ஆட்சி செய்யப் போகிறவர்களையே அது குறிக்கிறது.—சங்கீதம் 37:29.
[அடிக்குறிப்பு]
a கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 289-90-ஐக் காண்க.
[பக்கம் 31-ன் சிறு குறிப்பு]
பரலோக சுதந்தரவாளிகளின் எண்ணிக்கை 1,44,000 மட்டுமே
[பக்கம் 31-ன் படம்]
‘திரள் கூட்டத்தாரின்’ எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
நட்சத்திரங்கள்: Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin