யெகோவாவுடைய படைப்பின் மகத்துவம்
‘கடலின் திரளான செல்வங்கள்’
கதிரவன் கண்ணயரப் போகும் வேளையில் இளந்தென்றல் கடலை வருடிச் செல்கிறது; கடலலைகளோ கரையை மெல்ல தழுவிச் செல்கின்றன. ஓய்வையும் அமைதியையும் தேடி கடற்கரைக்குத் திரண்டு வருவோரை அலைகளின் மெல்லோசை ஈர்க்கிறது.a
இத்தகைய கடற்கரைகள் உலகை சுற்றிலும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு நீண்டு கிடக்கின்றன. மணலையும் நீரையும் பிரிக்கிறதும், எப்போதும் மாறிக் கொண்டே இருக்கிறதுமான இந்தக் கரையோரம், கடலைக் கட்டுப்படுத்தும் எல்லையாக அமைகிறது. அப்படித்தான் படைப்பாளர் இதை வடிவமைத்திருக்கிறார். கடவுள் தம்மைப் பற்றி சொல்லும்போது, ‘சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருப்பதாக’ அறிவிக்கிறார். “அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும்” தாம் செய்திருப்பதாக சொல்கிறார்.—எரேமியா 5:22; யோபு 38:8; சங்கீதம் 33:7.
சூரிய மண்டலத்திலுள்ள எந்தக் கிரகத்தையும் போலில்லாமல் நமது கிரகத்தைப் பெருமளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. நமது கோளத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பாகம் தண்ணீரால் நிறைந்துள்ளது. மனிதர் குடியிருப்பதற்காக பூமியை யெகோவா தயார்படுத்தியபோது, “வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது” என அறிவித்தார். “அது அப்படியே ஆயிற்று.” “தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்” என தொடர்ந்து அந்தப் பதிவு சொல்கிறது. (ஆதியாகமம் 1:9, 10) கடல்கள் இருப்பதால் பயன் என்ன?
குறிப்பிடத்தக்க, எண்ணற்ற வழிகளில், உயிர் காப்பதற்குக் கடவுள் கடல் நீரைப் படைத்தார். உதாரணமாக, உஷ்ணத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை தண்ணீருக்கு உண்டு. இதன் காரணமாக, குளிர்காலத்தில் கடும் குளிரை சமநிலைப்படுத்துவதற்கு, உஷ்ணத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் பிரமாண்டமான கலனைப் போல் கடல்கள் செயல்படுகின்றன.
தண்ணீர் இன்னொரு விதத்திலும் உயிர் காக்கும் திறன் படைத்தது. எந்தத் திரவத்தைக் காட்டிலும் இது அநேக பொருள்களை எளிதில் கரைக்கும் தன்மையுடையது. இரசாயன வினைகள் மூலமாகவே வாழ்க்கை சுழற்சி சாத்தியமாவதால், வினை புரியும் பொருட்களை கரைக்கவும், அவற்றின் மூலக்கூறுகளை இணைத்து கூட்டுப் பொருட்களை உருவாக்கவும் தண்ணீர் அவசியமாகிறது. உயிருள்ள திசுக்களில் காணப்படும் அநேக இரசாயன கூட்டுப் பொருட்களில் தண்ணீர் உள்ளது. கடல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “எல்லா வகை உயிர்களுக்கும், அதாவது நிலத்தில் வாழும் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீர் தேவை; அதை இறுதியில் சமுத்திரங்களில் இருந்துதான் பெற வேண்டும்.”
வளிமண்டலத்தை சுத்தப்படுத்துவதிலும்கூட பூமியிலுள்ள கடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடல்களிலுள்ள மிதவை நுண்ணுயிரிகள் (plankton) கார்பன் டையாக்ஸைடை உறிஞ்சிக் கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன. ஓர் ஆராய்ச்சியாளரின்படி, “ஒவ்வொரு வருடமும் வளிமண்டலத்தில் கலக்கும் 70 சதவீத ஆக்ஸிஜன், கடலிலுள்ள மிதவை நுண்ணுயிரிகள் வெளிவிடுபவை.”
வியாதிகளை குணப்படுத்தும் இயற்கை நிவாரணிகளையும் கடல்கள் தருகின்றன. மீனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பொருட்கள் காலங்காலமாகவே மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட காலமாக மீன் எண்ணெய்யை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சமீப காலங்களில், மீனிலிருந்தும் பிற கடல் உயிரிகளிலிருந்தும் பெறப்பட்ட இரசாயனங்கள் ஆஸ்துமாவுக்கும் வைரஸ் தொற்றுகளுக்கும் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
கடல் வழங்கும் நன்மைகளைப் பொருளாதார ரீதியில் மதிப்பிடுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. துல்லியமான எந்த முடிவுகளையும் எட்ட முடியாது என்றாலும், உலக சூழியல் அமைப்பின் சேவைகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பாகத்தை கடல்களே அளிக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். கடல்கள் ஒரு நோக்கத்துடன், அதாவது வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து, உயிர்களை ஆதரிக்கும் நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளன என்ற உண்மைக்கு இது சான்றளிக்கிறது. இந்த நோக்கம், ‘கடலின் திரளான செல்வங்கள்’ என பைபிள் அழைப்பதற்கு எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது!—உபாகமம் 33:19, பொது மொழிபெயர்ப்பு.
இந்தச் செல்வத்தின் ஈடிணையற்ற வடிவமைப்பாளராகவும் படைப்பாளராகவும் யெகோவா புகழப்படுகிறார். பின்வரும் வார்த்தைகளில் அவரைத் துதிக்க நெகேமியா உந்துவிக்கப்பட்டார்: ‘நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், . . . சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்.’—நெகேமியா 9:6.
[அடிக்குறிப்பு]
a 2004 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர்-ல் செப்டம்பர்/அக்டோபரைக் காண்க.
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
தண்ணீர், காற்று, அலைகள்
ஐக்கிய மாகாணங்களில் கலிபோர்னியாவில் காணப்படும் இது போன்ற பாறை முகடுகளின் மீது, தண்ணீரும் காற்றும் உருவாக்கும் பிரமாண்டமான அலைகள் காதை பிளக்கும் சத்தத்துடன் வந்து மோதுகின்றன. இந்த அலைகள், பிரமிக்க வைக்கும் அதன் வலிமையை செயலில் காட்டுவதன் மூலம் எப்போதுமே கடலின் அற்புத அம்சமாக திகழ்கின்றன. இவை படைப்பாளரின் தனிச்சிறப்புமிக்க வல்லமைக்கு மலைப்பூட்டும் நினைப்பூட்டுதலாகவும் இருக்கின்றன. யெகோவாவே “சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.” “அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப் பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.” (யோபு 9:8; 26:12) ‘திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்’ என்பது உண்மையே.—சங்கீதம் 93:4.
மணல் சிற்பங்கள்
ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் அமைந்துள்ள நமிபியாவின் கரையோரத்தில் காணப்படும் மணற்குன்றுகளை போன்ற மனதை மயக்கும் மணல் சிற்பங்களுக்கு சில சமயங்களில் கடற்கரைகள் பின்னணியாய் அமைகின்றன. இந்த மணலில் பல்வகை வடிவங்களைப் படைக்கும் முக்கிய ஆற்றல் காற்றுதான். சில மணற்குன்றுகள் சிறிய திமில் போல் காட்சியளிக்கின்றன; மற்றவையோ 400 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்தோங்கி நிற்கின்றன. எக்கச்சக்கமாக மணல் இருப்பது “கடற்கரை மணலைப் போல” என்ற பைபிள் சொற்றொடரைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. எண்ண முடியாத, அளவிட முடியாத ஒன்றைக் குறிப்பிட இது பயன்படுத்தப்படுகிறது. (ஆதியாகமம் 22:17) கொந்தளிக்கும் கடலின் தாக்குதல்களைத் தடுக்கும் அரண் போன்ற பலமான மணல் அமைப்பை வடிவமைத்த படைப்பாளருக்கு முன்பாக நாம் வியப்பில் வார்த்தையின்றி வாயடைத்து நிற்கிறோம்.
[பக்கம் 9-ன் படம்]
சூரியன் அஸ்தமிக்கும் கடற்கரை, பியாஃப்ரா வளைகுடா, கேமருன்