வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வெளிப்படுத்துதல் 20:8-ன் அடிப்படையில், இறுதி சோதனையின்போது சாத்தான் பெருந்திரளானோரை மோசம் போக்குவான் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டுமா?
மேசியானிய ராஜ்யத்தின் ஆயிரவருட ஆட்சியினுடைய முடிவில் பூமியில் வாழப்போகும் ஜனங்கள் மீது சாத்தான் கொண்டுவரவிருக்கும் இறுதி தாக்குதலைப் பற்றி வெளிப்படுத்துதல் 20:8 விவரிக்கிறது. சாத்தானைப் பற்றி பேசுகையில் அந்த வசனம் இவ்வாறு கூறுகிறது: “பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.”
அறிவியல் புதிய வழிமுறைகளையும் கருவிகளையும் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறபோதிலும், ‘கடற்கரை மணலின்’ அளவை அல்லது எண்ணிக்கையை அதனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவே இல்லை. ஆகவே, இந்தச் சொற்றொடர் அறியப்படாத, நிர்ணயிக்க முடியாத எண்ணிக்கையை குறிப்பதாக சொல்லலாம். ஆனால் அது கற்பனைக்குக்கூட எட்டாத, அளவற்ற, மாபெரும் எண்ணிக்கையைக் குறிக்கிறதா, அல்லது வெறுமனே அறியப்படாத அதே சமயத்தில் கணிசமான எண்ணிக்கையை மட்டுமே குறிக்கிறதா?
பைபிளில் ‘கடற்கரை மணல்’ என்ற சொற்றொடர் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆதியாகமம் 41:49-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாக தானியத்தைச் சேர்த்து வைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.” இங்கே, அளவிட முடியாத ஒன்றை வலியுறுத்தவே அந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதைப் போலவே யெகோவா இவ்வாறு குறிப்பிட்டார்: “வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறது போல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியை . . . வர்த்திக்கப் பண்ணுவேன்.”—எரேமியா 33:22.
‘கடற்கரை மணல்’ என்ற சொற்றொடர் கணிசமான, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை அல்லது அளவை பெரும்பாலும் குறிக்கிறது. மிக்மாசில் பெலிஸ்தருடைய சேனை பாளயமிறங்கியிருப்பதைக் கேள்விப்பட்டபோது கில்காலிலிருந்த இஸ்ரவேலர் கதிகலங்கினார்கள்; அச்சேனை “கடற்கரை மணலத்தனை”யாக இருந்தது. (1 சாமுவேல் 13:5, 6; நியாயாதிபதிகள் 7:12) இன்னொரு உதாரணம்: “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.” (1 இராஜாக்கள் 4:29) மேற்கூறப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தச் சொற்றொடர் கணிசமான எண்ணிக்கையைக் குறித்தபோதிலும், அது அளவிற்குட்பட்டதாகவே இருந்தது.
‘கடற்கரை மணல்’ என்ற சொற்றொடர் மாபெரும் எண்ணிக்கையை குறிக்காமல் வெறுமனே அறியப்படாத எண்ணிக்கையை மட்டும்கூட குறிக்கலாம். ஆபிரகாமிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்.” (ஆதியாகமம் 22:17) ஆபிரகாமின் பேரனாகிய யாக்கோபிடம் இந்த வாக்குறுதியை மீண்டும் சொன்னபோது, ‘பூமியின் தூளைப் போல’ என்ற சொற்றொடரை யெகோவா பயன்படுத்தினார்; அதை யாக்கோபு “கடற்கரை மணலைப் போல” என திரும்பவும் குறிப்பிட்டார். (ஆதியாகமம் 28:14; 32:12) காரியங்கள் நிறைவேறியபோது, ஆபிரகாமின் “சந்ததி,” இயேசு கிறிஸ்துவை தவிர, 1,44,000 என்ற எண்ணிக்கையானார்கள், இவர்களை “சிறுமந்தை” என இயேசு அழைத்தார்.—லூக்கா 12:32; கலாத்தியர் 3:16, 29; வெளிப்படுத்துதல் 7:4; 14:1, 3.
இந்த உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? ‘கடற்கரை மணலைப் போல’ என்ற சொற்றொடர் எப்பொழுதுமே அளவிட முடியாத மாபெரும் எண்ணிக்கையை அர்த்தப்படுத்துவதில்லை; கற்பனைக்கே எட்டாத, அளவற்ற ஒன்றை விவரிக்கவும் அது எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் அது அறியப்படாத எண்ணிக்கையை அதே சமயத்தில் கணிசமான எண்ணிக்கையை குறிக்கிறது. ஆகவே, கடவுளுடைய ஜனங்கள் மீது சாத்தான் கொண்டுவரவிருக்கும் கடைசி தாக்குதலில் அவனை ஆதரிக்கும் கலகக்கூட்டம் அளவிட முடியாத பெரும் எண்ணிக்கையில் இருப்பார்கள் என சொல்ல முடியாது; அவர்கள் அச்சுறுத்தலாய் இருக்கும் அளவுக்கு கணிசமான எண்ணிக்கையில் இருப்பார்கள் என நம்புவதே நியாயமாக இருக்கிறது. என்றாலும் அவர்களது திட்டவட்டமான எண்ணிக்கை இப்பொழுது நமக்குத் தெரியாது.