“வானத்து நட்சத்திரங்களைப் போல”
“உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்.” (ஆதியாகமம் 22:17) இப்படியாகக் கடவுள் முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு வாக்குக்கொடுத்தார். என்றபோதிலும் பைபிள் ரிவ்யு-வின் அண்மை வெளியீடு இந்த வசனத்தில் ஒரு பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கடற்கரை மணலின் கோடிக்கணக்கான அரிமணல் பொடிக்கு ஒப்பிடுவதில், பைபிள், அறிவியல் ரீதியில் சரியாகவே இருக்கிறது. என்றபோதிலும் நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன என்பது பூர்வகாலங்களில் அறியப்படாதவையாகவே இருந்தன. பைபிள் ரிவ்யு பின்வருமாறு விளக்குகிறது: “நம்முடைய கண்களால் வானத்தில் பார்ப்பதற்கு உண்மையில் அத்தனை நட்சத்திரங்கள் இல்லை. வானாராய்ச்சியாளர்கள் சொல்லுகிறபிரகாரம் ஒரு தெளிவான இரவில் எந்தவித தொலைநோக்கியின் உதவியுமின்றி நாம் 2,000 முதல் 4,000 நட்சத்திரங்கள் மட்டுமே பார்க்க முடியும். “ஒரு தொலைக்காட்சியின் உதவியின்றி பார்க்குமளவுக்கு ஏறக்குறைய 6,000 நட்சத்திரங்கள் பிரகாசமாய் ஒளிருகின்றன,” என்று தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறது.
இந்த ஒப்பிடுதலைச் செய்யும் பைபிளின் குறிப்பிடத்தக்க, மிகத் திருத்தமான இந்தக் காரியத்தை ஒருவர் எப்படி விளக்குவார்? பைபிள் “தேவாவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்பது ஒரு விளக்கம். (2 தீமோத்தேயு 3:16) என்றபோதிலும் பைபிள் ரிவ்யு-வில் வெளிவந்த அந்தக் கட்டுரை இந்த முடிவைச் சுற்றிவளைத்து தாக்குமளவுக்குச் செல்வதாய், ஆபிரகாம் ஒருவேளை வான்கணிப்பாளராக இருந்திருக்கவேண்டும் என்று யோசனைத் தெரிவிக்கிறது! வியப்பூட்டும் இந்த முடிவைப் பின்வரும் கேள்வி தொடர்ந்தது: “மாம்ச கண்கள் பார்க்கமுடியாத நட்சத்திரங்களை வெளிப்படுத்திய தொலைநோக்கியைப் பூர்வீக மக்கள் கொண்டிருந்திருக்கக் கூடுமா?” இந்தக் கோட்பாட்டை ஆதரிக்க, நினிவேயிலும் மற்ற பூர்வீக இடங்களிலும் கண்டெடுக்கப்பட்ட படிகக்கற்கள் ஆரம்பகால லென்சுகளாக சேவித்திருக்கக்கூடும் என்று அந்தக் கட்டுரை ஆதாரம் காட்டுகிறது.
என்றபோதிலும், நட்சத்திரங்களைப் பார்ப்பதற்காக பூர்வீக மக்கள் அப்படிப்பட்ட லென்சுகளைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு அத்தாட்சி இல்லை. பூர்வீகத்தில் தொலைநோக்கிகள் இருந்தன என்றாலும், ஆபிரகாம் அல்லது ஆதியாகமத்தின் எழுத்தாளர் அப்படிப்பட்ட ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முடிந்தது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? உண்மையில், கடவுள் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், பைபிள் அறிவியல் ரீதியில் மிகச் சரியாக இருக்கிறது என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக அமைகிறது. தெளிவாகவே, ஒரு தொலைநோக்கியின் உதவியின்றி எரேமியா தீர்க்கதரிசி அதுபோன்ற ஒரு திருத்தமான காரியத்தைக் குறிப்பிட்டான்: “வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறது.”—எரேமியா 33:22 (g88 4/8)
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
NASA photos