உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 9/15 பக். 21-23
  • விருந்து படைக்கும் திரிகைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விருந்து படைக்கும் திரிகைகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் தேவை?
  • கைகள் இயக்கிய திரிகைகள்
  • வேலையை சுலபமாக்கிய சுழல் அரவை இயந்திரங்கள்
  • நீரிலும் காற்றிலும் இயங்கும் இயந்திரங்கள்
  • ‘எங்களுக்கு வேண்டிய ஆகாரம்’
  • கைகளால் சுற்றப்பட்ட திரிகைக் கல்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • திரிகைக் கல்
    சொல் பட்டியல்
  • செக்கியாவின் மில்களில் வாழ்க்கை
    விழித்தெழு!—2005
  • உங்களுக்கு தெரியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 9/15 பக். 21-23

விருந்து படைக்கும் திரிகைகள்

வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது, மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்று. ஆம், காலம் காலமாக தானியம் முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது. சொல்லப்போனால், அன்றாட உணவை பெறுவது மனிதனுடைய கட்டாய தேவைகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது.

சாப்பாட்டுக்கு முக்கியமாக தேவைப்படுவது மாவு; இந்த மாவைப் பெறுவதற்கு தானியங்களை அரைக்க வேண்டும். அப்படியானால், மாவரைத்தலை பண்டைய கால கலை என்று சொல்லலாம். இயந்திர வசதி இல்லாத காலத்தில் தானியத்தை மாவாக்குவது எப்பேர்ப்பட்ட கடினமான வேலையாக இருந்திருக்கும்! பைபிள் காலங்களில் எந்திரக் கல்லின், அதாவது திரிகையின் சத்தம் இயல்பான, சமாதான சூழலையும், அந்த சத்தம் கேட்காதது பாழான நிலையையும் அர்த்தப்படுத்தியது.​—⁠எரேமியா 25:10, 11.

மனித சரித்திரம் முழுவதிலும் மாவரைப்பதற்கு என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது? இதற்காக பயன்படுத்தப்பட்ட சில முறைகளும் கருவிகளும் யாவை? எந்த வகை அரவை இயந்திரங்கள் இன்று உணவு தயாரிப்பில் கைகொடுக்கின்றன?

ஏன் தேவை?

“இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது” என முதல் தம்பதியரான ஆதாம் ஏவாளிடம் யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 1:29) மனிதர்களுக்கு யெகோவா தேவன் உணவாக கொடுத்தவற்றில் தானியக் கதிர்களிலிருந்து பெறும் மணிகளும் அடங்கும். கோதுமை, பார்லி, ரை, ஓட்ஸ், அரிசி, கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற எல்லா தானியங்களிலும் மாவுசத்துமிக்க கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இவ்வகை உணவு உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது; இந்த கார்போஹைட்ரேட்டுகளை உடல், சர்க்கரையாக, அதாவது குளூக்கோஸாக மாற்றுகிறது; இந்த சர்க்கரை உடலுக்கு அத்தியாவசியமான சக்தியை அளிக்கிறது.

எனினும் மனிதரால் தானியங்களை அப்படியே முழுமையாக சாப்பிட்டு ஜீரணிக்க முடியாது. ஆனால் அவற்றை மாவாக்கி, சமைக்கையில் எளிதில் சாப்பிட முடிகிறது. அதிகளவு தானியத்தை மாவாக்குவதற்கு அதை உரலில் இடிக்க வேண்டும், அல்லது இரண்டு கற்களுக்கு இடையே வைத்து அரைத்து பொடியாக்க வேண்டும், அல்லது இடித்தும் அரைத்தும் பொடியாக்க வேண்டும். இவையே மாவாக்குவதற்கான எளிய முறைகள்.

கைகள் இயக்கிய திரிகைகள்

பூர்வ எகிப்திய கல்லறைகளிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய சிலைகள், பண்டைய காலத்தில் தானியத்தை அரைப்பதற்கு அம்மிக்கல் போன்ற சேண வடிவ திரிகை பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகிறது. இது பார்ப்பதற்கு சேணம் போல் இருப்பதால் இப்பெயரைப் பெற்றது. இந்தத் திரிகையில் இரண்டு கற்கள் இருந்தன; சற்றே குழிந்த, சரிவான அடிக் கல்லும், சிறிய மேல் கல்லும் இருந்தன. பொதுவாக ஒரு பணிப்பெண் இந்தத் திரிகைக்கு முன் மண்டியிட்டு அமர்ந்து மேல் கல்லை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொள்வாள். கற்களுக்கு இடையே இருக்கும் தானியம் அரைபடும்படி முழு பலத்தையும் பிரயோகித்து மேல் கல்லை அடிக் கல்லின் மீது வைத்து முன்னும் பின்னும் நகர்த்துவாள். எளிமையான ஆனால் பயனுள்ள எப்பேர்ப்பட்ட திரிகை!

இருந்தாலும், மணிக்கணக்காக மண்டியிட்டு அமர்ந்து அரைத்தது உடலை பாதித்தது. திரிகையின் மேல் கல்லை பணிப்பெண் தொடர்ந்து முன்னும் பின்னுமாக நகர்த்தி அரைப்பது, அவளது முதுகு, கைகள், தொடைகள், முழங்கால்கள், பாதவிரல்கள் ஆகிய பாகங்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தன. பூர்வ சிரியாவிலுள்ள எலும்புக்கூடுகளை ஆராய்ந்தபோது அவை சாதாரண நிலையில் இல்லாதிருப்பது தெரிய வந்தது; இதுபோன்ற திரிகைகளை இளம் பெண்கள் உபயோகித்ததாலேயே, முழங்கால் மூட்டுகளில் விரிசல், முதுகெலும்பின் கடைசியிலுள்ள முள்ளெலும்பில் பாதிப்பு, கால் பெருவிரலில் கடுமையான எலும்பு சார்ந்த மூட்டழற்சி போன்ற தொடர் அழுத்த பாதிப்புகள் (repetitive stress injuries) அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு புதைப்படிவ ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். பூர்வ எகிப்தில் திரிகையில் அரைப்பதே பணிப் பெண்களின் வேலையாக இருந்ததாய் தெரிகிறது. (யாத்திராகமம் 11:5)a இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறிய போது தங்களுடன் சேண வடிவ திரிகையை அவர்கள் எடுத்து சென்றிருப்பார்கள் என்பது சில கல்விமான்களின் கருத்து.

பின்னர் அரவை இயந்திரங்களில் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன; நன்கு அரைபடுவதற்கு வசதியாக இந்த இரண்டு கற்களிலும் வரிப்பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேல் கல்லில் புனல் வடிவ திறப்பு அமைக்கப்பட்டது, இது அரைப்பவர் தானியத்தை அதில் நிரப்பிக் கொண்டே இருப்பதற்கு உதவியது; அப்படி நிரப்பப்பட்ட தானியம் கற்களுக்கு இடையே தானாகவே சென்று அரைபட்டது. பொ.ச.மு. நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில், கிரீஸ் எளிய அரவை இயந்திரத்தை உருவாக்கியது. மேல் கல்லின் ஒரு முனையில் சுழலும் விதத்தில், கிடைநிலை கைப்பிடி அல்லது நெம்புகோல் பொருத்தப்பட்டது. அந்த நெம்புகோலின் மறுமுனையைப் பிடித்து சற்றே வளைந்த வாக்கில் முன்னும் பின்னும் இயக்கும்போது புனல் பகுதி வழியாக தானியம் நிரப்பப்பட்ட மேல் கல் அடிக் கல்லின்மீது உராய்வை ஏற்படுத்தியது.

மேலே குறிப்பிடப்பட்ட திரிகைகள் அனைத்திலும் ஒரு பெரிய குறைபாடு இருந்தது. அவற்றை முன்னும் பின்னும் இயக்க வேண்டியிருந்ததால் இதற்கு மிருகத்தைப் பயிற்றுவிக்க முடியவில்லை. எனவே இந்த திரிகைகளை மனிதர்களே இயக்க வேண்டியிருந்தது. பிறகு புதிய தொழில்நுட்பத்தால் சுழல் அரவை இயந்திரம் (rotary mill) கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை இயக்குவதில் மிருகங்களையும் பயன்படுத்த முடிந்தது.

வேலையை சுலபமாக்கிய சுழல் அரவை இயந்திரங்கள்

மத்தியதரைக் கடல் பகுதியிலிருந்த நாடுகளில் சுமார் பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் இந்த சுழல் அரவை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். பொ.ச. முதல் நூற்றாண்டில், பலஸ்தீனாவிலிருந்த யூதர்கள் இத்தகைய இயந்திரத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்; அதனால்தான், ‘கழுதையைக் கட்டி இயக்கும் ஏந்திரக் கல்லைப்’ பற்றி இயேசு குறிப்பிட்டார்.​—⁠மாற்கு 9:42, NW.

மிருகங்களைக் கட்டி இயக்கும் திரிகை ரோமிலும் அந்தப் பேரரசின் பெரும்பாலான இடங்களிலும் பயன்படுத்தப்பட்டது. அத்தகைய அநேக திரிகைகள் பாம்ப்பேயில் இன்னும் உள்ளன. அவற்றில் மணல் கடிகாரத்தின் வடிவில் கனமான மேல் கல்லும் கூம்பு வடிவ அடிக்கல்லும் இருந்தன; மேல் கல் தானியத்திற்கான புனல் போலவும் செயல்பட்டது. அடிக்கல்லின் மீது மேல் கல் சுழலுகையில் இந்த இரண்டு கற்களுக்கும் இடையே சென்ற தானிய மணிகள் பொடியாயின. தற்போதுள்ள இவ்வகை மேல் கற்கள் சுமார் 45 முதல் 90 சென்டிமீட்டர் விட்டம் வரையாக பல்வேறு அளவுகள் உடையவை. இந்தத் திரிகைகளின் உயரம் 180 சென்டிமீட்டர் வரை இருந்தன.

மிருகங்களைக் கட்டி இயக்கிய திரிகைகளிலிருந்து சுழல் அரவை இயந்திரம் வந்ததா அல்லது சுழல் அரவை இயந்திரத்திலிருந்து மிருகங்களைக் கட்டி இயக்கும் திரிகைகள் வந்தனவா என்பது புரியாப் புதிர்தான். எப்படியிருந்தாலும், கையால் இயக்கப்படும் சுழல் திரிகை எளிதில் எடுத்து செல்ல முடிந்ததாகவும் இலகுவாக பயன்படுத்த முடிந்ததாகவும் இருந்தது. இவற்றில் 30 முதல் 60 சென்டிமீட்டர் விட்டமுள்ள இரண்டு வட்ட வடிவ கற்கள் இருந்தன. அடிக்கல்லின் மேற்புறம் சற்று குவிந்திருந்தது, மேல் கல்லின் அடிபாகம் சற்று குழிவாக இருந்தது; இது குவிந்திருந்த அடிக்கல்லின் மீது பொருந்தும் விதத்தில் அமைந்திருந்தது. மேல் கல்லின் மையம் அச்சாணியில் பொருத்தப்பட்டது, அதை சுற்றுவதற்கு மரக்கட்டையால் ஆன கைப்பிடி இருந்தது. பொதுவாக இரண்டு பெண்கள் எதிரும் புதிருமாக அமர்ந்துகொண்டு ஆளுக்கொரு கையில் அந்த மேல் கல்லின் கைப்பிடியைப் பிடித்து சுற்றுவார்கள். (லூக்கா 17:35) அவர்களில் ஒருவர் மறுகையால் மேல் கல்லிலுள்ள துளை வழியாக தானியத்தை கொஞ்ச கொஞ்சமாக போட்டுக் கொண்டே இருப்பார்; மற்றொரு பெண் அந்தத் திரிகைக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள தட்டிலோ, துணியிலோ அதன் விளிம்பிலிருந்து விழும் மாவை சேகரிப்பார். அரவை ஆலைகள் இல்லாத இடத்தில் வாழும் போர் வீரர்களுக்கு, மாலுமிகளுக்கு, சிறு குடும்பங்களுக்கு இந்தத் திரிகை அதிக பயனுள்ளதாக இருந்தது.

நீரிலும் காற்றிலும் இயங்கும் இயந்திரங்கள்

சுமார் பொ.ச.மு. 27-⁠ல், தன் காலத்திலிருந்த நீர் ஆலையைப் பற்றி ரோம பொறியியலாளர் வட்ரூவியஸ் விவரித்தார். பாய்ந்து வரும் நீர், கிடைமட்டமான தண்டில் பொருத்தப்பட்ட செங்குத்து உருளையின் துடுப்புகளை தள்ளுகையில் அந்த உருளை இயங்கியது. பற்சக்கரமுள்ள இந்த உருளை இந்த இயக்கத்தால் செங்குத்து தண்டை தள்ளியது. அப்போது அந்தத் தண்டு பெரிய மேல் திரிகை கல்லை இயக்கியது.

பிற இயந்திரங்களை உபயோகித்து அரைத்தவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த நீர் ஆலையால் எந்தளவு தானியத்தை அரைக்க முடிந்தது? கையால் திரிகைகளில் அரைக்கையில் மணிக்கு 10 கிலோவுக்கும் குறைந்த தானியத்தையே அரைக்க முடிகிறது, மிருகத்தைக் கட்டி இயக்கும் திறமிக்க திரிகைகளும் 50 கிலோ வரை அரைக்கின்றன. மறுபட்சத்தில், வட்ரூவியஸ் விவரிக்கும் நீர் ஆலையாலோ மணிக்கு சுமார் 150 முதல் 200 கிலோ தானியத்தை அரைக்க முடியும். பின்னர் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்த பிறகு, வட்ரூவியஸ் விவரித்த அடிப்படை நியமத்திற்கு இசைய செயல்படும் இயந்திரங்கள் திறம்பட்ட அரவை ஆலைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

திரிகை கற்களை இயக்கும் இயற்கை ஆற்றலாக பாய்ந்து வரும் தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. நீர் ஆலைகளுக்குப் பதிலாக காற்றாலையின் அலகுகளைப் பயன்படுத்தியும் திரிகைகளை இயக்க முடிந்தது. ஐரோப்பாவில் காற்றாலைகளைப் பயன்படுத்துவது பெரும்பாலும் பொ.ச. 12-⁠ம் நூற்றாண்டில் ஆரம்பமாகி இருக்கலாம்; பெல்ஜியம், ஜெர்மனி, ஹாலந்து போன்ற பல இடங்களில் இத்தகைய ஆலைகள் பெருமளவு பயன்படுத்தப்பட்டன. நீராவியையும் பிற ஆற்றல்களையும் பயன்படுத்தி அரவை இயந்திரங்களை இயக்குவது மெல்ல மெல்ல அதிகரித்தபோது பண்டைய முறைகளைப் பயன்படுத்தும் காலம் மலையேறியது.

‘எங்களுக்கு வேண்டிய ஆகாரம்’

முன்னேற்றம் ஏற்பட்ட போதிலும், பூர்வத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு திரிகைகள் உலகில் ஆங்காங்கே இன்றும் புழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. உரலும் உலக்கையும் இன்னும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் ஓசியானியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெக்சிகோ, மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகளில் டார்ட்டில்லா ரொட்டிகளை தயாரிப்பதற்காக சோள மாவை அரைப்பதற்கு சேண வடிவ திரிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் அநேக நீர் ஆலைகளும் காற்றாலைகளும் இன்னும் இயங்கி வருகின்றன.

எனினும் இன்று வளர்ச்சி கண்ட நாடுகளில் பெருமளவு மாவைப் பெற தானியங்கி அரவை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு வேகங்களில் சுழலுகிற, வரிப் பள்ளங்கள் உள்ள எஃகு இரும்பு உருளைகளுக்கு இடையே தானியங்களைப் போட்டு மெல்ல மெல்ல அரைத்து மாவாக்கப்படுகிறது. இந்த அமைப்பு, குறைந்த செலவில், பல்வேறு தரங்களில் மாவுகளை பொடியாக்கிக் கொடுப்பதை சாத்தியமாக்குகிறது.

உணவு தயாரிப்பதற்கு மாவைப் பெறுவது முன்பு போல் இப்போது கஷ்டமானதல்ல என்பது உண்மைதான். இருந்தாலும் நமக்கு தானியத்தையும் அதை ‘இன்று நமக்கு வேண்டிய ஆகாரமாக’ மாற்றும் மதிநுட்பத்தையும் படைப்பாளர் நமக்குக் கொடுத்ததற்காக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.​—⁠மத்தேயு 6:11.

[அடிக்குறிப்பு]

a பைபிள் காலங்களில், சிறைபிடிக்கப்பட்ட சிம்சோனையும் இன்னும் பிற இஸ்ரவேலர்களையும் மாவரைக்கும் பணியில் எதிரிகள் ஈடுபடுத்தினார்கள். (நியாயாதிபதிகள் 16:21; புலம்பல் 5:13) சிறைபிடிக்கப்படாத பெண்கள் தங்கள் வீட்டாருக்காக மாவரைத்தார்கள்.​—⁠யோபு 31:10.

[பக்கம் 23-ன் படம்]

எகிப்தியரது சேண வடிவ திரிகை

[படத்திற்கான நன்றி]

Soprintendenza Archeologica per la Toscana, Firenze

[பக்கம் 23-ன் படம்]

மிருகத்தைக் கட்டி இயக்கும் எந்திரத்தில் ஒலிவ பழங்களை நசுக்கி எண்ணெய் எடுத்தனர்

[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]

From the Self-Pronouncing Edition of the Holy Bible, containing the King James and the Revised versions

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்