‘சாந்தகுணமுள்ளோர் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வர்’—எப்படி?
“‘சாந்தகுணமுள்ளோர் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வர்’ என்ற இயேசுவின் இதமான வார்த்தைகள் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் ஜனங்கள் ஒருவருக்கொருவரும் இந்தப் பூமிக்கும் செய்கிற காரியங்களைப் பார்க்கையில், சாந்தகுணமுள்ளவர்கள் இந்தப் பூமியை சுதந்தரிப்பதில் ஏதாவது பிரயோஜனம் இருக்குமென்று நினைக்கிறீர்களா?”—மத்தேயு 5:5; சங்கீதம் 37:11.
மிரியம் என்ற ஒரு யெகோவாவின் சாட்சி பைபிள் பேச்சை ஆரம்பிப்பதற்காக ஒருவரிடம் கேட்ட கேள்விதான் அது. அதற்கு அந்த நபர், ‘இயேசு இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார் என்றால் பூமி நிச்சயம் சுதந்தரித்துக் கொள்வதற்கு தகுந்த ஓர் இடமாக மாறும் என்றுதான் அர்த்தம்; குடியிருக்க முடியாத பாழிடமாக அது ஆகிவிடாது’ என கருத்து தெரிவித்தார்.
அந்த பதில் நம்பிக்கையான மனநிலையை வெளிக்காட்டுகிறது. ஆனால் அப்படிப்பட்ட மனநிலையை கொண்டிருப்பதற்கு நியாயமான காரணம் ஏதாவது இருக்கிறதா? ஆம், இருக்கிறது. அந்த வாக்குறுதி நிறைவேறும் என்று நம்புவதற்கு பலமான காரணங்களை பைபிள் நமக்குத் தருகிறது. சொல்லப்போனால், மனிதர்களுக்கும் பூமிக்குமான கடவுளுடைய நோக்கத்திற்கும் அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. அதோடு, கடவுள் தம்முடைய நோக்கங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற உறுதியும் நமக்கு உள்ளது. (ஏசாயா 55:11) அப்படியென்றால், மனிதவர்க்கத்திற்காக ஆரம்பத்தில் கடவுள் வைத்திருந்த நோக்கம் என்ன? அது எப்படி நிறைவேறும்?
பூமிக்கான கடவுளுடைய நித்திய நோக்கம்
யெகோவா தேவன் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பூமியை படைத்தார். “வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.” (ஏசாயா 45:18) எனவே, மனிதர்கள் குடியிருப்பதற்காகவே பூமி படைக்கப்பட்டது. மேலும், இந்த பூமி மனிதர்களின் நித்திய வீடாக இருக்க வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கம். “பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.”—சங்கீதம் 104:5; 119:90.
முதல் மனித ஜோடிக்கு கடவுள் கொடுத்திருந்த வேலைகூட பூமிக்கான அவருடைய நோக்கத்தைத் தெளிவாக காட்டுகிறது. ஆதாம் ஏவாளிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) ஆதாம் ஏவாளிடம் கடவுள் ஒப்படைத்த பூமி, அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் நித்திய வீடாக இருக்க வேண்டியிருந்தது. “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்” என்று பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் சங்கீதக்காரன் உரைத்தார்.—சங்கீதம் 115:16.
அந்த அருமையான எதிர்பார்ப்பு நிறைவேற ஆதாமும் ஏவாளும் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவர்களும் அவர்களுடைய சந்ததியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு உயிர் கொடுத்த படைப்பாளரும் சர்வலோக பேரரசருமான யெகோவா தேவனை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்ப்படிய வேண்டியிருந்தது. பின்வரும் கட்டளையின் மூலம் இதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தினார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.” (ஆதியாகமம் 2:16, 17) ஆதாமும் ஏவாளும் தொடர்ந்து ஏதேன் தோட்டத்தில் வாழ, அந்தத் தெளிவான எளிய கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அப்படி கீழ்ப்பட்டிருந்தால் பரலோக தந்தை அவர்களுக்காக செய்த எல்லா காரியங்களுக்காவும் நன்றியுணர்வை காட்டுவதாய் இருந்திருக்கும்.
கடவுள் கொடுத்த அந்தக் கட்டளையை மீறுவதன் மூலம் ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே அவருக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். இவ்வாறு, தங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்திருந்த அவரை உண்மையில் உதறித்தள்ளினார்கள். (ஆதியாகமம் 3:6) இதன் மூலம் அழகிய பரதீஸ் வீட்டை தாங்களும் இழந்தார்கள், தங்கள் சந்ததியாரும் இழந்து போகும்படி செய்தார்கள். (ரோமர் 5:12) அப்படியானால், கடவுள் பூமியை படைத்ததற்கான நோக்கம் முதல் ஜோடியின் கீழ்ப்படியாமையால் தடைபட்டு விட்டதா?
கடவுள் மாறாதவர்
மல்கியா என்ற தமது தீர்க்கதரிசியின் வாயிலாக கடவுள் இப்படி அறிவித்தார்: “நான் கர்த்தர், நான் மாறாதவர்.” (மல்கியா 3:6) இந்த அறிவிப்பு தெய்வீக வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்பதாக பிரெஞ்சு நாட்டு பைபிள் கல்விமான் எல். ஃபியான் குறிப்பிட்டார். “தனக்கு எதிராக கலகம் செய்த ஜனங்களை யெகோவா அழித்திருக்கக்கூடும்; ஆனால் அவர் வாக்கு மாறாதவர் என்பதால் எந்தச் சூழலிலும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவராக இருக்கிறார்” என்று அவர் எழுதினார். ஒரு தனிப்பட்ட நபருக்கோ, தேசத்திற்கோ அல்லது முழு மனிதகுலத்திற்கோ தாம் கொடுக்கும் வாக்குறுதிகளை கடவுள் மறந்துவிட மாட்டார், உரிய காலத்தில் அவற்றை நிறைவேற்றுவார். ஆம், ‘ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியையும் தம்முடைய உடன்படிக்கையையும் என்றென்றைக்கும் நினைவுகூர்ந்திருக்கிறார்.’—சங்கீதம் 105:8, 9.
அப்படியானால், பூமிக்கான தம்முடைய ஆதி நோக்கத்தை யெகோவா மாற்றிக் கொள்ளவில்லை என்பதில் நாம் எப்படி நிச்சயமாய் இருக்கலாம்? இந்தப் பூமியை கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு தருவதற்கான கடவுளுடைய நோக்கம் அவருடைய வார்த்தையான பைபிளில் பல இடங்களில் திரும்பத் திரும்ப காணப்படுவதால் நாம் அதைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம். (சங்கீதம் 25:13; 37:9, 22, 29, 34) யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒவ்வொருவரும், “தன் தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல்” பாதுகாப்புடன் தங்குவார்கள் என்பதையும் பைபிள் விவரிக்கிறது. (மீகா 4:4; எசேக்கியேல் 34:28) யெகோவாவால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள்.” காட்டு மிருகங்களோடுகூட சமாதானத்தை அனுபவிப்பார்கள்.—ஏசாயா 11:6-9; 65:21, 25.
கடவுளுடைய வாக்குறுதியின் முற்காட்சியை பைபிள் மற்றொரு விதத்திலும் அளிக்கிறது. சாலொமோன் அரசனின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேல் தேசம் சமாதானத்தையும் செழுமையையும் அனுபவித்தது. அவருடைய ஆட்சியில், “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.” (1 இராஜாக்கள் 4:25) இயேசுவை “சாலொமோனிலும் பெரியவர்” என்று பைபிள் அழைக்கிறது. மேலும் அவருடைய ஆட்சியைப் பற்றி விவரிக்கையில், “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்” என்கிறது. அதுமட்டுமல்ல, “பூமியில் ஏராளமாக தானியம் விளையும்; மலைகளின் உச்சியில் வழிந்தோடும்” என சொல்கிறது.—லூக்கா 11:31; சங்கீதம் 72:7, 16; NW.
தாம் கொடுத்த வாக்கிற்கு ஏற்ப யெகோவா தேவன் தம்முடைய சொத்தை, அதாவது பூமியை மீட்டுத் தருவார், அதுமட்டுமல்ல, அதை மீண்டும் பொலிவாக்குவார். வெளிப்படுத்துதல் 21:4-ன்படி அந்தப் புதிய உலகில், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.” ஆம், வாக்குறுதி அளிக்கப்பட்ட அந்தச் சொத்து உண்மையில் ஒரு பரதீஸாகவே இருக்கும்.—லூக்கா 23:43.
வாக்குறுதி அளிக்கப்பட்ட சொத்தைப் பெறுவது எப்படி
இயேசு கிறிஸ்துவை ராஜாவாக கொண்டு பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யவிருக்கும் அரசாங்கத்தின்கீழ், இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாறும். (மத்தேயு 6:9, 10) முதலாவதாக அந்த ராஜ்யம் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கும்.’ (வெளிப்படுத்துதல் 11:18; தானியேல் 2:44) அதற்குப்பின், ‘சமாதானப் பிரபுவான’ இயேசு கிறிஸ்து இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றுவார்: “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” (ஏசாயா 9:6, 7) அந்த ராஜ்யத்தின்கீழ் கோடிக்கணக்கானோருக்கு, ஏன் உயிர்த்தெழுந்து வருபவர்களுக்கும்கூட இந்தப் பூமியை சுதந்தரித்துக் கொள்வதற்கான, அதாவது சொத்தாக பெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
அந்த மகத்தான சொத்தை யார் பெற்றுக்கொள்வார்கள்? இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: ‘சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ (மத்தேயு 5:5 NW) சாந்தகுணமுள்ளவர்களாக இருப்பது என்றால் என்ன? பொதுவாக ‘சாந்தகுணத்தை’ மென்மை, நிதானம், அடக்கம், அமைதி என்றெல்லாம் அகராதிகள் விளக்குகின்றன. எனினும், மூல கிரேக்க வார்த்தை அதற்கு இன்னுமதிக விளக்கத்தை தருகிறது. அந்த வார்த்தையில் “மென்மை இருந்தாலும், பூப்போன்ற அந்த மென்மைக்குப் பின்னாலிருப்பது இரும்பின் பலம்” என்று வில்லியம் பார்க்லே நியூ டெஸ்டமென்ட் வெர்ட்புக்கில் குறிப்பிடுகிறார். மனக்கசப்பு அல்லது பழிவாங்கும் எண்ணமின்றி தீமையை தாங்கிக்கொள்ளும் மனநிலையை அது குறிக்கிறது. கடவுளோடுள்ள நல்ல உறவின் காரணமாகவே அந்த மனநிலை உருவாகிறது; அந்த உறவே அவருக்கு பலத்தைத் தருகிறது.—ஏசாயா 12:2; பிலிப்பியர் 4:13.
சாந்தமாயிருக்கும் ஒரு நபர் தன் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கடவுளுடைய தராதரத்தை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வார்; தன்னுடைய சொந்த கருத்துக்களுக்கு அல்லது மற்றவர்களுடைய அபிப்பிராயங்களுக்கு இசைய விடாப்பிடியாக செயல்பட மாட்டார். அவர் கற்றுக்கொள்ளும் மனமுள்ளவராகவும், யெகோவாவால் போதிக்கப்பட விருப்பமுள்ளவராகவும் இருப்பார். “சாந்தகுணமுள்ளவர்களை [யெகோவா] நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்” என சங்கீதக்காரன் தாவீது எழுதினார்.—சங்கீதம் 25:9; நீதிமொழிகள் 3:5, 6.
பூமியை சொத்தாக பெறப்போகும், அதாவது சுதந்தரித்துக் கொள்ளப்போகும் ‘சாந்தகுணமுள்ளவர்களில்’ நீங்களும் ஒருவராக இருப்பீர்களா? ஊக்கத்துடன் பைபிளை வாசித்து யெகோவாவைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்; படித்ததைப் பொருத்துவதற்கு பழகுங்கள். அப்பொழுதுதான் பூமிக்குரிய பரதீஸை சொத்தாக பெற்று என்றென்றும் அதில் வாழும் எதிர்பார்ப்பை பெறுவீர்கள்.—யோவான் 17:3.
[பக்கம் 5-ன் படம்]
ஆதாம் ஏவாளுக்கு கடவுள் கொடுத்த வேலை பூமிக்கான அவருடைய நோக்கத்தைத் தெளிவாக காட்டுகிறது
[பக்கம் 6, 7-ன் படம்]
சாலொமோன் ஆட்சியில் நிலவிய சமாதானமும் பாதுகாப்பும் கடவுள் வாக்குறுதி அளித்த சொத்திற்கு முற்காட்சியாக இருந்தது
[படங்களுக்கான நன்றி]
ஆடுகளும் பின்னணியிலுள்ள குன்றும்: Pictorial Archive (Near Eastern History) Est.; அரேபிய மறிமான்: Hai-Bar, Yotvata, Israel; ஏர் உழும் விவசாயி: Garo Nalbandian
[பக்கம் 7-ன் படம்]
நீதியுள்ள புதிய உலகம் வரவிருக்கிறது—அதில் நீங்கள் இருப்பீர்களா?