சக மாணவர்களோடு தன் நம்பிக்கைகளை பகிர்ந்துகொண்டாள்
பைபிள் அடிப்படையிலான உங்கள் நம்பிக்கைகளை சக மாணவர்களுக்கு நன்கு புரிய வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? 18 வயது மாக்தாலேனா, போலந்து நாட்டிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாள். யெகோவாவின் சாட்சியாகிய இவள் சக மாணவர்களிடம் தன் நம்பிக்கையைப் பற்றி அடிக்கடி பேசுவாள். அதன் பயனாக, ‘யெகோவாவின் சாட்சியாக இருப்பதென்றால் என்ன?,’ ‘நீ இயேசு கிறிஸ்துவை நம்ப மாட்டாயா?’ போன்ற கேள்விகளை அந்த மாணவர்கள் அவளிடம் அடிக்கடி கேட்டனர். அவர்களுக்கு எப்படி உதவினாள்? மாக்தாலேனா உதவிக்காக முதலில் யெகோவாவிடம் ஜெபம் செய்தாள்; பிறகு அதற்கிசைவாக செயல்பட்டாள்.—யாக்கோபு 1:5.
ஒரு நாள் தன் நம்பிக்கைகளுக்கு மதிப்பு காட்டிய ஒரு டீச்சரை அணுகி, யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்புa என்ற வீடியோவை வகுப்பு மாணவர்களுக்கு காட்ட அனுமதி கேட்டாள். டீச்சர் அதற்கு ஒப்புதல் அளித்தார்கள். பின்பு மாக்தாலேனா தன் சக மாணவர்களிடம், “90-நிமிட நிகழ்ச்சியை உங்களுக்கு அளிக்க ஒரு நண்பரை நான் ஏற்பாடு செய்கிறேன், அந்த நிகழ்ச்சியில் ஒரு வீடியோ காட்சியும் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய கலந்துரையாடலும் இருக்கும்” என்று சொல்லி, “நீங்கள் அதற்கு வருகிறீர்களா?” என்று கேட்டாள். வருகிறோம் என்று எல்லாரும் சொன்னார்கள். அனுபவம் வாய்ந்த முழுநேர ஊழியரான வாய்ட்ஷேக்கும் மாக்தாலேனாவும் இந்த புராஜக்ட்டிற்காக தயாரிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் வகுத்த திட்டத்தின்படி, முதலில் யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன?b என்ற சிற்றேட்டின் அடிப்படையில் 20-நிமிட பேச்சு கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு இருக்கும். அதன்பின் பள்ளி நூலகத்தில் வீடியோ போட்டு காட்டப்படும். வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் சில சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள், பத்திரிகைகள், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள்c புத்தகம் ஆகியவை அடங்கிய ஒரு பெரிய கவர் அன்பளிப்பாக கொடுக்கப்படும்.
அந்த நாள் வந்தபோது, 14 மாணவர்களும் அந்த வகுப்பின் டீச்சரும் நூலகத்திற்கு படிக்க வந்திருந்த வேறே 4 மாணவர்களும் கூடியிருந்தார்கள். முதலில் வாய்ட்ஷேக் பேசத் தொடங்கினார். சில போலிஷ் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்களுடைய படைப்புகளில் யெகோவா என்ற தெய்வீக பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார். பழைய கத்தோலிக்க வேதபாட நூல்கள் சிலவற்றில் கடவுளுடைய பெயர் காணப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன நாளைய வேலையைப் பற்றி விவரிக்கையில், பல்வேறு கிளை அலுவலகங்களில் நடைபெறும் பணியை படங்களுடன் விளக்கும் சிற்றேடுகளையும் அநேக அசெம்பிளி ஹால்களின் போட்டோக்களையும் காண்பித்தார்.
பிறகு நடந்த கலந்துரையாடல் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. கூடிவந்திருந்தோர் கேட்ட கேள்விகளுக்கு மாக்தாலேனாவும் வாய்ட்ஷேக்கும் பைபிளைப் பயன்படுத்தி பதிலளித்தார்கள். இதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சொந்த கருத்துக்களைப் போதிப்பதில்லை என்பதையும் புரிந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட சில கேள்விகள் என்ன, அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்கள் என்ன?
கேள்வி: பைபிள் முழுவதிலும் தெளிவில்லாத வார்த்தைகளும் உருவகங்களுமே காணப்படுகின்றன. அதற்கு பல விளக்கங்கள் அளிக்கப்படலாம். இப்படியிருக்கையில், பைபிளுக்கு இசைவாக வாழ்வது எப்படி சாத்தியம்?
பதில்: பைபிள் ஒரு வயலின் போன்றது என்றும் அதில் நீங்கள் விரும்பும் எந்தவொரு மெட்டையும் வாசிக்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர். ஆனால் யோசித்துப் பாருங்கள்: ஓர் எழுத்தாளர் தன்னுடைய வார்த்தைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அந்த எழுத்தாளரையே கேட்பது சிறந்த காரியம் அல்லவா? மனித புத்தகங்களின் எழுத்தாளர்களைப் போல் பைபிளின் எழுத்தாளராகிய யெகோவா தேவன் காலமாவதில்லை, அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார். (ரோமர் 1:20; 1 கொரிந்தியர் 8:5, 6) ஒரு வசனத்திற்குரிய சரியான விளக்கத்தை அதன் சூழமைவு தரும். கூடுதலாக, பைபிளில் எந்தவொரு விஷயமும் பல இடங்களில் குறிப்பிடப்படுவதால், அவற்றை ஒத்துப்பார்ப்பதும் உதவியாக இருக்கும். இவ்வாறு செய்கையில் கடவுளே நமக்கு வேதாகமத்தை விளக்குவதுபோல உணர்வோம்; அவரே நம்முடைய சிந்தைகளுக்கு வழிகாட்ட நாம் அனுமதிப்போம். இப்படி செய்வதன் மூலம், அவருடைய சித்தத்தை பைபிளிலிருந்து அறிந்துகொண்டு அதற்கிசைவாக நம்மால் வாழ முடியும் இல்லையா?
கேள்வி: கிறிஸ்தவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
பதில்: யெகோவாவின் சாட்சிகளும் கிறிஸ்தவர்கள்தான்! ஆனால் வெறுமனே கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு பதிலாக, தங்கள் நம்பிக்கைகளுக்கு இசைவாகவும் தங்கள் நலனுக்காக கடவுள் போதிக்கும் விஷயங்களுக்கு இசைவாகவும் வாழ முயற்சி செய்கிறார்கள். (ஏசாயா 48:17, 18) தங்களுடைய எல்லா போதனைகளும் பைபிள் அடிப்படையில் இருப்பதால், தங்களிடம் சத்தியம் உள்ளது என்பதை அறிந்திருக்கிறார்கள்.—மத்தேயு 7:13, 14, 21-23.
கேள்வி: ஏன் முன்பின் தெரியாதவர்களை அணுகி அவர்களிடம் பேசுவதில் விடாப்பிடியாக இருக்கிறீர்கள்? அது உங்கள் நம்பிக்கையை அவர்கள்மீது திணிப்பதுபோல் இல்லையா?
பதில்: தெருவில், முன்பின் தெரியாத ஒருவர் உங்களிடம் பணிவோடு பேசுவதும் ஒரு விஷயத்தின் பேரில் உங்கள் கருத்தைக் கேட்பதும் தவறு என்று நினைக்கிறீர்களா? (எரேமியா 5:1; செப்பனியா 2:1-3) (சமீபத்தில் போலந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்மீது கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா என்ற கருத்தைப் பற்றி வழிப்போக்கர்களிடம் தாங்கள் எப்படி கேட்டனர் என்பதை வாய்ட்ஷேக்கும் மாக்தாலேனாவும் நடித்துக் காட்டினார்கள்.) அந்நபரின் கருத்தைக் கேட்ட பிறகே, பைபிளை திறந்து வாசித்துக் காட்டுவோம். கேட்பதற்கு விருப்பம் இல்லை என்று எவரேனும் சொன்னால், ‘பரவாயில்லை போய்வருகிறோம்’ என்று சொல்லி வந்துவிடுவோம். (மத்தேயு 10:11-14) இது உரையாடும்படி மற்றவர்களை கட்டாயப்படுத்துவது போல் தெரிகிறதா? அல்லது யாரும் இனி மற்றவர்களோடு பேசவே கூடாதா?
கேள்வி: நீங்கள் ஏன் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை?
பதில்: நினைவுகூரும்படி பைபிள் சொல்லியிருக்கும் ஒரே ஓர் ஆசரிப்பைத்தான் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். அதுவே இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு. (1 கொரிந்தியர் 11:23-26) பண்டிகைகள் தோன்றிய விதத்தைப் பற்றி என்ஸைக்ளோப்பீடியாக்களிலும் நம்பகமான மற்ற பிரசுரங்களிலும் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அப்போது, நாங்கள் ஏன் அப்படிப்பட்ட நாட்களை கொண்டாடுவதில்லை என்பதை நீங்களே எளிதில் புரிந்துகொள்வீர்கள்.—2 கொரிந்தியர் 6:14-18.
இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடல் அதிக நேரம் நீடித்ததால், வீடியோ காட்சியை வேறொரு நாளுக்கு தள்ளிவைக்க வேண்டிவந்தது.
மாணாக்கர்களின் பிரதிபலிப்புகள் எப்படி இருந்தன? மாக்தாலேனாவே சொல்லட்டும்: “பொதுவா, அசட்டுத்தனமாக நடந்துகொண்டு, மற்றவர்களை கேலிசெய்யும் மாணவர்கள் கருத்தாழமிக்க கேள்விகள் கேட்டதைப் பார்த்து வியந்து போய்விட்டேன். தங்களை நாத்திகர்களாக சொல்லிக் கொண்டவர்களும், கலந்துரையாடலின்போது கடவுள் நம்பிக்கையை வெளிக்காட்டினர்!” கூடிவந்திருந்தவர்கள் நன்றியோடு அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டனர். ஆக மொத்தம் 35 புத்தகங்கள், 63 சிற்றேடுகள், 34 பத்திரிகைகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.
ஒரு ஸ்கூல் புராஜக்ட் மூலம் என்னே அருமையான பலன்கள்! மாக்தாலேனாவுடைய சக மாணவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள மாத்திரம் இது உதவவில்லை. வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி யோசிப்பதற்கும் இது உற்சாகப்படுத்தியுள்ளது. உங்களுடைய நம்பிக்கையைப் பற்றி சக மாணவர்களும் கற்றுக்கொள்ள உதவி செய்வதற்கு நீங்கள் ஏன் முயற்சி எடுக்கக்கூடாது?
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.
c யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.
[பக்கம் 31-ன் படம்]
கலந்துரையாடலுக்காக மாக்தாலேனாவும் வாய்ட்ஷேக்கும் தயாரிக்கிறார்கள்