சுகவீனத்தின் மத்தியிலும் சந்தோஷம்
காலையில் கண் விழித்ததுமே ஏன்தான் விடிந்ததோ என்று நீங்கள் நொந்துகொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் வேதனையோடு அல்லது மனவேதனையோடு நீங்கள் இன்னொரு நாளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ‘வேதனையைவிடச் சாவதை விரும்புகின்றேன்’ என்று சொன்ன யோபுவைப் போலக்கூட நீங்கள் உணரலாம். (யோபு 7:15, பொது மொழிபெயர்ப்பு) இதே நிலை தொடர்ந்தால், அதுவும் வருடக்கணக்காகத் தொடர்ந்தால், என்ன செய்வது?
இந்த நிலையில்தான் மேவிபோசேத் இருந்தார்; இவர் தாவீது ராஜாவின் நண்பரான யோனத்தானின் மகன். ஐந்து வயதிருக்கும்போது இவர் கீழே ‘விழுந்து முடவனானார்.’ (2 சா. 4:4) ராஜாவுக்குத் துரோகம் செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சொத்தை இழந்தபோது இவர் பட்ட மனவேதனை, உடல் ஊனத்தால் ஏற்பட்ட மனவேதனையை அதிகமாக்கியிருக்க வேண்டும். என்றாலும், சுகவீனம், அவதூறு, ஏமாற்றங்கள் ஆகியவற்றைச் சமாளிப்பதில் இவர் அருமையான முன்மாதிரியாக எப்போதும் இருந்தார்; அவற்றின் மத்தியிலும் சந்தோஷத்தை இழக்காமல் இருந்தார்.—2 சா. 9:6-10; 16:1-4; 19:24-30.
இதற்கு மற்றொரு உதாரணம் அப்போஸ்தலன் பவுல். “என் உடலில் ஒரு முள் குத்திக்கொண்டிருக்கிறது” என்று அவர் ஒருமுறை எழுதினார். (2 கொ. 12:7) அவர் குறிப்பிட்ட அந்த முள் நீண்ட கால சுகவீனமாக இருந்திருக்கலாம்; அல்லது, அவர் அப்போஸ்தலர்தானா என்று சந்தேகப்பட்ட ஆட்களால் வந்த தொல்லையாக இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், அந்தப் பிரச்சினை தீராப் பிரச்சினையாகவே இருந்தது; அதனால் வந்த உடல் வேதனையையோ மனவேதனையையோ அவர் சமாளிக்க வேண்டியிருந்தது.—2 கொ. 12:9, 10.
தளர்ந்துபோகச் செய்கிற தீரா வியாதிகளால் அல்லது மனசோர்வுகளால் இன்று கடவுளுடைய ஊழியர்களில் சிலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மாக்டலேனாவுக்கு 18 வயதிருக்கும்போது செந்தடிப்பு தோல் அழிநோய் (systemic lupus erythematosus) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; இந்த வியாதியின் பிடியில் சிக்கியவரின் நோய் எதிர்ப்புச் சக்தியே அவரது உடல் உறுப்புகளைத் தாக்குவதாகக் கருதப்படுகிறது. “நான் குலைநடுங்கிப்போனேன். காலம் செல்லச் செல்ல என்னுடைய நிலைமை இன்னும் மோசமானது, அஜீரணக் கோளாறுகளும், வாய்ப் புண்களும், தைராய்ட் பிரச்சினைகளும் என்னைப் பாடாய்ப் படுத்தின” என்று அவர் சொல்கிறார். இஸபெல்லா என்பவரை எடுத்துக்கொண்டால், மற்றவர்களுக்குச் சட்டெனத் தெரியாத பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறார். “சிறு வயதிலிருந்தே மனச்சோர்வினால் தவிக்கிறேன். இதனால் திடீர் திடீரென பயம் கவ்விக்கொள்ளும், சரியாகச் சுவாசிக்க முடியாது, வயிறு இழுத்துப் பிடிக்கும். கடைசியில் கை காலெல்லாம் வெலவெலத்துப் போய்விடும்” என்று அவர் சொல்கிறார்.
நிஜத்தை எதிர்ப்படுதல்
வியாதியோ உடல்குறைபாடோ உங்கள் வாழ்க்கையை நிலைகுலைய வைக்கலாம். அந்தச் சமயத்தில், உட்கார்ந்து உங்களுடைய சூழ்நிலையை நேர்மையாய்ச் சீர்தூக்கிப் பார்ப்பது உதவும். உங்களுடைய வரையறைகளை ஏற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமாக இருக்காது. மாக்டலேனா இவ்வாறு சொல்கிறார்: “என் வியாதி படிப்படியாகத் தீவிரமாகி வருகிறது. படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே தெம்பில்லாததைப் போல் அடிக்கடி உணருகிறேன். அடுத்த நிமிடம் எப்படியிருப்பேன் என்றுகூட சொல்ல முடியாததால் எதையும் முன்னதாகத் திட்டமிட முடியாதிருக்கிறது. யெகோவாவுக்கு முன்புபோல் ஊழியம் செய்ய முடியாததுதான் எனக்குச் சொல்ல முடியாதளவு விரக்தியை அளிக்கிறது.”
ஸ்பெக்நியூ சொல்கிறார்: “வருடங்கள் உருண்டோட உருண்டோட, மூட்டு அழற்சி நோய் என் சக்தியை எல்லாம் உறிஞ்சிக்கொண்டு, ஒவ்வொரு மூட்டாகச் சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில், வீக்கம் அதிகமாக இருக்கும்போது, சின்ன வேலையைக்கூட என்னால் செய்ய முடியாமல் போகிறது. அதனால் விரக்தியடைந்துவிடுகிறேன்.”
சில வருடங்களுக்கு முன்பு பார்பரா என்பவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அவர் சொல்கிறார்: “திடீரென என் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எதிலுமே ஆர்வம் இல்லாமல் மந்தமாக உணருகிறேன், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறேன், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறேன். இப்படிப்பட்ட புதிய பிரச்சினைகளின் காரணமாக, இனி எதையெல்லாம் என்னால் செய்ய முடியுமெனச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருந்தது.”
இவர்கள் எல்லாருமே யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்த ஊழியர்கள். அவரது சித்தத்தைச் செய்வதற்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்மீது முழு நம்பிக்கை வைத்து, அவரது ஆதரவினால் நன்மையடைகிறார்கள்.—நீதி. 3:5, 6.
யெகோவா எப்படி உதவுகிறார்?
நமக்குக் கஷ்டம் வந்தால் அது கடவுளுடைய கோபத்திற்கு அடையாளம் என நாம் நினைக்கவே கூடாது. (புல. 3:33) யோபு ‘உத்தமனும் சன்மார்க்கனுமாய்’ இருந்தபோதிலும் எப்பேர்ப்பட்ட கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருந்ததெனச் சிந்தித்துப் பாருங்கள். (யோபு 1:8) கடவுள் யாரையும் தீய காரியங்களால் சோதிப்பது கிடையாது. (யாக். 1:13) தீராத வியாதிகளும்சரி மனவேதனைகளும்சரி, எல்லாமே நம் முதல் பெற்றோரான ஆதாம் ஏவாளிடமிருந்து வழிவழியாக வந்த கொடிய குறைபாடாகும்.—ரோ. 5:12.
என்றாலும், யெகோவாவும் இயேசுவும் நீதிமான்களைக் கைவிட மாட்டார்கள். (சங். 34:15) அதுவும் மிக வேதனையான சமயங்களை எதிர்ப்படுகையில் கடவுள் ‘நம் அடைக்கலமாக, நம் கோட்டையாக’ விளங்குவார். (சங். 91:2) அப்படியென்றால், பரிகாரமே இல்லாததுபோல் தோன்றும் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, சந்தோஷத்தை இழக்காதிருக்க உங்களுக்கு எது உதவும்?
ஜெபம்: கடவுளுடைய பூர்வ கால ஊழியர்களைப் போல் நீங்களும் ஜெபத்தில் நம் பரலோகத் தகப்பன்மேல் உங்கள் பாரத்தை வைத்துவிடலாம். (சங். 55:22) அப்போது, ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ பெறுவீர்கள்; அந்த மன சமாதானம், ‘உங்கள் இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ளும்.’ (பிலி. 4:6, 7) மாக்டலேனா ஜெபத்தில் கடவுளைச் சார்ந்திருப்பதால் மேன்மேலும் அவரைப் பலவீனப்படுத்தி வரும் வியாதியைச் சமாளிக்க முடிகிறது. அவர் சொல்கிறார்: “மனதிலிருப்பதை எல்லாம் யெகோவாவிடம் கொட்டுவது நிம்மதி தருகிறது, மறுபடியும் சந்தோஷமாயிருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் கடவுள்மீது சார்ந்திருப்பது என்றால் என்ன என்பது இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது.”—2 கொ. 1:3, 4.
யெகோவா தமது சக்தியையும் தமது வார்த்தையையும் தமது ஊழியர்களையும் பயன்படுத்தி உங்களைப் பலப்படுத்துவதன் மூலம் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். உங்கள் சுகவீனத்தை அவர் அற்புதமாகச் சுகப்படுத்தும்படி நீங்கள் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், ஒவ்வொரு துன்பத்தையும் சகிக்கத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவர் தருவார் என்பதில் நீங்கள் உறுதியோடு இருக்கலாம். (நீதி. 2:7) அவர் ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ அளித்து உங்களைத் திடப்படுத்துவார்.—2 கொ. 4:7.
குடும்பத்தார்: அன்போடும் பரிவோடும் குடும்பத்தார் நடந்துகொள்வது, சுகவீனத்தைச் சமாளிக்க உங்களுக்கு உதவும். என்றாலும், அவர்களும் உங்களோடுகூட கஷ்டப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நீங்கள் தவிப்பதுபோல் அவர்களும் தவிக்கலாம். ஆனாலும், எப்பேர்ப்பட்ட வேதனைமிக்க சமயங்களிலும் அவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்வது மன அமைதியைப் பெற உங்களுக்கு உதவும்.—நீதி. 14:30.
பார்பரா தன் மகளையும் சபையிலுள்ள மற்ற இளம் சகோதரிகளையும் பற்றிச் சொல்லும்போது, “ஊழியம் செய்ய அவர்கள் எனக்கு உதவுகிறார்கள். அவர்களுடைய பக்திவைராக்கியத்தைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார். ஸ்பெக்நியூ தன் மனைவி தரும் ஆதரவைப் பெரிதும் பாராட்டுகிறார். “என் மனைவிதான் பெரும்பாலான வீட்டு வேலைகளைச் செய்கிறாள். எனக்குத் துணிமணி போட்டுவிடுகிறாள். கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போகும்போது என் பையைச் சுமந்து வருகிறாள்” என்கிறார்.
சக கிறிஸ்தவர்கள்: நாம் சக கிறிஸ்தவர்களுடன் இருக்கும்போது உற்சாகத்தையும் ஆறுதலையும் பெறுகிறோம். ஆனால், சுகவீனத்தின் காரணமாக உங்களால் கூட்டங்களுக்குப் போக முடியாவிட்டால்? மாக்டலேனா சொல்கிறார்: “நான் கூட்டங்களைத் தவறவிடக் கூடாது என்பதற்காக என் சபையில் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து கொடுக்கிறார்கள். வேறு உதவிகள் செய்வதற்காகச் சகோதர சகோதரிகள் அடிக்கடி எனக்கு போன் செய்து கேட்கிறார்கள். அதோடு, உற்சாகமூட்டும் கடிதங்களை எழுதுகிறார்கள். அவர்கள் என்னை நினைத்துப் பார்க்கிறார்கள், என் நலனில் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை யோசிக்கும்போது எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.”
மனச்சோர்வினால் அவதிப்படும் இஸபெல்லா இவ்வாறு சொல்கிறார்: “சபையில் எனக்கு அநேக ‘அம்மா,’ ‘அப்பா’ இருக்கிறார்கள்; நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்கள், என்னைப் புரிந்துகொள்கிறார்கள். என் சபையை என் குடும்பம் போல் நினைக்கிறேன், இங்குதான் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெறுகிறேன்.”
பல்வேறு சோதனைகளைச் சந்திப்பவர்கள் ‘தங்களையே தனிமைப்படுத்திக்கொள்வதை’ தவிர்ப்பது நல்லது. சபையாரோடு கூட்டுறவுகொள்வதை அவர்கள் பொக்கிஷம்போல் மதிக்க வேண்டும். (நீதி. 18:1, NW) அப்போது, மற்றவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்றாக விளங்குவார்கள். சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்க நீங்கள் முதலில் தயங்கலாம். ஆனால், நீங்கள் வெளிப்படையாக உதவி கேட்கும்போது அவர்கள் சந்தோஷப்படுவார்கள். “வெளிவேஷமற்ற சகோதரப் பாசத்தை” காட்ட அவர்கள் வாய்ப்பைப் பெறுவார்கள். (1 பே. 1:22) நீங்கள் கூட்டங்களுக்குப் போக விரும்புவதை... அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய விரும்புவதை... அல்லது, அவர்களிடம் மனந்திறந்து பேச விரும்புவதை... அவர்களிடம் சொல்லலாம், அல்லவா? உண்மைதான், இது செய்யுங்கள், அது செய்யுங்கள் என நாம் அவர்களை அதிகாரம் பண்ணக்கூடாது; மாறாக, அவர்கள் தரும் உதவிக்கு நன்றி காட்டலாம்.
நம்பிக்கையோடு இருங்கள்: தீராத வியாதியோடு போராடும்போது மகிழ்ச்சியை இழக்காதிருப்பது பெரும்பாலும் உங்கள் கையில்தான் இருக்கிறது. எப்போதும் சோகமும் விரக்தியுமே உருவாக இருந்தால் வேண்டாததையெல்லாம் நினைத்துக்கொண்டு இருப்போம். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மன வலிமை நோயைத் தாங்கிக்கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?”—நீதி. 18:14, பொ.மொ.
மாக்டலேனா இவ்வாறு சொல்கிறார்: “என் பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்க மிகவும் முயற்சி செய்கிறேன். கொஞ்சம் சுமாராக இருக்கிற நாட்களைச் சந்தோஷமாகக் கழிக்கிறேன். தீராத வியாதியின் மத்தியிலும் உண்மையாய் நிலைத்திருப்பவர்களின் வாழ்க்கை சரிதையை வாசித்து உற்சாகம் பெறுகிறேன்.” இஸபெல்லாவைப் பொறுத்தவரை, யெகோவா தன்னை நேசிக்கிறார், மதிக்கிறார் என்ற நினைப்பே அவருக்குப் பலம் தருகிறது. அவர் சொல்கிறார்: “நான் கடவுளுக்குப் பிரயோஜனமாய் இருக்கிறேன், அவருக்காக வாழ வேண்டும் என நினைக்கிறேன். அதோடு, எதிர்காலத்தில் எனக்கு அருமையான வாழ்வு காத்திருக்கிறது.”
ஸ்பெக்நியூ இவ்வாறு சொல்கிறார்: “என் வியாதி, மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. விவேகத்தோடும் பகுத்துணர்வோடும் நடந்துகொள்ளவும், மனதார மன்னிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. என்மீதே பரிதாபப்பட்டுக்கொள்ளாமல் சந்தோஷமாக யெகோவாவைச் சேவிக்கக் கற்றிருக்கிறேன். சொல்லப்போனால், அவருடைய சேவையில் தொடர்ந்து முன்னேற்றங்கள் செய்ய உந்துவிக்கப்பட்டிருக்கிறேன்.”
நீங்கள் காட்டும் சகிப்புத்தன்மையை யெகோவா கவனிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் உங்கள் கஷ்டத்தைப் பார்த்து அனுதாபப்படுகிறார், உங்கள்மீது கரிசனையாக இருக்கிறார். “உங்களுடைய உழைப்பையும் தமது பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும்” அவர் மறக்க மாட்டார். (எபி. 6:10) தம்மிடம் பயபக்தியோடு இருக்கும் அனைவருக்கும் அவர் தருகிற இந்த வாக்குறுதியை மனதில் பதிய வையுங்கள்: “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்.”—எபி. 13:5.
சில சமயங்களில் நீங்கள் சோர்வடையும்போது, புதிய உலகில் சந்தோஷமாக வாழப்போகும் அருமையான நம்பிக்கையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் ஆசீர்வாதங்கள் பொழிவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கப்போகும் வேளை விரைந்து வந்துகொண்டிருக்கிறது!
[பக்கம் 28-ன் படம்/பெட்டி]
தீராத வியாதியின் மத்தியிலும் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்கள்
“இனியும் என்னால் தனியாக நடக்க முடியாது; அதனால் என் மனைவியோ வேறு சகோதர சகோதரிகளோ என்னை ஊழியத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். என்ன பேசுவது, என்ன பைபிள் வசனங்களைப் பயன்படுத்துவது என்பதையெல்லாம் மனப்பாடம் செய்துகொள்வேன்.”—யெஷி, கண்பார்வையற்றவர்.
“தொலைபேசியில் சாட்சி கொடுப்பதோடு, ஆர்வம் காட்டுபவர்களைக் கடிதங்கள் மூலம் தவறாமல் தொடர்புகொள்வேன். மருத்துவமனையில் இருக்கும்போது, பைபிளையும் பிரசுரங்களையும் என் படுக்கைக்குப் பக்கத்திலேயே எப்போதும் வைப்பேன். பைபிள் விஷயங்களைப் பற்றிப் பலரிடம் பேச அது உதவியிருக்கிறது.” —மாக்டலேனா, செந்தடிப்பு தோல் அழிநோயால் அவதிப்படுபவர்.
“வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய எனக்குப் பிடிக்கும்; ஆனால் என்னால் முடியாதபோது ஃபோன் மூலம் சாட்சிகொடுக்கிறேன்.”—இஸபெல்லா, மனச்சோர்வுடன் போராடுகிறவர்.
“மறுசந்திப்புகள் செய்யவும் பைபிள் படிப்புகளை நடத்தவும் எனக்குப் பிடிக்கும். உடல்நிலை மோசமாக இல்லாத நாட்களில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யவும் பிடிக்கும்.”—பார்பரா, மூளையில் கட்டி உள்ளவர்.
“கனமில்லாத பையில் ஒருசில பத்திரிகைகளை மட்டுமே ஊழியத்திற்கு எடுத்துச் செல்கிறேன். மூட்டு வலியைத் தாங்கிக்கொள்ள முடிகிறவரை ஊழியம் செய்கிறேன்.”—ஸ்பெக்நியூ, மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்.
[பக்கம் 30-ன் படம்]
சிறியோரும்சரி பெரியோரும்சரி, உற்சாகத்தின் ஊற்றாக விளங்கலாம்