உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 10/15 பக். 8-13
  • பரதீஸ்—நம்புவதற்கு ஆதாரம் உள்ளதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பரதீஸ்—நம்புவதற்கு ஆதாரம் உள்ளதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பரதீஸ் பற்றிய தரிசனம்
  • ஜனங்கள் பழைய நிலைக்கு திரும்புவதும், சுபாவத்தை மாற்றிக்கொள்வதும்
  • பரதீஸைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தைப் பலப்படுத்துதல்
  • ”பூஞ்சோலையில் சந்திக்கலாம்!“
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • மீண்டும் பரதீஸ்!
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • “நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்”
    பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்
  • ஆன்மீக பூஞ்சோலையை விட்டு வெளியே போய்விடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 10/15 பக். 8-13

பரதீஸ்​—⁠நம்புவதற்கு ஆதாரம் உள்ளதா?

‘கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; . . . அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டான்.’​—⁠2 கொரிந்தியர் 12:2-4.

1. பைபிளில் காணப்படும் எந்த வாக்குறுதிகள் அநேகரின் மனதைக் கவர்ந்துள்ளன?

பரதீஸ். பூமி பரதீஸாக மாறப்போவது பற்றிய கடவுளுடைய வாக்குறுதியை முதன்முதல் கேட்ட போது நீங்கள் எவ்வளவு ஆனந்தமடைந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘குருடரின் கண்கள் திறக்கப்படும், செவிடரின் செவிகள் திறக்கப்படும், வனாந்தரம்’ பூத்துக் குலுங்கும் என்பதையெல்லாம் கற்றுக்கொண்டது நினைவிருக்கலாம். ஓநாய் ஆட்டுக்குட்டியோடும் புலி வெள்ளாட்டுக்குட்டியோடும் தங்கும் என்ற தீர்க்கதரிசனத்தைப் பற்றி கற்றுக்கொண்டது நினைவிருக்கிறதா? உங்கள் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு அந்தப் பரதீஸில் வாழ்வார்கள் என்பதை வாசித்து மெய்சிலிர்த்துப் போனீர்கள் அல்லவா?​—⁠ஏசாயா 11:6; 35:5, 6; யோவான் 5:28, 29.

2, 3. (அ) பைபிள் அடிப்படையிலான உங்கள் நம்பிக்கை ஆதாரமற்றதல்ல என்று ஏன் சொல்லலாம்? (ஆ) அந்த நம்பிக்கைக்கு வேறு எந்த ஆதாரமும் நமக்கு இருக்கிறது?

2 உங்கள் நம்பிக்கை ஆதாரமற்றதல்ல. பரதீஸ் பற்றிய பைபிள் வாக்குறுதிகளை நீங்கள் நம்புவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. உதாரணமாக, “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” என கழுமரத்தில் ஏற்றப்பட்ட கள்வனிடம் இயேசு சொன்னது உண்மையில் நிறைவேறும் என்று நம்புகிறீர்கள். (லூக்கா 23:43) அதேபோல், ‘அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும்’ என்ற வாக்குறுதியையும் நீங்கள் நம்புகிறீர்கள். மேலும், நம் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமும் துக்கமும் அலறுதலும் வேதனையும் இருக்காது என்ற வாக்குறுதியையும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆக, மீண்டும் பூமியில் பரதீஸ் நிச்சயம் வரும்!​—⁠2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:4.

3 இப்போது கிறிஸ்தவர்கள் அனுபவித்து வரும் மற்றொன்றும்கூட பரதீஸ் பற்றிய இந்த நம்பிக்கைக்கு மேலுமான ஆதாரத்தை அளிக்கிறது. அது என்ன? அதுதான் ஆவிக்குரிய பரதீஸ். கடவுள் அதை உருவாக்கி, தம்முடைய ஜனங்களை அதற்குள் கொண்டு வந்திருக்கிறார். “ஆவிக்குரிய பரதீஸ்” என்ற சொற்றொடர் உங்களுக்கு பிடிபடாமலோ புரிந்துகொள்ளக் கடினமாகவோ இருக்கலாம், ஆனால் அத்தகைய பரதீஸ் வருமென முன்னறிவிக்கப்பட்டது, அது இப்போது உண்மையில் இருக்கிறது.

பரதீஸ் பற்றிய தரிசனம்

4. எந்த தரிசனத்தைப் பற்றி 2 கொரிந்தியர் 12:2-4 குறிப்பிடுகிறது, அந்தத் தரிசனத்தைப் பார்த்தவர் யாராக இருக்கலாம்?

4 இதன் சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் என்ன எழுதினார் என்பதைக் கவனியுங்கள்: ‘கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் . . . மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.’ (2 கொரிந்தியர் 12:2-4) தானும் ஓர் அப்போஸ்தலன் என்பதைப் பவுல் ஆதாரங்களுடன் நிரூபித்ததைக் காட்டும் வசனங்களைத் தொடர்ந்தாற்போல் வருவதே இந்த வசனங்கள். மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்படும் அனுபவத்தை வேறு யாரும் பெற்றதாக பைபிள் குறிப்பிடுவதில்லை, பவுல் மட்டுமே அதைக் குறித்து நமக்குச் சொல்லுகிறார். எனவே சந்தேகமின்றி பவுல்தான் இந்தத் தரிசனத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்த தரிசனத்தில் அவர் எந்தப் “பரதீசுக்கு” போனார்?​—⁠2 கொரிந்தியர் 11:5, 23-31.

5. பவுல் எதைப் பார்க்கவில்லை, எனவே அந்த ‘பரதீஸ்’ எத்தகையது?

5 “மூன்றாம் வானம்” என்பது நமது கோளத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தையோ விண்வெளியையோ குறிப்பதில்லை, வான் இயற்பியலாளர்கள் இருப்பதாக ஊகிக்கிற வேறெந்த பிரபஞ்சங்களையும் அது குறிப்பதில்லை என்பதை அந்த வசனத்தின் சூழமைவு காட்டுகிறது. வலியுறுத்துவதற்கு அல்லது வலிமை சேர்ப்பதற்கு பெரும்பாலும் மூன்று என்ற எண்ணை பைபிள் பயன்படுத்துகிறது. (பிரசங்கி 4:12; ஏசாயா 6:3; மத்தேயு 26:34, 75; வெளிப்படுத்துதல் 4:8) இவ்வாறு, தரிசனத்தில் பவுல் கண்ட பரதீஸ் உயர்வானதாக அல்லது மேன்மையானதாக இருந்தது. அது ஆவிக்குரியது.

6. வரலாற்றில் படிப்படியாக நடந்த எந்தச் சம்பவம் பவுல் பார்த்த தரிசனத்தின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது?

6 பூர்வகால பைபிள் தீர்க்கதரிசனங்கள் இதன் உட்கருத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. கடவுளுடைய பூர்வகால ஜனங்கள் அவருக்கு உண்மையற்றவர்களாக நடந்தனர்; ஆகவே யூதாவிலும் எருசலேமிலும் இருந்த அவர்களுக்கு விரோதமாக பாபிலோனியரை வரச் செய்ய யெகோவா தீர்மானித்தார். பைபிள் காலக் கணக்குப் பிரகாரம், பொ.ச.மு. 607-⁠ல் அத்தேசங்கள் பாழாக்கப்பட்டன. தீர்க்கதரிசனத்தின்படி, 70 வருடங்களுக்கு நிலம் பாழாய் கிடக்கும்; அதன் பிறகு மனந்திருந்திய யூதர்கள் திரும்பி வந்து மெய் வணக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவார்கள். இது பொ.ச.மு. 537 முதற்கொண்டு நடந்தேறியது. (உபாகமம் 28:15, 62-68; 2 இராஜாக்கள் 21:10-15; 24:12-16; 25:1-4; எரேமியா 29:10-14) அத்தேசங்களின் நிலத்திற்கு என்ன நேர்ந்தது? அந்த 70 வருட காலத்தில் அது காட்டுச் செடிகள் நிறைந்த இடமாகவும், பாலை நிலமாகவும், குள்ள நரிகளின் குடியிருப்பாகவும் மாறியது. (எரேமியா 4:26; 10:22; பொது மொழிபெயர்ப்பு) இருப்பினும் பின்வரும் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது: ‘யெகோவா சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப் போலவும், அதின் அவாந்தர வெளியை யெகோவாவின் தோட்டத்தை [அல்லது பரதீஸை, செப்டுவஜின்ட்] போலவும் ஆக்குவார்.’​—⁠ஏசாயா 51:3.

7. அந்த 70 வருட பாழ்க்கடிப்புக்குப் பிறகு என்ன நிலைமை ஏற்படவிருந்தது?

7 அது 70 வருட பாழ்க்கடிப்புக்குப் பிறகு நடந்தேறியது. கடவுளுடைய ஆசீர்வாதத்தால் நிலைமைகள் நல்ல விதமாக மாறின. இந்த மாற்றங்களை உங்கள் மனக்கண்களால் சற்று கற்பனை செய்து பாருங்கள்: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; . . . அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.”​—⁠ஏசாயா 35:1-7.

ஜனங்கள் பழைய நிலைக்கு திரும்புவதும், சுபாவத்தை மாற்றிக்கொள்வதும்

8. ஏசாயா 35-⁠ம் அதிகாரம் ஜனங்களைப் பற்றியே குறிப்பிட்டது என்பது நமக்கு எப்படித் தெரியும்?

8 எப்பேர்ப்பட்ட மாற்றம்! பாழாக்கப்பட்ட நிலையிலிருந்து பரதீஸான நிலை. இருப்பினும், பாழான தேசம் செழிப்பான தேசமாக ஆவதைப் போல ஜனங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என இந்தத் தீர்க்கதரிசனமும் நம்பகமான இன்னும் அநேக தீர்க்கதரிசனங்களும் காட்டின. எதை வைத்து நாம் அவ்வாறு சொல்லலாம்? ‘யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள்’ “ஆனந்தக்களிப்புடன் பாடி”க்கொண்டு தங்கள் தேசத்திற்குத் திரும்பி வந்து, “சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்” என ஏசாயா குறிப்பிட்டார். (ஏசாயா 35:10) இது நிலத்திற்கு அல்ல, ஜனத்திற்கே பொருந்தியது. மேலும், சீயோனுக்குத் திரும்பிவந்த ஜனத்தாரைப் பற்றி ஏசாயா வேறொரு இடத்திலும் இவ்வாறு முன்னறிவித்தார்: ‘அவர்கள் யெகோவா . . . நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். பூமி தன் பூண்டுகளை விளைவிப்பது போலவும், . . . [யெகோவா] எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப் பண்ணுவார்.’ கடவுளுடைய ஜனங்களைப் பற்றி ஏசாயா இதையும் சொன்னார்: ‘யெகோவா நித்தமும் உன்னை நடத்தி, . . . உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல . . . இருப்பாய்.’ (ஏசாயா 58:11; 61:3, 11; எரேமியா 31:10-12) எனவே சொல்லர்த்தமான தேசத்தின் சுற்றுச்சூழல் எப்படி நல்ல நிலைமைக்கு மாறவிருந்ததோ அப்படியே திரும்பிவந்த யூத ஜனங்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படவிருந்தன.

9. பவுல் எந்தப் ‘பரதீஸைப்’ பார்த்தார், அது நிறைவேறியது எப்போது?

9 தரிசனத்தில் பவுல் எதைப் பார்த்தார் என்பதைப் புரிந்துகொள்ள சரித்திரப்பூர்வ மாதிரியாய் அமைந்த அந்த சம்பவம் நமக்கு உதவுகிறது. அது கிறிஸ்தவ சபையை உட்படுத்தியது; அச்சபையை “கடவுள் பண்படுத்தும் தோட்டம்” என பவுல் குறிப்பிட்டார். அது கனிகொடுக்க வேண்டியிருந்தது. (1 கொரிந்தியர் 3:9, பொ.மொ.) பவுல் கண்ட தரிசனம் எப்போது நிறைவேறவிருந்தது? தான் பார்த்ததை பவுல் “வெளிப்படுத்தல்” என அழைத்ததால் அது எதிர்காலத்தில் நிறைவேற இருந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகு பரந்தளவில் விசுவாசதுரோகம் தலைதூக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். (2 கொரிந்தியர் 12:1; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3, 7) விசுவாசதுரோகிகள் அதிகரித்து, மெய்க் கிறிஸ்தவர்கள் யாரென்று தெரியாதளவுக்கு மறைத்துப் போடும் ஒரு சமயத்தில் மெய் கிறிஸ்தவர்களை செழிப்பான தோட்டத்திற்கு ஒப்பிடவே முடியாது. இருப்பினும் மெய் வணக்கம் மீண்டும் உயர்த்தப்படுவதற்கான காலம் வரவிருந்தது. கடவுளுடைய ஜனங்கள் பழைய நிலைக்குத் திரும்பவிருந்தார்கள். அப்போது ‘நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிக்கவிருந்தார்கள்.’ (மத்தேயு 13:24-30, 36-43) கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்திலே ஸ்தாபிக்கப்பட்ட சில வருடங்களுக்குப் பிறகு அது உண்மையில் நடந்தேறியது. அந்தத் தரிசனத்தில் பவுல் அன்று பார்த்த ஆவிக்குரிய பரதீஸை கடவுளுடைய ஜனங்கள் இன்று அனுபவித்து மகிழ்கிறார்கள் என்பது கடந்த பல பத்தாண்டுகளாக வெகு தெளிவாக தெரிகிறது.

10, 11. நாம் அபூரணர்களாக இருந்தாலும் ஆவிக்குரிய பரதீஸிலிருப்பதாக ஏன் சொல்லலாம்?

10 நாம் அபூரணர்கள் என்பதால் சில சமயங்களில் நம் மத்தியில் பிரச்சினைகள் எழும்புவதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்; பவுலுடைய நாட்களிலிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில்கூட பிரச்சினைகள் தலைதூக்கின. (1 கொரிந்தியர் 1:10-13; பிலிப்பியர் 4:2, 3; 2 தெசலோனிக்கேயர் 3:6-14) ஆனாலும் நாம் இப்போது அனுபவித்து மகிழும் ஆவிக்குரிய பரதீஸைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருகாலத்தில் ஆவிக்குரிய விதத்தில் நாம் நோயுற்றிருந்தோம், இப்போதோ குணமாகியிருக்கிறோம். ஒருகாலத்தில் ஆவிக்குரிய விதத்தில் பட்டினி கிடந்தோம், இப்போதோ ஆவிக்குரிய உணவை அபரிமிதமாக உண்டு மகிழ்கிறோம். வறண்ட ஆவிக்குரிய தேசத்தில் கஷ்டப்படுவதற்குப் பதிலாக கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்று, ஆசீர்வாதங்கள் எனும் மழையில் நனைகிறோம். (ஏசாயா 35:1, 7) ஆவிக்குரிய இருளால் குருடாக்கப்படாமல் சுயாதீனம் மற்றும் கடவுளுடைய தயவு எனும் வெளிச்சத்தைக் காண்கிறோம். நம்மில் பலர் ஒருகாலத்தில் பைபிள் தீர்க்கதரிசனங்களை புரிந்துகொள்ளாமல் செவிடர்களைப் போலிருந்தோம், இப்போதோ அவற்றை நன்கு கேட்டுப் புரிந்துகொள்கிறோம். (ஏசாயா 35:5) உதாரணமாக, உலகெங்குமுள்ள லட்சோப லட்சம் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், வசனம் வசனமாக தானியேல் தீர்க்கதரிசனத்தைப் படித்தோம். அதிகாரம் அதிகாரமாக ஏசாயா புத்தகத்தையும் கவனமாக படித்தோம். புத்துணர்ச்சியூட்டும் இப்படிப்பட்ட ஆவிக்குரிய உணவு நாம் ஆவிக்குரிய பரதீஸில் இருக்கிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறதல்லவா?

11 பலதரப்பட்ட பின்னணியைச் சேர்ந்த நல்மனமுள்ளவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொண்டு பின்பற்ற முயற்சியெடுத்து தங்கள் சுபாவங்களை மாற்றியிருப்பதையும் சற்று எண்ணிப் பாருங்கள். முக்கியமாக, ஒருகாலத்தில் மேலோங்கி இருந்த மிருகத்தனமான குணங்களை விட்டொழிக்க அவர்கள் பெரும்பாடு பட்டிருக்கிறார்கள். ஒருவேளை நீங்களும் அப்படி பெரும் பாடுபட்டு நல்ல பலன் கண்டிருக்கலாம்; உங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின் அனுபவமும் அதுவே. (கொலோசெயர் 3:8-14) எனவேதான் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு வரும்போது சாந்தமுள்ளவர்களாகவும் இனிமையானவர்களாகவும் ஆகியிருக்கும் ஆட்கள் மத்தியிலிருக்கிறீர்கள். அவர்கள் இன்னும் அபூரணர்கள்தான், ஆனாலும் கொடிய சிங்கங்களையும் மற்ற மூர்க்கமான மிருகங்களையும் போன்றவர்கள் அல்ல. (ஏசாயா 35:9) சாந்தமும் சமாதானமும் தவழும் சூழலில் அவர்களுடன் ஆன்மீக விஷயங்களில் தோழமை கொள்வது எதைக் காட்டுகிறது? ஆவிக்குரிய பரதீஸ் என பொருத்தமாகவே அழைக்கப்படும் நிலைமையில் நாம் வாழ்கிறோம் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. நம்முடைய இந்த ஆவிக்குரிய பரதீஸ் பூமிக்குரிய பரதீஸிற்கு முன்நிழலாய் இருக்கிறது; கடவுளுக்கு உண்மைத் தன்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தால் நாம் அந்தப் பரதீஸில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வோம்.

12, 13. இந்த ஆவிக்குரிய பரதீஸில் தொடர்ந்திருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

12 அதோடு நாம் வேறொன்றையும் மறந்துவிடக் கூடாது. “நீங்கள் பலப்படும்படிக்கும், நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும் . . . இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக” என இஸ்ரவேலரிடம் கடவுள் சொன்னார். (உபாகமம் 11:8, 9) அதே தேசத்தைப் பற்றி லேவியராகமம் 20:22, 24 இவ்வாறு குறிப்பிட்டது: “நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள். நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்.” ஆகவே, யெகோவா தேவனுடன் நல்லுறவைக் காத்துக்கொள்ளும் பட்சத்திலேயே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்க முடியுமென்று இஸ்ரவேலரிடம் சொல்லப்பட்டது. அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால்தான் பாபிலோனியரால் சிறைபிடித்துச் செல்ல அவர் அனுமதித்தார், தங்கள் தேசத்திலிருந்து அவர்களை வெளியேற்றினார்.

13 ஆவிக்குரிய பரதீஸிலுள்ள பல அம்சங்கள் நம் மனதைக் கவருபவையாய் இருக்கலாம். அது கண்களுக்கு பசுமையாக, மனதிற்கு இதமாக இருக்கிறது. மிருகத்தனமான குணாம்சங்களை பாடுபட்டு மாற்றிக்கொண்ட கிறிஸ்தவர்களுடன் நாம் சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவர்கள் கனிவோடு நடந்துகொள்கிறார்கள், உதவி செய்யவும் முயலுகிறார்கள். ஆனாலும், ஆவிக்குரிய பரதீஸில் தொடர்ந்து வாழ்வதற்கு இந்த ஜனங்களுடன் நல்லுறவைக் காத்துக்கொள்வது மட்டுமே போதாது. யெகோவாவுடனும் நல்லுறவைக் காத்துக்கொள்ள வேண்டும், அவருடைய சித்தத்தை செய்யவும் வேண்டும். (மீகா 6:8) நாமாகவே மனமுவந்து இந்த ஆவிக்குரிய பரதீஸுக்குள் பிரவேசித்தோம், ஆனால் கடவுளுடனுள்ள உறவைக் காத்துக்கொள்ள தவறினால் கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து வெளியேறி விடுவோம் அல்லது இதிலிருந்து வெளியேற்றப்படுவோம்.

14. ஆவிக்குரிய பரதீஸில் நிலைத்திருக்க நமக்கு இருக்கும் ஓர் உதவி எது?

14 கடவுளுடைய வார்த்தையிலிருந்து தொடர்ந்து பலத்தைப் பெறுவது நமக்கு உதவி செய்யும் முக்கியமான ஓர் அம்சம். சங்கீதம் 1:1-3-⁠லுள்ள ஒப்புமையை கவனியுங்கள்: ‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல், . . . கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.’ மேலும், ஆவிக்குரிய பரதீஸில் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் வழங்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்களும் ஆவிக்குரிய உணவை அளிக்கின்றன.​—⁠மத்தேயு 24:45-47, NW.

பரதீஸைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தைப் பலப்படுத்துதல்

15. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல ஏன் மோசேயால் முடியவில்லை, ஆனால் அவர் எதைப் பார்த்தார்?

15 பரதீஸுக்கு முன்நிழலாக உள்ள மற்றொன்றை கவனியுங்கள். இஸ்ரவேலர் 40 வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிந்த பிறகு யோர்தான் நதிக்கு கிழக்கே உள்ள மோவாபிய சமவெளிக்கு மோசே அவர்களை அழைத்துச் சென்றார். ஆனால் அவர் அதற்கு முன்பு செய்த ஒரு தவறின் காரணமாக யோர்தானைக் கடந்து இஸ்ரவேலரை அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாதென யெகோவா தீர்மானித்திருந்தார். (எண்ணாகமம் 20:7-12; 27:12, 13) இருப்பினும், ‘நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தை பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும்’ என மோசே கெஞ்சினார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் அவர் பிரவேசிக்காவிட்டாலும், பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி அத்தேசத்தின் பல்வேறு பிரதேசங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்; அது ‘நல்ல தேசம்’ என அவர் நிச்சயம் கண்டிருப்பார். அந்தத் தேசம் எப்படி இருந்திருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?​—⁠உபாகமம் 3:25-27.

16, 17. (அ) பூர்வ காலத்திலிருந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசம் தற்போதுள்ள தேசத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டிருந்தது? (ஆ) வாக்குப்பண்ணப்பட்ட தேசம் ஒருகாலத்தில் பரதீஸைப் போல இருந்ததென நாம் ஏன் நம்பலாம்?

16 சமீப காலங்களில் அந்தப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதி எப்படி இருக்கிறது என்பதை வைத்து அந்த இடத்தை கற்பனை செய்து பார்த்தால், அது மணற்பாங்கான பொட்டல் காடும் கரடுமுரடான பாலைவனங்களும் சுட்டுப் பொசுக்கும் உஷ்ணமும் நிறைந்ததாகவே காட்சியளிக்கும். எனினும், பைபிள் காலங்களில் அந்த முழுப் பிரதேசமும் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததை நம்புவதற்கு காரணம் உள்ளது. அந்தப் பகுதியிலுள்ள நிலம், “ஆயிரம் ஆண்டுகள் தவறாக உபயோகிக்கப்பட்டதால் சிதைந்துவிட்டது” என சைன்டிஃபிக் அமெரிக்கன் என்ற இதழில் நீர், மண் வல்லுநர் டாக்டர் உவால்டர் சி. லௌடர்மில்க் விவரித்தார். “ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த தேசத்தை ‘பாலைவனமாக’ மாற்றியது மனிதனே, இயற்கை அல்ல” என உழவியல் நிபுணராக விளங்கும் அவர் எழுதினார். உண்மையில், “இந்தத் தேசம் ஒருகாலத்தில் புல்வெளிகள் நிறைந்த பரதீஸாக இருந்தது” என அவருடைய ஆராய்ச்சிகள் காட்டின. எனவே “புல்வெளிகள் நிறைந்த பரதீஸாக” இருந்த தேசம் மனிதனின் தவறான உபயோகத்தால் சிதைந்துவிட்டது தெரிகிறது.a

17 பைபிளில் நீங்கள் வாசித்தவற்றை எண்ணிப் பார்க்கும்போது வாக்குப்பண்ணப்பட்ட தேசம் உண்மையான பரதீஸாக இருந்தது என்ற முடிவுக்கு வருவதை நியாயமாக காண்பீர்கள். மோசேயின் மூலம் ஜனங்களுக்கு யெகோவா பின்வருமாறு உறுதியளித்ததை சற்று எண்ணிப் பாருங்கள்: “நீங்கள் சுதந்தரிக்கப் போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்; அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம்.”​—⁠உபாகமம் 11:8-12.

18. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை பற்றி எத்தகைய எண்ணத்தை சிறைபட்ட இஸ்ரவேலருக்கு ஏசாயா 35:2 ஏற்படுத்தியிருக்க வேண்டும்?

18 வாக்குப்பண்ணப்பட்ட தேசம் அந்தளவு பசுமையும் செழுமையும் நிறைந்ததாக இருந்ததால் அதன் சில இடங்களைப் பற்றி வெறுமனே கேட்டதுகூட பரதீஸ் போன்ற காட்சியை கண் முன் நிறுத்தியது. அது உண்மை என்பது ஏசாயா 35-⁠ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனத்திலிருந்து தெளிவாக தெரிகிறது; அந்தத் தீர்க்கதரிசனம் இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து தாயகம் திரும்பியபோது முதலில் நிறைவேறியது. ஏசாயா சொன்னதாவது: “அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக் களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.” (ஏசாயா 35:2) லீபனோன், சாரோன், கர்மேல் போன்ற பெயர்களை வெறுமனே கேட்டதுகூட மனநிறைவளிக்கும் ரம்மியமான காட்சிகளையே இஸ்ரவேலரது கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்.

19, 20. (அ) பூர்வ காலத்தில் சாரோன் இருந்த இடத்தை விவரிக்கவும். (ஆ) பரதீஸைப் பற்றிய நம் நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வழி எது?

19 இப்போது சாரோனைப் பற்றி சிந்திப்போம்; இது சமாரியாவின் குன்றுகளுக்கும் பெருங்கடலுக்கும் இடையே கரையோரமாக அமைந்துள்ள சமவெளியாகும். (பக்கம் 10-லுள்ள ஃபோட்டோவைக் காண்க.) இது பசுமை கொஞ்சும் அழகுக்கும் செழுமைக்கும் பெயர்போனது. மிகுந்த நீர் வளத்தின் காரணமாக மேய்ச்சலுக்கு உகந்ததாகவும் இருந்தது; மேலும், இதன் வட பகுதிகளில் கருவாலி மரங்கள் நிறைந்த காடுகளும் இருந்தன. (1 நாளாகமம் 27:29; உன்னதப்பாட்டு 2:1; ஏசாயா 65:10) இப்படியாக நிலம் புதுப்பிக்கப்பட்டு, அலங்காரமிக்கதாக பரதீஸைப் போன்று மாறுவதைப் பற்றி ஏசாயா 35:2 முன்னுரைத்தது. இந்தத் தீர்க்கதரிசனம், பின்னர் தரிசனத்தில் பவுல் பார்த்த மனமகிழ்ச்சிதரும் ஆவிக்குரிய பரதீஸையும் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்லாமல், மற்ற தீர்க்கதரிசனங்களுடன் சேர்ந்து இந்தத் தீர்க்கதரிசனமும் மனிதருக்கான பூமிக்குரிய பரதீஸைப் பற்றிய நம் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.

20 ஆவிக்குரிய பரதீஸில் குடியிருக்கையில் அதனிடம் நம் போற்றுதலை வளர்த்துக்கொள்ளலாம்; அதேசமயத்தில் பூமிக்குரிய பரதீஸ் பற்றிய நம் நம்பிக்கையையும் பலப்படுத்திக் கொள்ளலாம். எப்படி? பைபிளில் நாம் வாசிப்பவற்றை இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதன் மூலம் பலப்படுத்திக் கொள்ளலாம். பைபிள் விவரிப்புகளும் தீர்க்கதரிசனங்களும் குறிப்பான இடங்களைப் பற்றி பெரும்பாலும் சொல்கின்றன. அந்த இடங்கள் எங்குள்ளன, மற்ற இடங்களுடன் அவற்றிற்குள்ள தொடர்பு என்ன என்றெல்லாம் விவரமாக புரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? பயனளிக்கும் விதத்தில் நீங்கள் அதை எப்படி புரிந்துகொள்ளலாம் என்பதை அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிப்போம்.

[அடிக்குறிப்பு]

a பைபிளின் புவியியல் என்ற ஆங்கில புத்தகத்தில் டென்னஸ் பாலி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பைபிள் காலங்கள் முதற்கொண்டு தாவர வகைகளின் வளர்ச்சியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.” காரணம்? “எரிப்பதற்கும் கட்டடங்கள் கட்டுவதற்கும் மனிதனுக்கு மரம் தேவைப்பட்டது, எனவே . . . அவன் மரங்களை வெட்ட ஆரம்பித்தான், இவ்வாறு வானிலை சீற்றங்களின் பாதிப்புக்கு நிலத்தை உள்ளாக்கினான். சுற்றுச்சூழலில் மனிதன் இப்படி குறுக்கிட்டதன் விளைவாக, சீதோஷண நிலையே . . . மெல்ல மெல்ல அதன் அழிவுக்கு மிக முக்கிய காரணியாக ஆனது.”

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• அப்போஸ்தலன் பவுல் எந்தப் ‘பரதீஸை’ தரிசனத்தில் பார்த்தார்?

• ஏசாயா 35-ஐப் பொறுத்தவரை இது எப்போது முதலில் நிறைவேறியது, தரிசனத்தில் பவுல் பார்த்ததுடன் இது எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?

• ஆவிக்குரிய பரதீஸுக்கான போற்றுதலையும் பூமிக்குரிய பரதீஸுக்கான நம்பிக்கையையும் நாம் எப்படி பலப்படுத்திக் கொள்ளலாம்?

[பக்கம் 10-ன் படம்]

சாரோன் சமவெளி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் செழிப்பான ஓர் இடம்

[படத்திற்கான நன்றி]

Pictorial Archive (Near Eastern History) Est.

[பக்கம் 12-ன் படம்]

அது ‘நல்ல தேசம்’ என்பதை மோசே புரிந்துகொண்டார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்