உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 11/15 பக். 4-7
  • என்றும் வாழ ஆசைப்படுகிறீர்களா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்றும் வாழ ஆசைப்படுகிறீர்களா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நித்திய ஜீவன்​—⁠அலுப்புத்தட்டிவிடுமா?
  • வாழ்க்கை—குறுகியதும் மதிப்புமிக்கதும்
  • உங்களுக்குப் பிரியமானவர்கள்?
  • நித்திய வாழ்க்கை​—⁠மகிழ்ச்சி பொங்கும் எதிர்பார்ப்பு
  • நாம் என்றென்றும் வாழலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • என்றும் வாழ்வது வெறும் ஒரு கனவல்ல
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • நித்திய ஜீவனுக்கான ஒரே வழி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 11/15 பக். 4-7

என்றும் வாழ ஆசைப்படுகிறீர்களா?

ஜப்பானில் வசிக்கும் வயதான ஒரு பெண்மணி தன் வீட்டிற்கு வந்திருந்த கிறிஸ்தவ ஊழியரிடம் இவ்வாறு சொன்னார்: “நான் சாவை நினைச்சு பயப்படல, ஆனா இந்த பூக்களையெல்லாம் விட்டுப் பிரியனுமேன்னு நினைச்சுதான் கவலைப்படறேன்.” அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை அந்த ஊழியர் புரிந்துகொண்டார். ஏனெனில் அந்தப் பெண்மணி தன் வீட்டில் ஓர் அழகிய பூந்தோட்டத்தை வைத்திருந்தார். சாவைக் கண்டு தங்களுக்குப் பயமில்லை என்று சொல்லும் அநேகர் படைப்பின் அதிசயங்களிடம் மனதைப் பறிகொடுப்பதால் உண்மையில் என்றென்றும் வாழவே ஏங்கலாம்.

என்றென்றும் வாழ்வதா? பலர் அந்த எண்ணத்தையே ஓரங்கட்டிவிடுகின்றனர். சிலர் நித்தியமாக வாழ தங்களுக்கு ஆசையே இல்லை என்றும் சொல்வர். ஆனால் ஏன்?

நித்திய ஜீவன்​—⁠அலுப்புத்தட்டிவிடுமா?

என்றென்றும் வாழ்ந்தால் அலுப்புத்தட்டிவிடும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஓய்வுபெற்றோர் பெரும்பாலும் டிவி-க்கு முன்னால் காலத்தைக் கழித்து சலிப்புதட்டும் வாழ்க்கை வாழ்வதை அவர்கள் உதாரணமாக சொல்கின்றனர். நீங்களும் அவர்களைப் போலவே நினைக்கிறீர்கள் என்றால், வானவியல் நிபுணர் ராபர்ட் ஜாஸ்ட்ரோ அளித்த பதிலை சற்று சிந்தியுங்கள். நித்திய ஜீவன் என்பது வரமா அல்லது வாதனையா என அவரிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “துருதுருவென்ற மனமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தணியா ஆசையும் உள்ளவர்களுக்கு அது ஒரு வரமாகவே இருக்கும். அறிவை மேன்மேலும் அபிவிருத்தி செய்ய நித்திய காலம் உள்ளது என்ற நினைப்பே அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும். ஆனால் தாங்கள் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்துவிட்டதாக நினைத்து தங்கள் மனக்கதவை அடைத்துக் கொள்பவர்களுக்கோ நித்திய ஜீவன் என்பது பெரும் வாதனையே. எப்படிப் பொழுதைக் கழிப்பதென்றே அவர்களுக்குத் தெரியாது.”

நித்தியகால வாழ்க்கை அலுப்புத்தட்டுவதும் அலுப்புத்தட்டாமல் இருப்பதும் உங்கள் மனப்பான்மையையே பெருமளவு சார்ந்திருக்கிறது. “துருதுருவென்ற மனமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தணியா ஆசையும்” உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால், ஓவியம், இசை, கட்டடவியல், தோட்டக்கலை போன்ற கலைகளில் அல்லது உங்களுக்கு விருப்பமான மற்ற பயனுள்ள வேலைகளில் நீங்கள் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதை யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட பல்வேறு துறைகளில் திறமையை வளர்க்க அற்புதமான வாய்ப்புகளை நித்தியகால வாழ்க்கை அள்ளித்தரும்.

என்றென்றும் பிறரிடம் அன்பு காண்பிக்கவும் பிறருடைய அன்பைப் பெறவும் முடியும் என்பதால் நித்திய ஜீவன் மனநிறைவு தருவதாக இருக்கும். அதுமட்டுமின்றி மற்றவர்களுக்கு அன்பு காண்பிக்கும் திறனுடன் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்கள் நம் மீது அன்பை பொழிகையில் அந்த உணர்வே நம்மை பூரிப்படைய வைக்கும். மெய்யான அன்பை பகிர்ந்துகொள்வதால் கிடைக்கும் ஆத்ம திருப்தி, கால ஓட்டத்தில் மங்கியும் விடாது. சக மனிதர்களோடு மட்டுமின்றி முக்கியமாக கடவுளோடும்கூட அன்பை வளர்த்துக்கொள்ள முடிவில்லா தருணங்களை நித்தியகால வாழ்க்கை தரும். “தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்” என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 8:3) அண்டசராசரத்தின் பேரரசரை அறிவதும் அவரால் அறியப்பட்டிருப்பதும் என்னே அருமையான வாய்ப்பு! மேலும், நம்முடைய அன்பான சிருஷ்டிகரைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு முடிவே இருக்காது. இப்படியிருக்கையில், நித்திய ஜீவன் நமக்கு அலுப்புத்தட்டுவதாகவோ மதிப்பற்றதாகவோ ஆகிவிடுமா என்ன!

வாழ்க்கை—குறுகியதும் மதிப்புமிக்கதும்

வாழ்க்கை குறுகியதாக இருப்பதே அதன் மதிப்பைக் கூட்டுகிறது என சிலர் உணர்கின்றனர். கிடைப்பதற்கு அரிய உலோகமாகிய தங்கத்தோடு வாழ்க்கையை அவர்கள் ஒப்பிடலாம். தங்கம் எங்கும் மலிந்திருந்தால் அதன் மதிப்பு குறைந்துவிடும் என அவர்கள் சுட்டிக்காட்டலாம். என்ன இருந்தாலும் தங்கத்தின் அழகு குறைவதில்லையே. அது போலத்தான் வாழ்க்கையும்!

நித்திய வாழ்க்கையை தாராளமாகக் கிடைக்கும் காற்றோடு நாம் ஒப்பிடலாம். நீரின் மேல் மட்டத்திற்கு வர இயலாத நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கித் தவிக்கும் மாலுமிகளுக்கு காற்று மிகவும் மதிப்புமிக்க ஒன்று. அவர்கள் அந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட பிறகு மறுபடியும் காற்றை தாராளமாய் அனுபவிப்பதற்காக சலித்துக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயம் மாட்டார்கள்!

அந்த மாலுமிகளைப் போன்றே நாமும் மீட்கப்படலாம், ஆனால் கொஞ்ச காலம் வாழ்வதற்காக அல்ல, என்றென்றும் வாழ்வதற்காக. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” (ரோமர் 6:23) இயேசுவின் கிரய பலியால் மனித அபூரணத்தையும் மரணத்தையும் கடவுள் துடைத்தழித்துவிடுவார். கீழ்ப்படிதலுள்ள மனித சமுதாயத்திற்கு நித்திய ஜீவன் என்னும் வரத்தை பொழிந்தருளுவார். இப்படிப்பட்ட அன்புள்ள ஏற்பாட்டிற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்!

உங்களுக்குப் பிரியமானவர்கள்?

‘எனக்குப் பிரியமானவர்களைப் பற்றி என்ன? அவர்கள் இல்லாமல் நான் மட்டும் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?’ என சில நபர்கள் நினைக்கலாம். ஒருவேளை நீங்கள் பைபிளின் அறிவை பெற்றிருப்பீர்கள்; பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கான வாய்ப்பைப் பற்றி கற்றிருப்பீர்கள். (லூக்கா 23:43; யோவான் 3:16; 17:3) உங்கள் குடும்ப அங்கத்தினர்களும், உறவினர்களும், நெஞ்சார நேசிக்கும் நண்பர்களும் உங்களோடு அங்கு இருக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுவது இயல்பே. கடவுள் வாக்குறுதி அளித்துள்ள நீதியுள்ள புதிய உலகில் நீங்கள் அனுபவிக்கப்போகும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அவர்களும் அனுபவிக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம்.​—⁠2 பேதுரு 3:13.

ஆனால் பூமிக்குரிய பரதீஸில் என்றென்றும் வாழ்வதில் உங்கள் நண்பர்களும் அன்பானவர்களும் அக்கறை காட்டவில்லை என்றால் என்ன செய்வது? அதனால் நீங்கள் சோர்ந்துவிட வேண்டியதில்லை. தொடர்ந்து பைபிளின் திருத்தமான அறிவைப் பெற்று அதற்கு இசைவாக வாழுங்கள். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “மனைவியானவளே நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?” (1 கொரிந்தியர் 7:16) மனிதர்கள் மாறலாம். உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் கிறிஸ்தவ மதத்தை எதிர்த்த ஒருவர் மாறி, தற்போது கிறிஸ்தவ சபையின் மூப்பராக இருக்கிறார். அவர் சொல்கிறார்: “நான் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் என் அருமை குடும்பத்தார் பைபிள் நியமங்களை விட்டுக்கொடுக்கவே இல்லை. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”

உங்களுடைய, உங்கள் அன்பானவர்களுடைய வாழ்க்கையின் மீது கடவுள் அதிக அக்கறையுள்ளவராக இருக்கிறார். சொல்லப்போனால், ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) நீங்களும் உங்கள் அன்பானவர்களும் நித்திய காலம் வாழ வேண்டும் என்பதே யெகோவா தேவனின் விருப்பம். அவருடைய அன்பு அபூரண மனிதர்களின் அன்பைவிட உயர்ந்தது. (ஏசாயா 49:15) அப்படியிருக்க அவரோடு நல்ல உறவை ஏன் வளர்த்துக்கொள்ளக் கூடாது? அப்போது உங்களுக்குப் பிரியமானவர்களும் அவ்வாறே செய்ய உங்களால் உதவ முடியும். என்றென்றுமாக வாழும் நம்பிக்கை இப்பொழுது அவர்களுக்கு இல்லாவிட்டாலும், பைபிளின் திருத்தமான அறிவுக்கு இசைவாக நீங்கள் நடந்துகொள்வதைப் பார்த்து அவர்களுடைய மனப்பான்மை மாறலாம்.

உங்களுக்கு பிரியமானவர்கள் இறந்துவிட்டிருந்தால்? இறந்துபோன கோடிக்கணக்கானோருக்காக உயிர்த்தெழுதல் என்னும் அற்புத நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது. அவர்கள் மறுபடியும் உயிரோடு வந்து பரதீஸிய பூமியில் வாழ்வார்கள். “இதோ! நேரம் வருகிறது. அப்போது கல்லறையில் இருப்பவர்கள் எல்லாரும் . . . வெளியே வருவர்” என இயேசு கிறிஸ்து வாக்குறுதி அளித்தார். (யோவான் 5:28, 29, தமிழ் கத்தோலிக்க பைபிள்) கடவுளைப் பற்றி அறியாமலேயே இறந்துபோனவர்களும்கூட உயிர்த்தெழுப்பப்படுவர். ஏனெனில் “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று” பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 24:15) மீண்டும் உயிர்பெற்று வருபவர்களை வருக! வருக! என்று வரவேற்பதில் எப்பேர்ப்பட்ட பெருமகிழ்ச்சி இருக்கும்!

நித்திய வாழ்க்கை​—⁠மகிழ்ச்சி பொங்கும் எதிர்பார்ப்பு

கஷ்டங்கள் நிறைந்த இந்த உலகிலேயே மகிழ்ச்சியையும் திருப்தியையும் உங்களால் கண்டடைய முடிகிறதென்றால் பரதீஸிய பூமியில் நித்திய கால வாழ்க்கையை நிச்சயம் மகிழ்ந்து அனுபவிப்பீர்கள். யெகோவாவின் சாட்சி ஒருவர் நித்திய ஜீவ ஆசீர்வாதங்களைப் பற்றி ஒரு பெண்மணியிடம் சுட்டிக்காட்டிய போது, “நான் என்றென்றும் வாழ விரும்பல. 70 அல்லது 80 வயசு வரை வாழும் இந்த வாழ்க்கையே எனக்குப் போதும்” என அந்தப் பெண்மணி பதிலளித்தார். அப்போது அங்கிருந்த கிறிஸ்தவ மூப்பர் அவரிடம் இவ்வாறு கேட்டார்: “நீங்க இறந்துட்டீங்கனா உங்க பிள்ளைகளுக்கு எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?” அம்மா இல்லாமல் தன் பிள்ளைகள் எப்படித் தவிப்பார்கள் என்று நினைத்துப் பார்த்ததுமே மளமளவென அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அந்தப் பெண்மணி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “முதல் முறையா நான் எவ்வளவு சுயநலக்காரி என்பதை புரிந்துகொண்டேன். நித்திய ஜீவன் என்பது தன்னலமான ஒரு நம்பிக்கையல்ல, அது பிறரது நலனையும் எண்ணி வாழும் நம்பிக்கை என்பதை புரிஞ்சுகிட்டேன்.”

தாங்கள் வாழ்ந்தாலென்ன செத்தாலென்ன, அதை ஒரு பொருட்டாகவே யாரும் கருதமாட்டார்கள் என சிலர் உணரலாம். இருந்தபோதிலும், நமக்கு உயிர் அளித்தவர் நம்மை பொருட்படுத்துகிறார். “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்று அவர் கூறுகிறார். (எசேக்கியேல் 33:11) துன்மார்க்கனுடைய வாழ்க்கையின் மீதே கடவுள் அந்தளவு அக்கறை காட்டுகிறார் என்றால், தம்மை நேசிப்பவர்களின் வாழ்க்கையின் மீது அவர் ஆழ்ந்த அக்கறையை காட்டுவார் என்பது அதிக நிச்சயம் அல்லவா!

பண்டைய இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது கடவுளுடைய கனிவிலும் கரிசனையிலும் நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) தாவீது தன்னுடைய பெற்றோருக்கு தன் மீது அன்பு இருப்பதை சந்தேகித்திருக்க மாட்டார். ஆனால் அந்தப் பெற்றோரே, அதாவது எல்லாரையும்விட தனக்கு மிக மிக நெருங்கிய பந்தங்களாய் இருந்தவர்களே தன்னை கைவிட்டாலும், கடவுள் தன்னை கைவிட மாட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். நம் மீதுள்ள அன்பு மற்றும் அக்கறை காரணமாகவே யெகோவா நித்திய ஜீவ எதிர்பார்ப்பை அளித்திருக்கிறார்; தன்னோடு முடிவில்லா நட்பை வைத்திருப்பதற்கான வாய்ப்பையும் நீட்டியிருக்கிறார். (யாக்கோபு 2:23) இப்படிப்பட்ட அற்புதமான பரிசுகளை நாம் போற்றுதலோடு ஏற்றுக்கொள்ள வேண்டாமா?

[பக்கம் 7-ன் படம்]

கடவுளோடும் சக மனிதரோடும் உள்ள அன்பு நித்திய வாழ்க்கையை மனநிறைவு தருவதாக ஆக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்