“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
முதுமை ‘மகிமையான கிரீடமாகையில்’
“இது போன்ற வாழ்க்கை வேறு எதுவுமே இல்லை” என 101 வயதான மியூரியல் கூறினார். “உண்மையில் இது ஒரு சிலாக்கியம்!” என 70 வயது தியாடாராஸ் குறிப்பிட்டார். “இதைவிட சிறந்த முறையில் என் வாழ்க்கையைச் செலவிட்டிருக்கவே முடியாது” என 73 வயது மாரியா கூறினார். இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுவதையும் யெகோவா தேவனுக்கு சேவை செய்வதில் செலவிட்டிருக்கிறார்கள்.
உலகமெங்கும் யெகோவாவை சுறுசுறுப்பாக வணங்கிவரும் முதியவர்களில் இவர்கள் சிலரே ஆவர். முதுமை, உடல்நல பிரச்சினைகள், இன்னும் மோசமான சூழ்நிலைகள் மத்தியிலும் அவர்கள் கடவுளை மனப்பூர்வமாய் சேவித்து வருகிறார்கள். கிறிஸ்தவ சபையிலுள்ள இந்த விசுவாசமுள்ள முதியோர் தேவபக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கிறார்கள். சூழ்நிலைகள் காரணமாக முதியோரால் அதிகமாக சேவை செய்ய முடியாதபோதிலும், அவர்கள் செய்யும் சேவையை யெகோவா உயர்வாக மதிக்கிறார்.a—2 கொரிந்தியர் 8:12.
விசுவாசமுள்ள முதியோர் எப்படிப்பட்ட வாழ்க்கையை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி பைபிளில் சங்கீதப் புத்தகம் பொருத்தமான ஒரு தகவலைத் தருகிறது. நெடுநாள் இருந்து தொடர்ந்து கனி தருகிற, கம்பீரமான மரத்தைப் போல அவர்களால் இருக்க முடியும் என சொல்கிறது. விசுவாசமுள்ள முதியோரைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “அவர்கள் முதிர் வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 92:15.
முதுமையின் காரணமாக பலமிழந்து போகையில் கைவிடப்பட்டு, புறக்கணிக்கப்படுவார்களோ என சிலர் அஞ்சலாம். கடவுளிடம் தாவீது இவ்வாறு மன்றாடினார்: “முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளி விடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.” (சங்கீதம் 71:9) முதுமையில் சோர்வடைவதும் செழிப்படைவதும் எதைப் பொறுத்தது? தெய்வீக பண்பாகிய நீதியைப் பொறுத்ததே. ‘நீதிமான் ஈச்ச மரத்தைப் போல் செழிப்பார்’ என்று சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 92:12, NW.
வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு விசுவாசத்துடன் சேவை செய்வோர் பொதுவாக முதுமையிலும் நல்ல கனிகளைத் தொடர்ந்து தருவார்கள். உதாரணமாக, விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து, பெருவாரியான விளைச்சலை அள்ளித் தருவது போல, அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ உதவும் விதத்தில் அவர்கள் செய்த அநேக காரியங்கள், நற்கிரியைகளாகிய பலன்களைத் தருகின்றன. (கலாத்தியர் 6:7-10; கொலோசெயர் 1:10) கடவுளின் வழிகளைப் புறக்கணிக்கிற சுயநல காரியங்களைத் தேடுவதிலேயே வாழ்க்கையை வீணடித்தவர்கள் முதுமை அடைகையில் பெரும்பாலும் பலன்கள் என பெரியதாக எதையும் உண்மையில் கண்டடைவதில்லை.
நீதியை முதுமையின் அலங்காரம் என பைபிளிலுள்ள நீதிமொழிகள் புத்தகமும் வலியுறுத்துகிறது. அது சொல்வதாவது: “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.” (நீதிமொழிகள் 16:31) ஆம், நீதி என்பது அக அழகின் வெளிக்காட்டாகும். நீண்ட வாழ்க்கை பயணத்தில் நீதியாக நடப்பது மதிப்பைப் பெற்றுத் தரும். (லேவியராகமம் 19:32) முதுமையால் நரைத்தவர் ஞானமுள்ளவராக, ஒழுக்க சீலராக வாழ்வது மரியாதையைப் பெற்றுத் தரும்.—யோபு 12:12.
யெகோவாவின் சேவைக்கு அர்ப்பணிக்கப்படும் நேர்மையான வாழ்க்கை அவருடைய பார்வையில் அருமையாக இருக்கிறது. வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” (ஏசாயா 46:4) நமது அன்புள்ள பரலோக தகப்பனான யெகோவா தமக்கு உண்மையாக நடப்பவர்களை முதிர் வயதிலும் தாங்குவார், ஆதரிப்பார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலளிக்கிறது!—சங்கீதம் 48:14.
யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்வதில் வாழ்க்கையை ஈடுபடுத்தியிருப்பது அவருடைய பார்வையில் அருமையாக இருக்கிறதென்றால், அது மற்றவர்களுடைய பார்வையிலும் மதிப்பாக இருக்கும் அல்லவா? அப்படியானால், கடவுளுடைய நோக்குநிலையை வெளிக்காட்டுகிறவர்களாக, வயதான சக விசுவாசிகளை நாம் நெஞ்சார நேசிக்கிறோம். (1 தீமோத்தேயு 5:1, 2) அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக் கொள்வதில் கிறிஸ்தவ அன்பைக் காட்டுவதற்கு நடைமுறையான வழிகளைத் தேடுவோமாக.
அந்திம காலத்தில் நீதியின் பாதையில் அடியெடுத்து வைத்தல்
“நீதியின் பாதையில் ஜீவன் உண்டு” என்பதாக சாலொமோன் உறுதியளிக்கிறார். (நீதிமொழிகள் 12:28) ஒருவர் இந்தப் பாதையில் நடப்பதற்கு முதுமை ஒரு தடையாக இல்லை. உதாரணத்திற்கு, மால்டோவாவை சேர்ந்த 99 வயதான ஒருவர் தனது இளமை காலம் முழுவதையும் கம்யூனிஸ கொள்கைகளைப் பரப்புவதற்கு அர்ப்பணித்தார். பிரபல கம்யூனிஸ தலைவர் வி. ஐ. லெனின் போன்றவர்களோடு நேருக்கு நேர் உரையாடியதைப் பெருமையாகக் கருதினார். என்றாலும், கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்த பிறகு, இவர் வாழ்க்கை பாதையில் திக்குத் தெரியாமல் தடுமாற ஆரம்பித்தார். மனிதவர்க்கத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் கடவுளுடைய ராஜ்யமே உண்மையான பரிகாரம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் மூலம் தெரிந்து கொண்ட பிறகு, பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, பைபிளை ஊக்கமாய் படிக்க ஆரம்பித்தார். ஆனால், முழுக்காட்டப்பட்ட ஊழியராக ஆகும் முன் மரித்துவிட்டார் என்பது வருத்தகரமான விஷயம்.
ஹங்கேரியைச் சேர்ந்த 81 வயது பெண்மணி கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைக் கற்றுக்கொண்ட போது, பல வருடங்களாக தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் மனிதரைச் சட்டப்படி திருமணம் செய்துகொள்வது அவசியமென உணர்ந்தார். அவர் தைரியத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி பைபிள் அடிப்படையிலான தன் நோக்குநிலையை அவரிடம் விளக்கினார். அவரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தபோது அப்பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம், சந்தோஷம் தாங்க முடியவில்லை. திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய பின்பு, ஆன்மீக ரீதியில் வேகமாக முன்னேறினார். பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்து எட்டு மாதங்களுக்குள் அவர் முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக ஆனார். அதன் பிறகு சீக்கிரத்தில் முழுக்காட்டப்பட்டார். அக அழகை வெளிக்காட்ட நீதி முதியோருக்கு உதவும் என்பது எவ்வளவு உண்மை!
ஆம், விசுவாசமுள்ள வயதான கிறிஸ்தவர்கள் தங்களைக் கடவுள் ஆதரிப்பார் என்பதைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம். தமக்கு உண்மையோடு நிலைத்திருப்போரை யெகோவா கைவிடவே மாட்டார். அவர்களுடைய அந்திம காலத்திலும் அவர்களுக்குப் பக்கபலமாய் இருந்து, அவர்களைப் பாதுகாத்து வழிநடத்துவதாக உறுதியளிக்கிறார். “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்ற சங்கீதக்காரனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் சான்றளிக்கிறார்கள்.—சங்கீதம் 121:2, NW.
[அடிக்குறிப்பு]
a 2005 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டரில் ஜனவரி/பிப்ரவரி பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.”—நீதிமொழிகள் 16:31
[பக்கம் 8-ன் பெட்டி]
வயதான தமது ஊழியர்களை யெகோவா ஆதரிக்கிறார்
‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணு.’—லேவியராகமம் 19:32.
“உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்.”—ஏசாயா 46:4.