கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய முற்காட்சிகள் நிஜம் ஆகின்றன
“இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் [தீர்க்கதரிசன வசனத்தைக்] கவனித்திருப்பது நலமாயிருக்கும்.”—2 பேதுரு 1:19.
1. இன்றைய உலகில் என்ன வேறுபாட்டை நாம் பார்க்கிறோம்?
இடி மேல் இடி. ஆம், இன்றைய உலக நிலவரம் இதுதான். சுற்றுச்சூழலின் நாசம் முதற்கொண்டு உலகை உலுக்கும் பயங்கரவாதம் வரை மனிதகுலத்தின் பிரச்சினைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டிருக்கின்றன. உலக மதங்களால்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. சொல்லப்போனால், ஜனங்களைக் கூறுபோடுகிற மதவெறியையும், பகையையும், தேசப்பற்றையும் தூண்டிவிட்டு, நிலைமையை அவை இன்னும் மோசமாக்கவே செய்கின்றன. ஆம், முன்னுரைத்தபடியே “காரிருள்” “ஜனங்களை” மூடியிருக்கிறது. (ஏசாயா 60:2) என்றாலும், இன்று லட்சக்கணக்கானோர் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், ‘இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போல’ கடவுளுடைய தீர்க்கதரிசன வசனத்திற்கு அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பைபிளிலுள்ள கடவுளுடைய ‘வசனத்தை,’ அதாவது செய்தியைத் தங்கள் வழிகாட்டியாக இப்போது பயன்படுத்துகிறார்கள்.—2 பேதுரு 1:19.
2. ‘முடிவு காலத்தைப்’ பற்றிய தானியேல் தீர்க்கதரிசனத்தின்படி, யார் மட்டுமே ஆன்மீக விஷயங்களைக் குறித்த புரிந்துகொள்ளுதலைப் பெறுகிறார்கள்?
2 ‘முடிவு காலத்தைக்’ குறித்து தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம். அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்.” (தானியேல் 12:4, 10) கடவுளுடைய வார்த்தையை ஆர்வமாய் ‘இங்கும் அங்கும் ஓடி ஆராய்ந்து,’ அதாவது ஊக்கமாய்ப் படித்து, அவருடைய தராதரங்களைக் கடைப்பிடித்து, அவருடைய சித்தத்தைச் செய்ய பிரயாசப்படுபவர்கள் மட்டுமே ஆன்மீக விஷயங்களைக் குறித்த புரிந்துகொள்ளுதலைப் பெறுகிறார்கள்.—மத்தேயு 13:11-15; 1 யோவான் 5:20.
3. ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் 1870-களில் என்ன முக்கியமான சத்தியத்தைப் புரிந்துகொண்டார்கள்?
3 ‘கடைசி நாட்கள்’ ஆரம்பமாகும் முன்னரே, 1870-களிலேயே, யெகோவா தேவன் “பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை” குறித்து இன்னுமதிக புரிந்துகொள்ளுதலைப் பெற உதவ ஆரம்பித்தார். (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 13:11) கிறிஸ்துவின் வருகை கண்களுக்குப் புலப்படாததாகத்தான் இருக்குமென அச்சமயத்திலிருந்த பைபிள் மாணாக்கர் சிலர் புரிந்துகொண்டார்கள், ஆனால் அது அன்று பொதுவாக நிலவிய கருத்திலிருந்து வேறுபட்டதாய் இருந்தது. பரலோகத்தில் ராஜாவாகப் பொறுப்பேற்ற பிறகு தம்முடைய முழு கவனத்தையும் பூமியின் மீது திருப்புவார் என்ற அர்த்தத்தில்தான் அவர் திரும்ப வருவார். காணக்கூடிய கூட்டு அடையாளம் ஒன்று அவருடைய காணக்கூடாத பிரசன்னம் ஆரம்பித்து விட்டதை சீஷர்களுக்கு உணர்த்தவிருந்தது.—மத்தேயு 24:3-14.
முற்காட்சி ஒன்று நிஜமாகையில்
4. யெகோவா எவ்வாறு தம்முடைய நவீன நாளைய ஊழியர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கிறார்?
4 மறுரூபக் காட்சி, கிறிஸ்துவுடைய ராஜ்ய மகிமையின் மிகச் சிறப்பான ஒரு தரிசனமாக இருந்தது. (மத்தேயு 17:1-9) தாங்கள் எதிர்பார்த்த காரியங்களை இயேசு செய்யாததால் அநேகர் அவரைப் பின்பற்றுவதையே நிறுத்திவிட்டிருந்த சமயத்தில் அந்தத் தரிசனம் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது. அதேபோல, இந்த முடிவின் காலத்தில், பிரமிப்பூட்டும் அதன் நிறைவேற்றத்தையும் அதனோடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களையும் பற்றி யெகோவா தம்முடைய நவீன நாளைய ஊழியர்களுக்கு அதிகமான புரிந்துகொள்ளுதலை அளித்திருக்கிறார், இதன் மூலம் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கிறார். அத்தகைய ஆன்மீக நிஜங்களில் சிலவற்றை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.
5. விடிவெள்ளி யார், அவர் எப்போது, எப்படி ‘உதித்தார்’?
5 மறுரூபக் காட்சியைப் பற்றி குறிப்பிடும்போது, அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” (2 பேதுரு 1:19) அடையாளப்பூர்வ அந்த விடிவெள்ளி, அதாவது ‘பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்’ மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து ஆவார். (வெளிப்படுத்துதல் 22:16) 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டபோது அவர் ‘உதித்தார்.’ அந்தச் சமயத்தில் புதிய சகாப்தம் ஒன்று ஆரம்பமானது. (வெளிப்படுத்துதல் 11:15) மறுரூபக் காட்சியில், மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசிக் கொண்டிருப்பது போல தோன்றினார்கள். அவர்கள் யாருக்கு முன்நிழலாக இருக்கிறார்கள்?
6, 7. மறுரூபக் காட்சியில் மோசேயும் எலியாவும் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள், அவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறவர்களைப் பற்றி வேதவசனங்கள் என்ன முக்கிய விவரங்களைத் தருகின்றன?
6 இக்காட்சியில் மோசேயும் எலியாவும் தோன்றியதால், விசுவாசமுள்ள இவ்விரு சாட்சிகள் இயேசுவுடைய ராஜ்யத்தில் அவரோடு ஆட்சி செய்யப் போகிறவர்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இயேசுவோடு ஆட்சி செய்வதற்கு உடன் ஆட்சியாளர்கள் இருப்பார்கள் என்ற இந்தப் புரிந்துகொள்ளுதல், சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட மேசியாவைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசி பெற்ற ஒரு தரிசனத்தோடு ஒத்துப்போகிறது. ‘நீண்ட ஆயுசுள்ளவரிடமிருந்து,’ அதாவது யெகோவா தேவனிடமிருந்து ‘நீங்காத நித்திய கர்த்தத்துவத்தை,’ அதாவது ஆட்சியுரிமையை “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்” பெற்றுக்கொள்வதை அந்தத் தரிசனத்தில் தானியேல் கண்டார். ஆனால் அதற்கடுத்து தானியேல் எதைப் பார்த்தார் என்பதைக் கவனியுங்கள். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.” (தானியேல் 7:13, 14, 27) ஆம், மறுரூபக் காட்சிக்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கும் முன்னரே, கிறிஸ்துவின் ராஜ்ய மகிமையில் சில ‘பரிசுத்தவான்களும்’ பங்கு கொள்வார்கள் என கடவுள் வெளிப்படுத்தியிருந்தார்.
7 தானியேலின் தரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள அந்தப் பரிசுத்தவான்கள் யார்? அவர்களைக் குறிப்பிட்டுத்தான் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.” (ரோமர் 8:16, 17) எனவே அந்தப் பரிசுத்தவான்கள் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட இயேசுவின் சீஷர்களே. வெளிப்படுத்துதல் புத்தகத்தில், இயேசு பின்வருமாறு சொல்கிறார்: “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.” உயிர்த்தெழுப்பப்பட்ட ‘ஜெயங்கொண்டவர்களான’ 1,44,000 பேர், இயேசுவோடுகூட இந்த முழு பூமியின் மீதும் ஆட்சி செய்வார்கள்.—வெளிப்படுத்துதல் 3:21; 5:9, 10; 14:1, 3, 4; 1 கொரிந்தியர் 15:53.
8. மோசேயும் எலியாவும் செய்ததைப் போன்ற வேலையை இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் எப்படிச் செய்து வந்திருக்கிறார்கள், அதன் பலன்கள் யாவை?
8 ஆனால், மோசேயும் எலியாவும் ஏன் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? ஏனென்றால், அத்தகைய கிறிஸ்தவர்கள் பூமியிலிருக்கும்போது மோசேயும் எலியாவும் செய்ததைப் போன்ற வேலையைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு, துன்புறுத்தல் மத்தியிலும் அவர்கள் யெகோவாவுக்குச் சாட்சிகளாக சேவை செய்கிறார்கள். (ஏசாயா 43:10; அப்போஸ்தலர் 8:1-8; வெளிப்படுத்துதல் 11:2-12) அவர்கள் மோசேயையும் எலியாவையும் போல, பொய் மதங்களின் முகத்திரையைக் கிழித்துப் போடுகிறார்கள், அதேசமயம் கடவுளுக்குத் தனிப்பட்ட பக்தியைச் செலுத்துமாறு நல்மனமுள்ளோரை ஊக்கப்படுத்துகிறார்கள். (யாத்திராகமம் 32:19, 20; உபாகமம் 4:22-24; 1 இராஜாக்கள் 18:18-40) அவர்களுடைய வேலை பலன் கொடுத்திருக்கிறதா? ஆம், பலன் கொடுத்திருக்கிறது! அபிஷேகம் செய்யப்பட்டவர்களை முழுமையாகக் கூட்டிச் சேர்ப்பதற்கு அவர்கள் உதவியிருக்கிறார்கள், அதுமட்டுமல்ல இயேசு கிறிஸ்துவுக்கு மனமுவந்து கீழ்ப்படிய லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகளுக்கும்’ அவர்கள் உதவியிருக்கிறார்கள்.—யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:4.
கிறிஸ்து ஜெயங்கொள்கிறார்
9. இயேசுவின் இன்றைய நிலையை வெளிப்படுத்துதல் 6:2 எவ்வாறு வர்ணிக்கிறது?
9 கழுதைக்குட்டியின் மீது பவனி வருகிற சாதாரண நபராக இயேசு இப்போது இல்லை, அவர் தற்போது வல்லமைமிக்க ஒரு ராஜாவாக இருக்கிறார். அவர் குதிரை மீதேறி வருவதாக பைபிளில் வர்ணிக்கப்படுகிறார்; அடையாள அர்த்தத்தில் குதிரை என்பது போரைக் குறிக்கிறது. (நீதிமொழிகள் 21:31) “இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்” என்று வெளிப்படுத்துதல் 6:2 சொல்கிறது. மேலும், இயேசுவைப் பற்றி சங்கீதக்காரனான தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும்.”—சங்கீதம் 110:2.
10. (அ) இயேசுவின் ஜெயங்கொள்ளும் சவாரிக்கு எப்படி மகத்தான ஓர் ஆரம்பம் இருந்தது? (ஆ) கிறிஸ்துவின் முதல் வெற்றி பொதுவாக உலகை எப்படிப் பாதித்தது?
10 முதலாவது இயேசு, மிகுந்த பலம்படைத்த தம்முடைய எதிரிகளான சாத்தானையும் பேய்களையும் ஜெயங்கொண்டார். அவர்களைப் பரலோகத்திலிருந்து வெளியேற்றி, கீழே பூமிக்குத் தள்ளினார். தங்களுடைய காலம் குறுகியதாய் இருப்பதை அறிந்த இந்தப் பொல்லாத ஆவிகள் தங்களுடைய கோபாவேசத்தை மனிதகுலத்தின் மீது காட்டியிருக்கின்றன, இதனால் பூமியில் பெரும் இன்னல்கள் விளைந்திருக்கின்றன. இந்த இன்னல்கள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இன்னும் மூன்று குதிரை வீரர்களின் சவாரி மூலம் அடையாளமாக காட்டப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 6:3-8; 12:7-12) இயேசுவுடைய ‘வருகைக்கும், உலகத்தின் முடிவுக்குமான அடையாளத்தைக்’ குறித்த அவருடைய தீர்க்கதரிசனத்தின்படி, அந்தக் குதிரை வீரர்களின் சவாரி போரையும், பஞ்சத்தையும் கொள்ளை நோய்களையும் விளைவித்திருக்கிறது. (மத்தேயு 24:3, 7; லூக்கா 21:7-11) சொல்லர்த்தமான பிரசவ வேதனை போல, இந்த ‘வேதனைகள்’ சந்தேகமில்லாமல் தொடர்ந்து அதிகரிக்கும்; ஆம், சாத்தானுடைய காணக்கூடிய அமைப்புகளின் தடயங்களைக் கிறிஸ்து சுவடு தெரியாமல் அழித்து ‘ஜெயிக்கும்’ வரை அந்த வேதனைகளெல்லாம் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும்.a—மத்தேயு 24:8.
11. கிறிஸ்துவின் ராஜ்ய அதிகாரத்திற்கு கிறிஸ்தவ சபையின் சரித்திரம் எவ்வாறு அத்தாட்சி அளிக்கிறது?
11 உலகளவில் ராஜ்ய பிரசங்க வேலை செய்து முடிக்கப்படுவதற்காக கிறிஸ்தவ சபையை இயேசு பாதுகாத்து வந்திருப்பதும்கூட அவரது ராஜ்ய அதிகாரத்திற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது. மகா பாபிலோனும், அதாவது பொய் மத உலகப் பேரரசும் பகைமை நிறைந்த அரசாங்கங்களும் பிரசங்க வேலையை மூர்க்கத்தனமாக எதிர்த்த போதிலும், அது இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, சொல்லப்போனால், உலக சரித்திரத்திலேயே முன்னொருபோதும் இல்லாதளவுக்கு அது நடைபெற்று வருகிறது. (வெளிப்படுத்துதல் 17:5, 6) கிறிஸ்துவின் ராஜரீகத்திற்கு எப்பேர்ப்பட்ட வலிமைமிக்க அத்தாட்சி!—சங்கீதம் 110:3.
12. கிறிஸ்துவின் காணக்கூடாத பிரசன்னத்தை ஏன் பெரும்பாலோர் புரிந்துகொள்வதில்லை?
12 ஆனால், வருத்தகரமாக, பூமியில் நடைபெறும் முக்கிய சம்பவங்களுக்குக் காணக்கூடாத நிஜங்கள் காரணமாக இருப்பது பெரும்பாலோருக்குப் புரிவதில்லை, கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் கோடிக்கணக்கானோருக்கும்கூட புரிவதில்லை. அதுமட்டுமல்ல, கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிப்பவர்களை அவர்கள் ஏளனமும் செய்கிறார்கள். (2 பேதுரு 3:3, 4) ஏன்? ஏனெனில், சாத்தான் அவர்களுடைய மனதைக் குருடாக்கியிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:3, 4) சொல்லப்போனால், கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்பவர்களுடைய மனக்கண்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆன்மீக இருள் எனும் முக்காட்டினால் அவன் மூட ஆரம்பித்தான், அதுமட்டுமல்ல, அருமையான ராஜ்ய நம்பிக்கையை அவர்கள் புறக்கணிக்கும்படியும் செய்தான்.
ராஜ்ய நம்பிக்கை புறக்கணிக்கப்பட்டது
13. ஆன்மீக இருள் எனும் முக்காடு எதற்கு வழிநடத்தியது?
13 கோதுமைக்கு நடுவே விதைக்கப்பட்ட களைகளைப் போல விசுவாச துரோகிகள் கிறிஸ்தவ சபைக்குள் ஊடுருவி அநேகரை வழிவிலகச் செய்வார்கள் என இயேசு முன்னறிவித்திருந்தார். (மத்தேயு 13:24-30, 36-43; அப்போஸ்தலர் 20:29-31; யூதா 4) கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்ட இவர்கள் காலப்போக்கில், புறமத கொண்டாட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் போதனைகளையும் ஏற்றுக்கொண்டதுடன், அவற்றிற்குக் “கிறிஸ்தவ” முத்திரையையும் குத்தினார்கள். உதாரணத்திற்கு, மித்ரா, ஸாட்டர்ன் ஆகிய புறமத தெய்வங்களின் வழிபாட்டில் உட்பட்டுள்ள சடங்குகளிலிருந்தே கிறிஸ்மஸ் பண்டிகை தோன்றியது. ஆனால் கிறிஸ்தவமற்ற இத்தகைய பண்டிகைகளைக் கிறிஸ்தவர்களென சொல்லிக் கொண்டவர்கள் ஏன் அங்கீகரித்தார்கள்? த நியு என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (1974) இவ்வாறு சொல்கிறது: “கிறிஸ்து சடுதியில் வருவாரென்ற எதிர்பார்ப்பு மங்கிக்கொண்டிருந்ததால், கிறிஸ்மஸ் பண்டிகை, அதாவது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.”
14. ஆரஜன் மற்றும் அகஸ்டினுடைய போதனைகள் எவ்வாறு ராஜ்யத்தைப் பற்றிய சத்தியத்தைத் திரித்துப்போட்டன?
14 “ராஜ்யம்” என்ற வார்த்தையின் அர்த்தம் திரிக்கப்பட்டிருப்பதையும் கவனியுங்கள். 20-ம் நூற்றாண்டில் கடவுளுடைய ராஜ்யத்திற்கான விளக்கம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கிறிஸ்தவ பயன்பாட்டிலுள்ள ‘ராஜ்யம்’ என்ற வார்த்தைக்கு இருதயத்திற்குள் நடக்கும் கடவுளுடைய ஆட்சி என்ற உள்ளர்த்தம் இருக்கிறதென முதன்முறையாய் கற்பித்தவர் ஆரஜன் [மூன்றாம் நூற்றாண்டு இறையியல் வல்லுநர்] ஆவார்.” எதன் அடிப்படையில் அவர் அப்படிக் கற்பித்தார்? வேதவசனங்களின் அடிப்படையில் அல்ல, ஆனால் “தத்துவங்களின் அடிப்படையிலும் உலக கருத்துகளின் அடிப்படையிலுமே கற்பித்தார்; இயேசுவின் போதனைகளிலிருந்தும் ஆரம்பகால சர்ச் போதனைகளிலிருந்தும் அது பெருமளவு வேறுபட்டது.” ஹிப்போ என்ற நகரைச் சேர்ந்த அகஸ்டின் (பொ.ச. 354-430) என்பவர் எழுதிய டே கிவிட்டாடெ டியி (கடவுளுடைய நகரம்) என்ற புத்தகத்தில் சர்ச் என்பதுதான் கடவுளுடைய ராஜ்யம் என குறிப்பிட்டார். வேதப்பூர்வமற்ற இத்தகைய சிந்தனைகள், அரசியல் அதிகாரத்தை கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதற்குக் காரணமாக அமைந்தன. பல நூற்றாண்டுகளுக்கு அந்த அதிகாரத்தை அவை செலுத்தின, பெரும்பாலும் மூர்க்கத்தனமாகவே செலுத்தின.—வெளிப்படுத்துதல் 17:5, 18.
15. பெரும்பாலான கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் சம்பந்தமாக, கலாத்தியர் 6:7 எவ்வாறு நிறைவேறியிருக்கிறது?
15 என்றாலும், சர்ச்சுகள் அன்று எதை விதைத்தனவோ அதையே இன்று அறுவடை செய்கின்றன. (கலாத்தியர் 6:7) அநேக சர்ச்சுகள் தங்கள் அதிகாரத்தையும் அங்கத்தினர்களையும் இழந்து வருவது போல் தெரிகிறது. அத்தகைய நிலைமை ஐரோப்பாவில் இருப்பது வெட்டவெளிச்சமாக உள்ளது. “ஐரோப்பாவிலுள்ள பிரமாண்டமான சர்ச் கட்டிடங்கள் இன்று வழிபாட்டு ஸ்தலங்களாக அல்ல, ஆனால் அருங்காட்சியகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன, சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடும் இடங்களாக மட்டுமே அவை இருக்கின்றன” என இன்றைய கிறிஸ்தவம் என்ற ஆங்கில பத்திரிகை சொல்கிறது. உலகின் மற்ற இடங்களிலும் இதே நிலைமையைக் காண முடிகிறது. பொய் மதங்களுக்கு இது எதைக் குறிக்கிறது? எந்த ஆதரவுமில்லாமல் அவை அப்படியே அழிந்துவிடுமா? அதனால் மெய் வணக்கம் எவ்விதத்தில் பாதிக்கப்படும்?
கடவுளுடைய மகா நாளுக்காகத் தயாராயிருங்கள்
16. மகா பாபிலோனுக்கு எதிராக அதிகரித்து வரும் பகைமை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
16 சிறிது காலத்திற்குச் செயலற்றுக் கிடக்கும் ஓர் எரிமலை திடீரென புகையையும் சாம்பலையும் கக்குவது எந்த நேரத்திலும் அது ஆக்ரோஷத்துடன் வெடித்துவிடலாம் என்பதற்கு எப்படி ஓர் அறிகுறியாக இருக்கிறதோ அப்படியே, உலகின் பல பாகங்களில் மதத்திற்கு விரோதமாகப் பகைமை அதிகரித்து வருவது பொய் மதங்களின் நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஓர் அறிகுறியாக இருக்கிறது. ஆன்மீக வேசியான மகா பாபிலோனின் முகத்திரையைக் கிழிக்கவும் அவளைப் பாழாக்கவும் இவ்வுலக அரசியல் அமைப்புகள் ஒன்றுசேரும்படி யெகோவா சீக்கிரத்தில் தூண்டிவிடப் போகிறார். (வெளிப்படுத்துதல் 17:15-17; 18:21) அச்சம்பவத்தையும் அதற்கடுத்து ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ சம்பவிக்கப் போகிறவற்றையும் எண்ணி மெய்க் கிறிஸ்தவர்கள் பயப்பட வேண்டுமா? (மத்தேயு 24:21) இல்லை, வேண்டியதே இல்லை! பார்க்கப்போனால், துன்மார்க்கருக்கு எதிராக கடவுள் நடவடிக்கை எடுப்பதைக் குறித்து அவர்கள் மனமகிழ்ச்சிதான் அடைவார்கள். (வெளிப்படுத்துதல் 18:20; 19:1, 2) உதாரணத்திற்கு, முதல் நூற்றாண்டு எருசலேமையும் அங்கிருந்த கிறிஸ்தவர்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
17. இந்த ஒழுங்குமுறை அதன் முடிவைச் சந்திக்கையில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
17 ரோம படைகள் பொ.ச. 66-ல் எருசலேமை முற்றுகையிட்டபோது, ஆன்மீக ரீதியில் விழிப்போடிருந்த கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியும் அடையவில்லை, பயந்து நடுங்கவுமில்லை. கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படித்து வந்திருந்ததால் “அதின் அழிவு சமீபமாயிற்றென்று” அவர்கள் அறிந்திருந்தார்கள். (லூக்கா 21:20) பாதுகாப்பான இடத்திற்குத் தப்பிப்போக கடவுள் எப்படியும் தங்களுக்கு ஒரு வழியைத் திறந்துவிடுவார் என்றும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த வழி திறக்கப்பட்டபோது, அங்கிருந்து அவர்கள் ஓடிப்போனார்கள். (தானியேல் 9:26; மத்தேயு 24:15-19; லூக்கா 21:21) அதேபோல இன்று, இந்த ஒழுங்குமுறை அதன் முடிவைச் சந்திக்கையில் கடவுளை அறிந்தவர்களும் அவருடைய குமாரனுக்குக் கீழ்ப்படிபவர்களும் நம்பிக்கையோடு இருக்கலாம். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10) சொல்லப்போனால், மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது, ‘தங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நிமிர்ந்து பார்த்து, தங்கள் தலைகளை [சந்தோஷமாக] அவர்கள் உயர்த்துவார்கள்.’—லூக்கா 21:28.
18. யெகோவாவின் ஊழியர்கள் மீது கோகு நடத்தப்போகிற இறுதிக்கட்ட தாக்குதலின் விளைவு என்னவாக இருக்கும்?
18 மகா பாபிலோன் அழிந்த பிறகு, மாகோகு தேசத்தானான கோகு என்ற பாகத்தை சாத்தான் ஏற்று, யெகோவாவின் சமாதானமுள்ள சாட்சிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட தாக்குதலை நடத்துவான். “தேசத்தைக் கார்மேகம் போல் மூட” வருகிற கோகுவின் ஆட்கள் தங்களுக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடுமென எதிர்பார்ப்பார்கள். ஆனால் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருக்கிறது! (எசேக்கியேல் 38:14-16, 18-23) அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதுகிறார்: “பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; . . . புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது.” யாருமே வெல்ல முடியாத இந்த “ராஜாதி ராஜா” யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாரைக் காப்பாற்றுவார், அவர்களுடைய எல்லா எதிரிகளையும் பூண்டோடு அழிப்பார். (வெளிப்படுத்துதல் 19:11-21) மறுரூபக் காட்சியுடைய நிறைவேற்றத்தின் இந்த உச்சக்கட்ட சம்பவம் எப்பேர்ப்பட்டதாய் இருக்கும்!
19. கிறிஸ்துவின் முழு வெற்றி அவருடைய உண்மையுள்ள சீஷர்களை என்ன செய்யத் தூண்டும், இப்போது அவர்கள் என்ன செய்ய முயல வேண்டும்?
19 ‘அந்நாளிலே . . . விசுவாசிக்கிற எல்லாராலும் ஆச்சரியப்படத்தக்கவராக’ இயேசு கருதப்படுவார். (2 தெசலோனிக்கேயர் 1:9) அச்சமயத்தில், வெற்றி வீரரான கடவுளுடைய குமாரனைக் கண்டு பிரமிப்படைந்து நிற்பவர்களில் நீங்களும் ஒருவராய் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்கள் விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்திக் கொள்ளுங்கள், அதுமட்டுமல்ல, ‘நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரப் போவதால் ஆயத்தமாயிருங்கள்.’—மத்தேயு 24:43, 44.
தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள்
20. (அ) ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாரைக் கடவுள் ஏற்பாடு செய்திருப்பதற்கு நம்முடைய நன்றியை எவ்வாறு காண்பிக்கலாம்? (ஆ) நம்மை நாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
20 கடவுளுடைய மக்கள் எப்போதும் ஆன்மீக ரீதியில் விழிப்புள்ளவர்களாயும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயும் இருக்க வேண்டுமென்று ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் தவறாமல் ஊக்குவித்து வருகிறார்கள். (மத்தேயு 24:45, 46, NW; 1 தெசலோனிக்கேயர் 5:6) காலத்திற்கேற்ற இந்த நினைப்பூட்டுதல்களுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் எதற்கெல்லாம் முதலிடம் கொடுக்க வேண்டுமென தீர்மானிக்கும்போது இந்த நினைப்பூட்டுதல்களை மனதில் வைக்கிறீர்களா? உங்களை நீங்களே ஏன் இப்படிக் கேட்டுக்கொள்ளக்கூடாது: ‘கடவுளுடைய குமாரன் பரலோகத்தில் ஆட்சி செய்கிறார் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளும் தெளிவான ஆன்மீகப் பார்வை எனக்கு இருக்கிறதா? மகா பாபிலோனுக்கும் சாத்தானிய ஒழுங்குமுறையின் மற்ற பாகங்களுக்கும் எதிராகத் தெய்வீக நியாயத்தீர்ப்பைக் கொண்டு வர அவர் தயாராய் இருக்கிறார் என்பதை என்னால் காண முடிகிறதா?’
21. சிலர் ஏன் தங்களுடைய ஆன்மீகப் பார்வையை மங்கிப்போகச் செய்திருக்கிறார்கள், அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய காரியம் என்ன?
21 யெகோவாவின் ஜனங்களோடு தற்போது கூட்டுறவு வைத்துள்ள சிலர், தங்களுடைய ஆன்மீகப் பார்வையை மங்கிப்போகச் செய்திருக்கிறார்கள். இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் சிலரிடம் இல்லாததைப் போல, இவர்களிடமும் பொறுமை அல்லது சகிப்புத்தன்மை ஒருவேளை இல்லாதிருக்குமோ? வாழ்க்கை கவலைகள், பொருளாசை, அல்லது துன்புறுத்தல் அவர்களைப் பாதித்திருக்குமோ? (மத்தேயு 13:3-8, 18-23; லூக்கா 21:34-36) சிலருக்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வெளியிட்டுள்ள சில விஷயங்களை விளங்கிக்கொள்வது ஒருவேளை கடினமாக இருந்திருக்கும். இதில் ஏதாவதொன்று உங்களுடைய விஷயத்தில் உண்மையாக இருந்தால், கடவுளுடைய வார்த்தையை புதிய உத்வேகத்துடன் படிக்கத் தொடங்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம், அதோடு யெகோவாவுடன் பலமான, நெருக்கமான ஓர் உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்காக அவரிடம் மன்றாடுமாறும் உங்களை ஊக்குவிக்கிறோம்.—2 பேதுரு 3:11-15.
22. மறுரூபக் காட்சியையும் அதனோடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களையும் பற்றி சிந்தித்தது உங்களை எவ்வாறு பாதித்திருக்கிறது?
22 இயேசுவின் சீஷர்களுக்கு ஊக்கமூட்டுதல் தேவைப்பட்ட சமயத்தில் அவர்கள் மறுரூபக் காட்சியைப் பெற்றார்கள். இன்று, அதைவிட பல மடங்கு பெரிய விஷயங்கள் நம்மைப் பலப்படுத்துகின்றன, அதாவது மகத்தான அந்த முற்காட்சியின் நிறைவேற்றமும் அதனோடு சம்பந்தப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமும் நம்மைப் பலப்படுத்துகின்றன. இந்த மகத்தான நிஜங்களைப் பற்றியும் எதிர்காலத்தில் அவை எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கும்போது, அப்போஸ்தலன் யோவான் உணர்ச்சிப்பொங்க சொன்னதைப் போலவே நாமும் முழு இருதயத்தோடு “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என சொல்வோமாக.—வெளிப்படுத்துதல் 22:20.
[அடிக்குறிப்பு]
a மூல கிரேக்கில், ‘வேதனைகள்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை, சொல்லர்த்தமாகப் “பிரசவ வேதனை” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. (மத்தேயு 24:8, கிங்டம் இன்டர்லீனியர்) அப்படியானால், பிரசவ வேதனையைப் போலவே, இவ்வுலகிலுள்ள பிரச்சினைகள் அடுத்தடுத்து பெருமளவு ஏற்படும், பெருமளவு தீவிரமடையும், பெருமளவு நீடித்திருக்கும்; இறுதியாக அவை மிகுந்த உபத்திரவத்தில் போய் முடிவடையும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• 1870-களில், கிறிஸ்துவின் வருகையைப் பற்றி பைபிள் மாணாக்கர்களின் ஒரு சிறு தொகுதியினர் என்ன புரிந்துகொண்டார்கள்?
• மறுரூபக் காட்சி எவ்வாறு நிறைவேறி வந்திருக்கிறது?
• ஜெயங்கொள்பவராக இயேசு புறப்பட்டது உலகத்தின் மீதும் கிறிஸ்தவ சபையின் மீதும் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
• இயேசு ஜெயங்கொள்ளும்போது, தப்பிப்பிழைப்போரில் ஒருவராய் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
முற்காட்சி ஒன்று நிஜம் ஆகிறது
[பக்கம் 18-ன் படங்கள்]
கிறிஸ்து ஜெயங்கொள்பவராகப் புறப்பட்ட சமயத்தில் என்ன ஆனதென்று உங்களுக்குத் தெரியுமா?