உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 1/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இதே தகவல்
  • யெகோவாவின் பலத்தில் சிம்சோன் வெற்றி சிறக்கிறார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • சிம்சோனைப் போலவே யெகோவாவை நம்பியிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • யெகோவா சிம்சோனுக்குப் பலம் தருகிறார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • மிகவும் பலமுள்ள மனிதன்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 1/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

சிம்சோன் தான் கொன்று போட்ட பிணங்களைத் தொட்ட பிறகும் எப்படி நசரேயனாய் இருக்க முடிந்தது?

பூர்வ இஸ்ரவேலில், ஒருவர் தானே மனமுவந்து பொருத்தனை செய்துகொண்டு, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு நசரேய விரதம் இருக்க முடியும்.a இப்படிப் பொருத்தனை செய்பவர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளுள் ஒன்று: “அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. . . . மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.” “அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்”தால் என்ன செய்வது? அப்படி எதிர்பாராமல் அவர் பிணத்தைத் தொட நேர்ந்தால் அது அவரது நசரேய விரதத்தைத் தீட்டுப்படுத்தும். அப்போது “கடந்துவிட்ட காலம் கணக்கில் வராது” என சொல்லப்பட்டது. எனவே அவர் சுத்திகரிப்பு முறைமைப்படி தன்னை சுத்திகரித்துக்கொண்டு, மீண்டும் நசரேய விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.​—⁠எண்ணாகமம் 6:6-12; பொது மொழிபெயர்ப்பு.

ஆனால், சிம்சோனோ வேறொரு கருத்தில் நசரேயனாக இருந்தார். அவர் பிறப்பதற்கு முன்பாகவே யெகோவாவின் தூதர் அவருடைய தாயிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்.” (நியாயாதிபதிகள் 13:5) நசரேயனாய் இருப்பதாக சிம்சோன் எந்தப் பொருத்தனையும் செய்யவில்லை. நசரேயனாக இருக்கும்படி அவரைக் கடவுள் நியமித்தார், வாழ்நாள் முழுவதும் அவர் அப்படி இருக்க வேண்டியிருந்தது. எனவே பிணத்தைத் தொடுவது பற்றிய கட்டுப்பாடு இவருடைய விஷயத்தில் பொருந்தாது. ஒருவேளை அப்படிப் பொருந்தும் என்றால், அவர் ஒரு பிணத்தை எதிர்பாராமல் தொட நேர்ந்தால், நசரேய விரதத்தைப் பிறப்பிலிருந்து மீண்டும் தொடர முடியுமா என்ன? எனவே, தாங்களாகவே பொருத்தனை செய்து நசரேய விரதம் மேற்கொண்டவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டவையும் வாழ்நாள் முழுவதும் நசரேயராக இருந்தவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டவையும் ஓரளவு வித்தியாசப்பட்டன.

சிம்சோன், சாமுவேல், யோவான் ஸ்நானன் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் நசரேயர்களாய் இருந்ததாக பைபிள் குறிப்பிடுகிறது; இவர்களுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கவனியுங்கள். முன்பே குறிப்பிடப்பட்டபடி, தலைமுடியை சவரம் செய்யாதிருக்கும்படி சிம்சோனிடம் எதிர்பார்க்கப்பட்டது. தான் பெற்றெடுக்கவிருந்த சாமுவேலுக்காக அன்னாள் இவ்வாறு பொருத்தனை செய்தாள்: “அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை.” (1 சாமுவேல் 1:11) யோவான் ஸ்நானன் விஷயத்தில் யெகோவாவின் தூதன் இவ்வாறு சொன்னார்: “திராட்சரசமும் மதுவும் குடியான்.” (லூக்கா 1:15) அதோடு, “யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க் கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.” (மத்தேயு 3:4) இந்த மூன்று பேர்களில் யாரிடமும் பிரேதத்தண்டையில் செல்லக்கூடாது என கட்டளை கொடுக்கப்படவில்லை.

சிம்சோன் நசரேயனாக இருந்தாலும், கொள்ளைக்காரர்களின் கைக்கு இஸ்ரவேலரைத் தப்புவிப்பதற்கு யெகோவா எழும்பப் பண்ணிய நியாயாதிபதிகளில் ஒருவராக இருந்தார். (நியாயாதிபதிகள் 2:16) இந்தப் பணியைச் செய்கையில் அவர் பிணங்களைத் தொட்டார். ஒருசமயம், அவர் 30 பெலிஸ்தரைக் கொன்று அவர்களது ஆடைகளை உரிந்தெடுத்தார். வேறொரு சமயத்தில், பகைவர்களைக் கடுமையாகத் தாக்கி, “அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார்.” மேலும் அவர் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, அதை எடுத்து அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றார். (நியாயாதிபதிகள் 14:19; 15:8, 15; பொ.மொ.) இவை அனைத்தையும் அவர் யெகோவாவின் தயவாலும் அவருடைய உதவியாலும் செய்தார். விசுவாசத்திற்குப் பின்பற்றத்தக்க சிறந்த மாதிரி என அவரை வேதாகமம் குறிப்பிடுகிறது.​—⁠எபிரெயர் 11:32; 12:1.

சிம்சோன் “ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போல் சிங்கத்தை [“இரண்டாக,” NW]” கிழித்துப் போட்டார் என்ற சொற்றொடர், வெள்ளாட்டுக் குட்டிகளைக் கிழித்துப் போடுவது அவரது நாட்களில் சர்வசாதாரணமாக இருந்ததைக் குறிக்கிறதா?

இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் வாழ்ந்த காலத்தில் வெள்ளாட்டுக் குட்டிகளைக் கிழித்துப் போடுவது சர்வசாதாரணமாக இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நியாயாதிபதிகள் 14:6 இவ்வாறு குறிப்பிடுகிறது: “கர்த்தருடைய ஆவி அவன்மேல் [சிம்சோன்மேல்] பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை [ஒரு பாலசிங்கத்தை] ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறது போல் [“இரண்டாக,” NW] கிழித்துப் போட்டான்.” இந்தக் குறிப்பு ஓர் உவமையணியாக இருக்கலாம்.

‘அவர் அதை இரண்டாக கிழித்துப் போட்டார்’ என்ற சொற்றொடரை இரண்டு விதமாக புரிந்துகொள்ளலாம். ஒன்று, சிம்சோன் அந்தச் சிங்கத்தின் தாடைகளை இரண்டாக கிழித்துப் போட்டிருக்க வேண்டும் அல்லது அந்த சிங்கத்தின் உடல் உறுப்புகளை ஏதோவொரு விதத்தில் கிழித்துப் போட்டிருக்க வேண்டும். அந்தச் சொற்றொடரை முதலில் சொல்லப்பட்ட விதமாக புரிந்துகொண்டால், வெள்ளாட்டுக் குட்டியைக் கிழித்துப்போட மனிதனால் முடியும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதுதான். சிம்சோனுடைய விஷயத்தில் இந்த இணைப்பொருத்தம் எதைக் காட்டுகிறதென்றால், கையில் ஒன்றும் இல்லாதிருந்தும் அந்தச் சிங்கத்தைக் கொல்வது அவருக்குக் கஷ்டமாக இருக்கவில்லை, ஏனெனில் அவரைப் பொறுத்தவரை அது ஒரு வெள்ளாட்டுக் குட்டியைப் போலவே இருந்தது. சிம்சோன் அந்தச் சிங்கத்தின் உடல் உறுப்புகளை ஒருவேளை கிழித்துப் போட்டிருந்தால்? அப்படியென்றாலும் அந்தச் சொற்றொடரை நாம் ஓர் உவமையணியாக மட்டுமே புரிந்துகொள்ள வேண்டும். அந்த உவமையணி தரும் குறிப்பு என்னவென்றால், யெகோவாவின் ஆவி சிம்சோன் மீது இறங்கியதால் அசாத்திய பலம் தேவைப்பட்ட ஒரு பணியை அவரால் செய்ய முடிந்தது என்பதே. அந்தச் சிங்கத்தை அவர் எப்படிக் கிழித்துப் போட்டிருந்தாலும், நியாயாதிபதிகள் 14:6-⁠ல் உள்ள ஒப்புமை என்ன காட்டுகிறதென்றால், யெகோவாவின் உதவி இருந்ததால் சாதாரண மனிதனுக்கு ஒரு வெள்ளாட்டுக் குட்டி எப்படி இருக்குமோ அப்படித்தான் சிம்சோனுக்கு அந்த வலிமைமிக்க சிங்கமும் இருந்ததே தவிர அதைவிடவும் கொடியதாக அவருக்கு இருக்கவில்லை.

[அடிக்குறிப்பு]

a எத்தனை நாட்களுக்கு நசரேய விரதமிருப்பது என்பது தனிப்பட்டவருடைய விருப்பத்துக்கு விடப்பட்டது. எனினும் யூத பாரம்பரியத்தின்படி, அதற்குரிய குறைந்தபட்ச காலப்பகுதி 30 நாட்களாகும். அதற்கும் குறைந்த நாட்களுக்கு விரதமிருந்தால் அது சாதாரணமானதாகக் கருதப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்