யெகோவாவின் பலத்தில் சிம்சோன் வெற்றி சிறக்கிறார்!
பழிவாங்கத் துடிக்கும் பகைவர்கள் அந்தக் கைதியின் கண்களைக் குருடாக்கி, அவரைக் கடினமாய் வேலை வாங்குகிறார்கள். ஜனங்களுக்கு வேடிக்கை காட்ட அவரைச் சிறையிலிருந்து ஒரு புறமத கோயிலுக்கு அழைத்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து பரியாசம் செய்வதற்காக அவர்கள் முன் நடக்க வைக்கிறார்கள். அவர் ஒரு குற்றவாளியோ எதிரிப் படையின் தளபதியோ அல்ல. அவர் யெகோவாவை வணங்கி வந்தவர், இஸ்ரவேலில் நியாயாதிபதியாக 20 வருடங்கள் சேவை செய்தவர்.
இதுவரை வாழ்ந்தவர்களிலேயே அதிபலசாலியான சிம்சோனுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டது எப்படி? அவருடைய அசாதாரண பலம் இப்போது அவருக்குக் கைகொடுக்குமா? அவருடைய பலத்தின் இரகசியம் என்ன? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ள முடியும்?
அவர் ‘இஸ்ரவேலை இரட்சிக்கத் தொடங்குவார்’
மெய் வணக்கத்திலிருந்து வழிவிலகி போவதே இஸ்ரவேலரின் வாடிக்கையாக இருந்தது. அவர்கள் “மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார்.”—நியாயாதிபதிகள் 13:1.
மனோவா என்ற இஸ்ரவேலனின் மனைவி மலடியாயிருந்தாள். அவள் தாயாகப் போவதாக யெகோவாவின் தேவதூதன் அவளிடம் அறிவித்தபோது சிம்சோனின் சரித்திரம் ஆரம்பமானது. “அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்” என்று அந்தத் தூதன் அவளிடம் தெரிவித்தார். (நியாயாதிபதிகள் 13:2-5) சிம்சோன் கருவில் உருவாகும் முன்னரே, யெகோவா ஒரு விசேஷ நியமிப்பை அவருக்கு அளிக்க தீர்மானித்தார். பிறப்பிலேயே அவர் ஒரு நசரேயனாக, விசேஷித்த பரிசுத்த சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நபராக ஆனார்.
அவள் ‘என் கண்ணுக்குப் பொருத்தமானவள்’
சிம்சோன் வளர்ந்து வருகையில், ‘யெகோவா அவரைத் தொடர்ந்து ஆசீர்வதித்தார்.’ (நியாயாதிபதிகள் 13:24, NW) ஒருநாள் அவர் தன்னுடைய அம்மா, அப்பாவிடம் வந்து, “திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும்” என்றார். (நியாயாதிபதிகள் 14:2) அது அவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சி அளித்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவர்களுடைய மகன், ஒடுக்குவோரின் கையிலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்குப் பதிலாக அவர்களுடன் திருமண ஒப்பந்தம் செய்ய விரும்பினார். புறமதப் பெண்ணை மணமுடிப்பது கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது. (யாத்திராகமம் 34:11-16) அதனால், அவருடைய பெற்றோர் “நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ள வேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா?” என்று சொல்லி அதை ஆட்சேபித்தார்கள். ஆனாலும் அவர், “அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள் [“பொருத்தமானவள்,” NW], அவளையே எனக்குக் கொள்ள வேண்டும்” என்று வற்புறுத்தினார்.—நியாயாதிபதிகள் 14:3.
எவ்விதத்தில் இந்தப் பெலிஸ்திய பெண் சிம்சோனுக்கு ‘பொருத்தமானவளாக’ இருந்தாள்? “அவள் அழகாக, வசீகரமாக, கவர்ச்சியாக” இருந்தாள் என்ற அர்த்தத்தில் அல்ல, “ஆனால் ஒரு குறிக்கோளை, நோக்கத்தை, அல்லது இலக்கை அடைவது சம்பந்தமாகவே பொருத்தமானவளாக இருந்தாள்” என்பதாக மெக்லின்டாக் மற்றும் ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. சிம்சோனுக்கு என்ன குறிக்கோள் இருந்தது? அவர் “பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம்” தேடிக்கொண்டிருந்தார் என்று நியாயாதிபதிகள் 14:4 விளக்குகிறது. அந்தக் குறிக்கோளுடனேயே அவர் அந்தப் பெண்ணை மணமுடிக்க விரும்பினார். வயதில் முதிர்ச்சியடைந்தபோது, ‘யெகோவாவுடைய ஆவி அவரை ஏவத் துவங்கியது’ அல்லது செயல்படும்படி அவரைத் தூண்டியது. (நியாயாதிபதிகள் 13:25) அவர் வினோதமான விதத்தில் ஒரு மனைவிக்காக கேட்டபோதும் சரி, இஸ்ரவேலில் நியாயாதிபதியாக பணியாற்றிய காலம் முழுவதும் சரி, யெகோவாவின் ஆவியாலேயே உந்துவிக்கப்பட்டார். சிம்சோன் எதிர்நோக்கியிருந்த சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்ததா? ஆதரவு அளிப்பதாக அவருக்கு யெகோவா எப்படி உறுதியளித்தார் என்பதை முதலாவது கவனிக்கலாம்.
சிம்சோன் தன்னுடைய வருங்கால மனைவியின் ஊரான திம்னாத்துக்கு போய்க் கொண்டிருந்தார். ‘திம்னாத் ஊர் திராட்சத் தோட்டங்கள் மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவருக்கு எதிராக வந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவர்மேல் பலமாய் இறங்கினதினால், அவர் அதை கிழித்துப் போட்டார்.’ சிம்சோன் தனியாக இருந்தபோது அப்பேர்ப்பட்ட பலத்தைப் பெற்றார். இதற்குக் கண்கண்ட சாட்சிகள் யாருமில்லை. ஒரு நசரேயனாக, தாம் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்கு அவர் தகுதியானவர் என்பதை யெகோவா இவ்விதத்தில் உறுதிப்படுத்தினாரா? பைபிள் அதைக் குறித்து எதுவும் சொல்லாவிட்டாலும், அப்படிப்பட்ட அசாதாரண வல்லமையை தானே சுயமாக பெற்றுக்கொள்ளவில்லை என்பதை சிம்சோன் உணர்ந்தார் என்பதில் சந்தேகமில்லை. அதைக் கடவுளே அளித்திருக்க வேண்டும். அவர் செய்யவிருந்த வேலையில் யெகோவாவின் உதவிக்கரம் இருக்கும் என்பதில் அவர் நம்பிக்கையோடு இருந்திருக்கலாம். சிங்கத்தைக் கொன்ற அச்சம்பவத்தால் பலப்படுத்தப்பட்ட சிம்சோன் ‘போய் அந்தப் பெண்ணோடே பேசினார்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள் [“பொருத்தமாயிருந்தாள்,” NW].’—நியாயாதிபதிகள் 14:5-7.
சில நாளைக்குப் பின்பு அப்பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துவர சிம்சோன் சென்றபோது, ‘சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனார்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக் கூட்டமும் தேனும் இருந்தது.’ இதை அடிப்படையாக வைத்தே, அவர் தன் திருமணத் தோழர்களாக இருந்த 30 பெலிஸ்தரிடம் இந்த விடுகதையைச் சொன்னார்: “பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது.” அந்த விடுகதையை அவர்கள் விடுவித்தால் 30 மாற்று வஸ்திரங்களையும், துப்பட்டிகளையும் சிம்சோன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்படி விடுவிக்காவிட்டால், அவர்கள் அவற்றை அவருக்குக் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு அவர்கள் இந்த விடுகதையால் ரொம்பவே குழம்பிப் போயிருந்தார்கள். நான்காம் நாள் அந்தப் பெண்ணை அவர்கள் பயமுறுத்த ஆரம்பித்தார்கள். “உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப் போடுவோம்” என்பதாக அவளிடம் சொன்னார்கள். எவ்வளவு கொடூரம்! அவர்கள் தங்களுடைய ஜனத்தாரையே இவ்வளவு மோசமாக நடத்தினால், இஸ்ரவேலரை எவ்வளவு மோசமாக நடத்தியிருப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்!—நியாயாதிபதிகள் 14:8-15; NW.
இவர்களுடைய பயமுறுத்தலில் அரண்டுபோன அப்பெண் சிம்சோனை நச்சரித்து விடுகதைக்கான பதிலைத் தெரிந்து கொண்டாள். உடனடியாக அதை அவருடைய தோழர்களிடம் தெரிவித்தாள்; இவ்வாறு, சிம்சோனிடம் அன்போடும் விசுவாசத்தோடும் நடந்துகொள்ளத் தவறினாள். அவர்கள் அந்தப் புதிரை விடுவித்தார்கள், அவர்களால் அதை எப்படி விடுவிக்க முடிந்தது என்பதை சிம்சோன் அறிந்திருந்தார். “நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை” என்று அவர்களிடம் கூறினார். சிம்சோன் அந்த வாய்ப்புக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தார். ‘கர்த்தருடைய ஆவி அவர்மேல் இறங்கினதினால், அவர் அஸ்கலோனுக்குப் போய், அவ்வூராரில் முப்பது பேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்து கொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்தார்.’—நியாயாதிபதிகள் 14:18, 19.
அஸ்கலோனில் சிம்சோன் பழிவாங்கும் எண்ணத்துடன் அப்படி நடந்துகொண்டாரா? இல்லவே இல்லை. அது விடுதலை அளிப்பதற்கு தாம் தேர்ந்தெடுத்த நபரைப் பயன்படுத்தி கடவுள் நடப்பித்த செயலே. தம்முடைய மக்களைக் கடுமையாய் ஒடுக்குபவர்கள் மீது சிம்சோன் மூலமாக கடவுள் இப்படிப்பட்ட போரைத் தொடுத்தார். இந்தப் போர் தொடரவிருந்தது. சிம்சோன் தன்னுடைய மனைவியைச் சந்திக்க வந்தபோது மீண்டுமொரு சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.
தனியாகப் போரிடுதல்
சிம்சோன் அந்தப் பெண்ணை வெறுத்துவிட்டதாக எண்ணி அவளுடைய தகப்பன் அவளை வேறொருவருக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். திம்னாத்துக்கு சிம்சோன் திரும்பி வந்தபோது இதை அறிந்தார், அதிகக் கோபமடைந்ததுபோல் காட்டிக் கொண்டார். 300 நரிகளை பிடித்து, இரண்டிரண்டாக வாலோடு வால் சேர்த்து, அவற்றின் நடுவே தீ பந்தங்களை வைத்துக் கட்டினார். அவை ஓடுகையில் வழியிலிருந்த வயல்களையும், திராட்சத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் கொளுத்திப் போட்டன. பெலிஸ்தியாவின் அவ்வருட விளைச்சலான மூன்று முக்கிய பயிர்களும் இதனால் நாசமாயின. பெலிஸ்தரின் கோபம் இன்னும் மூர்க்கமடைந்தது. சிம்சோனுடைய மனைவியும், அவளுடைய தகப்பனுமே அதற்குக் காரணம் என்று கருதி அவர்களைச் சுட்டெரித்துப் போட்டார்கள். இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் பழிதீர்த்தது சிம்சோனின் குறிக்கோளுக்குக் கைகொடுத்தது. எனவே அவர்களை சின்னாபின்னமாக சங்காரம் பண்ணினார்.—நியாயாதிபதிகள் 15:1-8.
யெகோவா தேவன் சிம்சோனை ஆசீர்வதிக்கிறார் என்பதை இஸ்ரவேலர் புரிந்து கொண்டு, பெலிஸ்தரின் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவருக்கு ஆதரவு அளித்தார்களா? இல்லவே இல்லை. யூதாவைச் சேர்ந்தவர்கள், பிரச்சினை தலைதூக்காதிருப்பதற்கு, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் தலைவரைக் கைதுசெய்து விரோதிகளிடம் ஒப்படைக்க 3,000 பேரை அனுப்பினார்கள். இஸ்ரவேலர் இவ்வாறு உண்மையற்ற விதத்தில் நடந்துகொண்டதும்கூட விரோதிகளைப் பழிதீர்க்க சிம்சோனுக்கு மற்றொரு சந்தர்ப்பத்தை அளித்தது. பெலிஸ்தரிடம் அவரை ஒப்படைக்கப் போகும்போது, ‘கர்த்தருடைய ஆவி அவர் மேல் பலமாய் இறங்கினதினால். அவர் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவர் கட்டுகள் அவர் கைகளை விட்டு அறுந்து போயிற்று.’ அப்போது அவர் ஒரு கழுதையின் தாடை எலும்பை எடுத்து அதினாலே ஆயிரம் பேரைக் கொன்று போட்டார்.—நியாயாதிபதிகள் 15:10-15.
யெகோவாவிடம் சிம்சோன் இவ்வாறு கூறினார்: “தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழ வேண்டுமோ”? யெகோவா அவரது ஜெபத்தைக் கேட்டு அதற்குப் பதிலளித்தார். ‘தேவன் ஒரு பள்ளத்தைப் பிளக்கப் பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவர் குடித்தபோது அவர் உயிர் திரும்ப வந்தது, அவர் பிழைத்தார்.’—நியாயாதிபதிகள் 15:18, 19.
பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்கையில் சிம்சோனின் மனம் ஒரே காரியத்தில் குறியாக இருந்தது. கடவுளுடைய விரோதிகளுடன் போரிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் காசாவில் இருந்த ஒரு வேசியின் வீட்டில் அவர் தங்கினார். விரோதிகளின் பட்டணத்தில் இரவைக் கழிக்க அவருக்கு ஓர் இடம் தேவைப்பட்டது; அது அந்த வேசியின் வீட்டில் கிடைத்தது. ஒழுக்கநெறி தவறும் எண்ணம் அவருடைய மனதில் துளியும் இல்லாதிருந்தது. நடுராத்திரியில் அவர் எழுந்து அவளுடைய வீட்டை விட்டு புறப்பட்டு போய், பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பெயர்த்து எடுத்துக்கொண்டார்; சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த எபிரோனுக்கு அருகேயிருந்த மலை உச்சிக்கு அவற்றை சுமந்து சென்றார். இதைக் கடவுள் அங்கீகரித்தார், தேவையான பலத்தையும் தந்தருளினார்.—நியாயாதிபதிகள் 16:1-3.
சிம்சோனுடைய விஷயத்தில் பரிசுத்த ஆவி தனிச்சிறப்புமிக்க விதத்தில் செயல்பட்டது. ஏனெனில் அவர் எதிர்ப்பட்ட சூழ்நிலைகள் அசாதாரணமாக இருந்தன. இன்று கடவுளுடைய உண்மை ஊழியர்கள் பலத்திற்காக அதே ஆவியின் மீது சார்ந்திருக்கலாம். யெகோவா ‘தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பார்’ என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு உறுதியளித்தார்.—லூக்கா 11:13.
யெகோவா ஏன் ‘சிம்சோனை விட்டு விலகினார்’?
தெலீலாள் என்ற பெண்ணை சிம்சோன் நேசிக்கத் துவங்கினார். பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகள் சிம்சோனை ஒழித்துக்கட்டுவதில் தீவிரமாயிருந்ததால், அவளுடைய உதவியை நாடினார்கள். அவர்கள் தெலீலாளை சந்தித்து, “நீ அவனை நயம் பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் . . . எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்” என்பதாக அவளிடத்தில் சொன்னார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அதற்கு இலஞ்சமாக, ‘ஆயிரத்து நூறு வெள்ளிக்காசை’ அவளுக்கு தர சம்மதித்தார்கள்.—நியாயாதிபதிகள் 16:4, 5.
அந்த வெள்ளி காசுகள் ஒருவேளை சேக்கல் அளவுகளில் இருந்தால், இலஞ்சமாகக் கிடைக்கும் 5,500 சேக்கல் என்பது மிகப் பெரிய தொகை. ஆபிரகாம் தன்னுடைய மனைவியை அடக்கம் பண்ண தேவைப்பட்ட இடத்தை 400 சேக்கல் கொடுத்து வாங்கினார், ஓர் அடிமையின் விலை 30 சேக்கல் மட்டுமே. (ஆதியாகமம் 23:14-20; யாத்திராகமம் 21:32) பெலிஸ்த பட்டணங்களின் ஐந்து அதிபதிகளும் தெலீலாளை, தனது ஜனத்துக்கு உண்மையாய் நடந்து கொள்ளும்படி கேட்காமல், பண ஆசை காட்டி இணங்க வைக்க முயன்றது, அவள் ஓர் இஸ்ரவேலப் பெண்ணாக இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. எப்படியிருந்தாலும், தெலீலாள் அதற்குச் சம்மதித்தாள்.
சிம்சோன் மூன்று முறை தெலீலாளிடம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி ஏமாற்றினார். மூன்று முறையும் எதிரிகளிடம் அவரை ஒப்படைக்க முயன்று அவள் தோற்றுப் போனாள். ஆனால், அவள் ‘இப்படி அவரைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டதினால், சாகத்தக்கதாய் அவர் ஆத்துமா விசனப்பட்டது.’ கடைசியில், தன்னுடைய தலைமுடி அதுவரையில் சிரைக்கப்படவே இல்லையென்ற உண்மையை அவளிடம் தெரிவித்து விட்டார். அவருடைய தலைமுடி சிரைக்கப்பட்டால், பலமிழந்து எல்லாரையும் போல ஆகிவிடுவார் என்பதையும் தெரிவித்து விட்டார்.—நியாயாதிபதிகள் 16:6-17.
அப்போதே சிம்சோன் தோல்வியைத் தழுவினார். அவருடைய தலைமுடி சிரைக்கப்படும்படி தெலீலாள் சதி செய்தாள். என்றபோதிலும், அவருடைய பலம் அவருடைய சொல்லர்த்தமான தலைமுடியில் இல்லை. அவருடைய தலைமுடி, ஒரு நசரேயனாகக் கடவுளுடன் இருந்த விசேஷ உறவை மட்டுமே அடையாளப்படுத்தியது. அவருடைய தலைமுடி சிரைக்கப்பட்டு நசரேய விரதம் முறிந்துபோகும் ஒரு சூழ்நிலையை அவர் தனக்கு ஏற்படுத்திக் கொண்டதால், ‘யெகோவா அவரை விட்டு விலகினார்.’ இப்போது பெலிஸ்தர் அவரைப் பிடித்து, குருடாக்கி, சிறையிலடைத்தார்கள்.—நியாயாதிபதிகள் 16:18-21.
எப்பேர்ப்பட்ட வலிமையான பாடத்தை இது நமக்கு கற்பிக்கிறது! யெகோவாவுடன் உள்ள உறவை நாம் மிக மதிப்புமிக்கதாய் கருத வேண்டும் அல்லவா? கிறிஸ்தவர்களாக நம்மை ஒப்புக்கொடுத்ததை ஏதாவது ஒரு விதத்தில் விட்டுக்கொடுத்து இணங்கிப் போய்விட்டால் யெகோவா நம்மை தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
“என் ஜீவன் பெலிஸ்தரோடுகூட மடியக்கடவது”
வெற்றி சிறந்த பெலிஸ்தர் சிம்சோனைத் தோற்கடித்ததற்காக தங்கள் கடவுளான தாகோனுக்கு நன்றி செலுத்தினார்கள். அந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கைதியான சிம்சோனை தாகோனின் கோயிலுக்குக் கொண்டுவந்தார்கள். தான் தோல்வி அடைந்ததற்கான உண்மை காரணத்தை சிம்சோன் அறிந்திருந்தார். யெகோவா தன்னை விட்டு விலகியதற்கான காரணத்தை அவர் அறிந்தவராய், தன் குற்றத்திற்காக மனம் வருந்தினார். அவர் சிறைச்சாலையில் இருந்தபோது அவருடைய முடி நன்கு வளர ஆரம்பித்திருந்தது. ஆயிரக்கணக்கான பெலிஸ்தருக்கு முன் நின்றுகொண்டிருந்த சிம்சோன் என்ன செய்ய தீர்மானிப்பார்?
“கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும்” என்று ஜெபித்தார். பின்பு அந்தக் கட்டடத்தின் இரண்டு நடுத்தூண்களைப் பிடித்துக்கொண்டு, “பலமாய்ச் சாய்க்க” தொடங்கினார். விளைவு? ‘அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள் மேலும் எல்லா ஜனங்கள் மேலும் விழுந்தது: இவ்விதமாய் அவர் உயிரோடிருக்கையில் அவரால் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கிலும், அவர் சாகும்போது அவரால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.’—நியாயாதிபதிகள் 16:22-30.
உடல் பலத்தில் சிம்சோனுக்கு நிகர் யாருமே இருக்கவில்லை. அவருடைய வல்லமைமிக்க செயல்கள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன என்பது உண்மையே. என்றாலும் அதைவிட முக்கியமாக, யெகோவாவுடைய வார்த்தை சிம்சோனை விசுவாச புருஷர்களில் ஒருவராக குறிப்பிட்டுக் காட்டுகிறது.—எபிரெயர் 11:32-34.
[பக்கம் 26-ன் படம்]
சிம்சோனுடைய பலத்தின் இரகசியம் என்ன?