நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்ளுதல்
‘நீங்கள் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.’—ஏசாயா 43:10, NW.
1. எப்படிப்பட்டவர்களை யெகோவா தம்மிடம் இழுத்துக்கொள்கிறார்?
நீங்கள் ராஜ்ய மன்றத்தில் இருக்கையில் சுற்றும் முற்றும் இருப்பவர்களை சற்று கவனித்துப் பாருங்கள். வணக்கத்திற்காக கூடிவந்திருக்கும் இந்த இடத்தில் நீங்கள் யாரையெல்லாம் பார்க்கிறீர்கள்? வேதப்பூர்வ ஞானத்தை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆர்வமுள்ள இளைஞரைப் பார்க்கிறீர்கள். (சங்கீதம் 148:12, 13) குடும்ப வாழ்க்கையின் தரத்தை இந்த உலகம் குலைத்துப்போடுகிற போதிலும், கடவுளைப் பிரியப்படுத்த கடுமையாய் பாடுபடும் குடும்பத் தலைவர்களையும்கூட பார்க்கிறீர்கள். ஒருவேளை, வயோதிகத்தின் பலவீனங்கள் மத்தியிலும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததற்கு இசைவாக உண்மையோடு வாழ்ந்து வருகிற முதியோரையும் பார்க்கிறீர்கள். (நீதிமொழிகள் 16:31) இவர்கள் எல்லாருமே யெகோவாவை மிகவும் நேசிக்கிறார்கள். யெகோவாவும் அவர்களோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி காண்கிறார். ஆகவேதான், “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என கடவுளுடைய குமாரன் உறுதியாகக் கூறினார்.—யோவான் 6:37, 44, 65.
2, 3. கிறிஸ்தவ அடையாளத்தை மனதில் நன்கு பதிய வைப்பது ஏன் சவாலாக இருக்கலாம்?
2 யெகோவாவின் அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றிருக்கும் ஜனத்தாரில் ஒருவராய் இருப்பதில் நாம் சந்தோஷப்படுகிறோம் அல்லவா? அப்படி இருந்தாலும், ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ கிறிஸ்தவர்களாக நம் அடையாளத்தை எப்போதும் உணர்ந்திருப்பது ஒரு சவாலாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1, NW) முக்கியமாகக் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்படுகிற இளைஞருக்கு இது சவாலாக இருக்கிறது. “கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் போய்கொண்டிருந்தேன், ஆனாலும் எனக்கென்று எந்த ஆன்மீக இலக்குகளும் இருக்கவில்லை; உள்ளதைச் சொன்னால் யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்ற தனிப்பட்ட விருப்பம் எதுவும் எனக்குள் இருக்கவில்லை” என ஓர் இளைஞன் சொன்னான்.
3 சிலருக்கு யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த ஆசை இருந்தாலும், சகாக்களுடைய தாங்க முடியாத தொல்லைகள், உலக செல்வாக்குகள், பாவ சிந்தைகள் ஆகியவற்றால் திசை திரும்பிவிடலாம். பெரும் அழுத்தம் ஏற்படுகையில் நாம் கிறிஸ்தவ அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடலாம். உதாரணமாக, பைபிளின் ஒழுக்க தராதரங்கள் பழம்பாணியானவை என்றோ இந்தக் காலத்துக்கு ஒத்துவராதவை என்றோ பலரும் இன்று கருதுகிறார்கள். (1 பேதுரு 4:4) கடவுள் சொல்லும் வழியில் அவரை வணங்குவது முக்கியமல்ல என சிலர் நினைக்கிறார்கள். (யோவான் 4:24) எபேசியருக்கு எழுதிய கடிதத்தில், இந்த உலகின் ‘ஆவியை’ அதாவது மேலோங்கியிருக்கும் மனப்பான்மையைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். (எபேசியர் 2:2) அந்த ஆவி, யெகோவாவை அறியாத சமுதாயத்தினரின் சிந்தனையோடு ஒத்துப்போகும்படி தூண்டுகிறது.
4. கிறிஸ்தவர்களாக நம் தெளிவான அடையாளத்தைக் காத்துக்கொள்வதன் அவசியத்தை இயேசு எப்படி வலியுறுத்தினார்?
4 என்றாலும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக நம்மில் எவரேனும், இளைஞரானாலும் சரி வயதானவர்களானாலும் சரி, கிறிஸ்தவ அடையாளத்தை இழந்துவிட்டோமானால் அது போன்று வருந்தத்தக்க விஷயம் வேறெதுவும் இல்லையென அறிந்திருக்கிறோம். யெகோவாவின் தராதரங்கள் மற்றும் அவருடைய எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் மட்டுமே நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் குறித்து சரியான நோக்குநிலையை நம் மனதில் வைக்க முடியும். நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் இது நியாயமானதாகவே இருக்கிறது. (ஆதியாகமம் 1:26; மீகா 6:8) கிறிஸ்தவர்களாக நம்முடைய தெளிவான அடையாளத்தை, எல்லாராலும் பார்க்க முடிகிறபடி நாம் அணிகிற ஆடைகளுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. நாம் வாழும் காலத்தைக் குறித்து எச்சரிக்கையில் இயேசு இவ்வாறு கூறினார்: “இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.”a (வெளிப்படுத்துதல் 16:15) நம் கிறிஸ்தவப் பண்புகளையும் நடத்தை சம்பந்தமான தராதரங்களையும் களைந்துவிட்டு, சாத்தானின் உலகம் நம்மை வடிவமைக்க விட்டுவிடக் கூடாது. அதற்கு இடங்கொடுத்தால் நம்முடைய இந்த “வஸ்திரங்களை” இழந்துவிடுவோம். அப்படிப்பட்ட ஒரு நிலை வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது.
5, 6. ஆன்மீகத்தில் நிலையாக இருப்பது ஏன் முக்கியம்?
5 கிறிஸ்தவ அடையாளத்தை எப்போதுமே உணர்ந்திருப்பது, ஒருவரது வாழ்க்கைப் போக்கைப் பெரிதும் பாதிக்கிறது. எப்படி? யெகோவாவை வணங்கும் ஒருவர் தன் அடையாளத்தை மனதில் தெளிவாக பதிய வைக்காவிட்டால், திட்டவட்டமான நெறிமுறையோ இலக்குகளோ இன்றி அவர் அலைக்கழிக்கப்படலாம். அப்படிப்பட்ட நிலையற்ற தன்மையைக் குறித்து பைபிள் திரும்பத் திரும்ப எச்சரிக்கிறது. “சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்” என சீஷனான யாக்கோபு எச்சரித்தார்.—யாக்கோபு 1:6-8; எபேசியர் 4:14; எபிரெயர் 13:9.
6 அப்படியானால், நம் கிறிஸ்தவ அடையாளத்தை எப்படிக் காத்துக்கொள்ளலாம்? மகா உன்னதரின் வணக்கத்தாராக இருப்பது பெரும் பாக்கியம் என்ற உணர்வை அதிகமதிகமாகப் பெற எது நமக்கு உதவும்? தயவுசெய்து பின்வரும் வழிகளைக் கவனியுங்கள்.
உங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள்
7. நம்மைச் சோதித்துப் பார்க்கும்படி யெகோவாவிடம் மன்றாடுவது ஏன் பயனுள்ளது?
7 யெகோவாவுடன் உள்ள பந்தத்தைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள். கடவுளோடுள்ள பந்தமே ஒரு கிறிஸ்தவரின் விலைமதிப்புமிக்க சொத்து. (சங்கீதம் 25:14; நீதிமொழிகள் 3:32) நம் கிறிஸ்தவ அடையாளத்தைப் பற்றிய சந்தேகங்கள் நம் மனதில் எழுகிறதென்றால், இந்தப் பந்தத்தின் தரத்தையும் ஆழத்தையும் நன்கு சோதித்துப் பார்க்க வேண்டும். “கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப் பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப் பாரும்” என சங்கீதக்காரன் மன்றாடினார். (சங்கீதம் 26:2) அப்படிக் கடவுள் நம்மை சோதித்துப் பார்ப்பது ஏன் முக்கியம்? ஏனென்றால், நம் ஆழமான உள்நோக்கங்களையும் உள்மனதின் ஆசைகளையும் நாமாகவே சரியாக எடைபோட முடியாது. நம் மனதின் ஆழத்தை, அதாவது உள்நோக்கங்கள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை யெகோவா மட்டுமே அறிய முடியும்.—எரேமியா 17:9, 10.
8. (அ) யெகோவா நம்மை பரீட்சிக்க அனுமதிப்பது நமக்கு எப்படி நன்மையளிக்கும்? (ஆ) ஒரு கிறிஸ்தவராக முன்னேற நீங்கள் எப்படி உதவி பெற்றீர்கள்?
8 நம்மைச் சோதித்துப் பார்க்கும்படி யெகோவாவிடம் கேட்பதன் மூலம், நம்மைப் பரீட்சிக்கும்படி அவரை அழைக்கிறோம். அவ்வாறு செய்கையில் நம்முடைய உண்மையான உள்நோக்கங்களையும் இருதய நிலையையும் வெட்டவெளிச்சமாக்குகிற சூழ்நிலைகளைச் சந்திக்க அவர் அனுமதிக்கலாம். (எபிரெயர் 4:12, 13; யாக்கோபு 1:22-25) அப்படிப்பட்ட பரீட்சைகள் வருகையில் அவற்றை சந்தோஷமாக எதிர்கொள்ள வேண்டும்; ஏனென்றால் அவை யெகோவாவின் மீதுள்ள உண்மைப் பற்றுறுதியின் ஆழத்தை வெளிக்காட்ட நமக்கு வாய்ப்பளிக்கின்றன. நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” இருக்கிறோமா என்பதை அவை காட்டும். (யாக்கோபு 1:2-4) அவ்வாறு பரீட்சிக்கப்படும்போது ஆன்மீக ரீதியில் நாம் முன்னேற முடியும்.—எபேசியர் 4:22-24.
9. பைபிள் சத்தியத்தை நமக்கு நாமே உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமா? விளக்குங்கள்.
9 பைபிள் சத்தியத்தை உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யெகோவாவின் ஊழியர்களாக பைபிள் அறிவின் அடிப்படையில் நம் அடையாளத்தை மனதில் ஆழமாகப் பதிய வைக்காவிட்டால் அது படிப்படியாக மறைந்துவிடலாம். (பிலிப்பியர் 1:9, 11) இளைஞரோ, முதியவரோ, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருமே, தங்களுடைய நம்பிக்கை பைபிள் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை முழுமையாக உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். சக விசுவாசிகளை பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “எல்லாவற்றையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21, NW) தெய்வ பயமுள்ள குடும்பங்களில் வளரும் இளைஞர்கள், பெற்றோரின் விசுவாசத்தின் அடிப்படையில் அவர்களும் உண்மையான கிறிஸ்தவர்களாகிவிட முடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சாலொமோனின் தகப்பனாகிய தாவீது அவரிடம், ‘உன் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடு சேவி’ என அறிவுரை கூறினார். (1 நாளாகமம் 28:9) தன்னுடைய தகப்பன் எப்படி யெகோவாவில் விசுவாசத்தை வளர்த்தார் என்பதை கவனிப்பது மட்டுமே இளைஞராய் இருந்த சாலொமோனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள அவராகவே முயற்சி எடுக்க வேண்டியிருந்தது, அவர் அதைச் செய்தார். கடவுளிடம் அவர் இவ்வாறு மன்றாடினார்: “இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்.”—2 நாளாகமம் 1:10.
10. சரியான உள்நோக்கத்தோடு யதார்த்தமான கேள்விகளைக் கேட்பது ஏன் தவறல்ல?
10 அறிவெனும் அஸ்திவாரத்தின் மீது கட்டப்படுவதே பலமான விசுவாசம். “விசுவாசம் கேள்வியினாலே வரும்” என பவுல் குறிப்பிட்டார். (ரோமர் 10:17) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படிப்பதன் மூலம் யெகோவா மீதும், அவருடைய வாக்குறுதிகள் மற்றும் அமைப்பின் மீதுமுள்ள நம் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் பலப்படுத்திக் கொள்கிறோம் என்றே அவர் அர்த்தப்படுத்தினார். பைபிளைக் குறித்து யதார்த்தமான கேள்விகளைக் கேட்கும்போது நம்பிக்கையூட்டும் பதில்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதுமட்டுமல்ல, ரோமர் 12:2-ல் பவுல் கொடுக்கும் ஓர் அறிவுரையைக் காண்கிறோம். ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியும்படி’ [‘உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளும்படி,’ NW] அவர் அறிவுரை கூறினார். அதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்? ‘சத்தியத்தின் திருத்தமான அறிவை’ பெற்றுக்கொள்வதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். (தீத்து 1:1, NW) கடினமான விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும்கூட யெகோவாவின் ஆவி நமக்கு உதவும். (1 கொரிந்தியர் 2:11, 12) ஏதாவதொரு விஷயத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தால் கடவுளுடைய உதவிக்காக ஜெபிக்க வேண்டும். (சங்கீதம் 119:10, 11, 27) தம்முடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும், அதில் நம்பிக்கை வைக்கவும் அதற்குக் கீழ்ப்படியவும் வேண்டுமென யெகோவா விரும்புகிறார். சரியான உள்நோக்கத்தோடு யதார்த்தமான கேள்விகள் கேட்பதை அவர் வரவேற்கிறார்.
கடவுளைப் பிரியப்படுத்த தீர்மானமாயிருங்கள்
11. (அ) இயல்பான என்ன ஆசை நம்மைச் சிக்க வைக்கலாம்? (ஆ) சகாக்களின் அழுத்தத்தைச் சமாளிக்க நாம் எப்படி தைரியத்தைத் திரட்டலாம்?
11 மனிதனை அல்ல, கடவுளைப் பிரியப்படுத்த நாடுங்கள். ஒரு தொகுதியை சேர்ந்தவர்களென ஓரளவுக்கு நம்மை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவது இயல்பே. நம் எல்லாருக்கும் நண்பர்கள் தேவை; மற்றவர்கள் நம்மை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும்போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறோம். பருவ வயதில், ஏன் அதற்குப் பிறகும்கூட சகாக்களின் அழுத்தம் பலமான செல்வாக்கு செலுத்தலாம்; மற்றவர்களைப் போலிருக்க வேண்டும் அல்லது அவர்களைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற பலமான ஆசையை அது நம்மில் தூண்டிவிடலாம். ஆனால் நண்பர்களும் சகாக்களும் நம்முடைய நலனைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. சில சமயங்களில் தவறான காரியங்களைச் செய்வதில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்வதற்கு மட்டுமே நம்முடைய நட்பை நாடுகிறார்கள். (நீதிமொழிகள் 1:11-19) சகாக்கள் தவறான காரியங்களை செய்ய வற்புறுத்துகையில் அதற்கு இணங்கிவிடும் ஒரு கிறிஸ்தவர் பொதுவாக தான் யார் என்ற அடையாளத்தை மூடிமறைக்க முயலுகிறார். (சங்கீதம் 26:4) “உலகிலுள்ள மக்களைப் போன்று ஆவதற்காக உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள்” என அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (ரோமர் 12:2, ஈஸி டு ரீட் வெர்ஷன்) உலகம் தரும் எந்தவொரு அழுத்தத்திற்கும் இணங்கிவிடாமல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான உள் பலத்தை யெகோவா அளிக்கிறார்.—எபிரெயர் 13:6.
12. கடவுள் மீதுள்ள நம்பிக்கை என்று வரும்போது உறுதியாய் நிலைத்திருக்க என்ன நியமமும் யாருடைய உதாரணமும் நம்மைப் பலப்படுத்தும்?
12 மற்றவர்களின் அழுத்தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை நம் மனதிலிருந்து எடுத்துப்போடும் அச்சுறுத்தலை எதிர்ப்படுகையில், பொதுவான கருத்துக்களை அல்லது பெரும்பாலோரின் போக்குகளைவிட கடவுள் மீதுள்ள உண்மைப் பற்றுறுதியே மிக முக்கியமானது என்பதை நினைவில் வைக்க வேண்டும். யாத்திராகமம் 23:2-ல் உள்ள நியமம் நமக்கு பாதுகாப்பு அரண் போல் அமைகிறது: “தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக” என அது சொல்கிறது. யெகோவாவால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமாவென பெரும்பாலான இஸ்ரவேலர் சந்தேகித்தபோது, காலேப் அந்தப் பெரும்பாலாரோடு சேர்ந்துகொள்ள உறுதியாக மறுத்தார். கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என அவர் நம்பினார், அதனால் அவர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டார். (எண்ணாகமம் 13:30; யோசுவா 14:6-11) அவ்வாறே நாமும் கடவுளோடுள்ள பந்தத்தைக் காத்துக்கொள்வதற்காக, பிரபலமான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தப்படுகையில் துளியும் இணங்கிவிடாமல் இருக்கிறோமா?
13. கிறிஸ்தவர்களாக நம் அடையாளத்தைத் தெரியப்படுத்துவது ஏன் ஞானமானது?
13 உங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தைத் தெரியப்படுத்துங்கள். போரில் முந்தித் தாக்குவதே சிறந்த தற்காப்பு என்பதாக ஒரு பழமொழி சொல்கிறது; இது நம் கிறிஸ்தவ அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ளும் விஷயத்தில் உண்மையாய் இருக்கிறது. எஸ்றாவின் காலத்தில், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய இஸ்ரவேலர் முயன்றபோது எதிர்ப்பைச் சந்தித்தார்கள்; அப்போது ‘தாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருப்பதாக’ அவர்கள் சொன்னார்கள். (எஸ்றா 5:11) எதிரிகளின் செயல்களும், விமர்சனங்களும் நம்மைப் பாதிக்குமானால் நாம் பயத்தில் செயலிழந்து விடலாம். எப்போதும் எல்லாரையுமே திருப்திப்படுத்த நினைத்தால் நம்முடைய திறனை இழந்துவிடுவோம். ஆகவே, அஞ்சி அரண்டுபோய் விடாதீர்கள். நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவது எப்போதுமே நல்லது. உங்களுடைய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் ஒரு கிறிஸ்தவராக உங்கள் நிலைநிற்கையையும் பற்றி மரியாதையோடும் உறுதியோடும் எடுத்துச் சொல்லுங்கள். ஒழுக்க சம்பந்தமான விஷயங்களில் யெகோவாவின் உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிக்க தீர்மானமாய் இருக்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் அறியட்டும். கிறிஸ்தவ உத்தமத்தை எந்த விதத்திலும் நீங்கள் விட்டுக்கொடுக்க மாட்டீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துங்கள். உங்கள் ஒழுக்கத் தராதரங்களைப் பின்பற்றுவதில் பெருமிதம் கொள்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். (சங்கீதம் 64:10) தடுமாறாத ஒரு கிறிஸ்தவராகத் தனித்து விளங்குவது உங்களைப் பலப்படுத்தும், பாதுகாக்கும், யெகோவாவையும் அவரது ஜனங்களையும் பற்றி தெரிந்துகொள்வதற்கு மற்றவர்களையும் தூண்டும்.
14. கேலியோ எதிர்ப்போ நம்மைச் சோர்வடைய செய்ய வேண்டுமா? விளக்குங்கள்.
14 ஆனால், சிலர் உங்களைக் கேலி செய்யலாம் அல்லது எதிர்க்கலாம். (யூதா 18) உங்களுடைய மதிப்பீடுகளை மற்றவர்களிடம் விளக்க முயலுகையில் அதைக் கேட்க அவர்கள் மனமில்லாதிருந்தால் சோர்ந்துவிடாதீர்கள். (எசேக்கியேல் 3:7, 8) நீங்கள் எவ்வளவு உறுதியோடு இருந்தாலும் சரி, ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. பார்வோனை நினைவுபடுத்திப் பாருங்கள். வாதைகள் வந்தபோதும், அற்புதங்கள் நடந்தபோதும், ஏன் அவனுடைய தலைப்பிள்ளை இறந்தபோதும்கூட யெகோவாவின் சார்பாகவே மோசே பேசினார் என்பதை அவன் நம்பவில்லை. ஆகவே, மனித பயத்தில் செயலிழந்துவிடாதீர்கள். கடவுள் மீதுள்ள நம்பிக்கையும் விசுவாசமும் பயத்தைப் போக்க நமக்கு உதவும்.—நீதிமொழிகள் 3:5, 6; 29:25.
கடந்த காலத்தைப் பார்த்து எதிர்காலத்தைக் கட்டுங்கள்
15, 16. (அ) நம்முடைய ஆன்மீக ஆஸ்தி என்ன? (ஆ) கடவுளுடைய வார்த்தையின் உதவியால் நம் ஆன்மீக ஆஸ்தியைப் பற்றி தியானிப்பதன் மூலம் எவ்வாறு நன்மையடையலாம்?
15 உங்கள் ஆன்மீக ஆஸ்தியைப் பொன்னென போற்றுங்கள். கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையின் உதவியோடு தங்களுடைய மதிப்புமிக்க ஆன்மீகச் சொத்தைக் குறித்து தியானித்து நன்மையடைகிறார்கள். யெகோவாவுடைய வார்த்தையிலுள்ள சத்தியம், நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்பு, நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களாகக் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிலாக்கியம் ஆகியவை அந்த ஆஸ்தியில் அடங்கும். ராஜ்யத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும் அந்த உயிர்காக்கும் வேலை கடவுளுடைய சாட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது; இத்தகைய பாக்கியம் பெற்றவர்களில் ஒருவராக நீங்கள் என்ன செய்ய வேண்டுமென தெளிவாகத் தெரிந்திருக்கிறீர்களா? ‘நீங்கள் எனக்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள்’ என யெகோவா தாமே உறுதியளிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
16 ஆகவே உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘இந்த ஆன்மீக சொத்தை எந்தளவுக்கு மதிப்புள்ளதாக கருதுகிறேன்? வாழ்க்கையில் கடவுளுடைய சித்தத்திற்கு முதலிடம் கொடுக்குமளவுக்கு அதை நான் மதிக்கிறேனா? அதை இழந்துவிடச் செய்கிற எந்தச் சோதனையையும் எதிர்க்குமளவுக்கு அதன் மீது எனக்குள்ள போற்றுதல் வலுவாக இருக்கிறதா?’ நம் ஆன்மீக சொத்து ஆன்மீக ரீதியில் பலத்த பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும்; இதை யெகோவாவின் அமைப்பில் மட்டுமே அனுபவிக்க முடியும். (சங்கீதம் 91:1, 2) யெகோவாவுடைய அமைப்பின் நவீன கால சரித்திரத்தில் காணப்படும் குறிப்பிடத்தக்க சம்பவங்களை ஆராயும்போது, யாராலும் எவற்றாலும் யெகோவாவின் மக்களை இந்தப் பூமியிலிருந்து முற்றிலும் துடைத்தழிக்க முடியாது என்ற உண்மை நம் மனதில் பதிந்து விடுகிறது.—ஏசாயா 54:17; எரேமியா 1:19.
17. நம் ஆன்மீகச் சொத்தைச் சார்ந்திருப்பதோடுகூட வேறு எதுவும் தேவைப்படுகிறது?
17 நம் ஆன்மீக ஆஸ்தியை மட்டுமே நாம் சார்ந்திருக்க முடியாது என்பது உண்மையே. நாம் ஒவ்வொருவரும் கடவுளுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்வது அவசியம். பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்த கடினமாக பாடுபட்ட பவுல் அவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.” (பிலிப்பியர் 2:12) இரட்சிப்புக்காக வேறு யாரையும் நாம் சார்ந்திருக்க முடியாது.
18. கிறிஸ்தவ நடவடிக்கைகள் எவ்வாறு நம் கிறிஸ்தவ அடையாளத்திற்கு மெருகூட்டலாம்?
18 கிறிஸ்தவ நடவடிக்கைகளில் மூழ்கிவிடுங்கள். “வேலை ஒருவருடைய தனித்தன்மையை வடிவமைக்கிறது” என்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முக்கிய வேலை இன்று கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ‘புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்’ என பவுல் அறிவித்தார். (ரோமர் 11:13, 14) நம்முடைய பிரசங்க வேலை இந்த உலகத்திலிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுகிறது, அதில் ஈடுபடுவது நம் கிறிஸ்தவ அடையாளத்திற்கு மெருகூட்டுகிறது. சபை கூட்டங்கள், வணக்க ஸ்தலங்களைக் கட்டும் திட்டங்கள், தேவையிலிருப்போருக்கு உதவும் முயற்சிகள் போன்றவற்றிலும் இன்னும் பல நடவடிக்கைகளிலும் மூழ்கிவிடுவது கிறிஸ்தவர்களாக நம் அடையாளத்தை மனதில் தெள்ளத்தெளிவாக வைத்துக்கொள்வதற்கு துணைபுரியலாம்.—கலாத்தியர் 6:9, 10; எபிரெயர் 10:23, 24.
தெளிவான அடையாளம், நிஜமான ஆசீர்வாதங்கள்
19, 20. (அ) ஒரு கிறிஸ்தவராக நீங்கள் என்னென்ன நன்மைகளை அனுபவித்திருக்கிறீர்கள்? (ஆ) உங்களுடைய உண்மையான அடையாளத்திற்கு எது அடிப்படையாய் அமைகிறது?
19 உண்மை கிறிஸ்தவர்களாக இருப்பதன் காரணமாக நாம் அனுபவிக்கும் எண்ணிறந்த நன்மைகளையும் பயன்களையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். தனிப்பட்ட விதமாக யெகோவா நம்மை அறிந்திருப்பதற்குப் பாக்கியம் பெற்றிருக்கிறோம். மல்கியா தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னார்: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” (மல்கியா 3:16) கடவுள் நம்மை நண்பர்களாக கருதலாம். (யாக்கோபு 2:23) நம் வாழ்க்கை தெளிவான நோக்கமும், ஆழ்ந்த அர்த்தமும், பயனுள்ள சிறந்த இலக்குகளும் நிறைந்ததாய் இருக்கிறது. எதிர்காலத்தில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையும் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.—சங்கீதம் 37:9.
20 உங்களுடைய உண்மையான அடையாளமும் மதிப்பும் மற்றவர்கள் உங்களை எப்படிக் கருதுகிறார்கள் என்பதில் அல்ல, ஆனால் கடவுள் எந்தளவுக்கு மதிப்புமிக்கவராக உங்களைக் கருதுகிறார் என்பதிலேயே சார்ந்திருக்கிறது. மற்றவர்கள் நம்மை ஒருவேளை குறைபாடுள்ள மனித தராதரங்களின் அடிப்படையில் மதிப்பிடக்கூடும். ஆனால் நம்மீது கடவுளுக்கிருக்கும் அன்பும் கரிசனையும் நம் மதிப்பை, அதாவது நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்பதை அறிந்துகொள்வதற்கான அடிப்படையை அளிக்கிறது. (மத்தேயு 10:29-31) அதே சமயத்தில் கடவுள் மீது நமக்குள்ள அன்பும்கூட நம் கிறிஸ்தவ அடையாளத்தை நன்கு உணர்ந்துகொள்ள உதவும், நம் வாழ்க்கைக்குச் மிகச் சிறந்த விதத்தில் வழிகாட்டும். “தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.”—1 கொரிந்தியர் 8:3.
[அடிக்குறிப்பு]
a இந்த வார்த்தைகள் ஒருவேளை, எருசலேம் ஆலயத்தில் பணிபுரிந்த காவல் அதிகாரியின் கடமைகளைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம். இரவு நேரங்களில், காவல் காக்கும் லேவியர்கள் தூங்குகிறார்களா விழித்திருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக அவர் செல்வார். ஒருவன் தூங்குவது கண்டுபிடிக்கப்பட்ட போது, அவன் தடியால் அடிக்கப்பட்டான், வெட்கமுண்டாக்கும் விதத்தில் தண்டிப்பதற்காக சிலசமயம் அவனுடைய வஸ்திரங்களும் களைந்து எரிக்கப்பட்டன.
நினைவிருக்கிறதா?
• கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆன்மீக அடையாளத்தைக் காத்துக்கொள்வது ஏன் முக்கியம்?
• நம் கிறிஸ்தவ அடையாளத்தை நாம் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்?
• யாரைப் பிரியப்படுத்துவது என்ற நிலை ஏற்படுகையில் சரியான தீர்மானம் எடுப்பதற்கு என்னென்ன அம்சங்கள் நமக்கு உதவலாம்?
• கிறிஸ்தவர்களாக நம் அடையாளத்தை எப்போதுமே உணர்ந்திருப்பது நம் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கலாம்?
[பக்கம் 21-ன் படங்கள்]
கிறிஸ்தவ நடவடிக்கைகளில் மூழ்கிவிடுவது நம் கிறிஸ்தவ அடையாளத்திற்கு மெருகூட்டுகிறது