“யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்”
யெகோவாவைத் துதிக்கும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வளமாக்குகிறார்கள்
“எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கை வேண்டும்!” இப்படித்தான் ஒரு டீனேஜ் பையன் தன் எதிர்பார்ப்புகளைப் பற்றி சொன்னான். ஆனால் இளைஞர்கள் மிகச் சிறந்த வாழ்க்கையை எப்படிப் பெற முடியும்? பைபிள் நேரடியாக பதிலளிக்கிறது: “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.”—பிரசங்கி 12:1.
யெகோவாவைத் துதிப்பதும், அவருக்குச் சேவை செய்வதும் பெரியவர்களுக்கு மட்டுமே உரிய கடமைகள் அல்ல. எல்க்கானா மற்றும் அன்னாளின் மகனான சாமுவேல் சிறு வயதிலேயே ஆசரிப்புக் கூடாரத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். (1 சாமுவேல் 1:19, 20, 24; 2:11) குஷ்டரோகம் நீங்கி குணமடைவதற்கு தீர்க்கதரிசியாகிய எலிசாவைப் போய் பார்க்குமாறு சீரிய படைத்தலைவனாகிய நாகமானுக்கு ஓர் எபிரெய சிறுமி ஆலோசனை சொன்னாள்; இவ்வாறு, யெகோவாவின் மீது தனக்கு முழுமையான விசுவாசம் இருந்ததை வெளிக்காட்டினாள். (2 இராஜாக்கள் 5:2, 3) சங்கீதம் 148:7, 12-ல், சிறுவர்களும் சரி சிறுமிகளும் சரி யெகோவாவைத் துதிக்கும்படி சொல்லப்படுகிறார்கள்.a 12 வயதிலேயே இயேசு தம் தகப்பனுடைய சேவையில் தமக்கு அதிக ஆர்வமிருந்ததை வெளிக்காட்டினார். (லூக்கா 2:41-49) வேதாகம பயிற்சி பெற்றிருந்த சிறுவர்கள் சிலர் இயேசுவை ஆலயத்தில் கண்டபோது, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள்.—மத்தேயு 21:15, 16.
இன்று யெகோவாவைத் துதித்தல்
இன்று யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் இளைஞர்களில் அநேகர் தங்களுடைய மத நம்பிக்கையைக் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள். பள்ளியிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி மற்றவர்களிடம் அதைக் குறித்துத் தைரியமாகப் பேசுகிறார்கள். இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
18 வயது ஸ்டெஃபனி பிரிட்டனைச் சேர்ந்தவள்; அவளது வகுப்பில் கருக்கலைப்பைப் பற்றியும், இன்னும் பல ஒழுக்கநெறிகளைப் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. கருக்கலைப்பு என்பது இன்று சமூக அங்கீகாரம் பெற்ற விஷயம் என்றும், இதை எந்த இளம் பெண்ணும் எதிர்க்க வேண்டியதில்லை என்றும் அவளுடைய ஆசிரியர் உறுதியுடன் கூறினார். வகுப்பிலிருந்த எல்லா மாணவர்களும் அதை ஆமோதித்தனர்; ஆனால் ஸ்டெஃபனியோ தன்னுடைய பைபிள் சார்ந்த நம்பிக்கையைப் பற்றி பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள். ஆசிரியர் இவளுடைய கருத்தைக் கேட்டபோது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பேச ஆரம்பித்தாள். முதலில் கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும், வேதப்பூர்வ காரணங்களை விளக்குவதற்குக் கிடைத்த வாய்ப்பை அவள் பயன்படுத்திக் கொண்டாள். யாத்திராகமம் 21:22-24-ல் உள்ள கருத்தைச் சுருக்கமாக கூறி, பிறவாத குழந்தையைக் காயப்படுத்துவதே தவறென்றால், கருக்கலைப்பு செய்வது கடவுளுடைய சித்தத்திற்கு முற்றிலும் முரணானது என்பதில் துளியும் சந்தேகமில்லையென விளக்கினாள்.
மத குருவாக இருக்கும் அந்த ஆசிரியர் இந்த வசனங்களை இதற்குமுன் வாசித்ததே இல்லையாம். இவ்வாறு ஸ்டெஃபனி தைரியமாக சாட்சி கொடுத்ததால், அவளுடைய வகுப்பிலிருந்த மாணவர்களுடன் அநேக விஷயங்களைக் குறித்து நல்ல முறையில் சம்பாஷிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு மாணவி தற்போது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைத் தவறாமல் பெற்றுக்கொள்கிறாள். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக ஸ்டெஃபனி முழுக்காட்டுதல் எடுப்பதைப் பார்ப்பதற்காக இன்னும் இரண்டு மாணவிகள் யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தென் அமெரிக்காவில் உள்ள சூரினாமில் வசிக்கிறாள் ஆறு வயது வாரெடா. இவளுடைய ஆசிரியைக்கு ஒரு சமயம் பைபிளிலிருந்து ஆறுதல் தேவைப்பட்டது; வாரெடா அந்தச் சந்தர்ப்பத்தை, கடவுளை மகிமைப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டாள். மூன்று நாள் விடுப்புக்குப் பிறகு பள்ளிக்கு ஆசிரியை வந்தார்; தான் வராததற்கான காரணம் தெரியுமாவென மாணவர்களிடம் கேட்டார். “நீங்கள் சுகமில்லாதிருந்ததால் தானே வரவில்லை?” என்று அவர்கள் திரும்பக் கேட்டார்கள். “இல்லை, என்னோட அக்கா இறந்துட்டாங்க, அதனால நான் ரொம்ப கவலையா இருக்கேன். நீங்க எல்லாம் கொஞ்சம் அமைதியா இருக்கணும்” என்று சொன்னார்.
அன்று மதியம் வாரெடாவுடைய அம்மா ஒரு குட்டித் தூக்கம் போடுகையில், இவளோ பழைய பத்திரிகைகளின் தலைப்புகளைப் படித்தவாரே அவற்றில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். “இறப்புக்கு பின் வாழ்வு உண்டா?” என்ற தலைப்பிடப்பட்ட ஜூலை 15, 2001 காவற்கோபுரத்தை அவள் கண்டுபிடித்தாள். உற்சாகம் பொங்க, தன் அம்மாவை எழுப்பி, “அம்மா, அம்மா, இங்க பாருங்க! என்னோட டீச்சருக்குக் கொடுக்க ஒரு பத்திரிகையைக் கண்டுபிடிச்சிட்டேன்! மரணத்தைப் பத்தி இதில் போட்டிருக்கு!” என்றாள். வாரெடாவுடைய கடிதத்தோடு அந்தப் பத்திரிகை அவளுடைய ஆசிரியைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. “இதை உங்களுக்காகவே அனுப்புகிறேன். பரதீஸில் உங்கள் அக்காவை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள், ஏனென்றால் யெகோவா பொய்யே சொல்ல மாட்டார். பரலோகத்திலே இல்லை, இந்த பூமியில்தான் பரதீஸைக் கொண்டு வரப்போவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்” என்பதாக அதில் எழுதினாள். இந்தக் கட்டுரைகள் அளித்த வேதப்பூர்வ ஆறுதலுக்காக அந்த ஆசிரியைத் தன்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
எதிர்காலத்திற்காக கட்டுதல்
யெகோவா ‘நித்தியானந்த தேவனாக’ இருக்கிறார், ஆகவே இளைஞரும் சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) ‘உன் இளமையை அனுபவி. இளமையில் இருக்கும்போதே சந்தோஷமாக இரு’ என்பதாக அவருடைய வார்த்தை சொல்கிறது. (பிரசங்கி 11:9, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்) யெகோவா தற்காலத்தை மட்டும் பார்க்காமல், தொலைநோக்கு பார்வையுடையவராக, நல்நடத்தையாலும் தீயநடத்தையாலும் வரும் எதிர்கால விளைவுகளையும் நன்கு அறிந்திருக்கிறார். அதனால்தான் அவருடைய வார்த்தை இளைஞருக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “தீங்குநாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்” “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.”—பிரசங்கி 12:1.
ஆம், வாழ்க்கை என்னும் விலையேறப்பெற்ற பரிசை இளைஞர்கள் முழுக்க முழுக்க அனுபவித்து மகிழ வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். அவரை நினைவில் வைத்து மகிமைப்படுத்துவதன் மூலம் இளைஞர் திருப்தியான, பலனளிக்கும் வாழ்க்கை வாழலாம். பிரச்சினைகளை எதிர்ப்படும்போதுகூட, “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என அவர்கள் திடநம்பிக்கையுடன் சொல்லலாம்.—சங்கீதம் 121:2, NW.
[அடிக்குறிப்பு]
a 2005 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டரில் மார்ச்/ஏப்ரல் பக்கத்தைக் காண்க.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
‘பூமியிலுள்ளவைகளே, . . . வாலிபரே, கன்னிகைகளே . . . கர்த்தரைத் துதியுங்கள்.’—சங்கீதம் 148:7, 12
[பக்கம் 8-ன் பெட்டி]
இளைஞரை யெகோவா ஆதரிக்கிறார்
“கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.”—சங்கீதம் 71:5.
“அவர் [கடவுள்] உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.”—சங்கீதம் 103:5, பொது மொழிபெயர்ப்பு.