பள்ளியில் யெகோவாவைத் துதித்தல்
பேச்சிலும் நடத்தையிலும் பள்ளியில் கடவுளைத் துதிப்பதற்கு உலகெங்குமுள்ள யெகோவாவின் இளம் சாட்சிகள் பல்வேறு வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். அவர்களுடைய ஆர்வத் துடிப்பைச் சிறப்பித்துக் காட்டும் அனுபவங்கள் சிலவற்றை கவனியுங்கள்.
பூமியின் வளிமண்டலம் மாசுபடுத்தப்படுவதைப் பற்றி ஒரு கட்டுரை வரையும்படி கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இளம் சாட்சிக்கு சொல்லப்பட்டது. உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ்-ஐ பயன்படுத்தி, விழித்தெழு! பத்திரிகையிலுள்ள சிறந்த தகவல்களைத் திரட்டி கட்டுரை ஒன்றை அவள் எழுதினாள். கட்டுரையின் முடிவில், தகவல் மூலம் விழித்தெழு! என குறிப்பிட்டாள். ஆசிரியர் இதை வாசித்துப் பார்த்துவிட்டு, தான் வாசித்த மிகச் சிறந்த கட்டுரைகளில் ஒன்று என கூறினார். பிற்பாடு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அதிலுள்ள தகவல்களை அந்த ஆசிரியர் பயன்படுத்தினார், நல்ல வரவேற்பையும் பெற்றார். ஆகவே, விழித்தெழு! பத்திரிகைகளை அந்த ஆசிரியருக்கு அவள் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தாள். அதோடு, “ஆசிரியர்கள்—அவர்களின்றி நம் கதி?” என்ற முகப்புக் கட்டுரைகளைக் கொண்ட இதழையும் கொடுத்தாள். விழித்தெழு! பத்திரிகையைப் பற்றி வகுப்பில் அந்த ஆசிரியர் புகழ்ந்து பேசினார், அதனால் மாணவிகள் சிலர் தங்களுக்கும் அந்தப் பத்திரிகைகள் வேண்டுமென கேட்டார்கள். எனவே, அந்தப் பத்திரிகையின் வேறுசில இதழ்களையும் பிற மாணவிகள் படிப்பதற்காக பள்ளிக்கு அவள் கொண்டுவந்தாள்.
ஆப்பிரிக்காவில் பெனின் என்ற நகரத்தில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவ இளைஞி அசாதாரணமான பிரச்சினை ஒன்றை எதிர்ப்பட்டாள். இளைஞர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்காக மாணவர்களுடைய பெற்றோர்கள் பலர் ஒன்றுகூடி கஷ்டமான பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு டியூட்டர்களை சம்பளம் கொடுத்து நியமிப்பார்கள். ஆனால், அந்த டியூட்டர்கள் சனிக்கிழமை காலை நேரங்களில் பாடங்கள் நடத்துவார்கள். அந்த இளம் யெகோவாவின் சாட்சி ஆட்சேபணை தெரிவித்தாள்: “சனிக்கிழமை காலையில்தான் முழு சபையாரும் ஒன்றுசேர்ந்து பிரசங்க வேலையில் ஈடுபடுவார்கள். வாரத்தில் அந்த நாள்தான் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள், வேறு எதற்காகவும் நான் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன்!” அவளுடைய ஒற்றைத் தகப்பனாரும் ஒரு யெகோவாவின் சாட்சி; அவர் சில பெற்றோர்களையும் டியூட்டர்களையும் ஒன்றுகூட்டி அட்டவணையை மாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே, டியூட்டர் இல்லாமல் சுயமாகவே படித்துக்கொள்ள அவள் தீர்மானித்தாள். சபையாருடன் சேர்ந்து பிரசங்க வேலையில் அவள் ஈடுபட்டாள். அவளுடைய வகுப்புத் தோழிகள் அவளை ஏளனம் செய்தார்கள், சாட்சி கொடுப்பதையும் அவளுடைய கடவுளையும் விட்டுவிடும்படி சொன்னார்கள். பரீட்சையில் அவள் நிச்சயம் தோல்வியடைந்து விடுவாளென அவர்கள் நினைத்தார்கள். ஆனால், டியூட்டர் வைத்துப் படித்த மாணவர்கள்தான் பரீட்சையில் தோல்வி அடைந்தார்கள். இந்த இளம் சகோதரியோ வெற்றி பெற்றாள். அதற்குப்பின் பரிகாசம் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை! “நீ தொடர்ந்து உன்னுடைய கடவுளுக்கே சேவை செய்” என இப்போது அந்த மாணவிகள் அவளிடம் சொல்கிறார்கள்.
செக் குடியரசைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒரு புத்தகத்தின் பேரில் வாய்மொழி அறிக்கையை தயாரிக்க வேண்டியிருந்தது. எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தும்படி அவளுடைய தாய் உற்சாகப்படுத்தினார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பூமியில் வாழ்ந்தவர்களிலேயே யார் மிகப் பெரிய மனிதராக இருக்க முடியும்?” என்ற கேள்விகளுடன் தனது அறிக்கையை அவள் தயாரிக்க ஆரம்பித்தாள். இயேசுவைப் பற்றியும் அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும் அவள் விவரித்தாள். பிறகு, “மன்னிப்பதற்கு ஒரு பாடம்” என்ற தலைப்பிலுள்ள ஓர் அதிகாரத்தை அவள் கலந்தாலோசித்தாள். “நீ இதுவரை கொடுத்த அறிக்கைகளிலேயே இதுதான் மிகச் சிறந்த அறிக்கை!” என்று சொல்லி அவளுடைய ஆசிரியர் அவளைப் பாராட்டினார். அதோடு, அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியையும் நன்றியோடு பெற்றுக்கொண்டார். சக மாணவர்கள் வேறு சிலரும் இப்புத்தகத்தைக் கேட்டார்கள். அடுத்த நாள், 18 பிரதிகளை வினியோகிப்பதில் அந்தச் சிறுமி பேரானந்தம் அடைந்தாள்!
பள்ளியில் யெகோவாவை துதிப்பதில் இத்தகைய பிள்ளைகள் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். அவர்களுடைய ஆர்வத் துடிப்பை நாமும் பின்பற்றலாமே.