வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அவருடைய சேவைக்காக பணமோ அன்பளிப்போ ஒரு கிறிஸ்தவர் கொடுக்கலாமா, அல்லது அது லஞ்சமாக கருதப்படுமா?
கிறிஸ்தவர்கள் எங்கே வாழ்ந்தாலும் சரி, உள்ளூர் சூழ்நிலைகளை நடைமுறை ஞானத்தோடு கையாள முயலுகிறார்கள். ஏனென்றால் ஓரிடத்தில் சட்டப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் ஒரு விஷயம் மற்றொரு இடத்தில் சட்ட விரோதமானதாகவும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளத் தகாததாகவும் இருக்கலாம். (நீதிமொழிகள் 2:6-9) என்றாலும், ‘யெகோவாவின் கூடாரத்தில் விருந்தாளியாக’ தங்க விரும்புகிறவர் லஞ்சத்தை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு கிறிஸ்தவர் எப்போதும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.—சங்கீதம் 15:1, 5, NW; நீதிமொழிகள் 17:23.
லஞ்சம் என்றால் என்ன? “ஓர் அதிகாரியை . . . அவருடைய கடமையை மீறவோ சட்ட விரோதமாக செயல்படவோ வைத்து அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்குக் கொடுக்கும் மதிப்பான ஒன்றே லஞ்சம்” என தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. ஆகவே, ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் சரி, நீதியைப் புரட்டுவதற்காக ஒரு நீதிபதிக்கோ போலீஸ் அதிகாரிக்கோ பணம் அல்லது அன்பளிப்பு ஏதேனும் கொடுத்தால் அது லஞ்சம்; அதேபோல், ஒரு தவறை அல்லது மீறுதலை கண்டும் காணாமல் விட்டுவிடும்படி ஒரு மேற்பார்வையாளருக்கு ஏதேனும் கொடுப்பதும் லஞ்சம். காத்திருப்போர் பட்டியலில் நம் பெயரை முதலில் போடுவதற்கோ அல்லது வரிசையில் நிற்கும் மற்றவர்களை ஓரம் கட்டிவிட்டு நாம் முன்னால் போவதற்கோ அன்பளிப்பு கொடுத்தால் அதுவும்கூட லஞ்சமே. இத்தகைய போக்கு அன்பில்லாமையைச் சுட்டிக்காட்டும்.—மத்தேயு 7:12; 22:39.
சட்டப்பூர்வ சேவையைப் பெறுவதற்கு அல்லது பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு ஒரு பொது ஊழியருக்கு அன்பளிப்போ டிப்ஸோ கொடுப்பது லஞ்சமாகுமா? உதாரணமாக, சில இடங்களில் டிப்ஸ் கொடுக்கும் வரையில் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கோ, ஒருவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கோ, குடியேற்றம் தொடர்பான ஆவணங்களை அளிப்பதற்கோ அதிகாரிகள் தயங்குவார்கள். அல்லது உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதை அவர்கள் தாமதிப்பார்கள்.
டிப்ஸ் கொடுப்பது சம்பந்தமான பழக்கவழக்கங்களும் அதைப் பற்றிய மனப்பான்மைகளும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. அவை புழக்கத்திலுள்ள இடங்களில் அல்லது அவை எதிர்பார்க்கப்படுகிற இடங்களில், கடமையைச் செய்ய ஒரு அதிகாரிக்கு டிப்ஸ் கொடுப்பது பைபிள் நியமங்களை மீறுவதில்லை என கிறிஸ்தவர்கள் உணரலாம். இன்னும் சில இடங்களில் குறைந்த ஊதியமே பெறும் பொது ஊழியருக்கு இதுபோல கொடுக்கப்படும் தொகை உதவியாக இருக்கும் என மக்கள் கருதலாம். சட்டப்பூர்வ சேவையைப் பெற அன்பளிப்பு கொடுப்பதற்கும், சட்டவிரோதமான ஆதாயத்தைப் பெற லஞ்சம் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மறுபட்சத்தில், சட்டப்பூர்வ கோரிக்கைகளை வைக்கையில், ஆய்வாளர்கள், சுங்கத்துறை அதிகாரிகள், அல்லது மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் சிலர் மறுத்திருக்கின்றனர்; அன்பளிப்பு கொடுக்கும் வழக்கமுள்ள இடங்களில்கூட அவர்கள் மறுத்திருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் இந்த விஷயத்தில் தங்கள் மனசாட்சியின்படி நடப்பதாகவும் நேர்மையாக இருப்பதாகவும் அறியப்பட்டிருக்கிற காரணத்தால், பொதுவாக டிப்ஸ் கொடுத்தால் மட்டுமே பெற முடிகிற சலுகைகளைக்கூட எவ்வித டிப்ஸும் இல்லாமல் பெற்றிருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 10:9; மத்தேயு 5:16.
மொத்தத்தில், சட்டப்பூர்வ சேவையைப் பெறவோ பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தவிர்க்கவோ டிப்ஸ் கொடுக்கலாமா என்பதை யெகோவாவின் ஊழியர் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, தனது நல்மனசாட்சியை உறுத்தாத, யெகோவாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்காத, பிறருக்கு இடறல் ஏற்படுத்தாத ஒரு தீர்மானத்தை அவர் எடுக்க வேண்டும்.—மத்தேயு 6:9; 1 கொரிந்தியர் 10:31-33; 2 கொரிந்தியர் 6:3; 1 தீமோத்தேயு 1:5.