உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• டிசம்பர் 25-ஐ இயேசுவின் பிறந்த தேதியாக தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
இயேசு எந்தத் தேதியில் பிறந்தாரென பைபிள் குறிப்பிடுவதில்லை. என்ஸைக்ளோப்பீடியா இஸ்பானிகா இவ்வாறு குறிப்பிடுகிறது: “டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த சரியான தேதியல்ல, ஆனால் ரோமில் கொண்டாடப்பட்ட குளிர்கால சங்கராந்தி பண்டிகைகளைக் கிறிஸ்தவமாக்குவதற்காகவே அத்தேதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் ஆரம்பமானது.” குளிர்காலத்தின்போது சூரியன் எழும்பியதை விருந்து, களியாட்டம், பரிசுகளைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் மூலமே பண்டைய கால ரோமர்கள் கொண்டாடினார்கள்.—12/15, பக்கங்கள் 4-5.
• இயேசுவிடம் ஸ்தேவான் ஜெபித்தார் என அப்போஸ்தலர் 7:59 அர்த்தப்படுத்துகிறதா?
இல்லை. ஜெபம் என்பது யெகோவா தேவனிடம் மட்டுமே ஏறெடுக்க வேண்டிய ஒன்று என பைபிள் காட்டுகிறது. இயேசுவை ஸ்தேவான் தரிசனத்தில் பார்த்ததால், “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று நேரடியாக அவரிடமே மன்றாட அவர் தூண்டப்பட்டிருக்கலாம். மரித்தோரை உயிர்த்தெழுப்ப இயேசுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதை ஸ்தேவான் அறிந்திருந்தார். (யோவான் 5:27-29) ஆகவே, இயேசு தன்னை உயிர்த்தெழுப்பும் நாள் வரும் வரை தன்னுடைய உயிர்ச் சக்தியை காக்கும்படி அவரிடம் கேட்டார் அல்லது வேண்டினார்.—1/1, பக்கம் 31.
• ஒருவருடைய எதிர்காலம் முன்தீர்மானிக்கப்படவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?
சுயமாக தெரிவு செய்யும் உரிமையை மனிதருக்கு கடவுள் பரிசாக அளித்துள்ளார்; இது முன்விதிக்கப்படுதலை ஆதரிப்பதில்லை. நாம் பிறப்பதற்கு முன்பே இப்படித்தான் வாழ வேண்டுமென யெகோவா தீர்மானித்துவிட்டு, பிறகு நம்முடைய செயல்களுக்கெல்லாம் அவர் நம்மையே பொறுப்பாளி ஆக்குவது, அன்பற்றதாகவும் அநீதியாகவும் இருக்கும். (உபாகமம் 32:4; 1 யோவான் 4:8)—1/15, பக்கங்கள் 4, 5.
• அற்புதங்கள் நடக்க முடியாதென சொல்வது ஏன் சரியல்ல?
கடவுளுடைய சிருஷ்டிப்புகளில் காணப்படும் வியத்தகு அறிவியல் வினோதங்களைப் பற்றி தங்களுக்கு அற்ப சொற்பமே தெரியுமென்று விஞ்ஞானிகள் சிலர் ஒப்புக்கொள்கிறார்கள்; அதனால், ஒரு காரியம் நிச்சயம் நடக்காது என்று தங்களால் அடித்துக்கூற முடியவே முடியாது என்றும் சிலர் ஒப்புக்கொள்கிறார்கள். ஆகவே ஒரு காரியம் நடப்பதற்கு சாத்தியம் குறைவு என்று மட்டுமே அவர்கள் சொல்ல விரும்புகிறார்கள்.—2/15, பக்கங்கள் 5, 6.
• பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைத் தனக்கு மணமுடிக்கும்படி நியாயாதிபதியான சிம்சோன் தன் பெற்றோரிடம் ஏன் சொன்னார்? (நியாயாதிபதிகள் 14:2)
புறமதப் பெண்ணை மணமுடிப்பது கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது. (யாத்திராகமம் 34:11-16) ஆனால் சிம்சோனுக்கு, அந்தப் பெலிஸ்திய பெண் ‘பொருத்தமானவளாக’ (NW) இருந்தாள். அவர் “பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம்” தேடிக்கொண்டிருந்தார், அந்த நோக்கத்திற்கு அந்தப் பெண் பொருத்தமானவளாக இருந்தாள். கடவுளும் தமது ஆவியை அருளி அவரை ஆதரித்தார். (நியாயாதிபதிகள் 13:25; 14:3, 4, 6)—3/15, பக்கம் 26.
• ஒரு கிறிஸ்தவர் ஓர் அரசாங்க ஊழியருக்கு அவருடைய சேவைக்காக பணத்தையோ ஏதோவொரு அன்பளிப்பையோ கொடுக்கலாமா?
சட்டவிரோதமான காரியத்தை செய்வதற்கு, நீதியைப் புரட்டுவதற்கு, அல்லது பாரபட்சமான முறையில் சலுகை அளிப்பதற்கு ஓர் அரசாங்க அதிகாரிக்கு மதிப்புமிக்க பொருளை அல்லது பணத்தை லஞ்சமாகத் தருவது தவறாகும். ஆனால் ஒரு பொது ஊழியர் தனது கடமையைச் செய்வதற்காக அல்லது அவரிடமிருந்து சட்ட ரீதியான சேவையைப் பெறுவதற்காக அல்லது பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவருக்கு டிப்ஸ் அல்லது அன்பளிப்பு கொடுப்பது லஞ்சமாகாது.—4/1, பக்கம் 29.