ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ஆஸ்திரேலிய நாட்டுப்புறப் பகுதிகளில் தகுதியுள்ளவர்களைத் தேடுதல்
ஆஸ்திரேலியாவின் பரந்த உள்நாட்டு பகுதியிலுள்ள ஒதுக்குப்புறமான இடங்கள் சில, கடந்த 12 ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளுடைய பாதம் படாத இடங்களாக இருந்தன. ஆகவே, வடக்கு பிரதேசத்தின் தலைநகரான டார்வினில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் தகுதியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்காக ஒன்பது நாட்கள் தீவிர சாட்சி கொடுக்கும் ஏற்பாட்டைச் செய்தனர்.—மத்தேயு 10:11.
ஒரு வருடத்திற்கு முன்பே இந்த ஏற்பாட்டிற்காக கவனமாய் திட்டமிட ஆரம்பித்தனர். நியுஜிலாந்தைவிட மும்மடங்கு அதிக பரப்பளவைக் கொண்ட, அதாவது 8,00,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட, இந்தப் பிராந்தியத்தின் வரைபடங்களைத் தயாரித்தனர். அது எந்தளவு ஒதுக்குப்புறமானதென தெரியுமா? பண்ணை வீட்டை எடுத்துக்கொண்டால், வாயில் கதவுக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூரம் 30 கிலோமீட்டருக்கும் அதிகம்! மேலுமாக, சில பண்ணை வீடுகளோ 300 கிலோமீட்டர் அல்லது அதைவிட அதிகமான தூரத்தில் இருக்கின்றன!
இந்த ஏற்பாட்டில் மொத்தமாக 145 சாட்சிகள் பங்கேற்றனர். டாஸ்மேனியா போன்ற தூரமான இடங்களில் இருந்தும்கூட சிலர் வந்தார்கள். சிலர் கூடாரம் போடுவதற்குத் தேவையான பொருட்கள், ஸ்பேர் பார்ட்ஸ், பெட்ரோல் ஆகியவற்றோடு நான்கு சக்கர வாகனங்களில் வந்தார்கள். மற்றவர்கள் இழுவை வண்டிகளில் தங்களுடைய பொருட்களைக் கொண்டு வந்தார்கள். இவை மட்டுமல்லாமல், பொருத்தமான நான்கு சக்கர வாகனம் இல்லாதவர்களை அழைத்துச் செல்ல 22 இருக்கைகளைக் கொண்ட இரண்டு பேருந்துகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்தப் பிராந்தியத்தில் இருந்த சிறு நகரங்களில் சாட்சி கொடுப்பதற்கு கவனம் செலுத்தினார்கள்.
புறப்படுவதற்கு முன்பு, இந்த வித்தியாசமான பிராந்தியத்தில் நற்செய்தியை எப்படி பிரசங்கிப்பது என்பதை விளக்கும் பேச்சுகளுக்கும் நடிப்புகளுக்கும் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். உதாரணமாக, பழங்குடியினரின் சமுதாயத்தில் திறம்பட பிரசங்கிப்பதற்கு அவர்களுடைய சில நடத்தைகளையும், பழக்கவழக்கங்களையும் அறிந்திருப்பது அவசியம். வன உயிர்களைப் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட காரியங்களும் கலந்தாலோசிக்கப்பட்டன.
பிரஸ்தாபிகள் மிகச் சிறந்த அனுபவங்களைப் பெற்றார்கள். உதாரணமாக, ஒரு பழங்குடியினர் வசித்துவந்த பகுதியில் சகோதரர்கள் பொதுப் பேச்சுக்கு ஏற்பாடு செய்தார்கள். அங்கு வசிப்பவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற ஒரு பெண்மணி அவராகவே சென்று மக்களுக்கு அதை அறிவித்தார். அதன் பிறகு, அங்கு கூடி வந்தவர்களுக்கு 5 புத்தகங்களும், 41 சிற்றேடுகளும் அளிக்கப்பட்டன. மற்றொரு குடியிருப்பில், ஒரு பழங்குடி நபரிடம் கிழிந்துபோன பழைய கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிள்கூட இருந்தது. கடவுளுடைய பெயர் தெரியுமா என்று கேட்டபோது, தெரியும் என்று சொல்லி, தனது சட்டைப் பையிலிருந்து ஒரு பழைய காவற்கோபுர இதழை எடுத்தார். ‘உன் கடவுளாகிய யெகோவாவிடத்தில் உன் முழு இருதயத்தோடு அன்புகூருவாயாக’ என்ற மாற்கு 12:30 (NW) மேற்கோளை அதிலிருந்து வாசித்துக் காட்டினார். அத்துடன், “எனக்கு அந்த வசனம் ரொம்ப பிடிக்கும்” என்றும் கூறினார். பைபிளைப் பற்றி அவருடன் விரிவாக கலந்தாலோசித்த பிறகு, அவர் ஒரு புது பைபிளையும் மற்ற பைபிள் பிரசுரங்களையும் பெற்றுக் கொண்டார்.
கார்பென்டேரியா வளைகுடாவுக்கு அருகில், பத்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் கால்நடைப் பண்ணை வைத்திருக்கும் ஒருவர் ராஜ்ய செய்தியில் ஆர்வம் காண்பித்தார். என்னுடைய பைபிள் கதை புத்தகம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவுa போன்ற புத்தகங்களைக் காட்டியபோது, கிரியோல் மொழியில் ஏதாவது பிரசுரம் இருக்கிறதாவென அவர் கேட்டார். அது ஆச்சரியமான விஷயம், ஏனென்றால் அநேக பழங்குடியினருக்கு கிரியோல் மொழியில் பேசத் தெரிந்திருந்தாலும், சிலருக்கே வாசிக்கத் தெரிந்திருந்தது. ஆனால் அங்கே வேலை செய்த 50 பேரும் கிரியோல் வாசிக்கத் தெரிந்தவர்கள் என்பது பிற்பாடுதான் தெரிந்தது. அந்தத் தலைவர் கிரியோலில் பைபிள் பிரசுரங்களை சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார். அதோடு பிற்பாடு தொடர்புகொள்ள உதவியாக தனது தொலைபேசி எண்ணையும் சந்தோஷமாக கொடுத்தார்.
ஒன்பது நாட்கள் தீவிரமாக சாட்சி கொடுத்தபோது, மொத்தமாக 120 பைபிள்கள், 770 புத்தகங்கள், 705 பத்திரிகைகள், மற்றும் 1,965 சிற்றேடுகள் அளிக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, 720 மறுசந்திப்புகள் செய்யப்பட்டு 215 பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
உண்மையில், இந்தப் பரந்த நிலப்பரப்பில் சிதறியுள்ள தகுதியுள்ளவர்கள் பலருடைய ஆன்மீகப் பசி தீர்த்து வைக்கப்படுகிறது.—மத்தேயு 5:6.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 30-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆஸ்திரேலியா
வடக்குப் பிரதேசம்
டார்வின்
கார்பென்டேரியா வளைகுடா
சிட்னி
டாஸ்மேனியா