டாஸ்மேனியா—சிறிய தீவு, அரிய கதை
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
தென் பசிபிக்கில் நாங்கள் முதன்முதல் எதிர்ப்பட்டுள்ள தீவு இது. எந்தவொரு ஐரோப்பிய தேசத்தாலும் அறியப்படாததாய் இருந்ததால், இதற்கு ஆண்ட்டோனி வான் டிம்மன்ஸ்லண்ட் என்று பெயரிட்டுள்ளோம். மதிப்பிற்குரிய [எங்கள்] கவர்னர் ஜெனரலை கௌரவிப்பதற்காக அவ்வாறு பெயரிட்டுள்ளோம்.” நவம்பர் 25, 1642-ல் டச்சுக்காரரான ஆபல் டாஸ்மன் தெரிவித்த விஷயம் இது. இந்த நாள், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பழைய மாநிலமான டாஸ்மேனியா தீவை அவர் கண்டுபிடித்ததற்கு மறுநாள். a டாஸ்மன் அங்கு மக்களைக் காணவில்லை. அதற்குப் பதிலாக, தூரத்தில் நெருப்பு மூட்டப்பட்டு புகை எழும்பியதையும், அருகிலிருந்த மரங்கள் 1.5 மீட்டர் தூர இடைவெளியில் V-வடிவ அடையாளங்களால் செதுக்கப்பட்டிருந்ததையுமே கண்டார். அவர் எழுதியிருந்ததிலிருந்து, அந்த மரங்களைச் செதுக்கினவர்கள் யாராய் இருந்தாலும் சரி, அவர்கள் விநோதமாக மரம் ஏறும் பழக்கமுடையவர்களாகவோ, ராட்சதர்களாகவோதான் இருக்க வேண்டும்! உண்மையில், மரம் ஏறுவதற்கு வசதியாகவே அவை அவ்வாறு செதுக்கப்பட்டிருந்தன.
அதற்குப் பிறகு, வான் டிம்மன்ஸ்லண்ட், 130 ஆண்டுகளுக்கு கடல்வழி ஆய்வுப்பயண மார்க்கத்திலிருந்தே மறைந்துவிட்டது. பிரெஞ்சுக்காரரான மார்யான் டூஃப்ரெணியும் ஆங்கிலேயரான டபையஸ் ஃபர்னோவும் பார்வையிடச் சென்றபோது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. கேப்டன் ஜேம்ஸ் குக் 1777-ல் அங்குப் போய்ச் சேர்ந்தார். டூஃப்ரெணியைப் போலவே, அவரும் அந்தத் தீவின் வினோத மக்களாயிருந்த பழங்குடியினருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். என்றபோதிலும், அவரின் சந்திப்பு, ஓர் அவலத்துக்கு ஆரம்பமாய் இருந்தது; அதாவது, “நாகரிகம், மதம் ஆகியவற்றுக்கான வழியை சில தேசங்களுக்கு [குக்] திறந்துவைத்தவராய்த் திகழ்ந்தார், [ஆனால்] இவ்வினத்தவருக்கோ [பழங்குடியினருக்கோ], மரணத்தின் முன்னோடியாய்த் திகழ்ந்தார்” என்று டாஸ்மேனியாவின் வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் ஜான் வெஸ்ட் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட ஓர் அவலமான முடிவுக்கு எது வழிநடத்தினது?
டாஸ்மேனியா ஒரு “பேரரசின் சிறை” ஆகிறது
நாடுகடத்தப்படுவதோ, அல்லது சிறைக்கைதியாக்கப்படுவதோதான் ஆங்கிலேயர் தண்டனை அளிக்கும் முறையாய் இருந்தது. அவ்வாறே, டாஸ்மேனியா பிரிட்டனின் குற்றவாளிகளை ஒதுக்கிவைத்திருக்கும் காலனிகளுள் ஒன்றானது. 1803 முதல் 1852 வரை, ஆண்கள், பெண்கள், சிறுவர்—வெறும் ஏழு வயதேயுடைய இளம் சிறுவர்—உட்பட சுமார் 67,500 பேர் இங்கிலாந்திலிருந்து டாஸ்மேனியாவுக்கு, ஜெபப் புத்தகங்களைத் திருடினதிலிருந்து கற்பழித்தது வரையிலான குற்றங்களுக்காக நாடுகடத்தப்பட்டனர். என்றபோதிலும், பெரும்பாலான குற்றவாளிகள், குடியேறியவர்களுக்காகவோ, அரசு திட்டங்களுக்காகவோ வேலைசெய்து வந்தனர். “10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே . . . குற்றவாளிகளை ஒதுக்கிவைத்திருக்கும் காலனிக்கு அனுப்பப்பட்டனர்; அவ்வாறு அனுப்பப்பட்டவர்களும் குறுகிய காலப்பகுதிகளுக்கே அங்கிருந்தனர்” என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. டாஸ்மன் தீபகற்பத்திலுள்ள போர்ட் ஆர்தர், குற்றவாளிகளுக்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த முக்கியக் காலனியாய் இருந்தது. ஆனால், ரவுடித்தனமான குற்றவாளிகள், “வாதனைக்கே உரிய புனிதத்தலம்” என்று நினைவில் கொள்ளப்பட்ட மக்வாரீ துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்தக் குறுகிய துறைமுக நுழைவாயில், நரக வாசல் என்ற பயமுறுத்தும் பெயரைச் சம்பாதித்தது.
இதுவே ஆஸ்திரேலியா (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், ஆரம்பக் கட்டத்திலிருந்த இந்தக் காலனியின் மற்றொரு அம்சமான, ஆன்மிகத்தின் குறைபாட்டை டாக்டர் ருடால்ஃப் ப்ராஷ் விளக்குகிறார். அவர் எழுதுவதாவது: “ஆரம்பத்திலிருந்தே, ஆஸ்திரேலியாவில் [டாஸ்மேனியா உட்படத்தான்] மதம் அசட்டை செய்யப்பட்டது, புறக்கணிக்கப்பட்டது; பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்த தலைவர்களைக் கொண்ட தொகுதியால் அதன் சொந்த லாபத்திற்காகவே, சரியாகவும் தவறாகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் காலனி, கடவுளிடம் ஜெபம் செய்யாமலே அடிக்கல் நாட்டப்பட்டது; ஆஸ்திரேலிய மண்ணில் முதல் மத ஆராதனைக் கூட்டம் நடத்தப்படுவதும் பின்புதான் திட்டமிடப்பட்டது.” வட அமெரிக்காவைச் சேர்ந்த பில்கிரிம்கள் சர்ச்சுகளைக் கட்டின அதே சமயத்தில், “ஆஸ்திரேலியாவின் ஆரம்பக் குடிமக்கள், சர்ச்சுக்குப் போய்வரும் களைப்பூட்டும் நிலையிலிருந்து விடுதலையாவதற்காக தங்கள் முதல் சர்ச்சை எரித்தனர்” என டாஸ்மேனியாவின் வரலாறு என்ற புத்தகம் கூறுகிறது.
ஏற்கெனவே இருந்த இந்தத் தார்மீக வியாதி, ஏராளமாய்க் கிடைத்துவந்த ரம்மால் தொற்றுநோயாகிவிட்டது. ராணுவத்தைச் சேராதவருக்கும் ராணுவ வீரருக்கும் ஒன்றுபோல், ‘வளம் பெறுவதற்கான நிச்சயப் பாதையாய்’ ரம் இருந்ததாக வரலாற்று வல்லுநர் ஜான் வெஸ்ட் கூறுகிறார்.
என்றபோதிலும், சில சமயங்களில் உணவு அரிதாகவே கிடைத்தது. இந்தச் சமயங்களில், பழங்குடியினர் ஈட்டிகளால் வேட்டையாடிக் கொன்றுவந்த அதே விலங்குகளை வேட்டையாட, விடுதலைபெற்ற குற்றவாளிகளும் குடியேறியவர்களும் துப்பாக்கியைப் பயன்படுத்தினர். ஆகவே இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டனவென்றால், அது புரிந்துகொள்ளத்தக்கதே. இப்போது, வெள்ளையின அகந்தையால் வந்த பகைமையும் ஏராளமான ரம்மும், ஒத்துப்போக முடியாத பண்பாட்டு வேற்றுமைகளும், எரிகிற நெருப்பில் எண்ணெய்யாகச் சேர்ந்துகொண்டன. ஐரோப்பியர்கள் எல்லைக்கோடு வரைந்து வேலி அடைத்துக்கொண்டனர்; பழங்குடியினரோ வேட்டையாடவும் நாடோடிகளாய்க் கூடிவாழவும் செய்தனர். கலகமூட்ட தேவைப்பட்டதெல்லாம், ஒரு சிறிய பற்றவைப்புப் பொறிபோன்ற செயலே.
ஒரு ஜனம் மறைகிறது
அந்தப் பொறி மே 1804-ல் பற்றவைக்கப்பட்டது. ஒரு ராணுவ அதிகாரியான மூர் என்பவர் தலைமையிலான ஒரு பெரிய கும்பல், தூண்டுதல் இல்லாமலே, வேடர் தொகுதியொன்றில் அடங்கியிருந்த பழங்குடியினரான ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் குறிபார்த்து சுட்டபோது, அவர்களில் பலரைக் கொன்றது, பலரைக் காயப்படுத்தினது. குண்டுகளுக்கெதிராக, ஈட்டிகளோடும் கற்களோடும் செய்யப்பட்ட “கறுப்பர் யுத்தம்” தொடங்கியிருந்தது.
பழங்குடியினர் கொல்லப்பட்டதை முன்னிட்டு ஐரோப்பியர்களில் பலர் பின்வாங்கினர். ஆளுநர் சர் ஜார்ஜ் ஆர்தர் மிகவும் வேதனையுற்றதால், ‘பழங்குடியினரின் விருப்பத்துக்கு மாறாக அவர்களுக்கு அரசால் இழைக்கப்பட்ட தீங்கை ஈடுசெய்ய’ தேவைப்படும் அனைத்தையும் செய்யப்போவதற்கான தன் விருப்பத்தைத் தெரிவித்தார். இவ்வாறு, பழங்குடியினரையெல்லாம் “கூட்டி” அவர்களை “நாகரிகப்படுத்த” ஒரு திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். “கறுப்பர் எல்லை” என்ற ஒரு திட்டத்தில், அந்த பழங்குடியினரைப் பிடித்துவரவும், அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் மறுபடியும் குடியேற்றவும், சுமார் 2,000 ராணுவ வீரர்களும், குடியிருப்பாளர்களும், குற்றவாளிகளும் புதர்களைக் கடந்து சென்றனர். ஆனால் அந்த வேலை இழிவுபடுத்தும் ஒரு தோல்வியாகவே இருந்தது; அவர்கள் ஒரு பெண்ணையும் ஒரு பையனையுமே கைப்பற்றினர். பிறகு, மெத்தடிஸ்ட் வகுப்பைச் சேர்ந்தவரான, புகழ்பெற்ற ஜார்ஜ் ஏ. ராபின்ஸன், அவர்களைச் சாந்தப்படுத்தும் வகையிலான ஓர் அணுகுமுறைக்குத் தலைமை வகித்துச் சென்றார்; அது பயனளித்தது. அந்தப் பழங்குடியினர் அவரை நம்பி, டாஸ்மேனியாவுக்கு வடக்கே இருக்கும் ஃபிளிண்டர்ஸ் தீவில் அவர்கள் மறுபடியும் குடியேறும்படி அவர் செய்த ஏற்பாட்டையும் ஒப்புக்கொண்டனர்.
ஆஸ்திரேலியாவின் ஒரு வரலாறு (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில், மார்ஜரி பார்னார்டு என்பவர், ராபின்ஸனின் சாதனையைப் பற்றிக் கூறுவதாவது: “உண்மையில், இது சிநேகப்பான்மையான ஒரு செயலாய்த் தோன்றினபோதிலும், ஒருவேளை அவரையறியாமலே, பழங்குடியினருக்குத் தீங்கு ஏற்படுவதில் விளைவடைந்தது. ஃபிளிண்டர்ஸ் தீவில், பாஸ் ஜலசந்தியில் எதிர்பாராதவிதமாக, பூர்வீகக் குடிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு ராபின்ஸன் காப்பாளர் ஆனார். அவர்கள் வலுவிழந்து இறந்தனர்.” துப்பாக்கிகளால் சுடப்படுவதற்குப் பதிலாக, வெள்ளையினத்தவரின் வாழ்க்கைப் பாணியாலும் உணவுப்பழக்கத்தாலும் வற்புறுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்துவந்த அவர்கள், காவுகொள்ளப்பட்டனர். “இனக்கலப்பற்ற கடைசி டாஸ்மேனிய பழங்குடியினரில் ஒருத்தியாய் இருந்தவள், ஃபானீ காக்ரன் ஸ்மித். அவளும் ஹோபர்ட்டில் 1905-ல் இறந்தாள்” என ஒரு புத்தகம் கூறுகிறது. அதிகாரிகள் மத்தியில் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கிறது. சிலர், ஹோபர்ட்டில் 1876-ல் இறந்த ட்ரூகானீனி என்ற பெண்ணைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்; மற்றவர்கள், கங்காரு தீவில் 1888-ல் இறந்த ஒரு பெண்ணைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். டாஸ்மேனிய பழங்குடியின் கலப்பின பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இன்று உயிருடனும் நல்ல நிலையிலும் இருக்கின்றனர். மனிதவர்க்கத்தால் தொடர்ந்து செய்யப்பட்ட துர்ப்பிரயோகங்களின் பட்டியில், இந்த நிகழ்ச்சி, “டாஸ்மேனியாவின் மிகப்பெரிய அவலம்” என பொருத்தமாகவே அழைக்கப்பட்டிருக்கிறது. என்றபோதிலும், “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு” என்ற பைபிள் சத்தியத்தையே இது அழுத்திக்காட்டுகிறது.—பிரசங்கி 8:9.
டாஸ்மேனியாவின் காணத்தக்க முரண்பாடுகள்
இன்று, அருங்காட்சியகங்களையோ, நூல்நிலையங்களையோ, சிறையின் அழியும் நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகளையோ நீங்கள் காணாவிட்டால், இவ்வழகிய தீவின் ஆரம்பகால துயர்மிக்க அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்வது அரிது. ரோம், சப்போரோ, பாஸ்டன் ஆகிய நகரங்கள் நிலநடுக்கோட்டிற்கு வடக்கே எவ்வளவு தூரத்தில் இருக்கின்றனவோ, அவ்வளவு தூரத்தில்தான் டாஸ்மேனியாவும் நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே அமைந்துள்ளது. இந்தத் தீவில் எந்த இடமும் கடலிலிருந்து 115 கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் இல்லாவிட்டாலும், அதன் முரண்பாடான வரலாற்றைப் போலவே, அதன் புவியியலும் முற்றிலும் முரண்பாடானது.
டாஸ்மேனியாவின் மொத்த நிலப்பரப்பில், 44 சதவீதம் காடாகவும் 21 சதவீதம் தேசிய பூங்காவாகவும் இருக்கின்றன. இவை வழக்கத்துக்கு மாறான விகிதங்கள்! சிறிய டாஸ்மேனியாவைப் பற்றிய உண்மைகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின்படி, “மேற்கத்திய டாஸ்மேனியாவிலுள்ள, உலக பொக்கிஷப் பகுதி, (world heritage) உலகிலேயே சேதப்படுத்தப்படாதிருந்த மிகப்பெரிய கடைசியான மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் ஒன்று.” மழையாலும் பனியாலும் நிரப்பப்படும் ஏரிகளும், ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும்—உணவுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பயன்படுத்தப்படும் மீன் வகைகள் நிறைந்திருப்பவை—பென்சில் பைன் மரங்களும், யூக்கலிப்டஸ் மரங்களும், பசுமை மாறா நறுமண மலர்ச்செடிகளும், பிளாக்வுட் மரங்களும், சாஸஃபிரா மரங்களும், லெதர்வுட் மரங்களும், தண்டுகளை நுனியில் கொண்ட பைன் மரங்களும், ஹூயோன் பைன் மரங்களும் இன்னும் பலவகை மரங்களும் கொண்ட காடுகள் செழித்து வளர உதவுகின்றன. மர அணிவரிசையைக் கொண்ட இந்தப் பீடபூமியின் மத்திப மேற்குப் பகுதியிலுள்ள உயரமான சமவெளிகளும், பெரும்பாலும் பனி படர்ந்திருக்கும் அதன் உச்சிகளும் இயற்கைப் பிரியர்களை மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் எதிர்ப்புகள் ஏதும் இன்றி இந்த ‘உலக பொக்கிஷத்தை’ பாதுகாக்க முடியவில்லை. சுரங்கம் வெட்டுதல், காகிதம் செய்தல், நீரிலிருந்து மின்சக்தி எடுத்தல் ஆகிய தொழில்துறைகளில் செய்யப்படும் முன்னேற்றங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுள்ள மக்கள் இன்னும் குமுறிக்கொண்டிருக்கின்றனர். சுரங்கம் தோண்டப்பட்டு வரும் க்வீன்ஸ்டௌன் நகரத்தினுடைய, சந்திரனின் மேற்பரப்பையொத்த இயற்கை நிலக்காட்சி, முன்யோசனையின்றி வாய்ப்புவளங்களைச் சுரண்டியெடுப்பதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளுக்கு கடும் நினைப்பூட்டுதலாய் இருக்கிறது.
அங்கேயே பிறந்து வளரும் விலங்குகளும்கூட துன்புற்றிருக்கின்றன—குறிப்பாக டாஸ்மேனிய புலி எனப்படும் பழுப்பு நிற, நாய்போன்ற பைப்பாலூட்டியான தைலசைன் (thylacine). அதன் முதுகுப் பகுதியிலும் பின்புறத்திலும் குறுக்காகக் காணப்படும் கறுப்புநிற வரிகளால் அதற்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. எதிர்பாராவிதமாக, கொழுத்ததாக இல்லாத கூச்ச சுபாவமுள்ள இந்த மாமிசப்பட்சிணி, கோழி, ஆடு ஆகியவற்றை உணவுக்காக வேட்டையாடினது. தைலசைனை அழிப்பதற்காக வழங்கப்பட்ட கவர்ச்சிகரமான சன்மானங்களின் விளைவாக, அது 1936 வாக்கில் மறைந்துபோனது.
மற்றொரு வினோதமான டாஸ்மேனிய பைப்பாலூட்டியான, டாஸ்மேனியன் டெவில் எனப்படும் விலங்கு இன்றும் உயிர்வாழ்கிறது. அதன் பலம்வாய்ந்த தாடைகளையும் பற்களையும் கொண்டு, ஆறிலிருந்து எட்டு கிலோகிராம் எடையுள்ள சதைப்பற்றுள்ள இந்தத் தோட்டி, செத்துப்போன ஒரு முழு கங்காருவையும் அதன் மண்டையோட்டோடு சேர்த்து உண்ணவல்லது.
குட்டையான வாலுடைய கடல்வாழ் பறவை அல்லது மட்டன்பேர்டுக்கும் டாஸ்மேனியா பேர்பெற்றது. டாஸ்மேனிய கடலில் அதன் இடப்பெயர்ச்சியை ஆரம்பித்து, பசிபிக் பெருங்கடல் வழியாக நிஜமாகவே உலகைச் சுற்றிச் சென்ற பிறகு, அது ஒவ்வொரு ஆண்டும் அதே மணற்பாங்கான பொந்துக்குத் திரும்புகிறது—உண்மையிலேயே அதை வடிவமைத்துப் படைத்தவருக்கு கனத்தைக் கொடுக்கும் ஒரு வீரச்செயல் இது.
கடல்வாழ் பறவையின் இரவு நேர இனப்பெருக்கப் பகுதிக்கு அருகில் மற்றொரு பறவை வாழ்கிறது—இது நீருக்கடியில் “பறக்கிறது”—விரும்பத்தக்க, ஒரு கிலோகிராம் எடையுள்ள, அடர்ந்த உரோமம் கொண்ட சிறிய அலகுடைய இது, மாயக்கவர்ச்சியுடைய பென்குவின் என்று அழைக்கப்படுகிறது. பென்குவின்களிலேயே மிகச் சிறியதான இது, மிக அதிக கூச்சல் போடும் பறவையாயும் இருக்கிறது! இதன் பாடலும் நடனங்களும் வேறுபட்டாலும், குரலாலும், உடலின் சுறுசுறுப்பாலும் சில சமயங்களில் உச்ச ஸ்தாயியை எட்டுகின்றன. காதல்வயப்படும்போது, ஒரு ஜோடியானது, ஒன்றுக்கொன்று கொண்டுள்ள பாசத்தை உறுதிப்படுத்த, டூயட்டும்கூட பாடும். என்றாலும், விசனகரமாக, செவுள்களின் மூலம் மீனைச் சிக்கவைக்கும் மீனவர்களின் வலைகளாலும் (gill nets) சிந்தப்பட்ட எண்ணெயாலும், உணவென்று தவறாகக் கருதி உண்ணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களாலும், அல்லது நாய்களாலும் காட்டுப்பூனைகளாலும் இவற்றுள் பல கொல்லப்படுகின்றன.
இந்தத் தீவின் வெகு ரம்மியமான அம்சம்
இப் பீடபூமியின் மத்திபப் பகுதியின் முகட்டிலிருந்து வடக்கிலோ கிழக்கிலோ பார்த்தால், டாஸ்மேனியாவின் கண்கவர் பகுதியைப் பார்ப்பீர்கள். அதன் பண்படுத்தப்பட்ட சாக்லேட் நிற வயல்களையும், வளைந்து வளைந்து ஓடும் ஆறுகளையும் சிற்றோடைகளையும், வழிநெடுக மரங்களைக் கொண்ட அகன்ற சாலைகளையும், ஆங்காங்கே ஆடுமாடுகள் மேயும் மரகதப் பச்சைப் புல்வெளிகளையும் நீங்கள் காண்பீர்கள். வடபுறமுள்ள லில்லீடேல் நகருக்கு அருகில், ஜனவரி மாதத்தின்போது, லாவண்டர் மலர்த் தோட்டங்கள் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கையில், அது, நாட்டுப்புறத்திலுள்ள பலவண்ணக் கலவையுடன் வெளிறிய வயலட் நிறத்தைக் கூட்டி, வசீகரிக்கும் நறுமணத்தை வீசுகிறது.
டர்வண்ட் நதியின் அருகிலமைந்த, டாஸ்மேனியாவுக்கு ஆப்பிள் தீவு என்ற பெயரை ஈட்டித்தந்த ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ளது தலைநகரான ஹோபர்ட்; இதன் ஜனத்தொகை ஏறக்குறைய 1,82,000. இங்கு, 1,270 மீட்டர் உயர, மிகப் பெரிய இருண்ட வெல்லிங்டன் மலையின் செல்வாக்கு காணப்படுகிறது. மழையில்லாத நாளில், பெரும்பாலும் பனிமூடிய இந்த மலையிலிருந்து, பறவை பறக்கும் உயரத்தில் கீழேயுள்ள பொருட்களைப் பார்த்தால், இந்த நகர் தெளிவாகத் தெரியும். ராணுவ அதிகாரி ஜான் போவணும், 35 குற்றவாளிகளை உள்ளடக்கிய 49 பேர்கொண்ட தன் ஆட்களுடன் முதன்முதலில் ரிஸ்டன் கோவில் கரைசேர்ந்த ஆண்டாகிய 1803 முதல், ஹோபர்ட் நகர் வெகுவாய் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. உண்மையில், கேன்வாஸ் கப்பல்களும், கிறீச்கிறீச்சென்று ஒலியெழுப்பும் பழைய பாய்மரக் கப்பல்களும் இரந்த காலம் மலையேறிவிட்டது; ஆனாலும், தண்டனைப்பயணத்தைப் போன்றதாய், காற்றை எதிர்த்துச்செல்ல உதவும் முக்கோண வடிவப் பாய்மரமும், நேராய் அமைந்துள்ள கப்பல் ஃபிரேமும் கொண்ட பந்தய இயந்திரப்படகும் சிட்னியிலிருந்து ஹோபர்ட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை பயணம் சென்று, ஹோபர்ட் நகரின் உட்பகுதியில் இருந்த மக்கள் கூட்டத்தை மகிழ்விக்க அதிகபட்ச வேகத்தில் ஓட்டுவது, முற்காலங்களைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது.
வாதனை நாட்டிலிருந்து ஆவிக்குரிய பரதீஸ்
லான்செஸ்டனில் நடைபெற்ற 1994-ம் ஆண்டு “தேவ பயம்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகியிருந்த 2,447 பிரதிநிதிகளில் ஒருவராய் இருந்த ஜெஃப்ரீ பட்டர்வர்த், தன் நினைவுக்குவந்த விஷயங்களைப் பற்றி தெரிவிப்பதாவது: “டாஸ்மேனியா முழுவதிலும் 40 சாட்சிகளுக்கு மேற்படாமல் இருந்த காலம் என் நினைவுக்கு வருகிறது.” இப்போது சுமார் 26 சபைகளும் 23 ராஜ்ய மன்றங்களும் இருக்கின்றன.
“ஆனால் சூழ்நிலைகள் எப்பொழுதுமே சாதகமாய் இருக்கவில்லை” என்று ஜெஃப் மேலும் சொல்கிறார். “உதாரணமாக, 1938-வது ஆண்டுவாக்கில், நானும் டாம் கிட்டோவும், ராட் மட்விலீயும், தோள்களில் முன்னும் பின்னும் தொங்கவிடப்பட்ட அட்டைகளை (sandwich boards) அணிந்துகொண்டு, ‘உண்மைகளை எதிர்ப்படுங்கள்’ என்ற பொதுப் பேச்சை விளம்பரப்படுத்தி வந்தோம். வேதனைதரும் வகையில் பொய் மதத்தை அம்பலப்படுத்தும் பேச்சாக, அது ஒரு ரேடியோ இணைப்பு மூலமாக லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படவிருந்தது. நான் என் கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டபோது, இளைஞர் கும்பல் ஒன்றால் அவர்கள் அவமானமாய் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தனர். காவல்துறை அதிகாரிகளோவென்றால் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்! உதவிக்காக நான் ஓடினபோது, விரைவிலேயே எனக்கும் அடிவிழுந்தது. ஆனால் ஒருவர் பின்புறமிருந்து என் சட்டையைப் பிடித்து என்னை இழுத்துச்சென்றார். என்னை அடிப்பதற்குப் பதிலாக, ‘அவர்களை விட்டுவிடுங்கள்!’ என்று உரத்த குரலில் அவர் கத்தினார். பிறகு, என்னைப் பார்த்து, ‘வாதிக்கப்படுவது என்றால் என்னவென்று எனக்குத் தெரியும் அன்பரே, நான் அயர்லாந்து நாட்டவன்’ என்று அமைதியாக சொன்னார்.”
அந்த ஆரம்ப கால பயனியர்களை யெகோவா ஆசீர்வதித்தார். ஏனென்றால், 4,52,000 பேரைக்கொண்ட இத்தீவின் எல்லா பாகங்களையும் இன்று கடவுளுடைய ராஜ்ய நற்செய்தி சென்றெட்டிவிட்டது. அந்தக் கொடிய ஆரம்ப நாட்களில் அத்தனை அநியாயமாய் இறந்துள்ள அனைவரையும்—கறுப்பர்களையும் வெள்ளையர்களையும்—சுத்திகரிக்கப்பட்ட ஒரு பூமியில் வாழ்த்தி வரவேற்பதை ஆரம்ப காலக் குற்றவாளிகள், பழங்குடியினர் ஆகியவர்களின் பரம்பரையைச் சேர்ந்த பலரும் எதிர்நோக்கியிருக்கின்றனர்; ஏனெனில் “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று” பைபிள் வாக்குக்கொடுக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) ‘முந்தினவை இனி நினைக்கவும்படாதபடி’ இந்த மாற்றம் அவ்வளவு முற்றிலுமாய் நடைபெறும்.—ஏசாயா 65:17.
[அடிக்குறிப்பு]
a டாஸ்மேனியா என்று, நவம்பர் 26, 1855-ல் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டது. மிகப் பழைய மாநிலம் நியூ சௌத் வேல்ஸ்.
[பக்கம் 25-ன் படங்கள்/வரைப்படம்]
மேலே: க்ரேடில் மலையும் டோவ் ஏரியும்
மேல் வலப்புறம்: டாஸ்மேனியன் டெவில்
கீழ் வலப்புறம்: தென்மேற்கு டாஸ்மேனியாவின் மழைக் காடு
டாஸ்மேனியா
ஆஸ்திரேலியா
[படத்திற்கான நன்றி]
டாஸ்மேனியன் டெவிலும், டாஸ்மேனியாவின் வரைபடமும்: Department of Tourism, Sport and Recreation – Tasmania; ஆஸ்திரேலியாவின் வரைபடம்: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.