உங்கள் விசுவாசம் செயல்படத் தூண்டுகிறதா?
முடக்குவாதத்தில் கஷ்டப்படும் தன் வேலைக்காரனை இயேசுவால் சுகப்படுத்த முடியுமென நூற்றுக்கு அதிபதி உறுதியாய் நம்பினார். ஆனால் அவரை தன் வீட்டுக்கு வரும்படி அந்த அதிபதி அழைக்கவில்லை; ஒருவேளை தான் அதற்குத் தகுதியற்றவன் என்றோ, தான் ஒரு புறதேசத்தான் என்றோ எண்ணியிருக்கலாம். இருப்பினும் அவர் யூத மூப்பர்களில் சிலரை இயேசுவிடம் அனுப்பி, “ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்” என சொல்லச் சொன்னார். தூரத்திலிருந்துகூட தம்மால் குணமாக்க முடியுமென நூற்றுக்கு அதிபதி நம்பியதை அறிந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்த கூட்டத்தாரிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 8:5-10; லூக்கா 7:1-10.
இந்தச் சம்பவம், விசுவாசத்திற்கு அடிப்படையான ஓர் அம்சத்தின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது. உண்மையான விசுவாசம் மனதளவில் இருப்பதில்லை; அது செயலில் காட்டப்படுகிறது. “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” என பைபிள் எழுத்தாளர் யாக்கோபு விளக்கினார். (யாக்கோபு 2:17) விசுவாசத்தை செயலில் காட்டாவிட்டால் என்ன நடக்கும் என்பதை நிஜ சம்பவத்தில் காணும்போது இந்த உண்மை இன்னும் பளிச்சென புரிகிறது.
பொ.ச.மு. 1513-ல் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் மூலம் இஸ்ரவேல் தேசம் யெகோவா தேவனுடன் ஒரு பந்தத்தில் பிணைக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையின் மத்தியஸ்தரான மோசே இவ்வாறு கடவுளுடைய வார்த்தையை இஸ்ரவேலரிடம் சொன்னார்: “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், . . . பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்.” (யாத்திராகமம் 19:3-6) ஆம், அவர்கள் கீழ்ப்படிந்து நடந்தால் பரிசுத்தமாக இருக்க முடியும்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு யூதர்கள் நியாயப்பிரமாணத்தில் உள்ள நியமங்களைப் பின்பற்றுவதைக் காட்டிலும் அதைப் படிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். மேசியாவாகிய இயேசுவின் வாழ்க்கையும் காலமும் என்ற ஆங்கில நூலில் அதன் எழுத்தாளர் ஆல்ஃபிரெட் எட்டர்ஷைம் இவ்வாறு எழுதினார்: “செயல்களைவிட படிப்புதான் மிக முக்கியமென ‘உலக மகான்கள்’ [அதாவது, ரபீக்கள்] வெகு காலத்திற்கு முன்பே முடிவு செய்தார்கள்.”
கடவுளுடைய சட்டதிட்டங்களை ஊக்கமாகப் படிக்கும்படி பூர்வ இஸ்ரவேலருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது உண்மைதான். கடவுள்தாமே இவ்வாறு கூறினார்: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ (உபாகமம் 6:6, 7) நியாயப்பிரமாணத்திற்கு இசைவான செயல்களைவிட அல்லது அது குறிப்பிடுகிற செயல்களைவிட படிப்பதுதான் மிக முக்கியமென யெகோவா எப்போதாவது சொல்லியிருந்தாரா? இக்கேள்விக்கான பதிலை ஆராய்வோம்.
மேதாவிப் படிப்பு
நியாயப்பிரமாணத்தைப் படிப்பதற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பது இஸ்ரவேலருக்கு நியாயமாகப் பட்டது; ஏனென்றால் ஒரு யூத பாரம்பரியத்தின்படி, ஒவ்வொரு நாளும் நியாயப்பிரமாணத்தைப் படிப்பதற்குக் கடவுள்தாமே மூன்று மணிநேரம் செலவிட்டதாக நம்பப்பட்டது. ‘கடவுளே தவறாமல் நியாயப்பிரமாணத்தைப் படிக்கிறாரென்றால் அவருடைய பூமிக்குரிய சிருஷ்டிகளும் முழுமூச்சோடு படிக்க வேண்டும் அல்லவா?’ என யூதர்கள் சிலர் நியாய விவாதம் செய்ததற்குரிய காரணத்தை உங்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
பொ.ச. முதல் நூற்றாண்டிற்குள் ரபீக்கள் நியாயப்பிரமாணத்தை ஆராய்வதிலும் விளக்குவதிலும் அந்தளவு மூழ்கிப் போனதால் அவர்களது சிந்தனைகள் முழுக்க முழுக்க திரிக்கப்பட்டு போயின. “வேதபாரகரும் பரிசேயரும் . . . சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொட மாட்டார்கள்” என இயேசு சொன்னார். (மத்தேயு 23:2-4) சாமானியர்கள் பின்பற்றுவதற்கு எண்ணற்ற சட்டதிட்டங்களை அந்த மதத் தலைவர்கள் அவர்கள் மேல் சுமத்தினார்கள்; அதே சமயத்தில் அவற்றைத் தாங்கள் பின்பற்றாதிருப்பதற்குத் தந்திரமான வழிகளையும் உருவாக்கினார்கள். அதோடு, மேதாவிப் படிப்பில் மூழ்கிப்போனதால், “நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்”டார்கள்.—மத்தேயு 23:16-24.
சதுசேயரும் பரிசேயரும் தங்கள் சுயநீதியை நிலைநாட்டுவதற்காக, தாங்கள் கடைப்பிடிப்பதாகச் சொல்லிக்கொண்ட நியாயப்பிரமாணத்தையே மீறியது எவ்வளவு கேலிக்குரியதாக இருந்தது! பல நூற்றாண்டுகளாக நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் குறித்தும் நுட்ப விவரங்களைக் குறித்தும் விவாதித்து வந்தார்கள், ஆனால் அது அவர்களைக் கடவுளிடம் நெருங்கி வரச் செய்யவில்லை. இது, ‘வீண்பேச்சுகள்,’ ‘விபரீதங்கள்’ (அதாவது, முரண்பாடான கருத்துகள்), பொய்யான ‘ஞானம்’ என்றெல்லாம் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டது போன்றே வழிவிலகிச் செல்வதற்குச் சமமாக இருந்தது. (1 தீமோத்தேயு 6:20, 21) அதோடு மற்றொரு முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஓயாமல் அவர்கள் ஆராய்ச்சி செய்தது அவர்களைப் பெரிதும் பாதித்தது. இதனால், சரியான விதத்தில் செயல்படத் தூண்டுகிற விசுவாசத்தை அவர்கள் பெற முடியாமல் போயிற்று.
அறிவில் களஞ்சியம், விசுவாசத்தில் சூனியம்
கடவுளுடைய சிந்தனைக்கும் யூத மதத் தலைவர்களின் சிந்தனைக்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு சற்று முன்பு மோசே அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள்.” (உபாகமம் 32:46) கடவுளுடைய மக்கள் நியாயப்பிரமாணத்தை மேதாவித்தனமாக படிப்பவர்களாக மட்டுமல்ல, அதன்படி நடப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது.
இருந்தாலும், இஸ்ரவேலர் அடிக்கடி யெகோவாவுக்கு விசுவாசமற்றவர்களாக நடந்துகொண்டார்கள். அவர்கள் சரியான செயல்களை நடப்பிப்பதற்கு மாறாக “விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும்” போனார்கள். (உபாகமம் 9:23; நியாயாதிபதிகள் 2:15, 16; 2 நாளாகமம் 24:18, 19; எரேமியா 25:4-7) இறுதியில், இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாமல் போனபோது அவர்களுடைய விசுவாசமற்ற போக்கு உச்சத்தை எட்டியது. (யோவான் 19:14-16) இதனால் யெகோவா தேவன் அவர்களைப் புறக்கணித்து, பிறதேசத்தாரிடம் தமது கவனத்தைத் திருப்பினார்.—அப்போஸ்தலர் 13:46.
அறிவில் களஞ்சியமாய் இருந்தால் போதும், விசுவாசத்தில் சூனியமாக இருந்தால் பரவாயில்லை என்று அவர்கள் நினைத்தது தவறு; அதே தவறை நாமும் செய்யாதபடி கவனமாய் இருக்க வேண்டும். வேறு விதத்தில் சொன்னால், அறிவுக் களஞ்சியமாகத் திகழும் எண்ணத்தோடு மட்டுமே நாம் பைபிளைப் படிக்கக் கூடாது. திருத்தமான அறிவு நம் இருதயத்திற்குள் செல்ல வேண்டும், அது நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த வேண்டும். காய்கறித் தோட்டம் போடுவதைப் பற்றி படித்துவிட்டு எந்த விதையையும் விதைக்காவிட்டால் பயனுண்டோ? தோட்டத்தைப் பண்படுத்தி, பராமரிப்பதைப் பற்றி ஓரளவு அறிவைப் பெற்றுக்கொள்வோம் என்பது உண்மைதான், ஆனால் எதையும் அறுவடை செய்ய முடியாதே! அதைப் போலவே, பைபிள் படிப்பின் மூலம் கடவுள் எதிர்பார்க்கும் காரியங்களைக் கற்றுக்கொள்பவர்கள் அந்தச் சத்திய விதைகளை இருதயத்தில் ஊன்ற வேண்டும்; அப்போதுதான் அவை முளைத்து, அவர்களைச் செயல்படத் தூண்டும்.—மத்தேயு 13:3-9, 19-23.
‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாய் இருங்கள்’
“விசுவாசம் கேள்வியினாலே வரும்” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோமர் 10:17) கடவுளுடைய வார்த்தையை முதன்முதல் கேட்பதிலிருந்து அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது வரை இயல்பாக அடுத்தடுத்து நடக்கும் முன்னேற்றப் படிகள் நித்திய வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பை நமக்கு அளிக்கிறது. ஆம், ‘நான் கடவுளையும் கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்’ என சொன்னால் மட்டும் போதாது, அதிகத்தைச் செய்ய வேண்டும்.
ஆகவே, செயல்படத் தூண்டுகிற விசுவாசம் தம் சீஷர்களுக்குத் தேவை என்பதை இயேசு இப்படியாக ஊக்குவித்தார்: “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” என்றார். (யோவான் 15:8) பிறகு அவருடைய ஒன்றுவிட்ட சகோதரர் யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.” (யாக்கோபு 1:22) ஆனால் அதன்படி செய்கிறவர்களாக இருப்பது எப்படி? அதை இயேசு சொல்லிலும் செயலிலும் காட்டினார், அதாவது கடவுளைப் பிரியப்படுத்துவது எப்படியென காட்டினார்.
இயேசு பூமியிலிருந்தபோது, ராஜ்யம் சம்பந்தமாகக் கடவுள் அக்கறை காட்டுபவற்றை முன்னேற்றுவிப்பதற்கும் அவருடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கும் கடினமாய் பாடுபட்டார். (யோவான் 17:4-8) எப்படி? வியாதியஸ்தரையும் ஊனமுற்றோரையும் அற்புதமாய் சுகப்படுத்தியது அநேகருக்கு நினைவிருக்கலாம். ஆனால் முக்கியமாய் எதற்காக பாடுபட்டார் என்பதை மத்தேயு எழுதிய சுவிசேஷம் தெளிவுபடுத்துகிறது: “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்[தார்].” இயேசு ஊழியம் செய்கையில், சில நண்பர்களிடமும் அறிமுகமானவர்களிடமும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடமும் மட்டுமே பேசவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். எப்படியெல்லாம் பயணிக்க முடியுமோ அப்படியெல்லாம் பயணித்து அவர் “கலிலேயா எங்கும்” போய் ஜனங்களை சந்திக்கக் கடினமாய் பிரயாசப்பட்டார்.—மத்தேயு 4:23, 24; 9:35.
சீஷராக்கும் வேலையில் பங்கு கொள்ளும்படியும் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கட்டளையிட்டார். அதோடு, அவர்கள் பின்பற்றுவதற்குப் பூரண முன்மாதிரியை வைத்தார். (1 பேதுரு 2:21) அவர் தம் உண்மையுள்ள சீஷர்களிடம், “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று சொன்னார்.—மத்தேயு 28:19, 20.
மேலும், பிரசங்க வேலை உண்மையிலேயே சவால் நிறைந்த வேலை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இயேசுவே இவ்வாறு சொன்னார்: “ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.” (லூக்கா 10:3) எதிர்ப்பைச் சந்திக்கையில், அநாவசியமாக ஏன் துயரத்தையும் கவலையையும் வரவழைத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணி, பின்வாங்கிவிடுவது இயல்பு. அதுவே இயேசு கைது செய்யப்பட்ட அந்த இரவிலும் நடந்தது. பயந்துபோன அப்போஸ்தலர்கள் ஓட்டம் பிடித்தார்கள். பின்னர் அதே இரவில் பேதுரு மூன்று முறை இயேசு யாரென்று தனக்குத் தெரியவே தெரியாதென அடித்துச் சொல்லிவிட்டார்.—மத்தேயு 26:56, 69-75.
மேலும், நற்செய்தியைப் பிரசங்கிப்பது தனக்குப் பெரும் போராட்டமாய் இருந்ததாக அப்போஸ்தலன் பவுல் சொன்னதை அறிகையில் நீங்கள் ஆச்சரியப்படலாம். தெசலோனிக்கே சபையில் இருந்தவர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங் கொண்டிருந்தோம்.”—1 தெசலோனிக்கேயர் 2:1, 2.
மற்றவர்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்குத் தங்களுக்கிருந்த பயத்தை பவுலும் அவருடைய சக அப்போஸ்தலர்களும் விட்டொழித்தார்கள்; நீங்களும் அவ்வாறு விட்டொழிக்கலாம். எப்படி? யெகோவாவைச் சார்ந்திருப்பது அதற்கு மிக முக்கிய படியாகும். முழுக்க முழுக்க யெகோவாவின் மீது விசுவாசம் வைத்தால் அது நம்மை செயல்படத் தூண்டும், இவ்வாறு அவருடைய சித்தத்தைச் செய்வோம்.—அப்போஸ்தலர் 4:17-20; 5:18, 27-29.
உங்கள் வேலைக்கு பரிசு காத்திருக்கிறது
யெகோவாவுக்குச் சேவை செய்ய நாம் எந்தளவு முயற்சி எடுக்கிறோம் என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார். உதாரணமாக, நாம் சுகவீனமாகவோ சோர்வாகவோ இருப்பதை அறிந்திருக்கிறார். நாம் நம்பிக்கை இழந்து தவிப்பதை அறிந்திருக்கிறார். பணச் சுமை அழுத்தினாலும்சரி, உடல்நலமும் உணர்ச்சிகளும் ஏமாற்றம் அளிப்பதாகத் தோன்றினாலும்சரி யெகோவா எப்போதுமே நம் நிலைமையை அறிந்திருக்கிறார்.—2 நாளாகமம் 16:9; 1 பேதுரு 3:12.
இப்படி, அபூரணங்களுக்கு மத்தியிலும் கஷ்டங்களுக்கு மத்தியிலும் விசுவாசம் நம்மைச் செயல்படத் தூண்டும்போது யெகோவா மிகவும் அகமகிழ்கிறார்! உண்மையுள்ள தமது ஊழியர்களிடம் அவர் காட்டும் கனிவு ஏதோ மேலோட்டமானது அல்ல, நமக்கு வாக்குறுதி அளிப்பதன் மூலம் அதை செயலிலும் காட்டுகிறார். ஆவியின் ஏவுதலால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
“அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்,” ‘தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என யெகோவாவைப் பற்றி பைபிள் விவரிப்பதை நீங்கள் தாராளமாய் நம்பலாம். (உபாகமம் 32:4; எபிரெயர் 11:6) உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண் இப்படிச் சொல்கிறார்: “தனக்கென்று குடும்பம், பிள்ளைகள் என ஆவதற்கு முன்பு என் அப்பா பத்து வருடங்கள் முழுநேர ஊழியம் செய்தார். அந்தச் சமயத்தில் யெகோவா அவரை எப்படியெல்லாம் கவனித்துக் கொண்டாரென அவர் சொல்வதை ஆசை ஆசையாக கேட்டிருக்கிறேன். பல முறை, ஊழியத்திற்குப் போவதற்குத் தன்னிடமிருந்த கொஞ்ச நஞ்ச காசையும் பெட்ரோல் வாங்க செலவழித்து விடுவாராம். ஊழியம் முடிந்து வீடு திரும்பியதும் கதவருகே உணவுப்பொருட்கள் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறாராம்; அப்படி அடிக்கடி நடந்திருக்கிறதாம்.”
பொருளுதவி அளிப்பதோடு, ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமான’ யெகோவா உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் பக்கபலமாய் இருக்கிறார். (2 கொரிந்தியர் 1:3) பல வருடங்களாக பற்பல சோதனைகளைச் சகித்திருக்கும் யெகோவாவின் சாட்சி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா மீது சார்ந்திருப்பது மனதிருப்தியைத் தருகிறது. அவரை நம்புவதற்கு வாய்ப்பளிக்கிறது, அவர் உதவும் விதத்தைக் காண முடிகிறது.” ‘ஜெபத்தைக் கேட்கிறவரை’ நீங்கள் பணிவோடு அணுகலாம், உங்களுடைய கவலைகளை அவர் கண்ணோக்கிப் பார்ப்பாரென நம்பிக்கையுடன் இருக்கலாம்.—சங்கீதம் 65:2.
ஆன்மீக அறுவடையில் பங்குகொள்வோர் ஏராளமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். (மத்தேயு 9:37, 38) ஊழியத்தில் கலந்துகொள்வது அநேகருக்கு உடல் ரீதியிலும் பயனளித்திருக்கிறது, உங்களுக்கும் பயனளிக்கும். அதைவிட முக்கியமாக, மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பது கடவுளுடன் உள்ள நல்லுறவில் பலப்பட நமக்கு உதவுகிறது.—யாக்கோபு 2:23.
தொடர்ந்து நன்மை செய்யுங்கள்
ஆசைப்படுவதை எல்லாம் ஊழியத்தில் செய்ய முடியாதபடி வியாதியோ வயோதிகமோ கடவுளுடைய ஊழியர்களைத் தடுக்கலாம்; அப்போது தங்களைக் குறித்ததில் யெகோவா ஏமாற்றம் அடைவார் என்ற முடிவுக்கு அவர்கள் வரக்கூடாது. உடல்நலக் குறைவாலோ, குடும்பப் பொறுப்புகளாலோ, வேறு சூழ்நிலைகளாலோ அதிகளவு ஊழியம் செய்ய முடியாதவர்களும்கூட அப்படிப்பட்ட முடிவுக்கு வரக்கூடாது.
சுகவீனத்தை அல்லது ஒரு தடங்கலை எதிர்ப்பட்டபோது அப்போஸ்தலன் பவுலும்கூட துவண்டு போனார் என்பதை நினைவில் வையுங்கள்; அது ‘தன்னைவிட்டு நீங்கும்படிக்கு, மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டார்.’ தமக்கு அதிகளவு ஊழியம் செய்யும்படி கடவுள் அவரைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக அவரிடம் “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்று சொன்னார். (2 கொரிந்தியர் 12:7-10) எனவே நீங்கள் எத்தகைய கடினமான சூழ்நிலையைச் சமாளித்து வந்தாலும்சரி, அவருடைய ஊழியத்தை முன்னேற்றுவிக்க உங்களால் முடிந்ததைச் செய்கையில் அதை உங்கள் பரம பிதா பெரிதும் மதிக்கிறார் என்பதில் நீங்கள் உறுதியாய் இருக்கலாம்.—எபிரெயர் 13:15, 16.
நம் சக்திக்கு மிஞ்சியதைச் செய்யும்படி பாசமிக்க படைப்பாளர் நம்மிடம் எதிர்பார்ப்பதே இல்லை. செயல்படத் தூண்டுகிற விசுவாசத்தை நாம் பெற்றிருக்க வேண்டுமென்றே அவர் எதிர்பார்க்கிறார்.
[பக்கம் 26-ன் படம்]
நியாயப்பிரமாணத்தைப் படிப்பது மட்டுமே போதுமானதாக இருந்ததா?
[பக்கம் 29-ன் படம்]
நமக்கு விசுவாசம் இருப்பதைச் செயல்களில் காட்ட வேண்டும்