ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
நேர்மையான மக்கள் யெகோவாவுக்குத் துதி சேர்க்கிறார்கள்
உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள்—சிறியோரும் சரி, பெரியோரும் சரி—நேர்மையானவர்கள் என பெயர் எடுத்திருக்கிறார்கள். மூன்று கண்டங்களிலிருந்து வரும் அனுபவங்கள் இதற்கு அத்தாட்சி அளிப்பதைக் கவனியுங்கள்.
பதினேழு வயது ஓலுசோலா, நைஜீரியாவில் வசிக்கிறாள். ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது மைதானத்தில் ஒரு பர்ஸ் கிடப்பதைக் கண்டாள். அதைப் பள்ளி முதல்வரிடம் கொண்டுபோய்க் கொடுத்தாள். அவர் அதிலுள்ள பணத்தை எண்ணிப் பார்த்தபோது 6,200 நைரா (சுமார் 2,000 ரூபாய்) இருந்தது. அதைத் தொலைத்திருந்த ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அந்த ஆசிரியர் அவளைப் பாராட்டி ஓலுசோலாவுக்கு 1,000 நைராவைக் (சுமார் 300 ரூபாயைக்) கொடுத்து, அதை ஃபீஸ் கட்டுவதற்கு வைத்துக்கொள்ளும்படி சொன்னார். நடந்ததைக் கேள்விப்பட்ட மற்ற மாணவர்கள் அவளைக் கேலி செய்தார்கள். சில வாரங்களுக்குப் பிறகு ஒரு மாணவன் தன் பணம் காணாமல் போய்விட்டதாக புகார் செய்தான். எனவே எல்லா மாணவர்களையும் சோதனையிடுமாறு ஆசிரியர்களிடம் சொல்லப்பட்டது. “நீ இங்கேயே நில்லு, நீ ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறதால திருட மாட்டேன்னு எனக்குத் தெரியும்” என ஓலுசோலாவிடம் ஆசிரியர் சொன்னார். முன்பு இவளைப் பார்த்து கேலி செய்த மாணவர்களில் இருவர் அந்தப் பணத்தைத் திருடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். “நான் ஒரு யெகோவாவின் சாட்சி, திருடவே மாட்டேன் என்று அவர்கள் தெரிந்து வைத்திருப்பதைக் குறித்து எனக்கு ரொம்ப சந்தோஷம். இது யெகோவாவுக்குத்தான் புகழ் சேர்க்கிறது” என அவள் எழுதினாள்.
மார்செலோ என்பவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் ஒருநாள் வீட்டுக்குப் பக்கத்தில் பிரீஃப்கேஸ் ஒன்றைக் கண்டெடுத்தார். அதை வீட்டுக்குள் எடுத்து வந்து அவரும் அவருடைய மனைவியும் கவனமாகத் திறந்தார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, அதில் எக்கச்சக்கமாக பணமும், கிரெடிட் கார்டுகளும், கையெழுத்திடப்பட்ட அநேக செக்குகளும் இருந்தன; அவற்றில் ஒரு செக்கில் பத்து லட்சம் பெஸோ (சுமார் 1,35,00,000 ரூபாய்) என எழுதப்பட்டிருந்தது. அப்பெட்டியில் இருந்த பொருள் விவரப் பட்டியல் ஒன்றில் அவர்கள் ஒரு தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தார்கள். அதன் சொந்தக்காரருக்குப் போன் செய்தார்கள், மார்செலோ வேலை செய்யும் இடத்திற்கு வந்து அந்தப் பெட்டியையும் அதிலுள்ளவற்றையும் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தார்கள். அதன் சொந்தக்காரர் வந்தபோது ரொம்ப படபடப்பாக இருப்பது தெரிந்தது. மார்செலோவின் முதலாளி அவரிடம் மார்செலோ ஒரு யெகோவாவின் சாட்சி என்பதால் பதட்டப்படாமல் இருக்கும்படி சொன்னார். அந்தப் பெட்டியைக் கண்டுபிடித்ததற்குப் பரிசளிக்கும் விதத்தில் அதன் சொந்தக்காரர் மார்செலோவுக்கு வெறும் 20 பெஸோவைக் (சுமார் 300 ரூபாயைக்) கொடுத்தார். மார்செலோவுக்கு அன்பளிப்பாகச் சிறிய தொகை கொடுக்கப்பட்டதைப் பார்த்து அவருடைய முதலாளி கொதித்தெழுந்தார்; ஏனெனில் மார்செலோவின் நேர்மை அவரது நெஞ்சைத் தொட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தை மார்செலோ பயன்படுத்திக்கொண்டு, யெகோவாவின் சாட்சியாக எப்போதும் நேர்மையாக இருக்கவே தான் விரும்புவதை விளக்கினார்.
பின்வரும் அனுபவம் கிர்கிஸ்தானிலிருந்து வருகிறது. ரிநாட் என்ற ஆறு வயது சிறுவன் தன் வீட்டுப் பக்கத்தில் குடியிருக்கும் ஒரு பெண்மணியின் பர்ஸைக் கண்டெடுத்தான். அதில் 1,100 சோம் (சுமார் 1,125 ரூபாய்) இருந்தது. பர்ஸைக் கொண்டுபோய் அந்தப் பெண்மணியிடம் ரிநாட் கொடுத்தான், அப்போது அவர் அதிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு அதில் 200 சோம் குறைவதாக அவனுடைய அம்மாவிடம் சொன்னார். தான் அதை எடுக்கவில்லை என அவன் சொன்னான். பிறகு எல்லாரும் சேர்ந்து காணாமல்போன அந்தப் பணத்தைத் தேடிக்கொண்டு சென்றார்கள், பர்ஸைக் கண்டெடுத்த இடத்திற்குப் பக்கத்திலேயே அந்தப் பணத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்தப் பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். முதலாவதாக, தொலைந்த பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்ததற்கு ரிநாட்டுக்கும் அவனுடைய அம்மாவுக்கும் நன்றி தெரிவித்தார்; இரண்டாவதாக, ஒரு கிறிஸ்தவ பிள்ளையாக அவனை வளர்ப்பதற்கு அவனுடைய அம்மாவுக்கு நன்றி தெரிவித்தார்.