உலகின் எதிர்காலம் என்ன?
உலக ஒற்றுமை. கேட்பதற்கே அருமையாக இருக்கிறது. அதைக் காண யாருக்குத்தான் ஆசை இல்லை? ஆம், ஒற்றுமையைப் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட்டிருக்கிறது. உலகத் தலைவர்கள் அடிக்கடி கூட்டம் நடத்தி இதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆகஸ்ட் 2000-ல், 1,000-க்கும் அதிகமான மதத் தலைவர்கள், மிலனியம் உலக சமாதான உச்சி மாநாட்டிற்காக நியு யார்க்கில் ஒன்றுகூடினார்கள். உலகப் போர்களுக்கான தீர்வுகளைப் பற்றி அவர்கள் கலந்தாலோசித்தார்கள். இருந்தாலும், அந்த மாநாடு, புகைந்துகொண்டிருக்கும் உலக சர்ச்சைகளைத்தான் படம் பிடித்துக் காட்டியது. மாநாட்டிற்கு ஒரு யூத ரபி அழைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, எருசலேமைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் சட்ட அறிஞர் அங்கு வர மறுத்துவிட்டார். மற்றவர்களோ, மாநாட்டின் முதல் இரண்டு நாட்களில் தலை-லாமா அழைக்கப்படாததற்காக கோபித்துக் கொண்டார்கள்; சீனாவின் விரோதத்திற்கு ஆளாகாதிருப்பதற்காகவே அவர் அழைக்கப்படவில்லை.
பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள நாடுகள், தாய்லாந்தில் அக்டோபர் 2003-ல் நடைபெற்ற ஆசியா-பசிபிக் பொருளாதார கூட்டுறவு (APEC) மாநாட்டில் கலந்து கொண்டன; உலக பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அங்கு கலந்தாலோசிக்கப்பட்டன. கூடிவந்திருந்த 21 நாடுகளும், தீவிரவாத கும்பல்களை ஒழித்துக் கட்டுவதாகவும் உலக பாதுகாப்பை அதிகரிக்க முயற்சிகள் எடுப்பதாகவும் உறுதிமொழி கூறின. இருந்தாலும் அந்த மாநாட்டில் ஒரு பிரதம மந்திரி பேசிய வார்த்தைகளைக் குறித்து அநேக பிரதிநிதிகள் முணுமுணுத்தனர்; அவர் யூதர்களை கடும் வெறுப்போடு தாக்கிப் பேசியதாகக் குறைகூறினர்.
ஏன் ஒற்றுமை இல்லை?
உலகை ஒன்றுபடுத்துவதைக் குறித்து எவ்வளவோ பேசப்பட்டு வந்தாலும், அது பேச்சோடு மட்டும் நின்றுவிடுகிறது. அநேகர் உண்மை மனதோடு முயற்சிகள் எடுத்திருந்தாலும், உலக ஒற்றுமை இந்த 21-ஆம் நூற்றாண்டு வரை மனிதர்களின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டே போயிருப்பது ஏன்?
இக்கேள்விக்கான பதிலின் ஒரு பாகம், APEC மாநாட்டில் கலந்துகொண்ட பிரதம மந்திரிகளில் ஒருவரது குறிப்பில் அடங்கியிருக்கிறது. “தாய்நாட்டுப் பெருமை என்ற பிரச்சினையுள்ளது” என அவர் குறிப்பிட்டார். ஆம், மனித சமுதாயம் தேசப்பற்றில் மூழ்கிக் கிடக்கிறது. சுய ஆட்சி உரிமைக்காகவே ஒவ்வொரு தேசமும் இனத் தொகுதியும் ஆலாய்ப்பறக்கின்றன. தேசிய ஆட்சியுரிமையும் போட்டி மனப்பான்மையும் பேராசையும் சேர்ந்து பேராபத்தான சூழலை உண்டாக்கியிருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில், தேசிய நாட்டங்கள் உலக நாட்டங்களோடு முரண்படுகையில், தேசிய நாட்டங்களுக்கே முதலிடம் தரப்படுகிறது.
தேசப்பற்றை, “பாழாக்கும் கொள்ளைநோய்” என சங்கீதக்காரன் பொருத்தமாகவே விவரித்தார். (சங்கீதம் 91:3) அது ஒரு கொள்ளைநோய் போல் மனிதவர்க்கத்திற்கு சொல்லொணா துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேசப்பற்றும் அதன் காரணமாக உண்டாகும் பகையும் பல நூற்றாண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வந்திருக்கின்றன. இன்று தேசப்பற்று, பிரிவினை எனும் வெறுப்புக்கு தொடர்ந்து எண்ணெய் வார்க்கிறது; மனித ஆட்சியாளர்களால் அதை அணைக்க முடியவில்லை.
தேசப்பற்றும் சுயநலமும்தான் இன்றைய உலகப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என அநேக அதிகாரிகள் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, ஐக்கிய நாட்டு சங்கத்தின் முன்னாள் செக்ரெட்டரி ஜெனரலான யூ தான்ட் இவ்வாறு குறிப்பிட்டார்: “தவறான மனப்பான்மைகளின் காரணமாகவே அல்லது விளைவாகவே இன்று நாம் அநேக பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். . . . அப்படிப்பட்ட மனப்பான்மைகளில் ஒன்று, ‘சரியோ தவறோ, என் நாடு’ என்ற குறுகிய நோக்குடைய தேசப்பற்றாகும்.” இருந்தாலும் சுயநலத்தில் ஊறிப்போயிருக்கும் இன்றைய நாடுகள், ஆட்சி அதிகாரத்தை மேன்மேலும் பெறுவதற்காகவே போராடுகின்றன. அப்படிப்பட்ட அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்களோ, அதில் சிறிதளவையும் விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. உதாரணத்திற்கு, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைப் பற்றி இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் இவ்வாறு குறிப்பிட்டது: “ஐரோப்பிய அரசியலின் முக்கிய இரு அம்சங்கள் பகையும் அவநம்பிக்கையும் ஆகும். ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்த பெரும்பாலான நாடுகளுக்கு, மற்றொரு நாடு அதிக செல்வாக்கு பெறுவதும் தலைமை வகிப்பதும் பொறுத்துக் கொள்ள முடியாததாகவே இன்னமும் இருக்கிறது.”
மனித ஆட்சியின் விளைவைப் பற்றி கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் பொருத்தமாகவே இவ்வாறு விவரிக்கிறது: ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’ (பிரசங்கி 8:9) இவ்வுலகை தனித்தனி நாடுகளாக பிரித்திருப்பதன் மூலம், பல தொகுதியினரும் தனி நபர்களும் பின்வரும் பைபிள் நியமத்தின் நிறைவேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள்: “பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப் பார்ப்பான்; நடைமுறை ஞானம் அனைத்தையுமே தகர்த்தெறிந்து விடுவான்.”—நீதிமொழிகள் 18:1, NW.
நமக்கு எது சிறந்ததென நம் படைப்பாளர் அறிந்திருக்கிறார்; மனிதர்கள் தங்களுக்கென்று அரசாங்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வதும் அவரது நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், மனிதர்கள் அப்படிச் செய்வதன் மூலம் கடவுளின் நோக்கத்தையும், அனைத்துமே அவருக்கு சொந்தம் என்ற உண்மையையும் புறக்கணித்திருக்கிறார்கள். சங்கீதம் 95:3-5 இவ்வாறு சொல்கிறது: “கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகா ராஜனுமாயிருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.” கடவுளே தகுதிபெற்ற பேரரசர்; அனைவரும் அவரையே ஆட்சியாளராகக் கருத வேண்டும். தேசங்கள் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நாடித் தேடுவதன் மூலம் அவரது சித்தத்திற்கு எதிராக செயல்படுகின்றன.—சங்கீதம் 2:2.
என்ன தேவை?
இந்த உலகம் ஒன்றுபட ஒரே வழி, அனைத்து மக்களின் பேரிலும் உண்மையான அக்கறை காட்டும் ஓர் உலக அமைப்பு தோன்றுவதாகும். சிந்திக்கும் ஆட்கள் அநேகர் இந்தத் தேவையை உணருகின்றனர். இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் தவறான அமைப்பில் நம்பிக்கை வைக்கிறார்கள். உதாரணத்திற்கு, மதத் தலைவர்கள் உட்பட அநேகர், உலக ஒற்றுமைக்கு ஐக்கிய நாட்டு சங்கத்தை சார்ந்திருக்கும்படி மக்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் மனித அமைப்புகளுக்கு எப்பேர்ப்பட்ட உயரிய இலட்சியங்கள் இருந்திருந்தாலும், மனிதவர்க்கத்தின் சர்வதேச பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியவில்லை. மாறாக, பல்வேறு நாடுகளுக்கு இடையே நிலவும் ஒற்றுமையின்மைக்குத்தான் பெரும்பாலான அமைப்புகள் உதாரணங்களாக விளங்கியிருக்கின்றன.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனித அமைப்புகள் பேரில் நம்பிக்கை வைப்பதைக் குறித்து பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” (சங்கீதம் 146:3) அப்படியென்றால், உலகம் ஒன்றுபட வாய்ப்பே இல்லையா? அப்படியல்ல. அதற்கு வேறொரு வழி இருக்கிறது.
இவ்வுலகை ஒன்றுபடுத்த வல்ல ஓர் அரசாங்கத்தை கடவுள் ஏற்கெனவே நிறுவிவிட்டார் என்பதை அநேகர் அறியாதிருக்கிறார்கள். யெகோவா தேவனைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன் மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம் பண்ணி வைத்தேன் . . . என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்.” (சங்கீதம் 2:6, 8) யெகோவா தேவன் தம்முடைய ‘ராஜாவை அபிஷேகம் பண்ணியதாக’ வசனம் சொல்வதை கவனியுங்கள். அந்த ராஜாவை “என்னுடைய குமாரன்” என 7-ஆம் வசனத்தில் அவர் குறிப்பிடுகிறார். அவர் கடவுளுடைய பிரதான ஆவி குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே. சகல தேசங்களின் மீதும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
உலக ஒற்றுமை எவ்வாறு சாத்தியமாகும்?
கடவுள் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பரலோக அரசாங்கத்தை பெரும்பாலான மக்கள் ஏற்பதில்லை. தேசங்களோ, தங்கள் தங்கள் ஆட்சியுரிமையையே விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் கடவுள் தமது பேரரசுரிமையையும் தாம் ஏற்படுத்திய அரசாங்கத்தையும் ஏற்க மறுப்பவர்களை பொறுத்துக் கொள்ள மாட்டார். அவ்வாறு ஏற்க மறுப்பவர்களைக் குறித்து சங்கீதம் 2:9 இவ்வாறு சொல்கிறது: ‘[குமாரனாகிய இயேசு கிறிஸ்து] இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவார்.’ தேசங்கள் இப்போது அறிந்தோ அறியாமலோ கடவுளோடு போரிடுவதற்காக அணிவகுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. “சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு” ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்’ கூட்டிச் சேர்க்கப்படுவதைப் பற்றி பைபிளின் கடைசி புத்தகம் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14) தேசங்களும் பிரிவினையுண்டாக்கும் அவற்றின் செயல்களும் சுவடு தெரியாமல் மறைந்துவிடும். அதன் பிறகு, கடவுளுடைய அரசாங்கம் எவ்வித தடையுமின்றி செயல்பட வழி பிறக்கும்.
சர்வலோகப் பேரரசராக யெகோவா தேவன் தம் குமாரன் மூலம் ஞானமாக அதிகாரத்தைச் செலுத்தி, உலகை ஒன்றுபடுத்துவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்வார். அவருடைய அரசாங்கமே உண்மையான ஒற்றுமையை நிலைநாட்டி நீதியை நேசிப்போருக்கு ஆசீர்வாதங்களைப் பொழியும். உங்களுடைய பைபிளில் சங்கீதம் 72-ஐ வாசிக்க ஏன் சில நிமிடங்கள் செலவிடக் கூடாது? அங்கே, கடவுளுடைய குமாரனின் ஆட்சியில் மனிதவர்க்கத்திற்கு கிடைக்கவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றிய தீர்க்கதரிசன விவரிப்பு உள்ளது. மக்கள் மெய்யான உலக ஒற்றுமையை அனுபவிப்பார்கள்; ஒடுக்குதல், வன்முறை, வறுமை போன்ற பிரச்சினைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டிருக்கும்.
பிளவுபட்ட இவ்வுலகில், அப்படிப்பட்ட நம்பிக்கை பகல் கனவுதான் என அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. கடவுளுடைய வாக்குறுதிகள் ஒருபோதும் பொய்த்துப் போனதில்லை, பொய்த்துப்போவதுமில்லை. (ஏசாயா 55:10, 11) அவர் செய்யப்போகும் மாற்றத்தைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களால் அதைக் காண முடியும். சொல்லப்போனால், அப்படிப்பட்ட காலத்திற்குத் தயாராகும் மக்கள் ஏற்கெனவே காணப்படுகிறார்கள். அவர்கள் சகல தேசங்களையும் சேர்ந்தவர்கள்; அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதில்லை, மாறாக கடவுளுடைய பேரரசுரிமைக்கு ஒற்றுமையோடு கீழ்ப்பட்டிருக்கிறார்கள். (ஏசாயா 2:2-4) அவர்கள் யார்? அவர்கள்தான் யெகோவாவின் சாட்சிகள். அவர்களுடைய கூட்டங்களுக்கு நீங்கள் போய் பார்த்தாலென்ன? அவர்களோடு பழகுவதால் நீங்கள் பெரும்பாலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்; கடவுளுடைய பேரரசுரிமைக்குக் கீழ்ப்படியவும் என்றென்றும் நிலைத்திருக்கப் போகும் ஒற்றுமையை அனுபவித்து மகிழவும் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
[பக்கம் 7-ன் படங்கள்]
சகல தேசங்களையும் சேர்ந்த மக்கள், ஒன்றுபட்ட உலகில் வாழ்வதற்கு இப்போதே தயாராகி வருகிறார்கள்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Saeed Khan/AFP/Getty Images
[பக்கம் 5-ன் படங்களுக்கான நன்றி]
வேதனைப்படும் பெண்: Igor Dutina/AFP/Getty Images; புரட்சியாளர்கள்: Said Khatib/AFP/Getty Images; ஆயுதம் தாங்கிய கார்கள்: Joseph Barrak/AFP/Getty Images