தமக்காக காத்திருக்கிறவர்களை யெகோவா காக்கிறார்
“உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.” —சங்கீதம் 40:11.
1. யெகோவாவிடம் தாவீது ராஜா எதற்காக வேண்டினார், தற்போது அவருடைய வேண்டுதல் எவ்வாறு அருளப்பட்டிருக்கிறது?
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது ‘யெகோவாவுக்காக பொறுமையுடன் காத்திருந்தார்’; யெகோவா ‘தன்னிடம் சாய்ந்து, தன் கூப்பிடுதலைக் கேட்டார்’ எனச் சொல்லும்படி உந்துவிக்கப்பட்டார். (சங்கீதம் 40:1) யெகோவா, தம்மீது அன்பு காட்டுகிறவர்களைக் காக்கிற விதத்தை தாவீது பலமுறை கண்கூடாகப் பார்த்திருந்தார். ஆகவேதான், எப்பொழுதும் தன்னைக் காக்கும்படி யெகோவாவிடம் வேண்டினார். (சங்கீதம் 40:11) ‘மேன்மையான உயிர்த்தெழுதல்’ கிடைக்குமென்ற வாக்குறுதியைப் பெற்றுள்ள விசுவாசமுள்ளவர்களில் ஒருவரான தாவீது, இப்போது யெகோவாவின் நினைவில் பாதுகாப்பாக இருக்கிறார்; உயிர்த்தெழுதல் என்ற வெகுமதியையும் பெறவிருக்கிறார். (எபிரெயர் 11:32-35) ஆகவே அவருடைய எதிர்காலத்திற்கு மிகச் சிறந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. யெகோவாவின் ‘ஞாபகப் புஸ்தகத்தில்’ அவருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறது.—மல்கியா 3:16.
2. யெகோவாவினால் காக்கப்படுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வசனங்கள் நமக்கு எப்படி உதவுகின்றன?
2 எபிரெயர் 11-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசமுள்ளவர்கள், இயேசு கிறிஸ்து பூமிக்கு வருவதற்கு முன்பு வாழ்ந்தவர்கள்; என்றாலும், அவர் கற்பித்த பின்வரும் விஷயத்திற்கு இசையவே அவர்கள் வாழ்ந்தார்கள்: “தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.” (யோவான் 12:25) ஆகவே, யெகோவாவினால் காக்கப்படுவதென்பது, துன்பங்களிலிருந்து அல்லது துன்புறுத்தலிலிருந்து பாதுகாக்கப்படுவதைக் குறிக்காது எனத் தெளிவாகத் தெரிகிறது. மாறாக ஆவிக்குரிய ரீதியில் பாதுகாக்கப்படுவதையே அது குறிக்கிறது; அப்படிப்பட்ட பாதுகாப்பின் மூலம் கடவுளுக்கு முன்பாக நல்ல நிலைநிற்கையைத் தொடர்ந்து காத்துக்கொள்ள முடியும்.
3. இயேசு கிறிஸ்துவை யெகோவா பாதுகாத்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது, அதன் பலன் என்ன?
3 இயேசுவும்கூட கடும் துன்புறுத்தலுக்கும் இகழ்ச்சிக்கும் ஆளானார்; கடைசியில் எதிரிகள் அவரை மிகுந்த அவமானமும் வேதனையுமிக்க விதத்தில் கொலையே செய்தனர். ஆனாலும் மேசியாவைப் பாதுகாப்பதாக கடவுள் தந்திருந்த வாக்குறுதிக்கு இது எவ்விதத்திலும் முரணாக இருக்கவில்லை. (ஏசாயா 42:1-7) எப்படியெனில், அவமானமிக்க மரணத்திற்குப் பின் மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். இது எதற்கு அத்தாட்சி? தாவீதின் வேண்டுதலைக் கேட்டதைப் போலவே, உதவிக்கான இயேசுவுடைய வேண்டுதலையும் யெகோவா கேட்டார் என்பதற்கு இது அத்தாட்சி. அவருடைய வேண்டுதலைக் கேட்டு, உத்தமமாக நிலைத்திருக்க அவருக்கு பலத்தை அருளினார். (மத்தேயு 26:39) இவ்விதத்தில் பாதுகாக்கப்பட்ட இயேசு பரலோகத்தில் அழியாத வாழ்வைப் பெற்றார். அதோடு, அவரது மீட்கும் பலியில் விசுவாசம் வைக்கும் லட்சக்கணக்கானோர் நித்திய ஜீவனைப் பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.
4. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் ‘வேறே ஆடுகளுக்கும்’ என்ன உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது?
4 தாவீதின் நாட்களையும் இயேசுவின் நாட்களையும் போலவே இந்நாட்களிலும் யெகோவா தம் ஊழியர்களைக் காத்திட விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்றும், அதற்கான வல்லமையைப் பெற்றிருக்கிறார் என்றும் நாம் முழுமையாக நம்பலாம். (யாக்கோபு 1:17) இயேசுவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களில் இன்னும் பூமியில் மீந்திருக்கும் கொஞ்சம் பேர், யெகோவாவின் பின்வரும் வாக்குறுதியைச் சார்ந்திருக்கலாம்: ‘கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.’ (1 பேதுரு 1:4, 5) பூமிக்குரிய நம்பிக்கை பெற்றுள்ள “வேறே ஆடுகளும்” அதேபோல் கடவுள் மீதும் சங்கீதக்காரன் மூலம் அவர் அளித்திருக்கிற பின்வரும் வாக்குறுதி மீதும் நம்பிக்கை வைக்கலாம்: “யெகோவாவின் பக்தர்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையுள்ளவர்களை யெகோவா தற்காப்பார்.”—யோவான் 10:16; சங்கீதம் 31:23, திருத்திய மொழிபெயர்ப்பு.
ஆவிக்குரிய பாதுகாப்பு
5, 6. (அ) நவீன காலங்களில் கடவுளுடைய மக்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்களும் யெகோவாவுடன் எப்படிப்பட்ட உறவைப் பெற்றிருக்கிறார்கள்?
5 நவீன காலங்களில், யெகோவா தம் மக்களை ஆவிக்குரிய விதத்தில் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். துன்புறுத்தலிலிருந்தும் அன்றாட வாழ்க்கைக்குரிய கஷ்டங்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பதில்லை என்றாலும், தம்முடன் நெருக்கமான உறவைக் காத்துக்கொள்ளத் தேவையான உதவியையும் உற்சாகத்தையும் அவர் தொடர்ந்து அளித்து வருகிறார். அவருடைய மக்கள், அன்பான ஏற்பாடாகிய மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் அவருடன் நெருக்கமான உறவை வளர்த்திருக்கிறார்கள். விசுவாசமுள்ள இந்தக் கிறிஸ்தவர்களில் சிலர், பரலோகத்தில் கிறிஸ்துவோடு உடன் அரசர்களாக ஆட்சி செய்வதற்காக கடவுளுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக நீதிமான்களாய் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பின்வரும் வார்த்தைகள் அவர்களுக்குப் பொருந்துகின்றன: “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.”—கொலோசெயர் 1:13, 14.
6 விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களாகிய லட்சக்கணக்கான மற்றவர்களும், கடவுளுடைய மீட்கும் பலியின் ஏற்பாட்டினால் நன்மையடைய முடியுமென உறுதி அளிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “மனுஷ குமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மாற்கு 10:45) ஏற்ற காலத்தில், “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்” பெற்று மகிழும் வாய்ப்பை அந்தக் கிறிஸ்தவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். (ரோமர் 8:20) இதற்கிடையே, கடவுளோடு உள்ள தங்கள் நட்புறவை உயர்வாக மதித்து, அதை மேன்மேலும் பலப்படுத்த மனதார முயலுகிறார்கள்.
7. இன்று யெகோவா எவ்வழிகளில் தம் மக்களின் ஆவிக்குரிய நலனைக் காக்கிறார்?
7 யெகோவா தம் மக்களின் ஆவிக்குரிய நலனைக் காத்திடும் ஒரு வழி, படிப்படியாக பயிற்சியளிக்கும் திட்டத்தை அளித்திருப்பதாகும். சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை மேன்மேலும் பெற இது அவர்களுக்கு உதவுகிறது. யெகோவா தமது வார்த்தை, தமது அமைப்பு, தமது பரிசுத்த ஆவி ஆகியவற்றின் மூலமாகவும் தொடர்ந்து வழிகாட்டுதலை அளிக்கிறார். உலகெங்குமுள்ள அவருடைய மக்கள், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாருடைய தலைமையின்கீழ் ஒரு சர்வதேசக் குடும்பம் போல் இருக்கிறார்கள். யெகோவாவின் ஊழியர்கள் அடங்கிய இந்தக் குடும்பத்தாரின் ஆவிக்குரிய தேவைகளையும், அவசியமேற்பட்டால் சரீரத் தேவைகளையும்கூட அடிமை வகுப்பார் கவனித்துக் கொள்கிறார்கள்; அவர்களுடைய நாடு, சமூக அந்தஸ்து என எதுவாக இருந்தாலும் அவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள்.—மத்தேயு 24:45, NW.
8. யெகோவா தமக்கு உத்தமமாக இருப்பவர்கள் மீது என்ன நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார், அவர்களுக்கு என்ன உறுதி அளிக்கிறார்?
8 எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து இயேசுவை சரீரப்பிரகாரமாக யெகோவா பாதுகாக்காததைப் போலவே இன்று கிறிஸ்தவர்களையும் அவ்வாறு பாதுகாப்பதில்லை. அதற்காக, கடவுள் அவர்களை வெறுக்கிறார் என்று அர்த்தமல்ல. ஒருகாலும் அவர் அவ்வாறு வெறுப்பதில்லை! மாறாக, மிகப் பெரிய சர்வலோக விவாதத்தில் அவர்கள் தம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர் வெளிக்காட்டுவதையே அது வலியுறுத்திக் காட்டுகிறது. (யோபு 1:8-12; நீதிமொழிகள் 27:11) தமக்கு உத்தமமாக இருப்பவர்களை யெகோவா ஒருபோதும் கைவிட மாட்டார்; ஏனென்றால், அவர் “நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்.”—சங்கீதம் 37:28.
கிருபையினாலும் உண்மையினாலும் காக்கப்படுதல்
9, 10. (அ) யெகோவாவின் உண்மைத்தன்மை அவரது மக்களை எவ்வாறு காக்கிறது? (ஆ) யெகோவா தமது உத்தமர்களை கிருபையினால் காக்கிறாரென பைபிள் எப்படிக் காட்டுகிறது?
9 சங்கீதம் 40-ன்படி, யெகோவா கிருபையினாலும் உண்மையினாலும் தன்னைக் காக்க வேண்டுமென தாவீது ஜெபம் செய்தார். யெகோவா உண்மைத்தன்மை உள்ளவராகவும் நீதியை நேசிப்பவராகவும் இருப்பதால், அவரது தராதரங்கள் என்னவென்பதை அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார் என எதிர்பார்க்கலாம். அந்தத் தராதரங்களின்படி வாழ்பவர்கள், அவற்றைப் புறக்கணிப்பவர்கள் அனுபவிக்கும் வேதனைகள், பயங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றிலிருந்து பெருமளவு காக்கப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, போதைப்பொருள், மதுபான துஷ்பிரயோகம், பாலியல் ஒழுக்கக்கேடு, வன்முறையான வாழ்க்கைப் பாணி ஆகியவற்றை நாம் தவிர்த்தால் நெஞ்சைப் பிளக்கும் அநேக வேதனைகளிலிருந்து நம்மை நாமேயும் நம் அன்பானவர்களையும் காத்துக் கொள்ளலாம். தாவீது சிலசமயங்களில் செய்தது போல் யெகோவாவின் உண்மை வழியிலிருந்து விலகிப் போகிறவர்களுக்கும்கூட ஓர் உறுதி அளிக்கப்படுகிறது; அதாவது, மனந்திரும்புகிறவர்களுக்கு கடவுள் இன்னமும் ‘மறைவிடமாயிருக்கிறார்’ என்ற உறுதி அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் இவ்வாறு சந்தோஷமாக சொல்லலாம்: ‘என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காக்கிறீர்.” (சங்கீதம் 32:7) கடவுளுடைய கிருபைக்கு எத்தகையதோர் வெளிக்காட்டு!
10 தெய்வீகக் கிருபைக்கு மற்றொரு உதாரணம்: கடவுள், தாம் சீக்கிரத்தில் அழிக்கப்போகும் இந்தப் பொல்லாத உலகிலிருந்து விலகியிருக்கும்படி தம் ஊழியர்களை எச்சரிக்கிறார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” இந்த எச்சரிப்புக்கு செவிசாய்த்து அதற்கேற்ப நடந்துகொண்டால் நாம் சொல்லர்த்தமாகவே நித்தியத்துக்கும் நம் உயிரைக் காத்துக்கொள்ள முடியும்; ஏனென்றால் வசனம் தொடர்ந்து சொல்வதாவது: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:15-17.
நல்யோசனையாலும் புத்தியாலும் ஞானத்தாலும் காக்கப்படுதல்
11, 12. நல்யோசனையும் புத்தியும் ஞானமும் நம்மை எவ்வாறு காக்கும் என விளக்குங்கள்.
11 கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற விரும்புவோருக்கு தாவீதின் குமாரனான சாலொமோன் இவ்வாறு எழுதும்படி ஏவப்பட்டார்: “நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.” அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “ஞானத்தைச் சம்பாதி, . . . அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.”—நீதிமொழிகள் 2:11; 4:5, 6.
12 கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களைத் தியானிக்கையில் நாம் நல்யோசனையைப் பயன்படுத்துகிறோம். அவ்வாறு செய்வது, அதிக புத்தியை, அதாவது விவேகத்தை வளர்த்துக்கொள்ள உதவுகிறது; அதன் மூலம் நாம் முக்கிய காரியங்களுக்கு முன்னுரிமை தர முடியும். இது மிக அவசியம்; ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ தவறான முன்னுரிமைகளை நிர்ணயிப்பதால் பிரச்சினைகள் வரும் என்பது நம்மில் அநேகருக்குத் தெரியும், அதுவும் அனுபவப்பூர்வமாகத் தெரியும். சாத்தானுடைய உலகம் செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் அதிகாரத்துக்குமே முக்கியத்துவம் கொடுக்கும்படி நம்மைத் தூண்டுகிறது; ஆனால் அவற்றைக் காட்டிலும் முக்கியமான ஆவிக்குரிய மதிப்பீடுகளை நாடும்படியே யெகோவா உற்சாகப்படுத்துகிறார். இவற்றிற்குப் பதிலாக உலக காரியங்களுக்கு முன்னுரிமை தருவதால் குடும்பங்கள் பிளவுபடலாம், நட்புகள் முறிந்துவிடலாம், ஆவிக்குரிய இலக்குகள் வலுவிழந்து போகலாம். இதன் காரணமாக, இயேசு சுட்டிக்காட்டிய பின்வரும் கசப்பான உண்மையைத்தான் நாம் சந்திப்போம்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36) ஆகவே இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்றுவதே ஞானத்துக்கு அடையாளம்; அவர் இவ்வாறு சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33.
சுயநலவாதியாகும் ஆபத்து
13, 14. சுயநலம் என்றால் என்ன, அது ஏன் ஞானத்திற்கு அடையாளமல்ல?
13 மனிதர்கள் தங்களில் தாங்களே அக்கறையுள்ளவர்களாக இருப்பது இயல்புதான். ஆனால் தனிப்பட்ட ஆசைகளும் அக்கறைகளுமே வாழ்க்கையில் முதலிடத்தைப் பிடித்தால் பிரச்சினைதான் ஏற்படும். ஆகவே யெகோவாவுடனான நம் நட்பைக் காத்துக்கொள்ள, நாம் சுயநலத்தைத் தவிர்க்க வேண்டுமென அவர் அறிவுரை தருகிறார். சுயநலம் என்பது “பிறரைப் பற்றி எண்ணிப் பார்க்காமல், தனக்குக் கிடைக்கிற ஆதாயம், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு.” இன்று அநேகர் அப்படித்தான் செயல்படுகிறார்கள், அல்லவா? சாத்தானுடைய பொல்லாத உலகின் “கடைசி நாட்களில்” ‘மனுஷர்கள் தற்பிரியராய்,’ அதாவது சுயநலவாதிகளாய் இருப்பார்கள் என பைபிள் முன்னறிவித்தது குறிப்பிடத்தக்கது.—2 தீமோத்தேயு 3:1, 2.
14 நம்மை நாமே நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசித்து அவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு ஞானமானது என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். (லூக்கா 10:27; பிலிப்பியர் 2:4) இது நடைமுறைக்கு ஒத்துவராதென பொதுவாக ஜனங்கள் நினைப்பார்கள்; ஆனால் சிறந்த மணவாழ்வுக்கும், சந்தோஷமான குடும்ப உறவுகளுக்கும், திருப்தியான நட்புறவுகளுக்கும் அது அவசியம். ஆகவே யெகோவாவின் உண்மை ஊழியர்கள், தங்கள் சுயநலத்திற்கே வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து, அதைவிட முக்கியமான காரியங்களை அசட்டை செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். அந்த முக்கியமான காரியங்களில் முதன்மையானது, தங்கள் தேவனாகிய யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட வேலையாகும்.
15, 16. (அ) சுயநல மனப்பான்மை எதற்கு வழிநடத்தலாம், இதற்கு சிறந்த உதாரணம் யார்? (ஆ) உடனடியாக மற்றவர்களை நியாயந்தீர்ப்பவர் உண்மையில் என்ன செய்கிறார்?
15 சுயநல மனப்பான்மை ஒருவரை சுயநீதிமானாக்கலாம்; அதன் விளைவாக அவர் குறுகிய மனப்பான்மை உள்ளவராகவும் துணிகரமுள்ளவராகவும் ஆகலாம். பைபிள் சரியாகவே இவ்வாறு சொல்கிறது: “மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும்சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக் குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.” (ரோமர் 2:1; 14:4, 10) இயேசுவின் நாட்களிலிருந்த மதத் தலைவர்கள் தாங்கள் நீதிமான்கள் என்பதில் மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள்; ஆகவே இயேசுவையும் அவரது சீஷர்களையும் கண்டனம் செய்ய தங்களுக்குத் தகுதி இருந்ததாக நினைத்தார்கள். இவ்விதத்தில், தங்களை நியாயாதிபதிகளின் ஸ்தானத்திற்கு உயர்த்திக் கொண்டார்கள். முதலாவதாக தங்களிடமே இருந்த குறைகளை அவர்கள் கவனிக்கத் தவறி, தங்களுக்குத் தாங்களே கண்டனத்தை வரவழைத்துக் கொண்டார்கள்.
16 இயேசுவைக் காட்டிக்கொடுத்த அவருடைய சீஷனாகிய யூதாஸ், மற்றவர்களை நியாயந்தீர்க்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டான். பெத்தானியாவில் லாசருவின் சகோதரியான மரியாள் பரிமள தைலத்தால் இயேசுவை அபிஷேகம் செய்தபோது யூதாஸ் அதை வன்மையாக எதிர்த்தான். “இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன”? என்று கோபத்தோடு வாதாடினான். ஆனால் ஏன் வாதாடினான் என்பதற்கான விளக்கத்தையும் பதிவு கொடுக்கிறது: “அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் (அல்லது, திருடினபடியினாலும்) இப்படிச் சொன்னான்.” (யோவான் 12:1-6) உடனடியாக மற்றவர்களை நியாயந்தீர்த்து தங்களுக்குத் தாங்களே கண்டனத்தை வரவழைத்துக் கொண்ட யூதாஸையும் மதத் தலைவர்களையும் போல் நாம் ஒருபோதும் ஆகாதிருப்போமாக.
17. வீம்புக்காரராக அல்லது அளவுக்கு மிஞ்சிய தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதன் ஆபத்தை உதாரணத்துடன் விளக்கவும்.
17 வருத்தகரமாக, ஆரம்பகால கிறிஸ்தவர்களில் சிலர், யூதாஸைப் போல் திருடர்களாக இல்லாதபோதிலும் கர்வம் பிடித்தவர்களாகவும், வீம்புக்காரர்களாகவும் அதாவது, தற்பெருமை பிடித்தவர்களாகவும் ஆனார்கள். அவர்களைப் பற்றி யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது.” (யாக்கோபு 4:16) யெகோவாவின் சேவையில் நம்முடைய சாதனைகளைப் பற்றி அல்லது விசேஷ வாய்ப்புகளைப் பற்றி பெருமையடிப்பது பிரச்சினைகளையே விளைவிக்கும். (நீதிமொழிகள் 14:16) அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு என்ன நடந்ததென நினைத்துப் பாருங்கள்; அவர் ஒரு கணம் அளவுக்கு மிஞ்சிய தன்னம்பிக்கையோடு இவ்வாறு பெருமையடித்தார்: “உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் . . . நான் உம்மோடே மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க மாட்டேன்.” உண்மையில், பெருமையடிக்கும் அளவுக்கு நம்மிடம் ஒன்றுமில்லை. யெகோவாவின் கிருபையால் மட்டுமே நாம் அனைத்தையும் பெற்றிருக்கிறோம். இதை நினைவில் வைப்பது, வீம்புக்காரராக இருப்பதைத் தவிர்க்க நமக்கு உதவும்.—மத்தேயு 26:33-35, 69-75.
18. அகந்தையைப் பற்றி யெகோவா எவ்வாறு உணருகிறார்?
18 “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என நமக்குச் சொல்லப்படுகிறது. ஏன்? யெகோவா பதிலளிக்கிறார்: “பெருமையையும், அகந்தையையும் . . . நான் வெறுக்கிறேன்.” (நீதிமொழிகள் 8:13; 16:18) “அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும்” கண்டு யெகோவா மிகுந்த கோபமடைந்ததில் ஆச்சரியமில்லை! (ஏசாயா 10:12) அதற்காக யெகோவா அவனைத் தண்டித்தார். கூடிய சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகத்தார் அனைவரும், காணக்கூடிய மற்றும் காணக்கூடாத கர்வமிக்க, செருக்குமிக்க அதிகாரிகளுடன் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள். எனவே, யெகோவாவின் எதிரிகளுடைய இறுமாப்பான மனப்பான்மையை நாம் ஒருபோதும் பின்பற்றாதிருப்போமாக!
19. எவ்விதத்தில் கடவுளுடைய மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள், அதேசமயம் எவ்விதத்தில் மனத்தாழ்மையைக் காட்டுகிறார்கள்?
19 உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவின் ஊழியர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்ள தகுந்த காரணம் உண்டு. (எரேமியா 9:24) அதேசமயத்தில் மனத்தாழ்மையோடு இருப்பதற்கும் அவர்களுக்குத் தகுந்த காரணம் உண்டு. ஏன்? ஏனென்றால் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம். (ரோமர் 3:23) ஆகவே யெகோவாவின் ஊழியர்களாக நம் ஸ்தானத்தைப் பாதுகாக்க அப்போஸ்தலனாகிய பவுலின் மனப்பான்மையையே நாமும் பெற்றிருக்க வேண்டும்; “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” எனச் சொல்லிவிட்டு, “அவர்களில் பிரதான பாவி நான்” என அவர் குறிப்பிட்டார்.—1 தீமோத்தேயு 1:15.
20. யெகோவா எவ்வாறு தம் மக்களை இப்போது பாதுகாக்கிறார், எதிர்காலத்தில் அவர்களை எவ்வாறு பாதுகாப்பார்?
20 யெகோவாவின் மக்கள் சொந்த அக்கறைகளை இரண்டாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு தெய்வீக அக்கறைகளுக்கே சந்தோஷத்துடன் முதலிடம் கொடுப்பதால், யெகோவா அவர்களைத் தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் பாதுகாப்பார் என நாம் நிச்சயமாக இருக்கலாம். மேலும், மிகுந்த உபத்திரவம் வரும்போது யெகோவா தமது மக்களை ஆவிக்குரிய ரீதியில் மட்டுமல்லாமல் சரீர ரீதியிலும் பாதுகாப்பார் என்ற உறுதியுடன் இருக்கலாம். கடவுளுடைய புதிய உலகில் நுழைந்தவுடன் அவர்களால் இவ்வாறு சொல்ல முடியும்: “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்.”—ஏசாயா 25:9.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தாவீது ராஜாவும் இயேசு கிறிஸ்துவும் எவ்வாறு பாதுகாக்கப்பட்டார்கள்?
• இன்று யெகோவாவின் மக்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள்?
• நாம் சுயநலத்தை ஏன் தவிர்க்க வேண்டும்?
• நாம் எவ்வாறு பெருமிதத்தோடு, அதேசமயம் மனத்தாழ்மையோடு இருக்க முடியும்?
[பக்கம் 9-ன் படங்கள்]
யெகோவா எவ்வாறு தாவீதையும் இயேசுவையும் பாதுகாத்தார்?
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
இன்று கடவுளுடைய மக்கள் எவ்விதங்களில் ஆவிக்குரிய ரீதியில் பாதுகாக்கப்படுகிறார்கள்?
[பக்கம் 12-ன் படங்கள்]
யெகோவாவைச் சேவிப்பதில் நாம் பெருமிதம் கொண்டாலும், எப்போதுமே மனத்தாழ்மை காட்ட வேண்டும்