கிரியைகளினால் மட்டுமல்ல, கிருபையினால் இரட்சிக்கப்படுதல்
“விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; . . . ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.”—எபேசியர் 2:8, 9.
1. தனிப்பட்ட சாதனைகளைப் பொறுத்ததில், கிறிஸ்தவர்கள் எவ்வாறு மற்றவர்களிலிருந்து வேறுபடுகிறார்கள், ஏன்?
இன்று மக்கள் தங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமிதம் கொள்கிறார்கள், அவற்றைக் குறித்து அடிக்கடி பெருமையடித்துக் கொள்கிறார்கள். கிறிஸ்தவர்களோ வித்தியாசமானவர்கள். அவர்கள் தங்களுடைய சாதனைகளை, அவை உண்மை வணக்கத்தோடு சம்பந்தப்பட்டவையாக இருந்தாலும், பெரிதுபடுத்திப் பேசாதிருக்கிறார்கள். யெகோவாவின் மக்கள் ஒட்டுமொத்தமாக சாதிப்பவற்றைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அதில் தாங்கள் வகித்த பங்கை வலியுறுத்துவதில்லை. யெகோவாவின் சேவையில் தனிப்பட்ட சாதனைகளைவிட சரியான உள்நோக்கங்களே முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நித்திய ஜீவன் என்ற பரிசை இறுதியில் பெறுபவர்கள், தனிப்பட்ட சாதனைகளால் அல்ல ஆனால் விசுவாசத்தாலும் கடவுளுடைய கிருபையாலுமே அதைப் பெறுவார்கள்.—லூக்கா 17:10; யோவான் 3:16.
2, 3. பவுல் எதைக் குறித்து மேன்மைபாராட்டினார், ஏன்?
2 அப்போஸ்தலனாகிய பவுல் இந்த உண்மையை நன்கு அறிந்திருந்தார். ‘மாம்சத்தின் ஒரு முள்ளை’ நீக்குமாறு மூன்று முறை ஜெபம் செய்த பிறகு யெகோவாவிடமிருந்து பின்வரும் பதிலைப் பெற்றார்: “என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” யெகோவாவின் தீர்மானத்தை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு பவுல் இவ்வாறு சொன்னார்: “ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.” பவுலின் மனத்தாழ்மையை நாம் பின்பற்ற வேண்டும்.—2 கொரிந்தியர் 12:7-9.
3 கிறிஸ்தவ நடவடிக்கைகளில் பவுல் தலைசிறந்து விளங்கியபோதிலும், தன் சாதனைகள் தன் சொந்த திறமைகளைச் சார்ந்திருக்கவில்லை என அவர் உணர்ந்தார். ஆகவே அடக்கத்தோடு இவ்வாறு குறிப்பிட்டார்: “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.” (எபேசியர் 3:8) பவுலுக்கு எவ்வித பெருமையோ சுயநீதியோ இருக்கவில்லை என அவரது வார்த்தைகள் காட்டுகின்றன. உண்மையில், ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.’ (யாக்கோபு 4:6; 1 பேதுரு 5:5) நாம் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி, நம் சகோதரர்களில் சிறுமையானவர்களைக் காட்டிலும் நம்மைச் சிறுமையானவர்களாக மனத்தாழ்மையோடு கருதுகிறோமா?
“ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்”
4. நம்மைவிட மற்றவர்களை உயர்வாக நினைப்பது ஏன் சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கலாம்?
4 அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” (பிலிப்பியர் 2:3) முக்கியமாக நாம் பொறுப்புள்ள ஸ்தானத்தில் இருந்தால் இது ஒரு சவாலாக இருக்கலாம்; ஒருவேளை, இவ்வுலகில் மிக சகஜமாக காணப்படும் போட்டி மனப்பான்மையால் ஓரளவு நாம் செல்வாக்கு செலுத்தப்பட்டிருப்பதால் இது சவாலாக இருக்கலாம். பிள்ளைகளாக, கூடப் பிறந்தவர்களுடன் அல்லது வகுப்பு மாணவர்களுடன் போட்டிபோடும்படி கற்பிக்கப்பட்டு நாம் வளர்க்கப்பட்டிருக்கலாம். பள்ளியிலேயே சிறந்த மாணவனாக அல்லது விளையாட்டு நட்சத்திரமாக ஆவதற்கு நாம் எப்போதும் தூண்டப்பட்டிருக்கலாம். நிச்சயமாகவே, எவ்வித நேர்மையான காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் முடிந்தளவு அதிக முயற்சி எடுப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால் கிறிஸ்தவர்கள் தங்களிடம் அளவுக்கு மீறிய கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வாறு செய்வதில்லை; மாறாக, அந்த வேலையிலிருந்து முழு நன்மை பெறவும் ஒருவேளை மற்றவர்களுக்குக்கூட நன்மை அளிக்கவுமே அவ்வாறு செய்கிறார்கள். இருந்தாலும் எப்போதுமே ‘நம்பர் ஒன்’ இடத்திலிருக்க ஆசைப்படுவது ஆபத்தானது. எவ்வாறு?
5. போட்டி மனப்பான்மையை கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்?
5 ஒருவர் போட்டி மனப்பான்மையையும் சுயநலத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால் பிறரை மதிக்காமல் கர்வத்தோடு நடந்துகொள்ள ஆரம்பிப்பார். மற்றவர்களின் திறமைகளையும் அவர்கள் பெறும் விசேஷ வாய்ப்புகளையும் பார்த்து பொறாமைப்பட ஆரம்பிப்பார். நீதிமொழிகள் 28:22 (பொது மொழிபெயர்ப்பு) இவ்வாறு சொல்கிறது: “பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப்போவதை அவர் அறியார்.” தனக்குத் தகுதியில்லாத ஸ்தானங்களைப் பெறவும் அவர் துணிந்து முயலலாம். தன் செயல்களை நியாயப்படுத்த, முறுமுறுக்கவும் மற்றவர்களைக் குறைகூறவும் ஆரம்பிக்கலாம்; கிறிஸ்தவர்கள் அறவே தவிர்க்க வேண்டிய குணங்கள் இவை. (யாக்கோபு 3:14-16) எப்படியிருந்தாலும், ‘நான்-முதல்’ என்ற தன்னல மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் ஆபத்தில் அவர் இருக்கிறார்.
6. போட்டி மனப்பான்மையைக் குறித்து பைபிள் எவ்வாறு எச்சரிக்கிறது?
6 ஆகவே பைபிள் கிறிஸ்தவர்களை இவ்வாறு அறிவுறுத்துகிறது: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும் [“போட்டி போடாமலும்,” NW], ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” (கலாத்தியர் 5:26) இப்படிப்பட்ட மனப்பான்மைக்கு இடமளித்துவிட்ட சக கிறிஸ்தவர் ஒருவரைப் பற்றி அப்போஸ்தலனாகிய யோவான் பேசினார். “நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன்” என அவர் சொன்னார். ஒரு கிறிஸ்தவர் இப்படிப்பட்ட நிலைமையில் சிக்கினால் அது எவ்வளவு வருத்தகரமானது!—3 யோவான் 9, 10.
7. போட்டி நிறைந்த வேலைகளில் கிறிஸ்தவர் எதைத் தவிர்க்க வேண்டும்?
7 போட்டி மனப்பான்மையைத் தூண்டும் எல்லாவிதமான காரியங்களையும் ஒரு கிறிஸ்தவர் முழுமையாக ஒதுக்கித் தள்ள முடியுமென நினைப்பது நடைமுறையானதல்ல. உதாரணத்திற்கு, அவரது உலகப்பிரகாரமான வேலையில், அதே பொருட்களை அல்லது சேவைகளை அளிக்கும் மற்ற நபர்களோடும் கம்பெனிகளோடும் பொருளாதார ரீதியில் போட்டி போட வேண்டியிருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களிலும் அவர் தனது வியாபாரத்தை மரியாதையோடும், அன்போடும், தயவோடும் நடத்த வேண்டும். அவர் சட்டத்துக்கு விரோதமான அல்லது கிறிஸ்தவமற்ற பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்; ‘போட்டிபோடுவதில் மன்னர்’ என்று பெயரெடுக்காதிருக்க வேண்டும். எப்படிப்பட்ட காரியத்திலும் ‘நம்பர் ஒன்னாக’ இருப்பதே வாழ்க்கையில் மிக முக்கியம் என அவர் நினைக்காதிருக்க வேண்டும். உலகப்பிரகாரமான காரியங்களுக்கே இது அவசியமென்றால், வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு இது இன்னும் எவ்வளவு அவசியம்!
“மற்றவனைப் பார்க்கும்போதல்ல”
8, 9. (அ) கிறிஸ்தவ மூப்பர்கள் ஏன் ஒருவருக்கொருவர் போட்டி போடுவது சரியல்ல? (ஆ) 1 பேதுரு 4:10 ஏன் கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்துகிறது?
8 வணக்க விஷயத்தில் கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டிய மனப்பான்மையை பைபிள் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” (கலாத்தியர் 6:4) சபையிலுள்ள மூப்பர்கள், ஒருவருக்கொருவர் போட்டி போடுவதில்லை என்பதை உணர்ந்தவர்களாய், ஒரே குழுவாக மிகவும் ஒன்றுபட்டு வேலை செய்கிறார்கள். சபையின் ஒட்டுமொத்த நலனுக்காக அவர்கள் ஒவ்வொருவரும் ஆற்றும் பங்கைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இவ்வாறு கேடுண்டாக்கும் போட்டியைத் தவிர்த்து, சபையிலுள்ள மற்றவர்களுக்கு ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
9 வயது, அனுபவம், திறமைகள் போன்றவற்றின் காரணமாக சில மூப்பர்கள் மற்றவர்களைக் காட்டிலும் திறம்பட்டு விளங்கலாம் அல்லது அதிக புத்திக்கூர்மையுடன் நடந்துகொள்ளலாம். இதன் காரணமாக, யெகோவாவின் அமைப்பில் மூப்பர்களுக்கு வித்தியாசமான பொறுப்புகள் கொடுக்கப்படுகின்றன. மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்கள் பின்வரும் ஆலோசனையை மனதில் வைத்திருக்கிறார்கள்: “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.” (1 பேதுரு 4:10) இந்த வசனம் உண்மையில் யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்குமே பொருந்துகிறது; ஏனென்றால் திருத்தமான அறிவு என்ற ஈவை அவர்கள் அனைவருமே ஓரளவு பெற்றிருக்கிறார்கள், மேலும் கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபடும் பாக்கியத்தை அவர்கள் அனைவருமே பெற்றிருக்கிறார்கள்.
10. எப்போது மட்டுமே நம் பரிசுத்த சேவையை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்?
10 நாம் அன்போடும் பக்தியோடும் செய்யும் பரிசுத்த சேவையையே யெகோவா ஏற்றுக்கொள்கிறார், மற்றவர்களுக்கு மேலாக நம்மை உயர்த்துவதற்காகச் செய்யப்படும் சேவையை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே உண்மை வணக்கத்தை ஆதரிக்கும் விஷயத்தில் நாம் சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது அவசியம். ஒருவரும் மற்றவர்களுடைய உள்நோக்கத்தைச் சரியாக எடை போட முடியாது என்பது உண்மைதான்; ஆனால் யெகோவாவோ, “இருதயங்களைச் சோதிக்கிறவர்.” (நீதிமொழிகள் 24:12; 1 சாமுவேல் 16:7) ஆகவே அவ்வப்போது நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘யெகோவாவுக்குச் சேவை செய்வதில் என் உள்நோக்கம் என்ன?’—சங்கீதம் 24:3, 4; மத்தேயு 5:8.
நம் விசுவாசக் கிரியை பற்றிய சரியான கண்ணோட்டம்
11. நம் ஊழியம் சம்பந்தமாக என்ன கேள்விகளைக் கேட்பது நியாயமானது?
11 யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதில் நம் உள்நோக்கமே மிக முக்கியம் என்றால், விசுவாசக் கிரியைகளில் நாம் எந்தளவு அக்கறை காட்ட வேண்டும்? நம் ஊழியத்தை சரியான உள்நோக்கத்தோடு செய்தால் மட்டும் போதாதா? என்ன செய்கிறோம் அல்லது எவ்வளவு செய்கிறோம் என்பதை அறிக்கை செய்வது உண்மையிலேயே அவசியமா? இவை நியாயமான கேள்விகள், ஏனென்றால் நம் விசுவாசக் கிரியைகளைவிட அந்த அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நாம் விரும்புவதில்லை அல்லது சிறந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்பதையே நம் கிறிஸ்தவ ஊழியத்தின் முக்கிய அம்சமாகக் கருத விரும்புவதில்லை.
12, 13. (அ) நம் வெளி ஊழியத்தை அறிக்கை செய்வதற்கான சில காரணங்கள் யாவை? (ஆ) நம் பிரசங்க ஊழியத்தின் ஒட்டுமொத்த அறிக்கையைக் காண்கையில் சந்தோஷப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் உண்டு?
12 யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகம் என்ன சொல்கிறதென கவனியுங்கள்: “பிரசங்க வேலையின் முன்னேற்றத்தைப் பற்றிய அறிக்கைகளை அறிந்துகொள்வதில் இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள். (மாற். 6:30) பெந்தெகொஸ்தே தினத்தன்று சீஷர்கள் மீது பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டபோது சுமார் 120 பேர் கூடியிருந்தார்கள் என அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. விரைவிலேயே, 3,000 பேர், 5,000 பேர் என சீஷர்களுடைய எண்ணிக்கை பெருகியது. . . . (அப். 1:15; 2:5-11, 41, 47; 4:4; 6:7) அதிகரிப்பைப் பற்றிய இந்தச் செய்திகள் அந்தச் சீஷர்களுக்கு எவ்வளவாய் உற்சாகமூட்டியிருக்கும்!” அதே காரணத்திற்காக, இன்று யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளுடைய நிறைவேற்றம் சம்பந்தமாக உலகமுழுவதும் செய்யப்படும் வேலை பற்றிய திருத்தமான அறிக்கைகளை பதிவு செய்துவைக்க முயலுகிறார்கள்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) அந்த அறிக்கைகள், உலகெங்கும் செய்யப்படும் வேலையைப் பற்றிய எதார்த்தமான கண்ணோட்டத்தை அளிக்கின்றன. பிரசங்க வேலையை முன்னேற்றுவிக்க எங்கே உதவி தேவைப்படுகிறது, என்ன பிரசுரம் தேவைப்படுகிறது, எவ்வளவு தேவைப்படுகிறது போன்றவற்றை அவை காட்டுகின்றன.
13 ஆகவே நம் பிரசங்க வேலையை அறிக்கை செய்வது, ராஜ்யத்தின் நற்செய்தியை இன்னும் திறம்பட அறிவிக்க நமக்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, உலகின் மற்ற பகுதிகளில் உள்ள நம் சகோதரர்கள் செய்யும் வேலையைப் பற்றி அறிவது உற்சாகமளிக்கிறது அல்லவா? உலகெங்கும் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுவதைப் பற்றிய செய்திகள் நம்மை சந்தோஷத்தால் நிரப்புகின்றன, இன்னுமதிக ஊழியம் செய்யத் தூண்டுகின்றன, அதோடு யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைக்குமென்ற உறுதியளிக்கின்றன. அந்த உலகளாவிய அறிக்கையில் நம் ஒவ்வொருவருடைய அறிக்கையும் உட்பட்டிருக்கிறது என்பதை அறிவது எவ்வளவு மகிழ்ச்சியளிக்கிறது! உலகளாவிய ஒட்டுமொத்த அறிக்கையின் எண்ணிக்கையோடு ஒப்பிட நாம் அறிக்கை செய்யும் எண்ணிக்கை மிகக் குறைவுதான், ஆனால் அதை யெகோவா கவனிக்காமல் இல்லை. (மாற்கு 12:42, 43) இதையும் மறவாதீர்கள்: உங்கள் அறிக்கை இல்லாவிட்டால், உலகளாவிய அறிக்கை முழுமை பெறாது.
14. பிரசங்கிப்பதும் போதிப்பதும் தவிர, யெகோவாவின் வணக்கத்தில் வேறெதுவும் உட்பட்டிருக்கிறது?
14 நிச்சயமாகவே, யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியராக தங்கள் பொறுப்பை நிறைவேற்ற ஒவ்வொரு சாட்சியும் செய்யும் எல்லா காரியங்களுமே அறிக்கை செய்யப்படுவதில்லை. உதாரணத்திற்கு, தனிப்பட்ட பைபிள் படிப்பு, கிறிஸ்தவ கூட்டங்களில் ஆஜராகி பங்கெடுத்தல், சபை பொறுப்புகள், தேவையிலிருக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவி, உலகளாவிய ராஜ்ய வேலைக்கு நன்கொடை போன்ற பல காரியங்கள் அறிக்கை செய்யப்படுவதில்லை. ஆகவே நம் வெளி ஊழிய அறிக்கை, ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் ஈடுபடவும் சோர்ந்து விடாதிருக்கவும் நமக்கு உதவினாலும், அதை நாம் சரியான கண்ணோட்டத்திலேயே எப்போதும் பார்க்க வேண்டும். நித்திய ஜீவனுக்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும் ஓர் ஆவிக்குரிய லைஸென்ஸாக அல்லது பாஸ்போர்ட்டாக அதைக் கருதக் கூடாது.
‘நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்கள்’
15. கிரியைகள் மட்டுமே நம்மைக் காப்பாற்றாது என்றாலும் அவை ஏன் தேவை?
15 கிரியைகள் மட்டுமே நம்மைக் காப்பாற்றாது, என்றாலும் அவை கண்டிப்பாக தேவை. ஆகவேதான் கிறிஸ்தவர்கள் ‘அவருக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும்’ இருப்பதாக விவரிக்கப்படுகிறார்கள்; மேலும் ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிக்குமாறு’ உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (தீத்து 2:14; எபிரெயர் 10:24) மற்றொரு பைபிள் எழுத்தாளரான யாக்கோபு இன்னும் நேரடியாகவும் குறிப்பாகவும் இவ்வாறு சொல்கிறார்: “ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.”—யாக்கோபு 2:26.
16. கிரியைகளைக் காட்டிலும் முக்கியமானது எது, ஆனால் எதைக் குறித்து நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
16 நற்கிரியை முக்கியம் என்றாலும், அதைச் செய்வதற்கான உள்நோக்கம் அதைவிட முக்கியமானது. ஆகவே அவ்வப்போது நம் உள்நோக்கங்களைச் சோதித்தறிவது ஞானமானது. ஆனால் மற்றவர்களுடைய உள்நோக்கங்களை எந்த மனிதனாலும் சரியாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பதால், மற்றவர்களை நியாயந்தீர்ப்பதைக் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்?” என்று நம்மிடம் கேட்கப்படுகிறது, பிறகு, “அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி” என சொல்லப்படுகிறது. (ரோமர் 14:4) அனைவருக்கும் எஜமானரான யெகோவாவும் அவரால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியான கிறிஸ்து இயேசுவும் நம்மை நியாயந்தீர்ப்பார்கள்; நம் கிரியைகளின் அடிப்படையில் மட்டுமல்ல, ஆனால் நம் உள்நோக்கங்கள், நம் வாய்ப்புகள், நம் அன்பு, நம் பக்தி ஆகியவற்றின் அடிப்படையிலும் நியாயந்தீர்ப்பார்கள். “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு [“முழு முயற்சி செய்,” NW]” என அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை அறிவுறுத்துகிறார். இதை நாம் செய்திருக்கிறோமா இல்லையா என்பதை யெகோவாவும் கிறிஸ்து இயேசுவும் மட்டுமே சரியாக நியாயந்தீர்க்க முடியும்.—2 தீமோத்தேயு 2:15; 2 பேதுரு 1:10; 3:14; NW.
17. நாம் முழு முயற்சி எடுக்கையில் யாக்கோபு 3:17-ஐ ஏன் மனதில் வைக்க வேண்டும்?
17 எந்தக் காரியத்தையும் யெகோவா நம்மிடம் நியாயமாகவே எதிர்பார்க்கிறார். யாக்கோபு 3:17-ன்படி, ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தின்’ ஒரு அம்சம் ‘நியாயம்’ (NW). இவ்விஷயத்தில் நாம் யெகோவாவைப் பின்பற்றுவது ஞானமான காரியமாகவும் உண்மையான சாதனையாகவும் இருக்குமல்லவா? ஆகவே, நம்மிடமோ பிறரிடமோ எதார்த்தமில்லாமலும் நியாயமில்லாமலும் எதிர்பார்க்கக் கூடாது.
18. நம் கிரியைகளையும் யெகோவாவின் கிருபையையும் பற்றி சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் போது எதை எதிர்நோக்கியிருக்கலாம்?
18 நம் விசுவாசக் கிரியைகளையும் யெகோவாவின் கிருபையையும் பற்றி நாம் சமநிலையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் வரை, யெகோவாவின் உண்மை ஊழியர்களுக்கே உரிய சந்தோஷத்தைக் காத்துக்கொள்வோம். (ஏசாயா 65:13, 14) நாம் தனிப்பட்ட விதமாக எவ்வளவு செய்ய முடிந்தாலும் சரி, அனைத்து சகோதர சகோதரிகள் மீதும் ஒட்டுமொத்தமாக யெகோவா பொழியும் ஆசீர்வாதங்களுக்காக சந்தோஷப்படலாம். முழு முயற்சி எடுக்க அவர் நமக்கு உதவுமாறு, “ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்” தொடர்ந்து விண்ணப்பிப்போமாக. அப்போது ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும் நம் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்’ என்பதில் சந்தேகமே இல்லை. (பிலிப்பியர் 4:4-7) ஆம், கிரியைகளினால் மட்டுமல்ல, ஆனால் யெகோவாவின் கிருபையினாலும் நாம் இரட்சிக்கப்படுவோம் என்று அறிவதில் ஆறுதலையும் உற்சாகத்தையும் பெற முடியும்!
உங்களால் விளக்க முடியுமா? கிறிஸ்தவர்கள் ஏன் . . .
• தனிப்பட்ட சாதனைகளைக் குறித்து பெருமையடிப்பதைத் தவிர்க்கிறார்கள்?
• போட்டி மனப்பான்மையைத் தவிர்க்கிறார்கள்?
• தங்கள் வெளி ஊழிய வேலைகளைக் குறித்து அறிக்கை செய்கிறார்கள்?
• உடன் கிறிஸ்தவர்களை நியாயந்தீர்ப்பதைத் தவிர்க்கிறார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
“என் கிருபை உனக்குப் போதும்”
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
சபையின் நலனுக்காக ஒவ்வொருவரும் வகிக்கும் பங்கைக் குறித்து மூப்பர்கள் சந்தோஷப்படுகிறார்கள்
[பக்கம் 18, 19-ன் படங்கள்]
உங்கள் அறிக்கை இல்லாவிட்டால், உலகளாவிய அறிக்கை முழுமை பெறாது