போட்டிமிக்க ஒரு சமுதாயத்தில் மன அமைதி
“எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்” என்று இயேசு கிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலருக்குப் புத்திமதி கொடுத்தார். அப்போஸ்தலர் தங்களில் யார் பெரியவன் என்று வாதாடிக் கொண்டிருந்தார்கள். இயேசு அப்படிப்பட்ட ஆவியை வெறுத்தார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆவிக்குரிய முன்னேற்றமடைவதை ஊக்குவிப்பதாகத் தம்முடைய சீஷர்களை ஒருவருக்கொருவர் விரோதமாக அவர் ஒருபோதும் ஏவிவிடவில்லை.—மாற்கு 9:33-37.
பூமிக்கு வருவதற்கு முன்பு, முதல் மனித தம்பதியைப் படைப்பதில் இயேசு கிறிஸ்து பங்குகொண்டிருந்தார். அவர்கள் எப்படி வடிவமைக்கப்பட்டனர் என்று அறிந்திருந்தார். (கொலோசெயர் 1:15, 16) முதல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் கொடூரமாக போட்டியிடாமல் முன்னேறும் திறனுடன் உண்டாக்கப்பட்டனர். மனிதர்கள் தங்களுக்குள் யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்க சண்டைபோடவேண்டிய தேவையில் இருந்திருக்கவில்லை. மேலும் அவர்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் விலங்குகளோடு போட்டியிடவும் இல்லை.—ஆதியாகமம் 1:26; 2:20-24; 1 கொரிந்தியர் 11:3.
போட்டி ஆவியின் தோற்றம்
அப்படியென்றால், ஒரு கொடூரமான போட்டி ஆவி மனித சமுதாயத்தில் அப்படிப்பட்ட மேலோங்கி நிற்கும் சக்தியாக ஆனது எப்படி? மனித வரலாற்றில் முதல் கொலை நமக்கு துப்பு கொடுக்கிறது. முதல் மனித தம்பதியின் மூத்த மகன் காயீனிடமிருந்த போட்டி ஆவி அவல நிகழ்ச்சிக்கு வழிநடத்தியது. காயீன் தன் சகோதரன் ஆபேலைக் கொலைசெய்தான். ஏனென்றால் ஆபேலின் பலி கடவுளுக்குப் பிரியமாயிருந்தது; காயீனினுடையதோ அவ்வாறு இல்லை. மேலும் பைபிள், காயீன் ‘பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்தான்,’ என்று சொல்கிறது.—1 யோவான் 3:12; ஆதியாகமம் 4:4-8.
ஆம், பொல்லாங்கன், பிசாசாகிய சாத்தான், போட்டி ஆவியின் ஆரம்பகர்த்தாவாகவும் தூண்டுவிப்பவனாகவும் இருக்கிறான். உயர் மதிப்பான சிலாக்கியங்களைப் பெற்றிருந்த கடவுளின் ஒரு தேவ தூத குமாரனாக இருந்தபோதிலும் அவன் அதிகத்தை விரும்பினான். (எசேக்கியேல் 28:14, 15-ஐ ஒப்பிடவும்.) அவன் ஏவாளை வஞ்சித்தபோது, அவன் தன் சொந்த ஆசையை வெளிப்படுத்தினான். விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடுவதன்மூலம் அவள் ‘கடவுளைப்போல் இருப்பாள்’ என்று அவன் சொன்னான். (ஆதியாகமம் 3:4, 5, NW) உண்மையில் சாத்தானே யெகோவாவுக்குப் போட்டியாகக் கடவுளைப்போல இருக்க விரும்பினான். கடவுளுக்கு எதிராகப் போட்டியிடும் ஒரு மனப்போக்கு அவனைக் கலகத்தனத்திற்குத் தூண்டிவிட்டது.—யாக்கோபு 1:14, 15.
இந்த ஆவி தொற்றும் தன்மையுடையது. சாத்தானின் செல்வாக்கின்கீழ், கடவுள்தந்த ஆதிக் குடும்ப ஏற்பாட்டின் சமாதானம் இழக்கப்பட்டது. (ஆதியாகமம் 3:6, 16) பிசாசாகிய சாத்தான், கடவுளுக்கு எதிராக கலகம் செய்ததிலிருந்து, மனிதகுலத்தை அவன் ஆண்டுவருகிறான். போட்டி ஆவியைப் பேணிவளர்த்து, ஆண்களையும் பெண்களையும் வெற்றிக்குத் திறவுகோல் கடும்போட்டியே என்று நம்ப வைத்து வருகிறான். எனினும் பைபிள் விளக்குகிறது: “வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.” (யாக்கோபு 3:14-16) இவ்வாறு சாத்தான் மனிதனின் சந்தோஷத்தையும் மன அமைதியையும் திருடிவருகிறான்.
போட்டியில்லாமல் வெற்றி
சாத்தானின் தூண்டுதலுக்கு நேர்மாறாக, போட்டியில்லாமல் அடையப்பட்ட வெற்றியைப் பற்றிய உதாரணங்களைப் பைபிள் கொடுக்கிறது. மிகச் சிறந்த உதாரணம் இயேசு கிறிஸ்துவுடையது. கடவுளுடைய சாயலில் இருந்தாலும், கடவுளுக்குச் சமமாக இருக்கிறதாக அவர் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் அடிமையின் ரூபமெடுத்து, பூமிக்கு வந்தார். அதற்கும் மேலாக, அவர் தம்மைத்தாமே தாழ்த்தி, வேதனையின் கழுமரத்தில் மரணம்வரையாகக் கீழ்ப்படிதலுள்ளவராய் இருந்தார். எந்தவித ஆவிக்குரிய போட்டியுணர்வின் ஆவி சிறிதும் இல்லாத கீழ்ப்படிதலுள்ள மனநிலை, அவர் கடவுளின் தயவைச் சம்பாதித்துக் கொள்வதில் வழிநடத்தியது. “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, . . . எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:5-11) இதைவிட மேலான வெற்றியை எந்தச் சிருஷ்டி அடையமுடியும்? வேறு எந்தச் சிருஷ்டியும் செய்ய முடியாதளவிற்கு அவருடைய பிதாவை அவர் சந்தோஷப்படுத்தினார். இதை அவர் எந்தவித போட்டியுணர்வு அல்லது போட்டி ஆவி இல்லாமல் செய்தார்.—நீதிமொழிகள் 27:11.
பரலோகத்திலுள்ள பல உண்மையுள்ள தேவதூதர்கள் இதே மனநிலையைக் காண்பிக்கிறார்கள். தேவதூதர்களின் தலைவராக இருந்த இயேசு பூமிக்கு வந்தபோது, அவர்களைவிட சற்று சிறியவராக ஆகியிருந்தபோதிலும், அவருடைய தேவைகளுக்கு விருப்பத்துடன் அவர்கள் சேவை செய்தனர். தெளிவாகவே, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தவும் பிரதான தூதனாக இருப்பதிலிருந்து அவரை அகற்றிவிட முயற்சிசெய்யவும் அவர்கள் எந்த எண்ணங்கொள்ளவில்லை.—மத்தேயு 4:11; 1 தெசலோனிக்கேயர் 4:16; எபிரெயர் 2:7.
‘தேவதூதர்களையும் நியாயந்தீர்க்கப்போகும்’ அழியாமை நிலையை சில அபூரண மனிதர்கள் சுதந்தரிக்கும்படி உயர்த்தும் கடவுளுடைய விருப்பத்திற்கு, அவர்கள் பிரதிபலித்த விதத்தை நாம் சிந்திக்கையில், போட்டி மனப்பான்மைகள்மீது அவர்களுடைய வெறுப்பு அதிக தெளிவாய் இருக்கிறது. (1 கொரிந்தியர் 6:3) தேவதூதர்கள் யெகோவாவைச் சேவிப்பதில் மிகுதியான அனுபவம் உடையவர்களாக இருக்கிறார்கள்; நல்லதைச் செய்துமுடிப்பதில் அபூரண மனிதர்கள் செய்ய முடிவதைவிட மிக அதிகமான திறமையை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆயினும், தூதர்கள் பூமியின்மீது உள்ள அபிஷேகம் செய்யப்பட்டோர்களுக்குச் சந்தோஷத்துடன் ஊழியம்செய்கிறார்கள். இவர்கள் என்ன பெறப்போகிறார்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் பொறாமைகொள்வதில்லை. (எபிரெயர் 1:14) அவர்களுடைய நல்ல, போட்டியில்லா மனநிலை சர்வலோக கர்த்தர் யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன்பாகத் தொடர்ந்து ஊழியம்செய்வதை அவர்களுக்குச் சாத்தியமாக்குகிறது.
மேலும், பூர்வகால உண்மையுள்ள ஊழியர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்; இவர்கள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படப் போகிறவர்கள். ஆபிரகாம் விசுவாசத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாய் இருந்தார். அவர் ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என்றழைக்கப்பட்டார். (ரோமர் 4:9, 11) யோபு சகிப்புத்தன்மையின் ஒரு குறைவற்ற மாதிரியை வைத்தார். (யாக்கோபு 5:11) மோசே, ‘பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவராயிருந்தார்.’ இஸ்ரவேல் தேசத்தை விடுதலைக்கு வழிநடத்தினார். (எண்ணாகமம் 12:3) அபூரண மனிதர்களின் மத்தியில், விசுவாசம், சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றில் இந்த மனிதர்களைவிட மேலான முன்மாதிரியை வைத்தது யார்? எனினும், கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரதேசத்தைச் சுதந்தரிப்பதற்கு அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 25:34; எபிரெயர் 11:13-16) முழுக்காட்டுபவனாகிய யோவானைப் போல அவர்கள், ‘பரலோகராஜ்யத்தில் சிறியவராயிருக்கிறவருக்கு’ கீழானவர்களாக தரமிடப்படுவர். (மத்தேயு 11:11) தங்களுடைய விசுவாசம், சகிப்புத்தன்மை, அல்லது சாந்தம் ஆகியவை பரலோகத்தில் வாழ்க்கையைப் பெறுவோருக்கு இணையாக அல்லது சிலருடைய விஷயங்களில் மிஞ்சிவிட்டதாக வற்புறுத்திக் கூறி, குறைசொல்லுவதைப் பற்றி நினைத்தும்கூட அவர்கள் பார்த்திருப்பார்களா? நிச்சயமாகவே இல்லை! அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய மக்களாகச் சந்தோஷத்தோடு இருப்பர்.
இன்றும், போட்டி மனப்பான்மை இல்லாத மக்களோடு இருப்பது பூரிப்பூட்டுவதாய் இருக்கிறது. யாசூவோ, முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டவர், தங்கத் தொழிலை நம்பி அதிகமான கடனுக்குட்பட்டார். மேலும் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் இழந்துவிட்டார். அவருடைய “போலி நண்பர்கள்” அவரைக் கைவிட்டனர். அவருடைய மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்திருந்தபோது, அவர் தன்னுடைய குடும்பத்திற்குச் செய்த கொடுமைக்காக மன வருந்தியதன்நிமித்தம் அவர்களுடைய கூட்டங்களுக்குச் சென்றார். இறுதியில், அவர் தன்னிடமிருந்த போட்டி மனப்பான்மையை ஒழித்துக்கட்டி, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆனார். இப்போது அவர், மனச்சோர்வான காலங்களில் அவருக்கு உதவிசெய்யும் வகையினராகிய கிறிஸ்தவ நண்பர்களால் சூழப்பட்டிருப்பதற்காகச் சந்தோஷமாய் இருக்கிறார்.
மன அமைதியை எப்படிக் காத்துக்கொள்வது
இரக்கமற்ற, போட்டியார்வமிக்க சமுதாயத்தில் மன அமைதியைக் காத்துக்கொள்வது எப்போதும் எளிதானதாய் இல்லை. பைபிள் “பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள்” ஆகியவற்றை “மாம்சத்தின் கிரியைகள்” என கண்டிக்கிறதை நாம் கருத்தில்கொள்வது நல்லது. இவை, கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதிலிருந்து மக்களைத் தடுக்கின்றன. இந்தக் கிரியைகளெல்லாம் போட்டி ஆவியோடு பிணைந்து செயல்படுகின்றன. அப்போஸ்தலன் பவுல் கலாத்தியர்களை இவ்வாறு உற்சாகப்படுத்தியதில் எந்தவித ஆச்சரியமுமில்லை: “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், [ஒருவருக்கொருவர் போட்டியைக் கிண்டிவிடாமலும், NW] ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.”—கலாத்தியர் 5:19-21, 26.
இந்தச் சூழமைவில், வீண்புகழ்ச்சிக்கான போட்டியை அடக்குவதற்கான திறவுகோலைப் பவுலின் நிருபம் காண்பித்தது. அவர் சொன்னார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், [தன்னடக்கம், NW]; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22, 23) ஆவியின் கனி நம் மனங்களில் போட்டியுணர்வை முற்றிலும் அகற்றுவதற்கு நமக்கு உதவிசெய்கிறது. உதாரணமாக, அன்பு என்ற பண்பை எடுத்துக்கொள்வோம். “அன்புக்குப் பொறாமையில்லை,” என்று பவுல் விளக்குகிறார். “அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது.” (1 கொரிந்தியர் 13:4-7) அன்பை வளர்ப்பதன்மூலம், போட்டி ஆவியின் ஓர் உந்துசக்தியாகிய பொறாமையை அடியோடு ஒழிக்கமுடியும். ஆவியின் மற்ற கனிகளும் நம் இருதயங்கள் மற்றும் மனங்களிலிருந்து போட்டிக்குரிய ஆவியின் மீந்திருக்கும் எந்த அறிகுறியையும்கூட நீக்குவதற்கு உதவிசெய்கின்றன. ஏன், எது எப்படியானாலும் மற்றவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றியடையவேண்டும் என்ற எந்த அதிகரிக்கும் தூண்டுதலும் தன்னடக்கத்தின்மூலம் சீக்கிரத்தில் அடக்கிவைக்கப்படலாம்!—நீதிமொழிகள் 17:27.
இருந்தபோதிலும், இந்தக் குணங்களை வளர்ப்பதற்கு நாம் கடவுளின் ஆவி நம்மீது கிரியைசெய்ய அனுமதிக்கவேண்டும். ஜெபத்தில் தரித்திருப்பதன்மூலமும் நமக்கு உதவிசெய்ய பரிசுத்த ஆவிக்காகக் கேட்பதன்மூலமும் பரிசுத்த ஆவியின் இந்த ஆரோக்கியமான செயல்பாட்டை நாம் உற்சாகப்படுத்தலாம். (லூக்கா 11:13) நம் ஜெபத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, கடவுள் நமக்கு என்ன கொடுப்பார்? பைபிள் பதில்கொடுக்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
இயேசுவினுடைய அப்போஸ்தலரின் விஷயத்தில் இது தெளிவாய் இருந்தது. இயேசு தம்முடைய இறுதி இரவில், அப்போஸ்தலரோடு கர்த்தரின் இராப்போஜனத்தைத் தொடங்கிய பின்பும், அவர்கள் இன்னும் தங்களில் யார் பெரியவனாய் இருப்பான் என்று சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். (லூக்கா 22:24-27) அவர்களின் சிந்தனையைச் சரிசெய்வதற்காக இயேசு வேறுபட்ட சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு உதவிசெய்ய முயற்சிசெய்திருந்தார். ஆனால் இந்தப் போட்டி மனப்பான்மை அவர்களுக்குள் ஆழமாக ஊறிப்போய் இருந்தது. (மாற்கு 9:34-37; 10:35-45; யோவான் 13:12-17) ஆயினும், அந்த வாக்குவாதத்துக்குப் பின்பு சுமார் 50 நாள்கள் கழித்து அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்ற சமயத்திலிருந்து, அவர்களுடைய மனப்பாங்கு மாறியது. பெந்தெகொஸ்தே நாளன்று கூடியிருந்த ஆர்வமிக்க கூட்டத்திடம் அவர்களைப் பிரதிநிதித்துவம்செய்து யார் பேசுவது என்பதில் விவாதம் இருக்கவில்லை.—அப்போஸ்தலர் 2:14-21.
கிறிஸ்தவச் சபையின்மீது மனித அதிகாரத்தைச் செலுத்துவதற்கு எந்த வழியும் இல்லை. விருத்தசேதனம் சம்பந்தமான ஒரு பிரச்னையைத் தீர்க்கவேண்டிய தேவை வந்தபோது அந்த முக்கியமான கூட்டத்தை, இயேசு மரித்தபோது ஒரு சீஷனாகவும்கூட இல்லாதிருந்த யாக்கோபு தலைமைதாங்கி நடத்தினார். கிறிஸ்தவச் சபையினுடைய நிர்வாகக் குழுவின் அந்தக் கூட்டத்தில் யார் தலைமைதாங்க வேண்டும் என்று வாக்குவாதம் இருந்ததாக எந்தத் தடயமும் இல்லை. அப்போஸ்தலர் போட்டி மனப்பான்மையினால் கறைப்பட்டிருந்த சமயத்திலிருந்து என்னே ஒரு மாற்றம்! பரிசுத்த ஆவியின் உதவியினால், அவர்கள் இயேசுவின் போதகங்களை நினைவிற்குக் கொண்டுவந்து, அவருடைய பாடங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தனர்.—யோவான் 14:26.
இதுவே நமக்கும் பொருந்தும். மற்றவர்களின் ஆதாய இழப்பிலிருந்து முன்னேறும்படி மற்றவர்களுக்கு எதிராகப் போட்டியிடவேண்டும் என்ற மீந்திருக்கும் எந்தவித தூண்டுதல் உணர்வையும் நாம் பரிசுத்த ஆவியின் உதவியோடு மேற்கொள்ள முடியும். மிகச் சரியாகவே, எல்லா சிந்தனைக்கும் மேலான மன அமைதியை நாம் சம்பாதிக்க முடியும். கொடூரமான மனப்பான்மையின் ஊற்றுமூலனாகிய பிசாசான சாத்தான் சீக்கிரத்தில் அபிஸ்ஸுக்குள் போடப்பட்டு, செயலற்ற நிலைக்குக் கொண்டுவரப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:1-3) அயலார்கள் மத்தியில் போட்டியுணர்வு இனி ஒருபோதும் இருக்காது. எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு சமுதாயமாக விளைவு இருக்குமா? நிச்சயமாக இல்லை! மனிதர்கள் பரிபூரணத்துக்குக் கொண்டுவரப்படுவர், அவர்களுக்குள் எந்தவித போட்டியின் காரணமாக அல்ல, ஆனால் அவர்கள்பேரில் இயேசுவின் கிரய பலி பயன்படுத்தப்படுவதன்மூலம் ஆகும்.—1 யோவான் 2:1, 2.
கானோஸ்கி, முன்னால் குறிப்பிடப்பட்டவர், அதிகமான எண்ணிக்கையில் கார்களை விற்பதன்மூலம் ஒரு சமயத்தில் உலகப்பிரகாரமான வெற்றியின் மகிமையை அனுபவித்தவர், மனம், உடல் சார்பாகக் களைப்படைந்துவிட்டார். ஆனால் இறுதியில் அவர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டார். “இப்போது, என் வாழ்க்கை உண்மை சந்தோஷத்தில் முழுவதும் நிறைந்திருக்கிறது,” என்று அவர் சொல்கிறார். இயேசுவின் வாழ்க்கையை ஏன் உண்மை வெற்றி அடையாளப்படுத்தியது என்று அவர் கண்டுணர ஆரம்பித்துவிட்டார். கடவுளின் உலகளாவிய சபையில் அவர் செய்யும் எந்தக் காரியத்திலும் புத்துணர்ச்சியை இப்போது காண்கிறார். இவ்வாறு, அவர் ஒரு புதிய உலகத்திற்காகத் தயார்செய்யப்படுகிறார்; அங்குப் போட்டியே இருக்காது. நீங்களும் இந்தப் புதிய உலக சமுதாயத்தின் முன்காட்சியை, உங்கள் பிராந்தியத்திலுள்ள ராஜ்ய மன்றங்களில் ஒன்றுக்கு விஜயம்செய்து யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்வதன்மூலம் காணமுடியும்.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய புதிய உலகில் மனித சமுதாயம் சமாதானத்தையும் ஒத்துழைப்பையும் அனுபவிக்கும்