போட்டி வெற்றிக்குத் திறவுகோலா?
“வெல்லுதலைவிட முக்கியமானது எதுவுமில்லை.” அமெரிக்க கால்பந்தாட்ட பயிற்சியாசிரியர் வின்ஸ் லாம்பார்டி-க்கு அடிக்கடி புகழாரம் செய்யப்படும் இந்த வார்த்தைகளுக்கேற்ப பலர் இன்று வாழ்கிறார்கள். இப்போது, முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகள் போட்டி நியமத்தை மெச்சுவதில் சேர்ந்திருக்கின்றன. தங்கள் சந்தைகளில் போட்டியை அறிமுகப்படுத்துவது செழுமைக்கு நுழைவுச் சீட்டாக இருப்பதாய் சொல்லப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் பல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள் மற்றவர்களுக்கு எதிராகச் செயல்படும்படி செய்கின்றனர். மேலும், அவர்களை டுடோரியல்களுக்கு அனுப்புகின்றனர். அவை நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சியடையத் தேவைப்படும் லாவகத்தை அவர்களுக்குக் கற்றுத்தருகின்றன. இதே எண்ணத்தில் இருக்கும் பெற்றோர், புகழ்பெற்ற பள்ளியில் சேர்ப்பதே எதிர்கால செழுமைக்கு வழிநடத்தும் என்று நம்புகின்றனர்.
போட்டி வெற்றிக்குத் திறவுகோல் என்று பலர் உறுதியாக நம்புகின்றனர். அவர்களுடைய நம்பிக்கையின் பிரகாரம், ஒருவருக்கொருவர் போட்டியில் ஈடுபடுவதன்மூலம் மனிதர்கள் முன்னேறியிருக்கின்றனர். “பதவி உயர்வுக்குப் போட்டியிடுதலே, ஜப்பானிய நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஊற்றுமூலம்,” என்று பெரிய நிறுவனங்களின் செயற்குழுவினரில் 65.9 சதவிகிதத்தினர் ஜப்பானிலுள்ள பொருளாதார அமைப்புகளின் கூட்டிணைப்பினால் (Japan’s Federation of Economic Organizations) நடத்தப்பட்ட சுற்றாய்வில் சொன்னார்கள். ஜப்பானிய கம்பெனிகள், சிலகாலமாக வெற்றியடைந்து வருகிறதுபோல் தோன்றுகிறது. எனினும், உண்மையில் போட்டி வெற்றிக்குத் திறவுகோலா?
உண்மையில் பலன்தருகிறதா?
மற்றவர்களுக்கு எதிராகப் போட்டியிடும் மக்கள் ஒரு தன்னல, தான்-முதல் என்ற நோக்குநிலையைக் காண்பிக்கின்றனர். மற்றவர்கள் குறைபாட்டுடன் செய்கையில், அது தங்களுடைய சொந்த மதிப்பிடுதலை உயர்த்தி காண்பிக்கும் என்று கற்பனைசெய்துகொண்டு அவர்கள் அதில் சந்தோஷப்படுகின்றனர். அவர்களுடைய சொந்த தன்னல நலனுக்காக, மற்றவர்களுக்குப் பாதிப்பைத் தரும் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். போட்டியினால் வெற்றி அடைவதற்கான இப்படிப்பட்ட நாட்டம் எதற்கு வழிநடத்தும்? யாசூவோ என்பவர் அவருடைய கம்பெனியில் ஒரு முக்கியமான ஆளாக இருப்பதற்கான போட்டியில் தன்னையே முழுமையாக ஈடுபடுத்தினார். தன்னுடைய கடந்தகால போக்கைப் பற்றி நினைவுகூர்ந்து, இவ்வாறு சொல்கிறார்: “போட்டி ஆவியிலும் பதவி உயர்வு சிந்தனையிலுமே மூழ்கியிருந்தேன். என்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, மேம்பட்டவனாக உணர்ந்தேன். அந்த நபர்கள் என்னைவிட மேலான நிலையிலே உயர்த்தப்பட்டபோது, கம்பெனியின் பணியாளர் நிர்வாகத்தைப் பற்றி ஒவ்வொருநாளும் எரிச்சலுடன் குறைகூறுவேன். உண்மையான அர்த்தத்தில் எனக்கு நண்பர்களே இருந்திருக்கவில்லை.”
ஒரு போட்டி ஆவி அகால மரணத்திலும் கொண்டுபோய் விடலாம். எப்படி? ஜப்பானின் மைனிச்சீ தின செய்தி (Mainichi Daily News) காரோஷி அல்லது மிகுதியான வேலைபழுவினால் மரணம் ஏற்படுவதை அ-வகை சார்ந்த நடத்தைப்போக்குடன் இணைக்கிறது. அ-வகை சார்ந்த ஒரு நடத்தை மாதிரியை விளக்குகிறது. சீக்கிரத்தில் முடிப்பது, போட்டி மனப்பான்மை, விரோத மனப்பான்மை போன்றவற்றால் ஏற்படுகிற அழுத்தத்தை அது சமாளிக்கிறது. அமெரிக்க இதய இயல் வல்லுநர்களாகிய ஃபிரைடுமேன் மற்றும் ரோஸன்மேன் அ-வகை சார்ந்த நடத்தையை இருதயத்திற்கு இரத்தம்பாயச் செய்யும் நரம்புக்குழாய் சம்பந்தமான இருதய நோயுடன் தொடர்புபடுத்திப் பேசுகின்றனர். ஆம், போட்டி ஆவி மரணத்தைக் கொண்டுவரக்கூடும்.
வேலைசெய்யும் இடத்தில் போட்டி, மற்ற உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிநடத்தக்கூடும். ஜப்பானின் பெரிய கார் விற்பனையகங்களில் ஒன்றில் பிரதான விற்பனையாளராக இருந்த கானோஸ்கி இதற்கு ஓர் எடுத்துக்காட்டாய் இருக்கிறார். மொத்தம் 1,250 கார்களை விற்பனைசெய்வதன்மூலம் ஓர் உச்சநிலை பதிவை அவர் உண்டாக்கினார். அவருடைய படம் சட்டத்தில் பொருத்தப்பட்டு, கம்பெனியின் தலைமை அலுவலகத்திலுள்ள இயக்குநர் குழுவினர் கூடும் அறையில் தொங்கவிடப்பட்டது. அவர் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு அவருடைய உடன் ஊழியர்களைப் படிக்கற்களாகப் பயன்படுத்த வெறுப்புணர்ச்சியோடு இருந்தபோதிலும், கம்பெனி அவரைப் போட்டியில் பங்குபெறும்படி ஊக்கமூட்டியது. அதனால், ஒரு வருடத்தில் அவர் இரைப்பை மற்றும் முன்சிறுகுடல் புண்களால் அவதிப்பட்டார். அதே வருடத்தில், அவருடைய கம்பெனியில் 15 செயற்குழுவினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தல் நோக்குநிலை, என்றும்-ஓயாத போட்டியில் தங்களுடைய ஜீவனத்தின் பெருமைகளைப் பகட்டாரவாரம் செய்யும்படி வீட்டிலுள்ளோரைத் தூண்டுகிறது. (1 யோவான் 2:16) பூமியின் வர்த்தகர்களின் கரங்களில் பணத்தைக் கொட்டுவதன்மூலம், இது வியாபார நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:11-ஐ ஒப்பிடுங்கள்.
போட்டியுணர்வும், போட்டி ஆவியும் ஒருவேளை வேலையில் திறமையை அதிகரிக்கலாமென்றாலும், ராஜாவாகிய சாலொமோன் இவ்வாறு கண்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை: “மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.” (பிரசங்கி 4:4) எனவே, போட்டிமிக்க சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது மன அமைதியை எப்படிக் காத்துக்கொள்ளலாம்? கண்டறிய, போட்டி என்ற எண்ணம் எங்கு ஆரம்பித்தது என்பதை முதலில் நாம் காணலாம்.