உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 6/15 பக். 4-8
  • வேலை ஆசீர்வாதமா சாபமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேலை ஆசீர்வாதமா சாபமா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நமது மனப்பான்மையை ஆராய்தல்
  • வேலை ஓர் ஆசீர்வாதமாக ஆகும் காலம்
  • கடின உழைப்பால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள்
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • உங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்யுங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • எய்ட்ஸ் ஓர் அபாயமாக இல்லாதபோது
    விழித்தெழு!—1991
  • வேலை பற்றி சமநிலையான நோக்கை வளர்ப்பது எப்படி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 6/15 பக். 4-8

வேலை—ஆசீர்வாதமா சாபமா?

“உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை.”​—⁠பிரசங்கி [சபை உரையாளர்] 2:⁠24, பொது மொழிபெயர்ப்பு.

“நாள் முழுக்க வேலை செய்து ரொம்ப களைத்துவிட்டேன்.” மூன்று தொழிலாளிகளில் ஒருவர் இப்படித்தான் பெரும்பாலும் உணருவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட கூற்றுகளைக் கேட்பதில் ஆச்சரியமில்லை. அவர்கள் வெகு நேரம் வேலை செய்கிறார்கள், நிறைய வேலைகளை வீட்டிற்கும் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்​—⁠முதலாளிகளிடமிருந்தோ ஒரு பாராட்டும் கிடைப்பதில்லை.

மனித கண்டுபிடிப்பு இன்று பேரளவு உற்பத்திக்கு வழிவகுத்திருக்கிறது; இது, உயிரற்ற இராட்சத இயந்திரத்தில் சுழலும் பல்சக்கரங்களைப் போலவே பணியாளர்கள் பலரை உணரச் செய்திருக்கிறது. படைப்புத் திறனும் புதுமை படைக்கும் திறனும் பெரும்பாலும் அமுக்கி வைக்கப்படுகின்றன. இயல்பாகவே, வேலையைப் பற்றிய மக்களுடைய மனப்பான்மைகளை இது பாதிக்கிறது. வேலையில் தனிப்பட்ட அக்கறை எடுக்க வேண்டுமென்ற உணர்ச்சி வேகத்தை இது அப்படியே குழிதோண்டி புதைத்துவிடுகிறது. கைவினைத் தொழிலில் சிறந்து விளங்க வேண்டுமென்ற ஆசையையும் இது அணைபோட்டுத் தடுத்துவிடுகிறது. இது கடைசியில் வேலை மீதே விருப்பமில்லாமல் போகச் செய்துவிடுகிறது, ஒருவேளை அந்த நபர் தனது வேலையையே வெறுக்கச் செய்துவிடுகிறது.

நமது மனப்பான்மையை ஆராய்தல்

உண்மைதான், எல்லா சந்தர்ப்பங்களிலும் நம்முடைய சூழ்நிலைகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், நம்முடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை ஒப்புக்கொள்வீர்கள், அல்லவா? வேலையைப் பற்றி எதிர்மறையான மனப்பான்மை ஓரளவுக்கு உங்களை பாதித்திருந்தால், இந்த விஷயத்தில் கடவுளுடைய கண்ணோட்டத்தையும் நியமங்களையும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (பிரசங்கி 5:18) இவற்றை சிந்திப்பது வேலையில் ஓரளவு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தங்களுக்கு தந்திருப்பதை அநேகர் கண்டிருக்கின்றனர்.

கடவுளே தலைசிறந்த பணியாளர். கடவுள் ஒரு பணியாளர். ஒருவேளை அவரை நாம் ஒருநாளும் இப்படி நினைத்திருக்க மாட்டோம், ஆனால் அப்படித்தான் பைபிளில் தம்மை அவர் அறிமுகப்படுத்துகிறார். வானத்தையும் பூமியையும் யெகோவா படைத்தார் என்ற வார்த்தைகளுடன்தான் ஆதியாகமப் பதிவு ஆரம்பிக்கிறது. (ஆதியாகமம் 1:1) படைக்க ஆரம்பித்தபோது அவர் வகித்த பல்வேறு பாகங்களை கற்பனை செய்து பாருங்கள்​—⁠வடிவமைப்பாளர், ஒழுங்கமைப்பாளர், பொறியியலாளர், கலைஞர், மெட்டீரியல்ஸ் ஸ்பெஷலிஸ்ட், புராஜெக்ட் டெவலப்பர், வேதியியல் வல்லுநர், உயிரியல் வல்லுநர், விலங்கியல் வல்லுநர், திட்டமைப்பாளர், மொழியியல் வல்லுநர் என அடுக்கிக்கொண்டே போகலாம்.​—⁠நீதிமொழிகள் 8:12, 22-31.

கடவுளுடைய வேலையின் தரம் எப்படி இருந்தது? அது “நல்லது,” “மிகவும் நன்றாயிருந்தது” என பைபிள் பதிவு சொல்கிறது. (ஆதியாகமம் 1:4, 31) சொல்லப்போனால், படைப்பு ‘தேவனுடைய மகிமையை அறிவிக்கிறது,’ ஆகவே நாமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும்!​—⁠சங்கீதம் 19:1; 148:⁠1.

என்றாலும், வானத்தையும் பூமியையும் முதல் மானிட ஜோடியையும் படைத்ததோடு கடவுளுடைய வேலை முடிவடைந்துவிடவில்லை. யெகோவாவின் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார்.” (யோவான் 5:17) ஆம், யெகோவா தொடர்ந்து கிரியை செய்து வருகிறார்​—⁠தமது ஜீவராசிகளுக்குத் தேவையானவற்றை அளித்து வருவதன் மூலமும் படைப்பை காத்து வருவதன் மூலமும் தமது உத்தம வணக்கத்தாரைப் பாதுகாத்து வருவதன் மூலமும் யெகோவா தொடர்ந்து கிரியை செய்து வருகிறார். (நெகேமியா 9:6; சங்கீதம் 36:6; 145:15, 16) சில வேலைகளைச் செய்துமுடிக்க தமது ஜனங்களையும்கூட, அதாவது ‘தேவனுடைய உடன் வேலையாட்களையும்கூட’ அவர் பயன்படுத்துகிறார்.​—⁠1 கொரிந்தியர் 3:⁠9.

வேலை ஓர் ஆசீர்வாதமாக இருக்கலாம். வேலை ஒரு சாபமென பைபிள் சொல்லவில்லையா? ஆதியாகமம் 3:17-19-⁠ல் உள்ள பதிவு, ஆதாம் ஏவாளின் கலகத்தனத்திற்காக அவர்கள் மீது வேலை சுமையை வைப்பதன் மூலம் கடவுள் அவர்களை தண்டித்தார் என்ற கருத்தைத் தருவதாகத் தோன்றலாம். முதல் மனிதனாகிய ஆதாமுக்குத் தண்டனை வழங்கியபோது, “நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” என்று அவனிடம் கடவுள் கூறினார். அப்படியானால், வேலையையே அவர் அடியோடு கண்டனம் செய்தாரா?

இல்லை. மாறாக, ஆதாமும் ஏவாளும் உண்மையற்றவர்களாக நடந்துகொண்டதால் ஏதேன் என்ற பூங்காவனத்தை விஸ்தரிப்பது அந்தச் சமயத்தில் முடியாமல் போனது. ஏனெனில் நிலம் கடவுளுடைய சாபத்திற்கு உள்ளானது. ஒருவர் தன்னுடைய வயிற்றுப்பாட்டுக்காக நிலத்தில் வேர்வை சிந்தி பாடுபட வேண்டியிருந்தது.​—⁠ரோமர் 8:20, 21.

வேலையை ஒரு சாபமாக விவரிப்பதற்குப் பதிலாக, நெஞ்சார நேசிக்க வேண்டிய ஓர் ஆசீர்வாதமாகவே பைபிள் காட்டுகிறது. மேலே குறிப்பிட்டபடி, கடவுள்தாமே ஒரு கடின உழைப்பாளி. மனிதரை தமது சாயலில் படைத்திருப்பதால், தமது பூமிக்குரிய படைப்பை நிர்வகிக்கும் திறமையையும் அதிகாரத்தையும் யெகோவா அவர்களிடம் கொடுத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:26, 28; 2:15) ஆதியாகமம் 3:19-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகளை சொல்வதற்கு முன்பே அந்த வேலையைக் கடவுள் கொடுத்திருந்தார். வேலை ஒரு சாபமாகவும் தண்டனையாகவும் இருந்திருந்தால், அதைச் செய்யும்படி யெகோவா ஒருபோதும் மக்களை உற்சாகப்படுத்தியிருக்க மாட்டார். அதே போல, நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் ஜலப்பிரளயத்திற்கு முன்பும் பின்பும் அதிக வேலை செய்ய வேண்டியிருந்தது. கிறிஸ்தவ சகாப்தத்தை எடுத்துக்கொண்டால், வேலை செய்யும்படி இயேசுவின் சீஷர்களும்கூட உந்துவிக்கப்பட்டதை கவனிக்கலாம்.​—⁠1 தெசலோனிக்கேயர் 4:⁠12.

என்றாலும், இன்றைய காலத்தில் வேலை ஒரு பாரமாக இருக்கலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். மனஅழுத்தம், ஆபத்துகள், சலிப்பு, ஏமாற்றம், போட்டி, வஞ்சகம், அநீதி ஆகியவையெல்லாம் வேலையோடு சம்பந்தப்பட்ட ‘முட்களிலும் குருக்குகளிலும்’ சில. ஆனால் வேலையே ஒரு சாபமல்ல. பிரசங்கி 3:13-⁠ல், வேலையும் அதனால் வரும் பலனும் கடவுள் தரும் ஒரு பரிசென பைபிள் அழைக்கிறது.​—⁠“வேலையில் வரும் மனஅழுத்தத்தை சமாளித்தல்” என்ற பெட்டியைக் காண்க.

உங்களுடைய வேலையால் கடவுளை மகிமைப்படுத்த முடியும். தரமான வேலையும் சிறப்பான வேலையும் எப்பொழுதும் புகழ்ந்து பேசப்படுகின்றன. தரமான வேலை என்பது பைபிளின் கண்ணோட்டத்தில் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். கடவுள்தாமே தமது வேலையை சிறப்பாகச் செய்கிறார். அவர் நமக்குத் தகுதிகளையும் திறமைகளையும் கொடுத்திருக்கிறார். நல்ல நோக்கத்திற்காக நம் திறமைகளைப் பயன்படுத்த வேண்டுமென்றும் அவர் விரும்புகிறார். உதாரணமாக, பூர்வ இஸ்ரவேலில் ஆசரிப்புக் கூடாரம் கட்டப்பட்டபோது பெசலெயேல், அகோலியாப் போன்ற மனிதரை ஞானத்தாலும் புத்தியாலும் அறிவாலும் நிரப்பி, எல்லாவற்றையும் கலைநுணுக்கத்துடன் செய்ய கடவுள் அவர்களுக்கு உதவினார். (யாத்திராகமம் 31:1-11) அவர்களுடைய கைவேலைப்பாட்டிலும் வடிவமைப்பிலும் பிற நுணுக்கங்களிலும் அவருக்கு விசேஷ அக்கறை இருந்ததை இது காட்டுகிறது.

இது, தனிப்பட்ட திறமைகளையும் வேலை பழக்கங்களையும் பற்றிய நமது கண்ணோட்டத்திற்கு மிகுந்த அர்த்தத்தை அளிக்கிறது. இவற்றை ஏனோதானோவென எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக கடவுளிடமிருந்து வந்த பரிசாக கருதுவதற்கு இது உதவுகிறது. எனவே, தாங்கள் செய்யும் வேலையை கடவுள்தாமே பார்வையிடுகிறார் என்பதை மனதில் வைத்து செய்யும்படி கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது: “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” (கொலோசெயர் 3:23) வேலையை ஊக்கத்தோடும் கவனத்தோடும் செய்யும்படி கடவுளுடைய ஊழியர்களுக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது. இப்படிச் செய்வது சக வேலையாட்களுக்கும் மற்றவர்களுக்கும் நம்முடைய கிறிஸ்தவ செய்தியை அதிக கவரத்தக்கதாக ஆக்குகிறது.​—⁠“வேலை செய்யுமிடத்தில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுதல்” என்ற பெட்டியைக் காண்க.

இதை மனதில் வைத்து, நம்முடைய வேலையின் தரம் எப்படி இருக்கிறது, எந்தளவு ஊக்கமாக செய்கிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்வது நல்லது. நம்முடைய வேலையில் கடவுள் பிரியப்படுவாரா? நமக்கு நியமிக்கப்பட்ட வேலைகளைச் செய்து முடிக்கும் விதம் நமக்கு முழு திருப்தியைத் தருகிறதா? அப்படி இல்லையென்றால், முன்னேற்றம் செய்ய வேண்டும்.​—⁠நீதிமொழிகள் 10:4; 22:⁠29.

வேலையையும் ஆன்மீகத்தையும் சமநிலைப்படுத்துதல். கடினமாக வேலை செய்வது மெச்சத்தக்கதென்றாலும், வேலையிலும் வாழ்க்கையிலும் திருப்தியைக் கண்டடைய மற்றொரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அதுவே ஆன்மீகம், அதாவது கடவுளுடன் நம்முடைய உறவு. கடினமாக உழைத்த, வாழ்க்கையின் எல்லா வளங்களையும் இன்பங்களையும் துய்த்த சாலொமோன் ராஜா இந்த முடிவுக்கு வந்தார்: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”​—⁠பிரசங்கி 12:⁠13.

நாம் செய்யும் எல்லாவற்றிலும் கடவுளுடைய சித்தத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடைய சித்தத்திற்கு இசைய செயல்படுகிறோமா, அல்லது அதற்கு விரோதமாக செயல்படுகிறோமா? கடவுளைப் பிரியப்படுத்த முயலுகிறோமா, அல்லது நம்மையே பிரியப்படுத்த விரும்புகிறோமா? நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்யாவிட்டால், நம்பிக்கையின்மை, தனிமை, வெறுமை எனும் வேதனையில் சிக்கித் தவிப்போம்.

வேலையிலேயே மூழ்கி களைத்துப்போன அலுவலர்களுக்கு ஸ்டீவன் பெர்க்ளஸ் இவ்வாறு ஆலோசனை கூறினார்: ‘உங்களுக்குப் பிடித்தமான ஒரு வேலையை முதலில் கண்டுபிடியுங்கள், அதன் பிறகு அதை உங்கள் வாழ்க்கையாக்கிக் கொள்ளுங்கள்.’ அர்த்தமுள்ள வேலை செய்வதற்குத் தேவையான திறமைகளையும் ஆற்றல்களையும் கொடுத்தவருக்குச் சேவை செய்வதைவிட நோக்கமுள்ள வேலை வேறு எதுவுமில்லை. நம்முடைய படைப்பாளரைப் பிரியப்படுத்தும் வேலை நமக்கு நிச்சயம் திருப்தி தரும். இயேசுவுக்கு யெகோவா கொடுத்த வேலை ஓர் உணவைப் போல போஷாக்காகவும் திருப்தியளிப்பதாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. (யோவான் 4:34; 5:36) அதோடு, தமக்கு ‘உடன் வேலையாட்களாக’ இருப்பதற்கு உன்னத வேலையாளரான கடவுள் நம்மை அழைக்கிறார் என்பதையும் நினைவில் வையுங்கள்.​—⁠1 கொரிந்தியர் 3:⁠9.

கடவுளை வணங்குவதும் ஆன்மீக ரீதியில் வளருவதும் பலன்தரும் பொறுப்புள்ள வேலைக்காக நம்மை தயார்படுத்துகிறது. பெரும்பாலும் வேலையில் அழுத்தங்களும், சச்சரவுகளும் கோரிக்கைகளும் நிறைந்திருப்பதால், சிறந்த தொழிலாளிகளாகவோ முதலாளிகளாகவோ இருப்பதற்கு நாம் முயலுகையில், ஆழ வேரூன்றிய நம்முடைய விசுவாசமும் ஆன்மீகமும் நமக்குத் தேவையான பலத்தை மிகுதியாக அளிக்கும். மறுபட்சத்தில், தேவபக்தியற்ற இந்த உலகில் காணப்படும் வாழ்க்கையின் எதார்த்தங்கள் விசுவாசத்தில் வளர வேண்டிய அம்சங்களுக்கு நம்மை விழிப்புடனிருக்கச் செய்யும்.​—⁠1 கொரிந்தியர் 16:13, 14.

வேலை ஓர் ஆசீர்வாதமாக ஆகும் காலம்

கடவுளுக்குச் சேவை செய்ய கடினமாக உழைப்பவர்கள், அவர் இந்தப் பூமியைப் பூங்காவனம் போன்ற பரதீஸாக்கி அர்த்தமுள்ள வேலையால் அதை நிரப்பும் காலத்தை எதிர்நோக்கியிருக்கலாம். அப்பொழுது நிலவும் வாழ்க்கையைப் பற்றி யெகோவாவின் தீர்க்கதரிசியான ஏசாயா இவ்வாறு முன்னறிவித்தார்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; . . . நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”​—⁠ஏசாயா 65:⁠21-23.

அப்பொழுது வேலை எவ்வளவு ஆசீர்வாதமாக இருக்கும்! கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதற்கு இசைய செயல்படுவதன் மூலம், யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறவர்களில் ஒருவராகவும் ‘உழைப்பால் வரும் பயனைத் துய்ப்பவராகவும்’ இருப்பீர்களாக.​—⁠பிரசங்கி 3:⁠13, பொ.மொ.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

கடவுளே தலைசிறந்த பணியாளர்: ஆதியாகமம் 1:1, 4, 31; யோவான் 5:⁠17

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

வேலை ஓர் ஆசீர்வாதமாக இருக்கலாம்: ஆதியாகமம் 1:28; 2:15; 1 தெசலோனிக்கேயர் 4:⁠11

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

உங்களுடைய வேலையால் கடவுளை மகிமைப்படுத்த முடியும்: யாத்திராகமம் 31:1-11; கொலோசெயர் 3:⁠23

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

வேலையையும் ஆன்மீகத்தையும் சமநிலைப்படுத்துதல்: பிரசங்கி 12:13; 1 கொரிந்தியர் 3:⁠9

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

வேலையில் வரும் மனஅழுத்தத்தை சமாளித்தல்

வேலை சம்பந்தப்பட்ட அழுத்தத்தைத் தொழில் சார்ந்த ஓர் ஆபத்தாக மருத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் வயிற்றுப்புண்ணும் மனவுளைச்சலும் உண்டாகலாம், இது தற்கொலைக்கும்கூட வழிநடத்தலாம். இதை ஜப்பானிய மொழியில் காரோஷி என அழைக்கிறார்கள், இதன் அர்த்தம் “மிதமிஞ்சிய வேலையால் சாவு.”

வேலை சம்பந்தப்பட்ட பல்வேறு காரணிகள் மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விடலாம். உதாரணமாக, வேலை நேரத்தில் அல்லது வேலை சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளில் மாற்றம், மேலதிகாரிகளுடன் பிரச்சினை, பொறுப்புகளில் அல்லது வேலைகளில் மாற்றம், வேலையிலிருந்து ஓய்வுபெறுதல், வேலையிலிருந்து நீக்குதல் ஆகியவற்றால் மனஅழுத்தம் உண்டாகலாம். இத்தகைய மனஅழுத்தத்திற்கு ஆளாவதால், சிலர் தங்களுடைய வேலையை அல்லது சூழ்நிலையை மாற்றிக்கொள்ள முயலுகிறார்கள். வேறு சிலரோ இத்தகைய மனஅழுத்தத்தை பலவந்தமாக அமுக்கி வைக்க முயலுகிறார்கள், ஆனால் கடைசியில் வாழ்க்கையின் வேறு அம்சங்களில், மிக முக்கியமாக குடும்பத்தில், இந்த அழுத்தம் தலைதூக்குவதைத்தான் பார்க்கிறார்கள். சிலர் உணர்ச்சி ரீதியிலும்கூட அவதிப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

வேலை சம்பந்தப்பட்ட மனஅழுத்தத்தை சமாளிக்க கிறிஸ்தவர்கள் நன்கு தயாராக இருக்கிறார்கள். பைபிள் தரும் அடிப்படை நியமங்கள் பல, கஷ்ட காலங்களைத் தாங்கிக்கொள்ள உதவுகின்றன. நம்முடைய ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியிலான நலன் மீது நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, இயேசு இவ்வாறு கூறினார்: “நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்; ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.” அடுத்த நாள் பிரச்சினைகளின் மீதல்ல, ஆனால் அன்றைய பிரச்சினைகளின் மீதே கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி இங்கே சொல்லப்படுகிறது. இவ்வாறாக, நம்முடைய பிரச்சினைகளைப் பூதாகரமாக்குவதைத் தவிர்க்கிறோம், இல்லையென்றால் அழுத்தம்தான் அதிகரிக்கும்.​—⁠மத்தேயு 6:25-34, பொது மொழிபெயர்ப்பு.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய சொந்த பலத்தின் மீதல்ல, ஆனால் கடவுளுடைய பலத்தின் மீது சார்ந்திருப்பது மிக முக்கியம். நாம் இடிந்துபோய் இருப்பதாக உணரும்போது, கடவுள் நம் இருதயத்திற்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அளிப்பார், எந்தவொரு கஷ்டத்தையும் சமாளிக்கத் தேவையான ஞானத்தையும் அருளுவார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.​—⁠எபேசியர் 6:10; பிலிப்பியர் 4:⁠7.

கடைசியாக, அழுத்தமிக்க சூழ்நிலைகளும்கூட நல்ல விளைவுகளை உண்டாக்கலாம். யெகோவாவின் உதவியை நாடுவதற்கும் அவர் மீது நம்பிக்கை வைப்பதற்கும் சோதனைகள் நம்மை வழிநடத்தலாம். கிறிஸ்தவ பண்புகளைத் தொடர்ந்து வளர்த்து வருவதற்கும் அழுத்தத்தின் மத்தியிலும் தொடர்ந்து சகித்திருக்கத் தேவையான திறமையைப் பெறுவதற்கும் அவை நம்மைத் தூண்டலாம். பவுல் இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும் [அதாவது, அங்கீகரிக்கப்பட்ட நிலையையும்], பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.”​—⁠ரோமர் 5:3, 4.

இவ்வாறாக, மனஅழுத்தமும்கூட, துயரத்திற்கும் நம்பிக்கையின்மைக்கும் காரணமாக இருப்பதற்குப் பதிலாக, ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துவிக்கும் ஓர் ஊக்கியாக செயல்படலாம்.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

வேலை செய்யுமிடத்தில் பைபிள் நியமங்களைப் பின்பற்றுதல்

வேலையில் ஒரு கிறிஸ்தவருடைய மனப்பான்மையும் நடத்தையும் பைபிள் செய்தியிடம் சக வேலையாட்களையும் மற்றவர்களையும் கவரலாம். தீத்துவுக்கு எழுதிய கடிதத்தில், தொழிலாளிகளைப் போன்றோருக்கு அப்போஸ்தலன் பவுல் ஆலோசனை வழங்குகிறார். அதாவது ‘வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப் பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகல விதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கும்படியும்’ சொல்கிறார்.​—⁠தீத்து 2:9, 10.

உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமையகத்திற்குத் தொழிலதிபர் ஒருவர் எழுதியதை கவனியுங்கள்: “யெகோவாவின் சாட்சிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதி கேட்டு நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அவர்கள் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், நம்பகமானவர்கள், ஏமாற்றாதவர்கள் என்பதை நிச்சயமாக அறிந்திருப்பதால் அவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறேன். யெகோவாவின் சாட்சிகளே நான் நம்பிக்கை வைக்கிற ஒரே ஆட்கள். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.”

கைல் என்ற ஒரு கிறிஸ்தவர், தனியார் பள்ளி ஒன்றில் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றுகிறார். அவரை தவறாக புரிந்துகொண்டதால், சக பணியாளர் ஒருவர் சில மாணவர்களுக்கு முன்னால் அவரைக் கண்டபடி பேசினார். “யெகோவாவின் பெயருக்கு எந்த இழுக்கும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்க வேண்டியிருந்தது” என கைல் கூறுகிறார். அடுத்த ஐந்து நாட்களுக்கு, பைபிள் நியமங்களை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு கைல் சிந்தனை செலுத்தினார். அப்போது ரோமர் 12:18-⁠ல் உள்ள நியமத்தைக் கண்டுபிடித்தார்: “கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” அந்தச் சக பணியாளருக்கு ஒரு ஈ-மெயில் அனுப்பி, அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மனஸ்தாபத்திற்கு வருத்தம் தெரிவித்தார். வேலை முடிந்தபின் அங்கேயே இருந்து பிரச்சினையைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என தனது சக பணியாளருக்கு அழைப்புக் கொடுத்தார். அவர்கள் பிரச்சினையைப் பேசித் தீர்த்தபின், சக பணியாளருடைய மனம் இளகியது, கைலின் ஞானமான அணுகுமுறையை அவர் பாராட்டினார். “உங்களுடைய நடத்தைக்கும் மதத்திற்கும் சம்பந்தமிருக்க வேண்டும்” என கைலிடம் அவர் கூறினார். பிறகு விடைபெறுகையில் கைலை கட்டித்தழுவினார். கைல் சொல்ல வருவது என்ன? “நாம் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதே எப்போதும் சரியான காரியம்.”

[பக்கம் 4, 5-ன் படம்]

உயிரற்ற இயந்திரத்தில் சுழலும் பல்சக்கரங்களைப் போலவே பணியாளர்கள் பலர் உணருகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

Japan Information Center, Consulate General of Japan in NY

[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]

பூமி: NASA photo

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்