‘ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்’
பறவைகள் பொதுவாக காலையில் எழுந்தவுடன் சிறிதுநேரம் கானம் இசைத்துவிட்டு, பிறகு உணவு தேடிப் பறந்து செல்கின்றன. மாலையில் கூடுகளுக்குத் திரும்புகின்றன, இன்னும் கொஞ்சம் நேரம் காச்மூச்சென கூப்பாடு போட்டுவிட்டு உறங்கச் சென்றுவிடுகின்றன. சில பருவங்களில் இணை சேர்கின்றன, முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கின்றன, பிற்பாடு அவற்றிற்கு உணவூட்டி வளர்க்கின்றன. விலங்குகளும் இதே போன்ற ஒரு சுழற்சியைத்தான் பின்பற்றுகின்றன.
ஆனால் மனிதர்களாகிய நாம் மாறுபட்டவர்கள். உண்மைதான், நாமும்கூட உண்கிறோம், உறங்குகிறோம், சந்ததியை உருவாக்குகிறோம், ஆனால் நம்மில் பெரும்பாலோர் இத்தோடு திருப்தியடைந்து விடுவதில்லை. நாம் ஏன் உயிர் வாழ்கிறோம் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். நம்முடைய வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடுகிறோம். எதிர்கால நம்பிக்கையையும் பெற விரும்புகிறோம். அடிமனதில் உறங்கும் இத்தகைய ஆசைகள் மனிதனுக்கே உரிய ஒரு பண்பைச் சுட்டிக் காட்டுகின்றன, அதுதான் ஆன்மீக உணர்வு, அதாவது ஆன்மீக காரியங்களின் மீது நாட்டம், ஆன்மீகத் தேவை.
கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டோம்
மனிதனுக்குள் மறைந்திருக்கும் இந்த ஆன்மீகத் தேவையின் காரணத்தை பைபிள் விளக்குகிறது. “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்” என அது சொல்கிறது. (ஆதியாகமம் 1:27) அப்படி நாம் ‘தேவ சாயலில்’ படைக்கப்பட்டிருப்பதால்—பாவமும் அபூரணமும் ஒட்டியிருந்தாலும்கூட—கடவுளுடைய சில பண்புகளைப் பிரதிபலிக்கும் திறமை நமக்கு இருக்கிறது. (ரோமர் 5:12) உதாரணமாக, நமக்குப் படைப்புத் திறன் இருக்கிறது. ஓரளவு ஞானம், நீதி, சுயதியாக அன்பு காட்டும் திறமை இருக்கிறது. அதோடு, கடந்த காலத்தைச் சிந்தித்துப் பார்க்கவும் எதிர்காலத்திற்காகத் திட்டமிடவும் முடிகிறது.—நீதிமொழிகள் 4:7; பிரசங்கி 3:1, 11; மீகா 6:8; யோவான் 13:34; 1 யோவான் 4:8.
கடவுளை வணங்க வேண்டுமென்ற இயல்பான ஆசை, நமக்கு ஆன்மீக உணர்வு இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. படைப்பாளருடன் நம்முடைய உறவை வளர்த்துக்கொண்டு இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தால் தவிர, நாம் உண்மையான சந்தோஷத்தை, நீடித்த சந்தோஷத்தை கண்டடைய முடியாது. ‘ஆன்மீகத் தேவையைக் குறித்து உணர்வுடையோர் சந்தோஷமுள்ளவர்கள்’ என்று இயேசு கூறினார். (மத்தேயு 5:3, NW) என்றாலும், ஆன்மீக சத்தியங்களால், அதாவது கடவுளைப் பற்றிய உண்மைகள், அவருடைய தராதரங்கள், மனிதருக்கான அவருடைய நோக்கம் போன்ற சத்தியங்களால் ஆன்மீகத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீக சத்தியத்தை நாம் எங்கே கண்டடைய முடியும்? பைபிளில்.
“உம்முடைய வசனமே சத்தியம்”
அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) பவுல் சொன்ன வார்த்தைகள் இயேசு சொன்ன வார்த்தைகளுடன் ஒத்திருக்கின்றன, ஏனென்றால் “உம்முடைய வசனமே சத்தியம்” என்று ஜெபத்தில் பிதாவிடம் இயேசு கூறினார். இன்று, அந்த வசனம் பரிசுத்த பைபிளே என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நம்முடைய நம்பிக்கைகளும் தராதரங்களும் பைபிளுக்கு இசைவாக இருக்கிறதா என்பதை நாம் ஆராய்ந்து பார்ப்பது ஞானமான காரியமாகும்.—யோவான் 17:17.
நம்முடைய நம்பிக்கைகளை கடவுளுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் பூர்வ பெரோயா பட்டணத்தாரை நாம் பின்பற்றுகிறோம்; பவுல் கற்பித்த காரியங்கள் வேதாகமத்தோடு ஒத்திருக்கின்றனவா என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இதற்காக பெரோயர்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக, அவர்களுடைய மனப்பான்மையை லூக்கா பாராட்டினார். “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்”தார்கள் என அவர் எழுதினார். (அப்போஸ்தலர் 17:11) இன்று எங்கு பார்த்தாலும் முரண்பாடான மத போதனைகளும் நெறிமுறைகளும் கற்பிக்கப்படுவதால், நற்குணசாலிகளான பெரோயர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவது அவசியமாக இருக்கிறது.
ஆன்மீக சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ள மற்றொரு வழி, அது எப்படி மக்களுடைய வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதைக் கவனிப்பதாகும். (மத்தேயு 7:17) உதாரணமாக, பைபிள் சத்தியத்தின்படி ஒருவர் வாழும்போது அது அவரை சிறந்த கணவராக, சிறந்த தகப்பனாக, சிறந்த மனைவியாக, சிறந்த தாயாக மாற்றுகிறது, இது குடும்ப மகிழ்ச்சியை முன்னேற்றுவிக்கிறது, ஒருவருடைய மனதிருப்தியையும் அதிகரிக்கிறது. “தேவனுடைய போதனைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிற மக்களே உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள்” என்று இயேசு கூறினார்.—லூக்கா 11:28, ஈஸி டூ ரீட் வர்ஷன்.
பூர்வ இஸ்ரவேலரிடம் தமது பரலோக தகப்பன் கூறிய பின்வரும் வார்த்தைகளையே இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டுகின்றன: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப் போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப் போலும் இருக்கும்.” (ஏசாயா 48:17, 18) நற்குணத்தையும் நீதியையும் நேசிக்கிற அனைவரும் இத்தகைய கனிவான அழைப்பினால் மனம் கவரப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!
‘காதுகளுக்கு இனிமையானதை கேட்க’ விரும்புகிறார்கள் சிலர்
இஸ்ரவேலர் மத சம்பந்தமான பொய்களால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தார்கள், அதனால்தான் இருதயப்பூர்வமான இந்த அழைப்பை கடவுள் அவர்களிடம் விடுத்தார். (சங்கீதம் 106:35-40) நாமும் பொய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவர்களென சொல்லிக்கொள்வோரைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி [“காதுகளுக்கு இனிமையாய் இருப்பதற்காக,” NW], தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்.”—2 தீமோத்தேயு 4:3, 4.
கள்ளக்காதல், ஓரினப்புணர்ச்சி, குடிவெறி போன்ற தவறான ஆசைகளைத் திருப்திப்படுத்தும் பழக்கங்களை இன்றைக்கு மதத் தலைவர்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுவதன் மூலம் மக்களுடைய செவிகளுக்கு இனிமையாக இருப்பதையே சொல்கிறார்கள். இத்தகைய பழக்கங்களை அங்கீகரிப்பவர்களும் இவற்றைப் பழக்கமாக செய்கிறவர்களும் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று” பைபிள் தெளிவாகக் கூறுகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10; ரோமர் 1:24-32.
பைபிள் தராதரங்களின்படி வாழ தைரியம் தேவை, முக்கியமாக கேலி கிண்டலை எதிர்ப்படுகையில் தைரியம் தேவை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் பைபிள் தராதரங்களின்படி வாழ முடியும். இன்றைக்கு யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பலர், ஒருகாலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களாகவும் குடிவெறியர்களாகவும் வேசித்தனம் செய்கிறவர்களாகவும் தெருச் சண்டையில் ஈடுபடுகிறவர்களாகவும் திருடர்களாகவும் பொய் பேசுகிறவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும், கடவுளுடைய வார்த்தை சொல்வதை இதயத்தில் ஏற்று, ‘யெகோவாவுக்குப் பாத்திரராக நடப்பதற்கு’ பரிசுத்த ஆவியின் உதவியால் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்தார்கள். (கொலோசெயர் 1:9, 10; 1 கொரிந்தியர் 6:11) கடவுளோடு சமாதான உறவுக்குள் வந்த பிறகு, அவர்களும் மனசமாதானத்தையும் எதிர்காலத்தைப் பற்றிய உண்மையான நம்பிக்கையையும் பெற்றார்கள்; இதைத்தான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
ராஜ்ய நம்பிக்கை
கீழ்ப்படிகிற மனிதர்களுக்கு பைபிள் தரும் நம்பிக்கையே நீடித்த சமாதானம், இது கடவுளுடைய ராஜ்யத்தின் வாயிலாக நிறைவேற்றப்படும். “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என இயேசு ஜெபத்தில் கூறினார். (மத்தேயு 6:10) ஆம், கடவுளுடைய ராஜ்யம் மாத்திரமே அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்கு உறுதியளிக்க முடியும். ஏன்? ஏனென்றால் அந்தப் பரலோக ராஜ்யமே, அதாவது இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் அரசாங்கமே, இந்தப் பூமியில் கடவுளுடைய பேரரசுரிமையை சரியென நிரூபித்துக் காட்டுவதற்கு ஒரே கருவியாக விளங்குகிறது.—சங்கீதம் 2:7-12; தானியேல் 7:13, 14.
அந்த ராஜ்யத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்து, உடும்புப் பிடிபோன்ற எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும், அதாவது ஆதாமினால் சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும், கீழ்ப்படிதலுள்ள மனிதரை விடுதலை செய்வார். வெளிப்படுத்துதல் 21:3, 4 இவ்வாறு கூறுகிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் [யெகோவா] தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”
நீடித்த சமாதானம் பூமியெங்கும் வியாபித்திருக்கும். அதைக் குறித்து நாம் ஏன் நிச்சயத்துடன் இருக்கலாம். ஏசாயா 11:9-ல் இதற்குரிய காரணம் சொல்லப்பட்டுள்ளது, அது இவ்வாறு கூறுகிறது: ‘என் பரிசுத்த பர்வதமெங்கும் [ராஜ்யத்தின் பிரஜைகள்] தீங்கு செய்வதுமில்லை; கேடு செய்வதுமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ ஆம், பூமியிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு இருக்கும், அவர்கள் அவருக்கு கீழ்ப்படிந்தும் நடப்பார்கள். இப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்காலம் உங்கள் இதயத்திற்கு இதமளிக்கிறது, அல்லவா? அப்படியானால், ‘யெகோவாவை அறிகிற [மதிப்புமிக்க] அறிவை’ பெறுவதற்கு இதுவே காலம்.
ராஜ்ய செய்திக்கு நீங்கள் செவிகொடுப்பீர்களா?
அந்த ராஜ்யத்தின் மூலம் சாத்தானுடைய எல்லா செயல்களையும் கடவுள் அழித்து, மக்களுக்கு தமது நீதியான வழிகளைப் போதிப்பார். ஆகையால், அந்த ராஜ்யமே இயேசுவினுடைய போதனையின் மையமாக விளங்கியதில் ஆச்சரியமில்லை. “நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்று அவர் கூறினார். (லூக்கா 4:23) இதே செய்தியைத்தான் மற்றவர்களிடம் சொல்லும்படி கிறிஸ்து தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 28:19, 20) “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று அவர் முன்னுரைத்தார். (மத்தேயு 24:14) அந்த முடிவு மிக வேகமாய் நெருங்கிவருகிறது. அப்படியானால், உயிர் காக்கும் நற்செய்திக்கு நல்மனமுடைய ஜனங்கள் செவிகொடுப்பது எவ்வளவு முக்கியம்!
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஆல்பர்ட் தன்னுடைய மனைவியும் மகனும் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, ராஜ்ய செய்தியைக் கேட்டார். முதலில் ஆல்பர்ட் சந்தேக மனப்பான்மையுடையவராக இருந்தார். யெகோவாவின் சாட்சிகள் போதிப்பது தவறு என்பதை தனது மனைவிக்கும் மகனுக்கும் நிரூபிக்க உள்ளூர் பாதிரியாரை அழைத்தார். ஆனால் அந்தப் பாதிரியார் இதில் தலையிட விரும்பவில்லை. ஆகவே, யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளில் ஏதாவது தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டுவதற்காக ஆல்பர்ட்டே ஒரு பைபிள் படிப்பில் கலந்துகொள்ள தீர்மானித்தார். ஒரேவொரு படிப்பிற்குப்பின், இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. எனவே, அவரும் அந்தப் படிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டார். தனது மனப்பான்மை மாறியதற்குரிய காரணத்தை சொன்னபோது அவர் இவ்வாறு கூறினார்: “இதைத்தானே இத்தனை காலமாக தேடிக் கொண்டிருந்தேன்.”
கடைசியில், ஆல்பர்ட் தன்னுடைய ஆன்மீக தேவையைத் திருப்தி செய்துகொள்ள ஆரம்பித்தார், அதற்காக அவர் வருத்தப்படவே இல்லை. வாழ்க்கையில் அவர் தேடிக் கொண்டிருந்ததை பைபிள் சத்தியம் அவருக்குக் கொடுத்தது. ஆம், இன்றைக்கு சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் அநீதிக்கும் மோசமான நிலைமைக்கும் பரிகாரத்தைக் கண்டுபிடித்தார், எதிர்கால நம்பிக்கையையும் பெற்றார். பைபிள் சத்தியம் அவருக்கு நிம்மதியைத் தந்தது. உங்களுடைய ஆன்மீகத் தேவை திருப்தி செய்யப்படுகிறதா? 6-ம் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கேள்விகளை வாசிப்பதற்கு ஏன் கொஞ்ச நேரத்தைச் செலவழிக்கக் கூடாது? கூடுதலான தகவலைப் பெற விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]
உங்கள் ஆன்மீகத் தேவை திருப்தி செய்யப்படுகிறதா?
உங்களுக்குக் கிடைக்கும் ஆன்மீக உணவில் திருப்தி அடைகிறீர்களா? பின்வரும் கேள்விகளை வாசித்து, அவற்றிற்கு சரியாக பதிலளிக்க முடிகிறதா என பாருங்கள்.
□ கடவுள் யார், அவருடைய பெயரென்ன?
□ இயேசு கிறிஸ்து யார்? அவர் ஏன் மரிக்க வேண்டியிருந்தது? அவருடைய மரணம் எப்படி உங்களுக்கு நன்மை அளிக்க முடியும்?
□ பிசாசு இருக்கிறானா? அப்படியானால், அவன் எங்கிருந்து வந்தான்?
□ மரிக்கும்போது நமக்கு என்ன நேரிடுகிறது?
□ பூமியையும் மனிதரையும் பற்றியதில் கடவுளுடைய நோக்கம் என்ன?
□ கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
□ ஒழுக்க நெறிகள் சம்பந்தமாக கடவுளுடைய தராதரங்கள் யாவை?
□ குடும்பத்தில், கணவனுக்கும் மனைவிக்கும் கடவுள் என்ன பாகத்தைக் கொடுத்திருக்கிறார்? குடும்ப மகிழ்ச்சிக்கு உதவும் பைபிள் நியமங்கள் சில யாவை?
இந்தக் கேள்விகளுக்குரிய பதில்கள் உங்களுக்குச் சரியாக தெரியாவிட்டால், கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை நீங்கள் பெறலாம். இது சுமார் 300 மொழிகளில் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இந்தச் சிற்றேட்டில் 16 அடிப்படை பைபிள் விஷயங்கள் கலந்தாராயப்படுகின்றன; இந்தக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் வேதப்பூர்வ பதிலை இது தருகிறது.
[பக்கம் 4-ன் படங்கள்]
மிருகங்களைப் போல் அல்லாமல், மனிதருக்கு ஆன்மீகத் தேவை இருக்கிறது
[பக்கம் 5-ன் படம்]
‘காதுகளுக்கு இனிமையாய் இருப்பதற்காக தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களை அவர்கள் திரளாகச் சேர்த்துக்கொள்வார்கள்.’—2 தீமோத்தேயு 4:3, NW
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் மூலமே நீடித்த சமாதானம் வரும்