வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்க வேண்டாம்” என உபாகமம் 14:21 கூறுகிறது. ஆனால் லேவியராகமம் 11:39, 40 இவ்வாறு கூறுகிறது, “அதின் [செத்த மிருகத்தின்] மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.” ஏன் இந்த முரண்பாடு?
இந்த இரண்டு வசனங்களுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. முதலில் சொல்லப்பட்ட வசனம், செத்துப்போன மிருகத்தை, ஒருவேளை மூர்க்க மிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தைப் புசிக்கக் கூடாது என்ற தடையை மீண்டும் வலியுறுத்துகிறது. (யாத்திராகமம் 22:31; லேவியராகமம் 22:8) இரண்டாவது வசனமோ, இஸ்ரவேலன் ஒருவன் தவறுதலாக இந்தச் சட்டத்தை மீறிவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறது.
ஒரு காரியம் நியாயப்பிரமாணத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்ற காரணத்தால் அதை யாருமே, எப்போதுமே அசட்டை செய்ய மாட்டார்கள் என சொல்லிவிட முடியாது. உதாரணமாக, திருட்டு, கொலை, பொய்ச் சாட்சி போன்றவற்றிற்கு எதிராக சட்டங்கள் இருந்தன. அதே சமயத்தில், கடவுள் தந்த இந்தச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குரிய தண்டனைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இத்தகைய தண்டனைகள் அந்தச் சட்டத்தை வலுப்படுத்தின, அதோடு அவை எவ்வளவு வினைமையானவை என்பதையும் எடுத்துக்காட்டின.
இறந்துபோன மிருகத்தின் மாம்சத்தைப் புசிக்கக் கூடாதென்ற தடையை ஒருவர் மீறும்போது, யெகோவாவின் பார்வையில் அசுத்தமானவராக ஆகிறார்; அதனால் சுத்திகரிப்புக்குரிய முறைமையை அவர் அனுசரிக்க வேண்டியிருந்தது. தகுந்த விதத்தில் தன்னை சுத்திகரிக்கத் தவறினால், அவர் ‘தன் அக்கிரமத்தைச் சுமக்க’ வேண்டியிருந்தது.—லேவியராகமம் 17:15, 16.