வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“வெள்ளாட்டுக் குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்” என்ற கட்டளையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (யாத்திராகமம் 23:19)
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளை பைபிளில் மூன்று முறை பதிவு செய்யப்பட்டிருக்கிறது; யெகோவா எப்போதுமே சரியானதைச் செய்யும் இயல்புள்ளவர், இரக்கமுள்ளவர், கனிவுள்ளவர் என்பவற்றைப் புரிந்துகொள்ள இக்கட்டளை நமக்கு உதவுகிறது. அவர் பொய் வணக்கத்தை அடியோடு வெறுப்பதைக்கூட இது வலியுறுத்துகிறது.—யாத்திராகமம் 34:26; உபாகமம் 14:21.
ஓர் ஆட்டுக்குட்டியை அல்லது வேறு ஏதேனும் மிருகத்தின் குட்டியை அதன் தாயின் பாலில் சமைப்பது, யெகோவா செய்திருக்கிற இயற்கையான ஏற்பாட்டிற்கு முரணாக இருக்கும். குட்டி நன்கு போஷாக்கைப் பெற்று வளருவதற்காகத்தான் அதற்குத் தாய்ப்பால் கிடைக்கும்படி யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, அந்தத் தாய்ப்பாலிலேயே குட்டியை சமைப்பது, ஓர் அறிஞரின்படி, “தாய்க்கும் சேய்க்கும் இடையே கடவுள் ஏற்படுத்தியுள்ள புனிதமான உறவை அவமதிப்பதாக இருக்கும்.”
அதுமட்டுமல்ல, ஒரு குட்டியை அதன் தாயின் பாலிலேயே சமைப்பது, மழையை வருவிப்பதற்காக புறஜாதியினர் செய்த சடங்காக இருந்திருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள். அது உண்மையென்றால், சுற்றுப்புற தேசங்களின் மடத்தனமான, கொடூர மத பழக்கவழக்கங்களிலிருந்து இஸ்ரவேலரை அந்தக் கட்டளை பாதுகாத்திருக்கும். அந்தத் தேசங்களின் வழிபாடுகளைப் பின்பற்றாதிருக்கும்படி நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேலருக்கு நேரடியான கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.—லேவியராகமம் 20:23.
இறுதியாக, அந்தக் கட்டளையிலிருந்து நாம் யெகோவாவின் கனிவான இரக்கத்தைப் புரிந்துகொள்கிறோம். உண்மையில், இதுபோன்ற இன்னுமநேக கட்டளைகள் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருந்தன; மிருகங்களைக் கொடூரமாக நடத்துவதை அவை கண்டித்து, இயற்கைக்கு முரணாக செயல்படுவதிலிருந்து பாதுகாத்தன. உதாரணத்திற்கு, தாயுடன் குறைந்தது ஏழு நாட்களாவது இருந்திருக்கும் குட்டியைத்தான் பலி செலுத்த வேண்டும், மிருகத்தையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் கொல்லக் கூடாது, ஒரு பறவையின் கூட்டிலிருந்து தாயையும் அதன் முட்டைகளையும்/குஞ்சுகளையும் சேர்த்து எடுக்கக்கூடாது என்றெல்லாம் கட்டளைகள் இருந்தன.—லேவியராகமம் 22:27, 28; உபாகமம் 22:6, 7.
ஆக, நியாயப்பிரமாணம் வெறும் கட்டளைகளையும் தடைகளையும் கொண்ட ஒரு சிக்கலான சட்டத்தொகுப்பாக இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதன் நியமங்கள், உயரிய ஒழுக்கவுணர்வை நம் மனதில் பதித்து, யெகோவாவின் அருமையான பண்புகளைப் பிரதிபலிக்க உதவுகின்றன; இன்னும் பல பயன்களையும் அளிக்கின்றன.—சங்கீதம் 19:7-11.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
© Timothy O’Keefe/Index Stock Imagery