உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 7/1 பக். 28-பக். 31 பாரா. 12
  • ஒன்று இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒன்று இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஞானமுள்ள ஒரு ராஜாவின் ஆட்சியில் சமாதானமும் செழுமையும்
  • (1 இராஜாக்கள் 1:1–11:43)
  • ஒன்றுபட்ட ராஜ்யம் இரண்டுபடுகிறது
  • (1 இராஜாக்கள் 12:1–22:53)
  • நமக்கு அதிக மதிப்புடையது
  • பைபிள் புத்தக எண் 11—1 இராஜாக்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • 1 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • 1 ராஜாக்கள் முக்கியக் குறிப்புகள்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 7/1 பக். 28-பக். 31 பாரா. 12

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

ஒன்று இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

“நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.” (நீதிமொழிகள் 29:2) இந்த நீதிமொழியில் காணப்படும் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை பைபிளில் ஒன்று இராஜாக்கள் புத்தகம் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இப்புத்தகம் சாலொமோனின் வாழ்க்கை சரிதையை விவரிக்கிறது; அவருடைய ஆட்சி காலத்தில் பூர்வ இஸ்ரவேல் தேசம் மிகுந்த செழிப்பையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ்ந்ததைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அவரது ஆட்சிக்குப் பிறகு அத்தேசம் இரண்டுபடுவதைப் பற்றியும் அவருக்குப் பிறகு அரியணை ஏறுகிற 14 ராஜாக்களைப் பற்றியும் இப்புத்தகம் குறிப்பிடுகிறது; இவர்களில் சிலர் இஸ்ரவேல் தேசத்தையும் மற்றவர்கள் யூதா தேசத்தையும் ஆளுகிறார்கள். இந்த ராஜாக்களில் இருவர் மட்டுமே கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, எலியா உட்பட ஆறு தீர்க்கதரிசிகள் செய்த காரியங்களைப் பற்றியும் இப்புத்தகம் சொல்கிறது.

இப்புத்தகத்தை எழுதியவர் எரேமியா தீர்க்கதரிசி; அவர் எருசலேமிலும் யூதாவிலும் இருந்தபோது இதை எழுதினார். இதிலுள்ள விஷயங்கள் சுமார் 129 வருட காலப்பகுதியை உள்ளடக்குகின்றன, அதாவது பொ.ச.மு. 1040 முதல் பொ.ச.மு. 911 வரையான காலப்பகுதியை உள்ளடக்குகின்றன. எரேமியா இப்புத்தகத்தை தொகுக்கையில், ‘சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகம்’ போன்ற பூர்வ பதிவுகளை ஆராய்ந்திருப்பதை அத்தாட்சிகள் காட்டுகின்றன. இத்தகைய தனித்தனி பதிவுகள் இப்போது இல்லை.​—⁠1 இராஜாக்கள் 11:41; 14:19; 15:7.

ஞானமுள்ள ஒரு ராஜாவின் ஆட்சியில் சமாதானமும் செழுமையும்

(1 இராஜாக்கள் 1:1–11:43)

ஒன்று இராஜாக்கள் புத்தகம் ஆவலைக் கிளறுகிற ஒரு சம்பவத்துடன் துவங்குகிறது; அதாவது, தாவீது ராஜாவின் மகனான அதோனியா தகப்பனின் ஆட்சியைக் கைப்பற்ற முயலுகிறான். நாத்தான் தீர்க்கதரிசி தக்க சமயத்தில் நடவடிக்கை எடுப்பதால் அத்திட்டம் முறியடிக்கப்படுகிறது. அவனுக்குப் பதிலாக, தாவீதின் மகனான சாலொமோன் அரியணை ஏறுகிறார். புதிதாய் பட்டத்திற்கு வருகிற இந்த ராஜாவின் விண்ணப்பம் யெகோவாவின் மனதைக் குளிர்விக்கிறது. இதனால் “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை” மட்டுமல்ல, “ஐசுவரியத்தையும் மகிமையையும்”கூட அவருக்குக் கொடுக்கிறார். (1 இராஜாக்கள் 3:12, 13) இவ்வாறு சாலொமோன் நிகரற்ற ஞானத்தையும் அளவற்ற செல்வத்தையும் பெறுகிறார். இஸ்ரவேல் தேசம் சமாதானமும் செழிப்புமிக்க காலத்தை அனுபவிக்கிறது.

சாலொமோன், யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தையும், பல்வேறு ராஜாங்க கட்டடங்களையும் கட்டி முடிக்கிறார். கடைசிவரை கீழ்ப்படிந்து நடந்தால், “உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப் பண்ணுவேன்” என அவருக்கு யெகோவா உறுதியளிக்கிறார். (1 இராஜாக்கள் 9:4, 5) கீழ்ப்படியாமல் போனால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதையும்கூட அவருக்கு எச்சரிக்கிறார். என்றாலும், சாலொமோன் பிற்பாடு பல புறமதப் பெண்களை மணந்துகொள்கிறார். அவர்களுடைய பேச்சைக் கேட்டு நடப்பதால், தன் முதிர்வயதில் பொய் வணக்கத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். அவருடைய ராஜ்யம் இரண்டுபடும் என யெகோவா முன்னறிவிக்கிறார். பொ.ச.மு. 997-⁠ல் சாலொமோன் மரிக்கிறார். அத்துடன் அவருடைய 40 வருட ஆட்சி முடிவுறுகிறது. அவருடைய மகன் ரெகொபெயாம் அரியணை ஏறுகிறார்.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

1:5​—⁠தாவீது இன்னும் உயிரோடு இருக்கையிலேயே அவருடைய ஆட்சியைக் கைப்பற்ற அதோனியா ஏன் முற்பட்டான்? அதற்கான காரணத்தை பைபிள் சொல்வதில்லை. என்றாலும், அதோனியாவின் அண்ணன்களான அம்னோனும் அப்சலோமும் ஏற்கெனவே இறந்துவிட்டதாலும்,​—⁠ஒருவேளை கீலேயாப்பும்கூட இறந்துவிட்டிருக்கலாம்​—⁠தாவீதின் மகன்களில் இனி தானே மூத்தவன் என்பதால் அரியணை ஏற தனக்கே தகுதியிருக்கிறது என அதோனியா நினைத்திருக்கலாம். (2 சாமுவேல் 3:2-4; 13:28, 29; 18:14-17) வலிமைமிக்க படைத் தலைவனான யோவாபின் ஆதரவும் செல்வாக்குமிக்க பிரதான ஆசாரியனான அபியத்தாரின் ஆதரவும் தனக்கு இருப்பதால் தன்னுடைய முயற்சி வெற்றி பெறும் என அதோனியா உறுதியாக நம்பியிருக்கலாம். சாலொமோன் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமென தாவீது நினைத்திருந்தது அதோனியாவுக்கு தெரிந்திருந்ததா இல்லையா என்பது பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை. என்றாலும், அதோனியா ‘பலிசெலுத்துகையில்’ சாலொமோனையும் தாவீதுக்கு விசுவாசமாயிருந்த மற்றவர்களையும் அழைக்கவில்லை என பைபிள் குறிப்பிடுகிறது. (1 இராஜாக்கள் 1:9, 10) இது, சாலொமோனிடம் அவனுக்குப் போட்டி மனப்பான்மை இருந்ததைக் காட்டுகிறது.

1:49-53; 2:13-25​—⁠அதோனியாவை சாலொமோன் மன்னித்த போதிலும் அவனைக் கொலை செய்வதற்கு ஏன் உத்தரவிட்டார்? அபிஷாக்கை தனக்கு மணம் செய்து கொடுக்கும்படி அதோனியா கேட்டதை சாலொமோன் ராஜாவிடம் பத்சேபாள் சொன்னபோது அதன் உள்நோக்கத்தை அவள் அறியவில்லை, ஆனால் ராஜா அதைப் புரிந்துகொண்டார். ரூபவதியாயிருந்த அபிஷாக்குடன் தாவீது உறவு வைத்திராத போதிலும் அவள் அவருடைய மறுமனையாட்டியாகவே கருதப்பட்டாள். அக்காலத்து வழக்கத்தின்படி, தாவீதின் சட்டப்பூர்வ வாரிசுக்கே அவள் மனைவியாக முடியும். ஒருவேளை அபிஷாக்கை மணம் செய்துகொண்டால் மீண்டும் அரச பதவிக்குப் போட்டி போட முடியுமென அதோனியா நினைத்திருக்கலாம். அவனுடைய வேண்டுகோளுக்குக் காரணம் பதவி ஆசையே என்பதைப் புரிந்துகொண்டதால்தான் கொடுத்த மன்னிப்பை நிராகரித்துவிட்டு அவனைக் கொல்லும்படி சாலொமோன் உத்தரவிட்டார்.

6:37–8:2​—⁠ஆலய பிரதிஷ்டை எப்போது நடத்தப்பட்டது? பொ.ச.மு. 1027, எட்டாம் மாதம், அதாவது சாலொமோன் அரசாண்ட 11-⁠ம் வருடம், ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. தட்டுமுட்டு சாமான்களைக் கொண்டு வருவதற்கும் பிற ஏற்பாடுகளைச் செய்வதற்கும் 11 மாதங்கள் ஆனதாகத் தெரிகிறது. பொ.ச.மு. 1026-⁠ம் வருடம் 7-⁠ம் மாதத்தில் பிரதிஷ்டை நடந்திருக்க வேண்டும். ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதற்குப் பிறகு கட்டப்பட்ட கட்டடங்களைப் பற்றியும் இப்புத்தகம் விவரிக்கிறது. அக்காலப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டவற்றைப் பற்றிய முழு விவரத்தையும் கொடுப்பதற்காகவே ஆலயத்தின் பிரதிஷ்டை பற்றி குறிப்பிடுவதற்கு முன் பிற கட்டங்களைப் பற்றிய விவரம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.​—⁠2 நாளாகமம் 5:1-3.

9:10-13​—⁠தீருவின் ராஜாவான ஈராமுக்கு, கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களை சாலொமோன் அன்பளிப்பாகக் கொடுத்தது நியாயப்பிரமாணத்தின்படி சரியா? லேவியராகமம் 25:23, 24-⁠ல் உள்ள நியாயப்பிரமாண சட்டம், இஸ்ரவேலர் குடியிருந்த பகுதிக்கு மட்டுமே பொருந்துமென கருதப்பட்டிருக்கலாம். ஈராமுக்கு சாலொமோன் கொடுத்த இப்பட்டணங்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் இருந்தபோதிலும், அவற்றில் புற தேசத்தார் குடியிருந்திருக்க வேண்டும். (யாத்திராகமம் 23:31) அவர் தனக்கு அநேக குதிரைகளைச் சம்பாதித்துக் கொண்டதையும் அநேக பெண்களை மணந்துகொண்டதையும் போலவே இந்தக் காரியத்திலும்கூட நியாயப்பிரமாண சட்டத்தை முழுமையாகப் பின்பற்றத் தவறியதை இது சுட்டிக்காட்டியிருக்கலாம். (உபாகமம் 17:16, 17) எப்படியானாலும், இந்த அன்பளிப்பை ஈராம் விரும்பவில்லை. அதற்குக் காரணம் ஒருவேளை, புற தேசத்தார் அப்பட்டணங்களை நல்ல நிலையில் வைக்காமல் நாசப்படுத்தியிருக்கலாம், அல்லது அப்பட்டணங்கள் முக்கியமான இடத்தில் இல்லாதிருந்திருக்கலாம்.

11:4​—⁠சாலொமோன் பிற்காலத்தில் விசுவாசமற்றவராக ஆனதற்கு முதுமையா காரணம்? அதுதான் காரணமென சொல்ல முடியாது. சாலொமோன் இளவயதிலேயே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்; 40 ஆண்டுகள் ஆட்சி செய்தபோதிலும், அவர் அந்தளவுக்கு முதுமையடைந்து விடவில்லை. அதுமட்டுமல்ல, யெகோவாவை வழிபடுவதை அவர் அறவே விட்டுவிடவுமில்லை. ஆனால் ஏதோவொரு கலப்பு விசுவாசத்தை அவர் பின்பற்ற முயன்றதாகவே தெரிகிறது.

நமக்குப் பாடம்:

2:26, 27, 35. யெகோவா முன்னறிவிக்கும் காரியங்கள் எப்போதும் நிறைவேறும். ஏலியின் சந்ததியில் வந்த அபியத்தாரை நீக்கியபோது, ‘ஏலியின் வீட்டாரைக் குறித்து யெகோவா சொன்ன வார்த்தை’ நிறைவேறியது. அபியத்தாருக்குப் பதிலாக பினெகாசின் சந்ததியில் வந்த சாதோக்கை நியமித்தது எண்ணாகமம் 25:10-13-⁠ன் நிறைவேற்றமாக இருந்தது.​—⁠யாத்திராகமம் 6:25; 1 சாமுவேல் 2:31; 3:12; 1 நாளாகமம் 24:3.

2:37, 41-46. கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் போனாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என நினைப்பது எவ்வளவு பயங்கரமானது! ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசலை’ விட்டுவிட்டு வேண்டுமென்றே வழிவிலகிச் செல்பவர்கள் தங்களுடைய ஞானமற்ற தீர்மானத்தால் வரும் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள்.​—⁠மத்தேயு 7:14.

3:9, 12-14. யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய சேவையைச் செய்வதற்குத் தேவையான ஞானத்தையும், புரிந்துகொள்ளுதலையும், வழிநடத்துதலையும் அருளும்படி அவரிடம் உள்ளப்பூர்வமாக ஜெபிக்கையில் அவர் பதிலளிக்கிறார்.​—⁠யாக்கோபு 1:5.

8:22-53. அன்புள்ளவரும், தயவுமுள்ளவரும், வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறவரும், ஜெபத்தைக் கேட்கிறவருமான யெகோவா தேவனுக்கு உள்ளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்த சாலொமோனின் வார்த்தைகளை என்னவென்பது! ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் செய்த ஜெபத்தின் வார்த்தைகளைத் தியானிப்பது இவற்றின் பேரிலும் கடவுளுடைய ஆளுமையின் பிற அம்சங்களின் பேரிலும் நம் நன்றியுணர்வை அதிகப்படுத்தும்.

11:9-14, 23, 26. சாலொமோன் வயதான காலத்திலே கீழ்ப்படியாமல் போனபோது அவருக்கு எதிராக யெகோவா விரோதிகளை எழுப்பினார். “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என அப்போஸ்தலன் பேதுரு கூறுகிறார்.​—⁠1 பேதுரு 5:5.

11:30-40. யெரொபெயாமைக் குறித்து அகியா தீர்க்கதரிசனம் சொன்னதைக் கேட்ட சாலொமோன் ராஜா, யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினார். ஆனால், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அதோனியாவையும் சதிசெய்த பிறரையும் பழிவாங்காமல் விட்டுவிட்டபோது அவர் எவ்வளவு வித்தியாசமானவராக இருந்தார்! (1 இராஜாக்கள் 1:50-53) இந்த மனமாற்றத்திற்குக் காரணம் அவர் யெகோவாவை மறந்துவிட்டதுதான்.

ஒன்றுபட்ட ராஜ்யம் இரண்டுபடுகிறது

(1 இராஜாக்கள் 12:1–22:53)

ராஜாவான ரெகொபெயாமிடத்தில் ஜனங்களும் யெரொபெயாமும் வந்து அவருடைய தகப்பனான சாலொமோன் தங்கள்மீது சுமத்திய சுமையை இலகுவாக்கும்படி கேட்கிறார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்குவதற்குப் பதிலாக அவர்களுடைய சுமையை இன்னும் கூட்டப்போவதாக மிரட்டுகிறார். பத்து கோத்திரத்தார் கலகம் செய்து யெரொபெயாமை தங்களுக்கு ராஜாவாக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் ராஜ்யம் இரண்டுபடுகிறது. தெற்கிலிருந்த யூதா, பென்யமீன் ஆகிய இரண்டு கோத்திர ராஜ்யத்தை ரெகொபெயாம் ஆளுகிறார், வடக்கிலிருந்த இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்தை யெரொபெயாம் ஆளுகிறார்.

ஜனங்கள் வழிபாட்டிற்காக எருசலேமுக்குச் செல்வதைத் தடுப்பதற்கு, தாண், பெத்தேல் ஆகிய இரு இடங்களில் யெரொபெயாம் பொன் கன்றுகுட்டிகளை ஸ்தாபிக்கிறார். யெரொபெயாமுக்குப் பிறகு நாதாப், பாஷா, ஏலா, சிம்ரி, திப்னி, உம்ரி, ஆகாப், அகசியா ஆகியோர் இஸ்ரவேலை ஆளுகிறார்கள். ரெகொபெயாமுக்குப் பிறகு அபியாம், ஆசா, யோசபாத், யோராம் ஆகியோர் யூதாவை ஆளுகிறார்கள். அகியா, சேமாயா, பெயர் குறிப்பிடப்படாத ஒருவர், யெகூ, எலியா, மிகாயா ஆகியோர் இந்த ராஜாக்களின் காலத்தில் தீர்க்கதரிசிகளாகச் சுறுசுறுப்புடன் சேவை செய்கிறார்கள்.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

18:21​—⁠யெகோவாவை அல்லது பாகாலைப் பின்பற்றும்படி எலியா சொன்னபோது ஜனங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? யெகோவா உரிமையோடு கேட்கிற முழுமையான பக்தியைக் கொடுக்கத் தவறிவிட்டோம் என்ற குற்றவுணர்வில் அவர்கள் பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது, யெகோவாவின் வணக்கத்தாராக இருந்துகொண்டு, அதே சமயத்தில் பாகாலை வழிபடுவதில் தவறொன்றுமில்லை என நினைத்து தங்கள் மனசாட்சியைக் கடினப்படுத்தியதால் பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். யெகோவா தம் வல்லமையை மெய்ப்பித்துக் காட்டிய பிறகுதான், “யெகோவாவே மெய்யான தெய்வம்! யெகோவாவே மெய்யான தெய்வம்!” என அவர்கள் சொன்னார்கள்.​—⁠1 இராஜாக்கள் 18:39, NW.

20:34​—⁠சீரியரின்மீது ஆகாபுக்கு யெகோவா வெற்றி தேடி தந்த பிறகு, அவர்களுடைய ராஜாவான பெனாதாத்தை ஆகாப் ஏன் கொல்லாமல் விட்டுவிட்டார்? பெனாதாத்தை ஆகாப் கொலை செய்வதற்குப் பதிலாக, அவனோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்; இந்த உடன்படிக்கையின்படி, சீரியாவின் தலைநகரான தமஸ்குவின் வீதிகள் ஆகாபுக்கு அளிக்கப்படும், இவை கடை வீதிகளாகப் பயன்படுத்துவதற்குக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்பு, பெனாதாத்தின் தகப்பன் சமாரியாவின் வீதிகளை இதுபோல வியாபாரத்துக்காகப் பயன்படுத்தியிருந்தார். ஆகவே, தமஸ்குவில் வியாபாரத்தைப் பெருக்குவதற்காகவே பெனாதாத்தை ஆகாப் விடுதலை செய்தார்.

நமக்குப் பாடம்:

12:13, 14. வாழ்க்கையில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு முன், பைபிள் நியமங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறவர்களும் வேதவசனங்களில் தேர்ச்சி பெற்றவர்களுமான ஞானமும் முதிர்ச்சியும் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.

13:11-24. ஓர் ஆலோசனையோ ஒரு கருத்தோ சந்தேகத்திற்குரியதாக இருந்தால்​—⁠அது நல்மனமுள்ள ஒரு சக விசுவாசி சொன்னதாக இருந்தாலும்கூட​—⁠கடவுளுடைய வார்த்தை தரும் சிறந்த வழிநடத்துதலோடு அது ஒத்திருக்கிறதா எனச் சீர்தூக்கி பார்ப்பது அவசியம்.​—⁠1 யோவான் 4:1.

14:13. நம்மிடத்தில் உள்ள நல்ல காரியத்தை யெகோவா உற்று ஆராய்கிறார். அது எவ்வளவு அற்பமாக இருந்தாலும் சரி, அவரைச் சேவிப்பதற்கு நம்மால் ஆனதைச் செய்யும்போது, அதை அபிவிருத்தி செய்வதற்கு அவர் உதவுவார்.

15:10-13. விசுவாச துரோகத்தைத் தைரியமாகப் புறக்கணித்துவிட்டு, மெய் வணக்கத்தை நாம் முன்னேற்றுவிக்க வேண்டும்.

17:10-16. சாறிபாத்தைச் சேர்ந்த விதவை, எலியாவை ஒரு தீர்க்கதரிசியென அடையாளம் கண்டுகொண்டு அதற்கேற்ப உபசரித்தாள்; விசுவாசத்தோடு அவள் செய்தவற்றை யெகோவா ஆசீர்வதித்தார். இன்றும்கூட விசுவாசத்தோடு நாம் செய்யும் காரியங்களை யெகோவா கவனிக்கிறார்; ராஜ்ய வேலையைப் பல்வேறு வழிகளில் ஆதரிப்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார்.​—⁠மத்தேயு 6:33; 10:41, 42; எபிரெயர் 6:10.

19:1-8. கடும் எதிர்ப்பைச் சந்திக்கையில் யெகோவா ஆதரிப்பார் என்பதில் நாம் திட நம்பிக்கையோடு இருக்கலாம்.​—⁠2 கொரிந்தியர் 4:7-9.

19:10, 14, 18. மெய் வணக்கத்தார் ஒருபோதும் தனிமையில் இல்லை. யெகோவாவுடைய துணையும் உலகளாவிய சகோதரத்துவத்தின் துணையும் அவர்களுக்கு இருக்கிறது.

19:11-13. யெகோவா ஓர் இயற்கை தெய்வமோ, இயற்கை சக்திகளின் ஓர் உருவோ அல்ல.

20:11. சமாரியாவை அழிப்பதைப் பற்றி பெனாதாத் பெருமையாகச் சொன்னபோது, இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு பதிலளித்தார்: யுத்தத்திற்கு ஆயத்தமாக “ஆயுதம் தரித்திருக்கிறவன், [யுத்தத்தில் வெற்றிபெற்று திரும்புகிறவன்] ஆயுதம் உரிந்து போடுகிறதைப் போலப் பெருமை பாராட்டலாகாது.” நமக்கு ஒரு புதிய வேலை கொடுக்கப்படுகையில் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு வீறாப்பு பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.​—⁠நீதிமொழிகள் 27:1; யாக்கோபு 4:13-16.

நமக்கு அதிக மதிப்புடையது

சீனாய் மலையிலே நியாயப்பிரமாணச் சட்டம் கொடுக்கப்பட்டதை விவரிக்கும்போது இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு சொன்னார்: “இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்.”​—⁠உபாகமம் 11:26-28.

இது எந்தளவுக்கு உண்மை என்பதை ஒன்று இராஜாக்கள் புத்தகம் நம் கண்முன் அப்படியே நிறுத்துகிறது, அல்லவா? நாம் பார்த்தபடி, இப்புத்தகம் மதிப்புமிக்க இன்னும் பல பாடங்களையும் கற்பிக்கிறது. இதிலுள்ள செய்தி உண்மையிலேயே ஜீவனும் வல்லமையும் உள்ளது.​—⁠எபிரெயர் 4:12.

[பக்கம் 29-ன் படம்]

ஆலயத்தையும் வேறுபல கட்டடங்களையும் சாலொமோன் கட்டினார்

[பக்கம் 30, 31-ன் படம்]

யெகோவா தம் வல்லமையை மெய்ப்பித்துக் காட்டிய பின்னர், “யெகோவாவே மெய்யான தெய்வம்!” என ஜனங்கள் சொன்னார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்