வாழ்க்கை சரிதை
யெகோவாவின் வழியைப் பின்பற்றுகிறவர்களை அவர் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கிறார்
ராமூவால்ட் ஸ்டாஃப்ஸ்கி சொன்னபடி
இரண்டாம் உலகப் போர் 1939 செப்டம்பரில் ஆரம்பமானபோது போலந்தின் வடபகுதியில் போர் வெகு மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அதைப் பார்க்க ரொம்ப ஆசைப்பட்டதால் நான் போர்களத்துக்குப் போனேன்; அப்போது எனக்கு ஒன்பது வயது. நாலா புறமும் பிணங்கள், மூச்சுமுட்டுமளவுக்கு ஒரே புகை; இதையெல்லாம் பார்த்ததும் பயம் என்னைக் கவ்விக்கொண்டது. வீட்டிற்கு எப்படிப் பத்திரமாகப் போய்சேருவேனோ என யோசித்தேன்; அதேசமயத்தில், “கடவுள் ஏன் இப்படிப் பயங்கரமான காரியங்கள் நடப்பதற்கு அனுமதிக்கிறார்? சண்டை போடும் நாடுகளில் எந்த நாட்டு பக்கம் அவர் இருக்கிறார்?” போன்ற சில கேள்விகள் என் மனதில் எழுந்தன.
போர் முடியும் தறுவாயில் வாலிபர்கள் ஜெர்மானிய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு தரும்படி வற்புறுத்தப்பட்டார்கள். அதற்கு யாரேனும் துணிச்சலுடன் மறுப்புத் தெரிவித்தால் அவர்களுடைய நெஞ்சிலே “துரோகி,” அல்லது “நாசவேலை செய்பவன்” என எழுதப்பட்டு, மரத்திலோ, பாலத்திலோ தொங்கவிடப்பட்டார்கள். கடினியா என்ற எங்களுடைய நகரத்திற்குப் பக்கத்தில்தான் இரு துருப்புகளும் போர் செய்துகொண்டிருந்தன. ஒருமுறை தண்ணீர் எடுக்க நகரத்துக்கு வெளியே போனபோது துப்பாக்கி குண்டுகளும், வெடிகுண்டுகளும் எங்கள் தலைக்கு மேலே சீறிப் பாய்ந்தன, அதில் ஒன்று என் தம்பி ஹென்ரிக்கின் உயிரைக் குடித்தது. நிலைமை படுபயங்கரமாக இருந்ததால் பிள்ளைகளான எங்கள் நான்கு பேரையும் பாதுகாப்பதற்காக அம்மா எங்களை நிலவறையில் தங்க வைத்தார். அங்கு என் இரண்டு வயது தம்பி இயுகேன்யூஷ், டிஃப்தீரியா எனும் தொண்டை அடைப்பான் நோய் வந்து இறந்துபோனான்.
அப்போது மீண்டும் என் மனதில் எழுந்த கேள்வி: “கடவுள் எங்கே? இந்தக் கஷ்டங்களையெல்லாம் ஏன் தருகிறார்?” ஒரு கத்தோலிக்கனாக, எனக்கு பக்தி ஜாஸ்தி, தவறாமல் சர்ச்சுக்குப் போனேன், ஆனால் என் கேள்விகளுக்குப் பதில் மட்டும் கிடைக்கவே இல்லை.
பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டேன்
எதிர்பார்க்காத இடத்திலிருந்து என் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தன. 1945-ல் போர் முடிந்தது, 1947-ன் ஆரம்பத்தில் கடினியாவிலிருந்த எங்கள் வீட்டுக்கு ஒரு யெகோவாவின் சாட்சி வந்தார். அவருடன் என் அம்மா பேசினார், அவர்கள் பேசிய விஷயம் கொஞ்சம் என் காதிலும் விழுந்தது. அவர்கள் சொல்வதும் நியாயமாகப்பட்டது, எனவே கிறிஸ்தவக் கூட்டத்திற்கு வரும்படி அவர் அழைத்தபோது சம்மதித்தோம். ஒரு மாதம்கூட ஆகியிருக்காது, பைபிள் சத்தியத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பே சபையிலிருந்த சாட்சிகளுடன் சேர்ந்துகொண்டு, போர்களும் அட்டூழியங்களும் நடக்காத ஓர் உலகம் வரப்போவதைப் பற்றி மற்றவர்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். இது எனக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது.
1947 செப்டம்பரில், சாபாட் என்ற இடத்தில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றேன். அதற்கு அடுத்த வருடம், மே மாதத்தில் ஓர் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்; இப்படியாக பெரும்பாலான நேரத்தை, பைபிள் செய்தியைப் பிரசங்கிப்பதில் செலவழித்தேன். ஊழியம் செய்வது உள்ளூரிலிருந்த மதகுருவுக்குத் துளியும் பிடிக்கவில்லை, பயங்கரமாக எதிர்த்தார், எங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டார். ஒருசமயம், கோபத்தில் கொதித்தெழுந்த கலகக் கும்பல்காரர்கள் எங்களைத் தாக்கி, எங்கள்மீது கற்களை வீசினார்கள், கண்மண் தெரியாமல் எங்களை அடித்தார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில், உள்ளூரிலிருந்த கன்னிகாஸ்திரீகளும் மதகுருக்களும் சேர்ந்து எங்களைத் தாக்குவதற்காகக் கொஞ்சம் பேரை ஏவிவிட்டார்கள். அப்போது நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் போய் தஞ்சம் புகுந்தோம், ஆனால் அந்தக் கலகக்காரர்கள் அக்கட்டடத்தையே சுற்றி வளைத்துக்கொண்டு, எங்களை அடிக்காமல் விடப்போவதில்லை என பயமுறுத்தினார்கள். இறுதியில் இன்னுமதிக போலீஸ் அதிகாரிகள் வந்து, பலத்த பாதுகாப்பு கொடுத்து பத்திரமாக எங்களை அழைத்துச் சென்றார்கள்.
அந்தச் சமயத்தில் நாங்கள் ஊழியம் செய்த பகுதியில் ஒரு சபைகூட இல்லை. எனவே சில சமயம் இரவில் காட்டிலேயே தங்கினோம். அத்தகைய சூழ்நிலையிலும் பிரசங்க ஊழியம் செய்ய முடிந்ததை எண்ணி சந்தோஷப்பட்டோம். இன்று அந்தப் பகுதியில் தூண்கள் போன்ற வலுவான சபைகள் இருக்கின்றன.
பெத்தேல் சேவையும் கைது செய்யப்படுதலும்
1949-ல் வூக் என்ற இடத்திலிருந்த பெத்தேல் இல்லத்தில் வேலைச் செய்ய அழைப்பைப் பெற்றேன். அங்கு வேலை செய்தது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! ஆனால் அங்கு அதிக நாட்கள் தங்கி வேலை செய்ய முடியாமல் போனது வருத்தமான விஷயம். ஆம், ஊழியம் செய்வதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, 1950 ஜூன் மாதம் பெத்தேலிலுள்ள மற்ற சகோதரர்களுடன் நானும் கைது செய்யப்பட்டேன். சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன், அங்கு கொடூரமாக விசாரணை செய்யப்பட்டேன்.
அடிக்கடி நியு யார்க்குக்குச் சென்றுவந்த ஒரு கப்பலில் என் அப்பா வேலை பார்த்தார்; எனவே என்னை விசாரணை செய்த அதிகாரிகள், அவர் அமெரிக்க உளவாளி என என்னை சொல்ல வைக்க பல விதங்களிலும் முயன்றார்கள். ஈவிரக்கமின்றி கொடூரமாக விசாரணை நடத்தினார்கள். அதோடு, போலந்தில் நடைபெற்று வந்த ஊழியத்தை மேற்பார்வை செய்து வந்த சகோதரர் வில்ஹெல்ம் ஷைடருக்கு எதிராக என்னை சாட்சி சொல்ல வைப்பதற்கு ஒரே நேரத்தில் நான்கு அதிகாரிகள் முயன்றார்கள். தடிகளால் அவர்கள் என் குதிங்கால்களில் அடிஅடியென அடித்தார்கள். இரத்தம் கொட்ட தரையில் கிடக்கையில் இனிமேலும் தாங்க முடியாதென உணர்ந்தேன், அந்தச் சமயத்தில், “யெகோவாவே எனக்கு உதவும்!” என கத்திவிட்டேன். என்னை படாதபாடு படுத்திக்கொண்டிருந்தவர்கள் அதிர்ந்துபோய், அடிப்பதை நிறுத்திவிட்டார்கள். சில நிமிடங்களுக்குள்ளாகவே அவர்கள் தூங்கி விட்டார்கள். எனக்குக் கொஞ்சம் நிம்மதி பிறந்தது, மீண்டும் புதுத்தெம்பு கிடைத்தது. இந்தச் சம்பவம், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் உதவி கேட்டு அவரை அழைக்கும்போது அவர் அன்புடன் செவிகொடுக்கிறார் என்பதை எனக்கு உறுதிப்படுத்தியது. இது என் விசுவாசத்தைப் பலப்படுத்தி, கடவுள்மீது முழு நம்பிக்கை வைக்க எனக்குக் கற்பித்தது.
விசாரணையின் இறுதி அறிக்கையில், நான் சொன்னதாகப் பொய்யான வாக்குமூலம் சேர்க்கப்பட்டிருந்தது. அதை நான் எதிர்த்தபோது ஓர் அதிகாரி, “அதை நீ கோர்ட்டில் வந்து சொல்!” என்றார். சிறையில் என்னிடம் அன்பாக இருந்த ஒரு கைதி அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாமென சொன்னார்; இறுதி அறிக்கையை இராணுவ வழக்கறிஞர் ஆராய வேண்டுமென்பதால் அந்தப் பொய் வாக்குமூலத்தை மறுப்பதற்கு அந்தச் சமயத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமென சொன்னார். அவர் சொன்னபடியே நடந்தது.
வட்டார ஊழியமும் மீண்டும் சிறைவாசமும்
1951 ஜனவரியில் விடுதலை செய்யப்பட்டேன். அதற்கு அடுத்த மாதம் பயணக் கண்காணியாகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். தடை உத்தரவு இருந்தபோதிலும் மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து சபைகளில் உள்ளவர்களைப் பலப்படுத்தினேன், அதோடு, இரகசியப் போலீஸார் கண்காணித்து வந்ததால் பல இடங்களில் சிதறியிருந்த உடன் சாட்சிகளுக்கும் உதவினேன். இப்படியாக, ஊழியத்தைத் தொடர்ந்து செய்யும்படி நாங்கள் சகோதரர்களை உற்சாகப்படுத்தினோம். அதன் பின்வந்த ஆண்டுகளில் இந்தச் சகோதரர்கள் தைரியத்துடன் பயணக் கண்காணிகளுக்குப் பக்கபலமாக இருந்தார்கள், இரகசியமாக பைபிள் பிரசுரங்களை அச்சிட்டு, வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
1951 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், கிறிஸ்தவ கூட்டம் முடிந்து வந்துகொண்டிருந்தேன், அப்போது இரகசியமாய் கண்காணித்து வந்த அந்தப் போலீஸார் என்னை கைது செய்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல மறுத்ததால் பிட்காஷ்ச் நகரிலுள்ள சிறைக்குக் கொண்டு சென்றார்கள், அன்றிரவே விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள். ஆறு நாட்களுக்கு இரவும் பகலும் சுவரை ஒட்டினால்போல் நிற்கும்படி உத்தரவிட்டார்கள்; சோறுதண்ணி இல்லை; அதிகாரிகள் ஊதித்தள்ளிய சிகரெட் புகை அந்த அறையில் மண்டியிருந்தது. குண்டாந்தடியால் என்னைப் போட்டு விளாசினார்கள், சிகரெட்டால் சூடு வைத்தார்கள். நான் மயங்கி விழுந்தபோது என்மீது தண்ணீரை ஊற்றி எழுப்பி, மீண்டும் விசாரணை நடத்தினார்கள். சகித்திருப்பதற்குப் பலத்தைத் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினேன், அவர் எனக்குப் பக்கபலமாக இருந்தார்.
பிட்காஷ்ச் சிறையில் இருந்தது ஒருவிதத்தில் பிரயோஜனமாய் போனது. அங்கிருந்தவர்களுக்கு பைபிள் சத்தியத்தை கேள்விப்படவே சாத்தியமில்லாதிருந்ததால் அவர்களிடம் சாட்சி கொடுத்தேன். அப்படிச் சாட்சி கொடுக்க உண்மையிலேயே அநேக வாய்ப்புகள் கிடைத்தன. கைதிகள் கவலையோடும், பெரும்பாலும் நம்பிக்கை இழந்தும் காணப்பட்டதால் நற்செய்தியைச் சொல்லுகையில் அவர்கள் உடனடியாகக் கவனமாய் கேட்டார்கள்.
இரண்டு முக்கிய மாற்றங்கள்
1952-ல் விடுதலையாகி வந்த கொஞ்ச நாட்களில் நீலா என்ற கிறிஸ்தவ சகோதரியைச் சந்தித்தேன்; இவள் போலந்தின் தென் பகுதியில் வைராக்கியத்துடன் பயனியர் ஊழியம் செய்து வந்தாள். பின்னர் “பேக்கரியில்” வேலை செய்து வந்தாள்; நமது பிரசுரங்கள் இரகசியமாக அச்சிடப்பட்ட இடத்தை அவ்வாறுதான் அழைத்தோம். அங்கு வேலை செய்வது ரொம்பவே கஷ்டம்; எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும், சுயதியாகமும் செய்ய வேண்டும். 1954-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம், எங்கள் மகள் லிடியா பிறக்கும்வரை தொடர்ந்து முழுநேர ஊழியம் செய்து வந்தோம். பிறகு ஒரு தீர்மானம் எடுத்தோம்; அதன்படி, பயண ஊழியத்தை நான் தொடருவதென்றும் அதற்கு உதவியாக, நீலா முழுநேர ஊழியம் செய்வதை நிறுத்திவிட்டு, வீட்டில் எங்கள் மகளைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்தோம்.
அதே வருடத்தில், மற்றொரு முக்கிய தீர்மானத்தையும் நாங்கள் எடுத்தோம். போலந்தின் மூன்றில் ஒரு பகுதி பிராந்தியத்திற்கு மாவட்டக் கண்காணியாக சேவை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அப்போது, ஜெபத்தோடு இந்த விஷயத்தைக் குறித்து நாங்கள் சிந்தித்தோம். தடை உத்தரவின் கீழிருந்த நம் சகோதரர்களைப் பலப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்தேன். அந்தச் சமயத்தில் பல சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள், ஆன்மீக ரீதியில் உற்சாகப்படுத்துவதற்கு அதிக தேவை இருந்தது. நீலா பக்கபலமாக இருந்ததால், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். 38 வருடங்கள் மாவட்டக் கண்காணியாக சேவை செய்ய யெகோவா எனக்கு உதவினார்.
“பேக்கரிகளின்” மேற்பார்வையாளராக
அந்தக் காலத்தில், ஒதுக்குப்புறமான இடங்களில் இயங்கி வந்த “பேக்கரிகளை” கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் மாவட்டக் கண்காணிக்கு இருந்தது. எங்கு அச்சிடுகிறோம் என்பதைக் கண்டுபிடித்து அதை நிறுத்துவதற்காக, போலீஸார் சதா கண்காணித்துக் கொண்டே இருந்தார்கள். சில சமயங்களில் அவர்கள் வெற்றி பெற்றபோதிலும், எங்களுக்குத் தேவைப்பட்ட ஆன்மீக உணவு தவறாமல் கிடைத்து வந்தது. எங்களை யெகோவா நன்கு கவனித்து வருகிறார் என்பதற்கு இதுவே தெளிவான அத்தாட்சியாக இருந்தது.
அச்சிடுவது என்பது கடினமான, ஆபத்தான பணியாக இருந்தது; எனவே ஒருவரை இப்பணியில் நியமிக்கும்போது அவர் உண்மையுள்ளவராக, விழிப்புள்ளவராக, சுயதியாகம் செய்பவராக, கீழ்ப்படிபவராக இருப்பது அவசியப்பட்டது. இந்தக் குணங்களே, எந்தப் பிரச்சினையும் இல்லாமல் “பேக்கரி” தொடர்ந்து இயங்குவதற்கு உதவின. இரகசியமாக அச்சிடுவதற்கு ஒரு நல்ல இடத்தைக் கண்டுபிடிப்பதும் பெரும்பாடாய் இருந்தது. சில இடங்கள் அம்சமாக அமைந்தாலும், அங்குள்ள சகோதரர்கள் அந்தளவுக்கு விவேகமாக நடந்துகொள்ளவில்லை. இன்னும் சில இடங்கள் பொருத்தமற்றவையாக இருந்தாலும், சகோதரர்கள் ரொம்பவே விவேகத்துடன் நடந்துகொண்டார்கள். சகோதரர்கள் தங்கள் சக்திக்கு மிஞ்சி தியாகங்களைச் செய்யத் தயாராக இருந்தார்கள். எந்த சகோதர சகோதரிகளுடன் எல்லாம் சேர்ந்து வேலை செய்ய முடிந்ததோ அவர்களை நினைக்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.
நற்செய்தியை ஆதரித்தல்
அந்தக் கஷ்ட காலங்களில், சட்டவிரோதமான, கலகத்தனமான வேலையில் ஈடுபட்டதாக எப்போதும் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டுக்கு இழுத்துச் செல்லப்பட்டோம். ஆனால் எங்களுக்காக வழக்காட வழக்கறிஞர்கள் யாரும் இல்லாதது பிரச்சினையாக இருந்தது. சில வழக்கறிஞர்கள் அனுதாபப்பட்டார்கள், ஆனால் அநேகர், உதவினால் நாலு பேருக்குத் தெரிந்து போகுமே என பயந்தார்கள்; அதோடு அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ள அவர்கள் விரும்பவுமில்லை. என்றாலும் எங்களுக்கு என்ன தேவையென யெகோவா அறிந்திருந்தார், ஏற்ற சமயத்தில் அதற்கேற்ப காரியங்களை நடப்பித்தார்.
க்ராகௌ என்ற இடத்தில் சேவை செய்து வந்த அலாய்ஷா ப்ராஸ்டாக் என்ற பயணக் கண்காணி மிகக் கொடூரமாக விசாரணை செய்யப்பட்டதால் சிறைச்சாலையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. மனதளவிலும் உடலளவிலும் படுமோசமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தும் அவர் உறுதியாக இருந்ததை ஆஸ்பத்திரியிலிருந்த கைதிகள் கண்டு அவரை உயர்வாக மதித்தார்கள், அவரைப் பார்த்து வியந்தார்கள். அப்படி அவரது தைரியத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்த கைதிகளில் ஒருவர் வீடால்ட் லிஸ்-ஆல்ஷிவ்ஸ்கி என்ற வழக்கறிஞர். இவர் ப்ராஸ்டாக்கிடம் வந்து பல முறை பேசினார், “விடுதலையாகி, மீண்டும் தொழில் செய்ய எனக்கு அனுமதி கிடைத்ததும் யெகோவாவின் சாட்சிகளுக்காக உண்மையில் வழக்காடுவேன்” என வாக்குறுதி அளித்தார். சொன்னபடியே செய்தார்.
மிஸ்டர் ஆல்ஷிவ்ஸ்கி, ஒரு குழுவாக சில வழக்கறிஞர்களுடன் சேர்ந்து பணியாற்றினார்; எங்களுக்காக அவர் எடுத்த முயற்சியை உண்மையில் பாராட்ட வேண்டும். எதிர்ப்பு படுதீவிரமடைந்திருந்த அந்தச் சமயத்தில் நாளொன்றுக்கு ஒரு விசாரணை வீதம் சகோதரர்களுக்காக மாதத்தில் சுமார் 30 வழக்கு விசாரணைகளை அக்குழுவினர் நடத்தினார்கள்! ஒவ்வொரு வழக்கைப் பற்றியும் மிஸ்டர் ஆல்ஷிவ்ஸ்கி நன்கு அறிந்திருக்க வேண்டியிருந்ததால் அவரோடு எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்ளும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அவருடன் சேர்ந்து 1960-களிலும் 1970-களிலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன்.
அந்தச் சமயத்தில் அநேக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். விசாரணைகளையும், வழக்கறிஞர்களின் வாதத்தையும் எதிர் வாதத்தையும், வழக்காடும் முறைகளையும், குற்றம் சாட்டப்பட்ட சக விசுவாசிகளின் வாக்குமூலத்தையும் அடிக்கடி நேரடியாகக் கேட்டேன். இதனால் நம் சகோதரர்களுக்கு, அதிலும் முக்கியமாக கோர்ட்டில் சாட்சி சொல்லும்படி அழைக்கப்பட்ட சகோதரர்களுக்கு என்னால் உதவ முடிந்தது; அவர்கள் எப்போது பேச வேண்டும், எப்போது பேசாதிருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதற்கு அதிக பிரயோஜனமாய் இருந்தது.
விசாரணை நடக்கும் சமயத்தில் மிஸ்டர் ஆல்ஷிவ்ஸ்கி பெரும்பாலும் யெகோவாவின் சாட்சிகளுடைய வீட்டிலேயே இரவு தங்கிவிடுவார். ஹோட்டலில் ரூமெடுத்துத் தங்க அவருக்கு வசதியில்லாததால் அல்ல, ஆனால் அவரே ஒருமுறை சொன்னபடி: “விசாரணைக்கு முன்பு, நீங்கள் எப்படி உணருகிறீர்களோ அப்படிக் கொஞ்சமாவது நானும் உணருவதற்குத்தான்.” அவருடைய உதவியால் பல வழக்கு விசாரணைகளில் வெற்றி கிடைத்தது. அவர் எனக்காக பல முறை வாதாடினார், ஆனால் ஒருமுறைகூட கைநீட்டி காசு வாங்கியதில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் 30 வழக்குகளை நடத்தியதற்கான பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்தார். ஏன்? “உங்கள் வேலைக்காக ஏதோ என்னாலான கொஞ்சத்தை நன்கொடையாகக் கொடுக்க ஆசைப்படுகிறேன்” என்றார். ஆனால் அது “கொஞ்ச” பணம் அல்ல. மிஸ்டர் ஆல்ஷிவ்ஸ்கியின் குழுவினர் செய்து வந்த பணி அதிகாரிகளின் கண்ணில் படாமல் இல்லை, என்றாலும் அவர் அதற்கெல்லாம் அசரவில்லை, எங்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வந்தார்.
அந்த விசாரணைகளின்போது நம் சகோதரர்கள் எவ்வளவு அருமையாக கோர்ட்டில் சாட்சி கொடுத்தார்கள் என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. விசாரணையை நேரில் காணவும் குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்களைப் பலப்படுத்தவும் பலர் கோர்ட்டுக்கு வந்தார்கள். விசாரணைகள் உச்ச எண்ணிக்கையை எட்டிய ஒரு வருடத்தில், எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 30,000 பேர் அப்படி வந்து ஆதரவளித்தார்கள். அது உண்மையிலேயே சாட்சிகளின் திரள் கூட்டம்தான்!
புதிய பொறுப்பு
1989 வாக்கில் நம் ஊழியத்தின் மீதான தடை நீக்கப்பட்டிருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு புதிய கிளை அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு மருத்துவ தகவல் சேவையில் (Hospital Information Services) பணியாற்ற அழைப்பு கிடைத்தது; அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன். நாங்கள் மூன்று பேர் இதில் பணியாற்றுகையில், இரத்தம் சம்பந்தமாக நம் சகோதரர்கள் எதிர்ப்படும் சவால்களைச் சமாளிப்பதற்கும், கிறிஸ்தவ மனசாட்சியின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் நிலைநிற்கையைக் காத்துக்கொள்வதற்கும் அவர்களுக்கு உதவினோம்.—அப்போஸ்தலர் 15:28, 29.
வெளி ஊழியத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய கிடைத்துள்ள பாக்கியத்திற்காக நானும் என் மனைவியும் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நீலா எப்போதுமே பக்கபலமாக இருந்து, என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறாள். தேவராஜ்ய காரியங்களில் நான் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயங்களில் அல்லது சிறைக்கு அனுப்பப்பட்ட சமயங்களில், நான் வீட்டில் இல்லாததைக் குறித்து அவள் குறைப்பட்டுக் கொள்ளாததற்காக அவளுக்கு எப்போதுமே ரொம்ப நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கஷ்ட காலங்களில் உணர்ச்சிப் பூர்வமாக சோர்ந்து போய்விடுவதற்கு மாறாக மற்றவர்களுக்கு அவள் ஆறுதலாக இருந்தாள்.
உதாரணமாக, 1974-ல் மற்ற பயணக் கண்காணிகளோடு சேர்த்து நானும் கைது செய்யப்பட்டேன். இதை அறிந்த சில சகோதரர்கள், அவளுக்குப் பதட்டம் ஏற்படாத விதத்தில் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல தீர்மானித்தார்கள். அவளைப் பார்த்தபோது “சகோதரி நீலா, கவலை தரும் செய்தியைச் சொன்னால் நீங்க தாங்கிக்கொள்வீர்களா?” எனக் கேட்டார்கள். முதலில், நான் செத்துவிட்டேன் என நினைத்து, அவள் பயத்தில் உறைந்துபோனாள். ஆனால் உண்மையில் என்ன நடந்ததென்பதை அறிந்தபோது, “அவர் உயிரோடு இருக்கிறாரே அது போதும்! இப்படிச் சிறைக்குப் போவதொன்றும் அவருக்குப் புதிதல்ல” என ஆசுவாசத்தோடு சொன்னாளாம். அவள் அப்படி நம்பிக்கையான மனநிலையுடன் பேசியது அவர்களது நெஞ்சைத் தொட்டதாக அந்தச் சகோதரர்கள் பின்னர் என்னிடம் சொன்னார்கள்.
வாழ்க்கை பாதையில் சில துயர சம்பவங்களை நாங்கள் சந்தித்திருந்தாலும் யெகோவாவுடைய வழியைப் பின்பற்றியதால் எங்களை எப்போதும் அவர் அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். எங்களுடைய மகள் லிடியாவும் மருமகன் ஆல்ஃபிரெட் டெரூஷாவும் முன்மாதிரியான கிறிஸ்தவ தம்பதியராக இருப்பதைப் பார்த்து நாங்கள் ரொம்பவே சந்தோஷப்படுகிறோம். பேரப்பிள்ளைகளான கிறிஸ்டஃபரும் ஜானத்தானும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாகும்படி வளர்ந்திருப்பதும்கூட எங்களுக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது. என் தம்பி ரிஷ்யர்ட்டும் தங்கை உர்சூலாவும் பல வருடங்களாக உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக சேவை செய்து வருகிறார்கள்.
யெகோவா எங்களை ஒருபோதும் கைவிட்டதில்லை, முழுமனதோடு எப்போதும் அவருக்குச் சேவை செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம். “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள் [“பின்பற்று,” பொது மொழிபெயர்ப்பு]; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்” என சங்கீதம் 37:34-லுள்ள வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கின்றன. பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும் அந்த நாளுக்காக வெகு ஆவலோடு காத்திருக்கிறோம்.
[பக்கம் 17-ன் படம்]
1964-ல் க்ராகௌ என்ற இடத்தில் ஒரு சகோதரருடைய தோட்டத்தில் நடந்த ஒரு மாநாடு
[பக்கம் 18-ன் படம்]
1968-ல் என் மனைவி நீலா, மகள் லிடியாவுடன்
[பக்கம் 20-ன் படம்]
சாட்சியாக இருக்கும் ஒரு சிறுவனோடு; அவனுக்கு இரத்தமில்லாமல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு முன்பு
[பக்கம் 20-ன் படம்]
பிள்ளைகளுக்கு இரத்தமில்லா இருதய அறுவை சிகிச்சை செய்யும் சீஃப் சர்ஜன் டாக்டர் வைட்ஸுடன் காட்டாவீட்செ மருத்துவமனையில்
[பக்கம் 20-ன் படம்]
2002-ல் நீலாவுடன்