உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 8/15 பக். 4-7
  • “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாம் ஏன் மரிக்கிறோம்?
  • ‘பாவம் உலகத்திலே பிரவேசித்தது’
  • “இந்தச் சிறுபெண் . . . நித்திரையாயிருக்கிறாள்”
  • மரணத்தைப் புரிந்துகொள்வது நம் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கிறது
  • “மரணமே! உன் கூர் எங்கே?”
  • மரணம் வாழ்க்கையின் முற்றுப்புள்ளியல்ல!
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?
    மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?
  • இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • இறந்துபோன நம் அன்பானவர்களுக்கு என்ன நேரிடுகிறது?
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 8/15 பக். 4-7

“மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது”

இதை தலைப்புச் செய்தியில் வாசிப்பதாக கற்பனை செய்து பாருங்கள், தற்கொலை செய்துகொண்ட சிறுமியைப் பற்றிய செய்திக்குப் பதிலாக இந்தச் செய்தி வந்தால் எப்படியிருக்கும்! உண்மைதான், இதுவரை எந்தவொரு செய்தித்தாளும் இத்தகைய அறிவிப்பை செய்ய முடியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு புத்தகத்தில் இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன. அந்தப் புத்தகமே பைபிள்.

மரணத்தைப் பற்றி பைபிள் தெளிவாக விளக்குகிறது. நாம் ஏன் இறக்கிறோம் என்பதை மட்டுமல்ல, இறந்தவர்களுடைய நிலை என்ன என்பதையும் பைபிள் விளக்குகிறது, மரித்த அன்பானவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதைப் பற்றியும் அது சொல்கிறது. கடைசியாக, “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” என்ற அறிவிப்பைக் கேட்கப்போகும் மகத்தான காலத்தைப் பற்றி அது சொல்கிறது.​—⁠1 கொரிந்தியர் 15:⁠54.

நமக்குப் பழக்கப்பட்ட வார்த்தைகளில் மரணத்தைப் பற்றி பைபிள் விளக்குகிறது, புரியாப் புதிரான வார்த்தைகளில் அல்ல. உதாரணமாக, அது மரணத்தை “நித்திரை”க்கு அடிக்கடி ஒப்பிட்டுப் பேசுகிறது. இறந்தவர்கள் ‘மரண நித்திரையில்’ இருப்பதாக விவரிக்கிறது. (சங்கீதம் 13:3; 1 தெசலோனிக்கேயர் 4:13; யோவான் 11:11-14) மரணத்தை “சத்துரு” என்றும் அடையாளம் காட்டுகிறது. (1 கொரிந்தியர் 15:26) மிக முக்கியமாக, மரணம் ஏன் நித்திரையைப் போல் இருக்கிறது, மரணம் ஏன் மனிதகுலத்தை வாட்டுகிறது, இந்தச் சத்துரு எப்படி கடைசியில் முறியடிக்கப்படுவான் என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது.

நாம் ஏன் மரிக்கிறோம்?

முதல் மனிதனான ஆதாமை கடவுள் படைத்து பூங்காவனம் போன்ற பரதீஸ் வீட்டில் குடிவைத்ததைப் பற்றி பைபிளின் முதல் புத்தகம் விவரிக்கிறது. (ஆதியாகமம் 2:7, 15) ஆதாம் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவனுக்கு அநேக வேலைகள் கொடுக்கப்பட்டன, கண்டிப்பான ஒரு தடையும் விதிக்கப்பட்டது. ஏதேன் தோட்டத்திலிருந்த ஒரு மரத்தைப் பற்றி கடவுள் அவனிடம் இவ்வாறு கூறினார்: ‘அந்த மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.’a (ஆதியாகமம் 2:17) ஆகவே, மரணம் தவிர்க்க முடியாதது அல்ல என்பதையும், கடவுளுடைய சட்டத்தை மீறினால் மரணம் ஏற்படும் என்பதையும் ஆதாம் புரிந்துகொண்டான்.

ஆதாமும் ஏவாளும் அந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் போனது வருந்தத்தக்கது. அவர்கள் வேண்டுமென்றே தங்களுடைய படைப்பாளரின் சித்தத்தை அசட்டை செய்தார்கள், அதன் விளைவுகளையும் அனுபவித்தார்கள். அவர்களுடைய பாவத்தின் விளைவுகளைக் கடவுள் குறிப்பிட்டபோது, “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என அவர்களிடம் கூறினார். (ஆதியாகமம் 3:19) அவர்கள் இப்படி செய்ததால் மிகவும் குறைபாடுள்ளவர்களானார்கள்​—⁠அபூரணரானார்கள். அவர்களுடைய அபூரணம், அதாவது பாவம், மரணத்திற்கு வழிநடத்தியது.

இந்தக் குறைபாடு, அதாவது பாவம், ஆதாம் ஏவாளின் சந்ததியாரான முழு மனிதகுலத்திற்கும் கடத்தப்பட்டது. ஒரு கருத்தில் பார்த்தால், அது பரம்பரை வியாதியைப் போல் இருந்தது. மரணம் எனும் நோயின்றி வாழும் வாய்ப்பை ஆதாம் இழந்தது மட்டுமல்ல, அபூரணத்தை தனது சந்ததியாருக்கும் கடத்தினான். இவ்வாறு, மனித குடும்பம் பாவத்திற்குச் சிறைப்பட்டது. பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.”​—⁠ரோமர் 5:⁠12.

‘பாவம் உலகத்திலே பிரவேசித்தது’

இந்தப் பரம்பரை குறைபாட்டை, அதாவது பாவத்தை, நுண்ணோக்கியில் பார்க்க முடியாது. “பாவம்” என்பது ஒழுக்க மற்றும் ஆன்மீக குறைபாட்டைக் குறிக்கிறது; நம் முதல் பெற்றோரிடமிருந்து இது நமக்குக் கடத்தப்பட்டுள்ளது, இதனால் உடல் ரீதியில் பாதிப்புகள் இருக்கின்றன. என்றாலும், கடவுள் இதற்கு ஒரு பரிகாரத்தை அளித்திருக்கிறார் என பைபிள் வெளிப்படுத்துகிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” (ரோமர் 6:23) கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில், “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என்ற ஓர் உறுதியை பவுல் கொடுத்தார்.​—⁠1 கொரிந்தியர் 15:⁠22.

பாவத்தையும் மரணத்தையும் ஒழிப்பதில் இயேசு முக்கிய பாகம் வகிக்கிறார் என்பது தெளிவாகிறது. “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” இந்தப் பூமிக்கு வந்தாரென அவர் கூறினார். (மத்தேயு 20:28) இந்தச் சூழ்நிலையை ஓர் ஆளைக் கடத்தும் செயலுக்கு ஒப்பிடலாம்; அதாவது பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபரை குறிப்பிட்ட ஒரு தொகை கொடுத்து மாத்திரமே மீட்க முடியும். இந்த விஷயத்தில், நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்குக் கொடுக்கப்படும் பிணைத்தொகையே இயேசுவின் பரிபூரண மானிட உயிர்.b​—⁠அப்போஸ்தலர் 10:39-43.

இந்தப் பிணைத்தொகையைச் செலுத்துவதற்கு இயேசு தமது உயிரை பலியாக கொடுக்க வேண்டியிருந்தது, அதற்காக கடவுள் அவரை இந்தப் பூமிக்கு அனுப்பினார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் . . . நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இயேசு தம்மை பலியாக கொடுப்பதற்கு முன்பு, ‘சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுத்தார்.’ (யோவான் 18:37) அவர் ஊழியம் செய்த காலப்பகுதியில், மரணத்தைப் பற்றிய சத்தியத்தை வெளிப்படுத்துவதற்கு சில சம்பவங்களைப் பயன்படுத்திக் கொண்டார்.

“இந்தச் சிறுபெண் . . . நித்திரையாயிருக்கிறாள்”

இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில் மரணம் என்பது அவர் அறியாத ஒன்றல்ல. தம்மைச் சுற்றியிருந்த மக்களை இழப்பதால் ஏற்படும் துக்கத்தை அவரும் உணர்ந்தார், தமக்கு அகால மரணம் நேரிடும் என்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார். (மத்தேயு 17:22, 23) இயேசு கொலை செய்யப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய நெருங்கிய நண்பரான லாசரு இறந்துபோனார். மரணத்தைப் பற்றி இயேசுவின் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு அந்தச் சம்பவம் நமக்கு உதவுகிறது.

லாசருவின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப் போகிறேன்” என்று இயேசு கூறினார். லாசரு வெறுமனே ஓய்வெடுத்துக் கொண்டிருந்தால், அவர் சுகமடைந்து விடுவாரென சீஷர்கள் நினைத்துக்கொண்டார்கள். ஆகவே இயேசு அவர்களிடம், “லாசரு மரித்துப்போனான்” என்று வெளிப்படையாகச் சொன்னார். (யோவான் 11:11-14) மரணம் என்பது நித்திரையைப் போல் இருப்பதை இயேசு புரிந்திருந்தாரென தெளிவாகத் தெரிகிறது. மரணத்தைப் புரிந்துகொள்வது நமக்குக் கஷ்டமாக இருந்தாலும், நித்திரையைப் புரிந்துகொள்வது நமக்கு கஷ்டமாக இருக்காது. இராத்திரியில் கண்ணயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் நேரம் போவதே நமக்குத் தெரிவதில்லை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரிவதில்லை, ஏனென்றால் நாம் தற்காலிகமாக உணர்வற்றவர்களாய் இருக்கிறோம். இறந்தவர்களுடைய நிலையையும் பைபிள் இப்படித்தான் விளக்குகிறது. பிரசங்கி 9:5-⁠ல் இவ்வாறு கூறுகிறது: “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”

மரணத்தை நித்திரைக்கு இயேசு ஒப்பிட்டார், ஏனென்றால் கடவுளுடைய வல்லமையால் மரணத்திலிருந்து மக்களை எழுப்ப முடியும். ஒரு சமயம், தங்களுடைய சிறு பெண்பிள்ளையை அப்போதுதான் இழந்து தவித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தாருடைய வீட்டிற்கு இயேசு சென்றார். “இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” என இயேசு கூறினார். பிறகு, இறந்துபோன அந்தச் சிறுமையை அணுகி, அவளுடைய கையைப் பிடித்து அழைத்தார், உடனே அவள் “எழுந்திருந்தாள்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், மரணத்திலிருந்து அவள் எழுந்திருந்தாள்.​—⁠மத்தேயு 9:24, 25.

இதேபோல் இயேசு தமது நண்பரான லாசருவையும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பினார். ஆனால் அந்த அற்புதத்தைச் செய்வதற்கு முன்பு, லாசருவின் சகோதரியான மார்த்தாளிடம், ‘உன் சகோதரன் உயிர்த்தெழுவான்’ என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். அதற்கு அவள், ‘உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுவான்’ என நம்பிக்கையோடு சொன்னாள். (யோவான் 11:23, 24) கடவுளுடைய ஊழியர்கள் எல்லாரும் எதிர்காலத்தில் ஒரு சமயம் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என அவள் எதிர்பார்த்திருந்தது தெளிவாகத் தெரிகிறது.

உயிர்த்தெழுதல் என்பதன் துல்லியமான அர்த்தமென்ன? “உயிர்த்தெழுதல்” (ஆனாஸ்டாசிஸ்) என்ற கிரேக்க வார்த்தையின் நேர்பொருள் “எழுந்து நிற்பது” என்பதாகும். மரித்தோரிலிருந்து எழுவதை இது குறிக்கிறது. இது சிலருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம், ஆனால் மரித்தோர் தமது சத்தத்தைக் கேட்பார்கள் என சொன்ன பிறகு, “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்” என இயேசு கூறினார். (யோவான் 5:28) பூமியிலிருந்த சமயத்தில் இயேசுவே நடப்பித்த உயிர்த்தெழுதல் சம்பவங்கள் நமக்கு என்ன நம்பிக்கையை அளிக்கின்றன? கடவுளுடைய ஞாபகத்திலுள்ள மரித்தோர் தங்களுடைய நீண்ட ‘நித்திரையிலிருந்து’ எழுந்து வருவார்கள் என்ற பைபிளின் வாக்குறுதியில் நம்பிக்கை அளிக்கின்றன. வெளிப்படுத்துதல் 20:13 இவ்வாறு தீர்க்கதரிசனம் சொல்கிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [மனிதகுலத்தின் பொதுவான பிரேதக்குழி] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன.”

லாசருவைப் போல, வயதாகி மீண்டும் மரிப்பதற்காகவா இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? கடவுளுடைய நோக்கம் அதுவல்ல. ‘இனி மரணமே இல்லாத’ காலம் வரும் என பைபிள் நமக்கு உறுதி அளிக்கிறது. ஆகவே யாருமே வயதாகி மரிக்க மாட்டார்கள்.​—⁠வெளிப்படுத்துதல் 21:⁠4.

மரணம் ஒரு சத்துரு. இதைத் தவிர மனிதகுலத்திற்கு வேறுபல சத்துருக்களும் இருக்கிறார்கள், அதாவது வியாதி, வயோதிபம் போன்றவை அதில் அடங்கும். மரணத்தைப் போலவே இவையும் பெரும் துன்பத்தைத் தருகின்றன. அவை அனைத்தையும் வெல்லப் போவதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார், கடைசியில் மனிதகுலத்தின் மிகப் பெரிய சத்துருவுக்கு தண்டனைத் தீர்ப்பை வழங்கப்போகிறார். “பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.”​—⁠1 கொரிந்தியர் 15:⁠26.

இந்த வாக்குறுதி நிறைவேறும்போது, பாவத்தினாலோ மரணத்தினாலோ பாழாகாத பரிபூரண வாழ்க்கையை மனிதர்கள் அனுபவித்து மகிழ்வார்கள். இதற்கிடையில், மரித்த அன்பானவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் கடவுளுடைய ஞாபகத்தில் இருந்தால் அவருடைய உரிய நேரத்தில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதில் நாம் ஆறுதலடையலாம்.

மரணத்தைப் புரிந்துகொள்வது நம் வாழ்க்கைக்கு அர்த்தமளிக்கிறது

மரணத்தையும் மரித்தவர்களுக்கான நம்பிக்கையையும் குறித்து தெளிவாகப் புரிந்துகொள்வது வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தை மாற்றலாம். முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஈயன் தனக்கு சுமார் 25 வயதாக இருந்தபோது மரணத்தைப் பற்றிய பைபிளின் விளக்கத்தைக் கற்றுக்கொண்டார். “என்னுடைய அப்பா எங்கேயோ இருக்கிறார் என்ற ஒரு தெளிவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆகவே, அவர் மரணத்தில் உறங்குகிறார் என்பதை நான் அறிந்து கொண்டபோது, நான் முதலில் ரொம்ப கவலைப்பட்டேன்” என அவர் கூறுகிறார். ஆனால், இறந்தவர்களைக் கடவுள் உயிர்த்தெழுப்புவார் என்ற வாக்குறுதியைப் பற்றி ஈயன் வாசித்தபோது, தன்னுடைய அப்பாவை மீண்டும் பார்க்க முடியும் என்பதை அறிந்து மிகுந்த சந்தோஷப்பட்டார். “வாழ்க்கையில் முதல் தடவையாக, எனக்கு நிம்மதி கிடைத்தது” என அவர் நினைவுகூருகிறார். மரணத்தைப் பற்றிய சரியான புரிந்துகொள்ளுதல் அவருக்கு மனசமாதானத்தைத் தந்தது, அவருடைய சோகத்தையும் தணித்தது.

கிளைவும் பிரென்டாவும் தங்களுடைய 21 வயது மகன் ஸ்டீவனை முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஒரு பெரிய விபத்தில் இழந்திருந்தார்கள். மரணத்தைப் பற்றி பைபிள் சொல்வதை அவர்கள் அறிந்திருந்தாலும்கூட, இந்தத் திடீர் இழப்பினால் அவர்கள் அப்படியே இடிந்துபோய்விட்டார்கள். உண்மையில், மரணம் என்பது ஓர் எதிரியே, அதன் கொடுக்கு வேதனைமிக்கது. மரித்தவர்களின் நிலையைப் பற்றி வேதப்பூர்வமாக அறிந்துகொண்டது படிப்படியாக அவர்களுடைய துக்கத்தைத் தணித்தது. பிரென்டா இவ்வாறு கூறுகிறார்: “மரணத்தைப் பற்றி நாங்கள் புரிந்துகொண்டது, சின்னாபின்னமாகச் சிதறியிருந்த எங்களுடைய வாழ்க்கையை ஒன்று சேர்த்து, தொடர்ந்து வாழ எங்களுக்குத் தெம்பளித்தது. ஸ்டீவன் ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்து வரும் காலத்தைப் பற்றி நாங்கள் நினைக்காத நாளே இல்லை.”

“மரணமே! உன் கூர் எங்கே?”

இறந்தவர்களுடைய நிலையைப் புரிந்துகொள்வது வாழ்க்கையைப் பற்றிய சமநிலையான கண்ணோட்டத்தைப் பெற நமக்கு உதவுகிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. மரணம் என்பது ஒரு புரியாப் புதிராகவே இருக்க வேண்டியதில்லை. இந்த எதிரியைப் பற்றிய எந்தப் பயமுமின்றி நாம் வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம். மரணம் நம்முடைய வாழ்க்கை எனும் விளக்கை நித்தியத்திற்கும் அணைத்துப் போடுவதில்லை. இதை அறிந்திருப்பது, “வாழ்க்கை குறுகியது” என்று சொல்லி இன்பத்தை நாடுவதிலேயே வாழ்க்கையைப் போக்குவதை தவிர்க்க உதவுகிறது. கடவுளுடைய நினைவில் இருக்கிற மரித்த நமது அன்பானவர்கள் மரணத்தில் உறங்கிக் கொண்டு, உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கிறார்கள் என்பதை அறிவது நமக்கு ஆறுதலைத் தருகிறது, அதோடு தொடர்ந்து வாழ வேண்டுமென்ற ஆசையையும் நமக்குள் தூண்டிவிடுகிறது.

ஆம், உயிர் கொடுத்தவரான யெகோவா தேவன் மரணத்தை என்றென்றும் குழிதோண்டிப் புதைக்கும் காலத்தை நாம் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருக்கலாம். “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என நாம் கேட்கும் காலம் வரும்போது அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாக இருக்கும்!​—⁠1 கொரிந்தியர் 15:⁠55.

[அடிக்குறிப்புகள்]

a மரணத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடுவது இதுவே முதல் முறையாகும்.

b பிணைத்தொகை பரிபூரண மானிட உயிராகும், ஏனென்றால் அதைத்தான் ஆதாம் இழந்திருந்தான். பாவம் எல்லா மனிதரையும் களங்கப்படுத்தியது, அதனால் எந்தவொரு அபூரண மனிதனும் பிணைத்தொகையை கொடுக்க முடியாது. எனவேதான், கடவுள் தமது குமாரனை பரலோகத்திலிருந்து அனுப்பினார். (சங்கீதம் 49:7-9) இந்த விஷயத்தைப் பற்றி கூடுதலான தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் 7-⁠ம் அதிகாரத்தைக் காண்க.

[பக்கம் 5-ன் படம்]

ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமையால் மரணம் வந்தது

[பக்கம் 6-ன் படம்]

இறந்துபோன சிறுபிள்ளையின் கையைப் பிடித்து இயேசு அழைத்தபோது, உடனே அவள் எழுந்தாள்

[பக்கம் 7-ன் படம்]

லாசருவைப் போல, இறந்துபோன தங்களுடைய அன்பானவர்கள் நித்திரையிலிருந்து எழுந்துவரும் நாளை அநேகர் எதிர்நோக்கி இருக்கிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்