‘யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானம்’
“காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.” (பிரசங்கி 12:13) பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன், கடவுளுடைய ஏவுதலால் எப்பேர்ப்பட்ட கருத்தாழமிக்க முடிவுக்கு வந்தார்! பூர்வத்தில் வாழ்ந்த யோபுவும்கூட, கடவுளுக்குப் பயப்படுவதன் மதிப்பை உணர்ந்திருந்ததால் இவ்வாறு சொன்னார்: ‘இதோ, யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி.’—யோபு 28:28.
யெகோவாவுக்குப் பயப்படுவது மிகமிக முக்கியமென்பதை பைபிள் காட்டுகிறது. நாம் தேவபயத்தை வளர்த்துக்கொள்வது ஏன் ஞானமானது? தேவபயம் தனிப்பட்ட விதமாக நமக்கும், ஒரு தொகுதியாக உண்மை வணக்கத்தார் அனைவருக்கும் எவ்வாறு பயனளிக்கிறது? நீதிமொழிகள் 14-ம் அதிகாரம், 26 முதல் 35 வசனங்கள், இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.a
‘திடநம்பிக்கையின்’ ஊற்றுமூலர்
‘யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்’ என சாலொமோன் குறிப்பிட்டார். (நீதிமொழிகள் 14:26) தேவபயமுள்ள நபருக்கு நம்பிக்கையின் ஊற்றுமூலராக விளங்குபவர், உத்தமமும் சர்வவல்லமையும் உள்ள கடவுளாகிய யெகோவாவே. அதனால்தான், அப்படிப்பட்ட நபர் எதிர்காலத்தைக் குறித்து திடநம்பிக்கையோடு இருக்கிறார்! அவரது எதிர்காலம் நீடித்திருக்கும், சந்தோஷமாயிருக்கும்.
ஆனால் இந்த உலகத்தின் மீது—அதன் திட்டங்கள், அமைப்புகள், கருத்துகள், பொருள்கள் ஆகியவற்றின் மீது—நம்பிக்கை வைப்பவர்களின் எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்கள் எதிர்காலத்திற்காக என்னதான் ‘கோட்டை கட்டினாலும்’ அது சீக்கிரத்தில் தரைமட்டமாகிவிடும்; ஏனென்றால், “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என பைபிள் குறிப்பிடுகிறது. (1 யோவான் 2:17) ஆக, ‘உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர’ நமக்கு ஏதாவது அவசியம் இருக்கிறதா என்ன?—1 யோவான் 2:15.
தேவபயமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘அடைக்கலம் கிடைக்குமாறு’ பார்த்துக்கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? “பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்” என சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 34:11) பெற்றோர் தங்கள் முன்மாதிரியாலும் போதனையாலும் தேவபயத்தைக் காண்பிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கையில், அவர்கள் யெகோவாமீது திடநம்பிக்கையுள்ள நபர்களாக வளர அதிக வாய்ப்பிருக்கிறது.—நீதிமொழிகள் 22:6.
‘யெகோவாவுக்குப் பயப்படுதல் ஜீவ ஊற்று; அதினால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்’ என சாலொமோன் தொடர்ந்து சொன்னார். (நீதிமொழிகள் 14:27) யெகோவாவுக்குப் பயப்படுதல் “ஜீவ ஊற்று” என சொல்லப்படுவதற்குக் காரணம், மெய்க் கடவுளாகிய அவர் ‘ஜீவத் தண்ணீரின் ஊற்றாக’ விளங்குகிறார். (எரேமியா 2:13) யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெறுவது நம்மை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும். (யோவான் 17:3) தேவபயம் மரணக் கண்ணிகளிலிருந்தும் நம்மைத் தப்புவிக்கும். எவ்வாறு? நீதிமொழிகள் 13:14 இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஞானவான்களுடைய போதகம் ஜீவ ஊற்று; அதினால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்.” நாம் யெகோவாவுக்குப் பயந்து, அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து, அவரது வார்த்தை காட்டும் வழியில் நடக்கையில், அகால மரணத்திற்கு வழிநடத்தும் தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் உணர்ச்சிகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம்.
“ராஜாவின் மகிமை”
சாலொமோன் ராஜா தனது ஆட்சிகாலத்தின் பெரும்பகுதியில், யெகோவாவுக்குப் பயந்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். இதனால் அவரது ஆட்சி செழித்தோங்கியது. ஒரு ராஜா திறம்பட அரசாட்சி செய்கிறாரென எதை வைத்து சொல்ல முடியும்? நீதிமொழிகள் 14:28 இவ்வாறு பதிலளிக்கிறது: “ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.” குடிமக்கள் எந்தளவு சிறப்புடன் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ராஜாவின் வெற்றி அளவிடப்படுகிறது. அவரது ஆட்சியில் வாழ திரளான மக்கள் பிரியப்பட்டால், அவர் சிறந்த அரசரென பெயரெடுக்கிறார். சாலொமோனுக்கு, “ஒரு சமுத்திரந் தொடங்கி [செங்கடல்] மறுசமுத்திரம் வரைக்கும் [மத்தியத்தரைக் கடல்], நதிதொடங்கி [ஐப்பிராத்து] பூமியின் எல்லைகள் வரைக்கும்” குடிமக்கள் இருந்தார்கள். (சங்கீதம் 72:6-8) கொடிகட்டிப் பறந்த அவரது ஆட்சியில் சமாதானம் செழித்தோங்கியது. (1 இராஜாக்கள் 4:24, 25) ஆக, சாலொமோன் ஒரு ராஜாவாக வெற்றிசிறந்தார். மறுபட்சத்தில், மக்களின் அபிமானத்தைப் பெறாத தலைவன் இகழ்ச்சியடைகிறார்.
இவ்விஷயத்தில், பெரிய சாலொமோனாகிய மேசியானிய ராஜா இயேசு கிறிஸ்துவின் மகிமையைப் பற்றி என்ன சொல்லலாம்? இன்றுகூட அவருக்கிருக்கும் குடிமக்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பூமியின் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை, 60 லட்சத்திற்கும் அதிகமான தேவபயமுள்ள ஆண்களும் பெண்களும் கிறிஸ்துவின் ஆட்சியில் வாழ ஏற்கெனவே தீர்மானித்திருக்கிறார்கள். அவர்கள் இயேசுமீது விசுவாசம் வைத்து, உயிருள்ள கடவுளை உண்மையோடு வணங்குவதில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். (யோவான் 14:1) ஆயிரவருட ஆட்சியின் முடிவிற்குள், கடவுளுடைய ஞாபகத்தில் உள்ள அனைவரும் உயிர்த்தெழுப்பப்பட்டிருப்பார்கள். அச்சமயத்தில் பரதீஸாக மாறியிருக்கும் பூமியில், சந்தோஷமும் நீதியுமுள்ள மக்கள் நிறைந்திருப்பார்கள்; தங்கள் ராஜாவுக்கு அவர்கள் நன்றியை வெளிக்காட்டியிருப்பார்கள். கிறிஸ்துவின் ஆட்சி வெற்றிசிறந்திருப்பதற்கு அது எப்பேர்ப்பட்ட சான்றளிக்கும்! ஆக, அருமையான அந்த ராஜ்யத்தின் மீதுள்ள நம் நம்பிக்கையை உறுதியுடன் பற்றியிருப்போமாக.
ஆன்மீக, சரீர நன்மைகள்
தேவபயம் மன அமைதியையும் சாந்தியையும் தரும். ஏனென்றால் பகுத்தறிவும் விவேகமும் ஞானத்தின் சில அம்சங்கள். நீதிமொழிகள் 14:29 இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான் [“மகா விவேகி,” NW]; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.” கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நம் ஆன்மீகத்தன்மை சீரழியும் என்பதை உணர விவேகம் உதவுகிறது. “விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள்” போன்றவை, ‘தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதற்கு’ தடையாக இருப்பதாய் சொல்லப்பட்டிருக்கிறது. (கலாத்தியர் 5:19-21) நீதியான கோபத்தைக்கூட வளர்க்காதிருக்கும்படி நாம் எச்சரிக்கப்படுகிறோம். (எபேசியர் 4:26, 27) மேலும், நாம் பொறுமை இழந்துவிடுகையில், முட்டாள்தனமாக எதையாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு பிற்பாடு வருந்துவோம்.
கோபத்தால் உடலுக்கு விளையும் கேடுகளைப் பற்றி இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு சொன்னார்: “சொஸ்தமனம் [“மன சமாதானம்,” NW] உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 14:30) கோபப்படுவதாலும் கொதிப்படைவதாலும் ஏற்படும் உடல்நலக் கேடுகளில் சில: சுவாசக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் தொந்தரவுகள், கணையக் கோளாறுகள். அதுமட்டுமல்ல, வயிற்றுப்புண், படை, ஆஸ்துமா, தோல் வியாதிகள், செரிமானப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படுவதற்கும் அல்லது தீவிரமாவதற்கும்கூட கோபம் காரணமாக இருப்பதாய் மருத்துவர்கள் சொல்கிறார்கள். மறுபட்சத்தில், ‘மன சமாதானம் உடலுக்கு ஜீவன்.’ ஆகவே நாம், ‘சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடுவது’ ஞானமானது.—ரோமர் 14:19.
தேவபயம் பட்சபாதத்தைத் தவிர்க்க உதவுகிறது
“தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம் பண்ணுகிறான்” என சாலொமோன் சொன்னார். (நீதிமொழிகள் 14:31) மனிதர் அனைவரையும் உண்டாக்கியவர் யெகோவா தேவனே என்பதை தேவபயமுள்ள ஒருவர் உணர்ந்திருக்கிறார். அதன் காரணமாக, தரித்திரனும் தன்னைப் போன்ற மனிதனே என்பதை அறிந்திருக்கிறார்; அதோடு, அவனை நடத்தும் விதத்தைப் பொறுத்தே படைப்பாளருக்கு நல்ல பெயரோ கெட்ட பெயரோ ஏற்படும் என்பதையும் அறிந்திருக்கிறார். ஆகவே நாம் கடவுளை மகிமைப்படுத்துவதற்கு, மற்றவர்களை நியாயமாகவும் பட்சபாதமின்றியும் நடத்த வேண்டும். ஏழ்மையிலுள்ள கிறிஸ்தவர், பட்சபாதமின்றி நடத்தப்பட வேண்டும், ஆன்மீக உதவிகள் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை ஏழை, பணக்காரர் ஆகிய இரு சாராருக்கும் ஒரேவிதமாக நாம் அறிவிக்க வேண்டும்.
தேவபயத்தின் மற்றொரு நன்மையைக் குறித்து ஞானமுள்ள அரசர் இவ்வாறு கூறினார்: “பொல்லாதவன் தன் பொல்லாப்பால் கீழே தள்ளப்படுவான்; நீதிமானோ தன் உத்தமத்திலே அடைக்கலம் காண்பான்.” (நீதிமொழிகள் 14:32, NW) பொல்லாதவர் கீழே தள்ளப்படுவதன் அர்த்தம் என்ன? அவர் ஏதேனும் துயரத்தில் இருக்கையில் அதிலிருந்து மீளவே மாட்டார் என அது அர்த்தப்படுத்துவதாக சிலர் சொல்கிறார்கள். மறுபட்சத்தில், தேவபயமுள்ளவர் கடுந்துயரத்திலும் கடவுள்மீதுள்ள தன் உத்தமத்தில் அடைக்கலம் காண்கிறார். மரணம் வரையாகக்கூட யெகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று சொன்ன யோபுவைப் போலவே மன உறுதியுடன் இருக்கிறார்.—யோபு 27:5.
தொடர்ந்து உத்தமமாய் இருப்பதற்கு, தேவபயமும் ஞானமும் அவசியம். ஞானத்தை எங்கே கண்டடையலாம்? “புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ [“மதியீனர் மத்தியில் அது,” NW] வெளிப்படும்” என நீதிமொழிகள் 14:33 சொல்கிறது. ஆம், புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் குடிகொண்டிருக்கும். ஆனால், மதியீனர் மத்தியில் அது எவ்வாறு வெளிப்படும்? “மதியீனர், ஞானமுள்ளவர் போல் தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில் தனக்கு ஞானமாகத் தோன்றுபவற்றை உளறிவிடுகிறார், ஆனால் அது கடைசியில் முட்டாள்தனமாகி விடுகிறது” என ஒரு புத்தகம் சொல்கிறது.
“நாடு மேன்மை அடையும்”
தேவபயம் தனிப்பட்ட நபரை எவ்வாறு பாதிக்கிறது என்று சொல்லிய பிறகு, அது முழு தேசத்தையும் எவ்வாறு பாதிக்கிறதென இஸ்ரவேலின் ராஜா சாலொமோன் குறிப்பிட்டார்: “நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.” (நீதிமொழிகள் 14:34, பொது மொழிபெயர்ப்பு) இந்த நியமம், இஸ்ரவேல் தேசத்தின் விஷயத்தில் எவ்வளவு தெளிவாக நிரூபணமானது! அத்தேசம் கடவுளுடைய உயர்ந்த தராதரங்களைப் பின்பற்றியதால் சுற்றிலுமிருந்த தேசங்களைக் காட்டிலும் மேன்மை அடைந்தது. இருந்தாலும், மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாமல் போனபோது அவமானமே மிஞ்சியது; கடைசியில் யெகோவா அத்தேசத்தைக் கைவிட்டார். இதே நியமம், இன்றுகூட கடவுளுடைய மக்களுக்குப் பொருந்துகிறது. கிறிஸ்தவ சபை கடவுளுடைய நீதியுள்ள நியமங்களைக் கடைப்பிடிப்பதால் உலகிலிருந்து தனித்து விளங்குகிறது. ஆனாலும், அதே மேன்மையான நிலையில் தொடர்ந்திருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் சுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும். பாவத்தைப் பழக்கமாகச் செய்து வருவது நமக்கு தனிப்பட்ட விதத்தில் அவமானத்தைக் கொண்டு வருவதோடு சபைக்கும் கடவுளுக்கும் கெட்ட பெயரைக் கொண்டுவரும்.
ஒரு ராஜாவை மகிழ்விப்பது எதுவென சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.” (நீதிமொழிகள் 14:35) நீதிமொழிகள் 16-ம் அதிகாரம் 13-ம் வசனமும் இவ்வாறு சொல்கிறது: “நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.” ஆம், நாம் நீதியுடனும் விவேகத்துடனும் நடந்து, ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நம்முடைய உதடுகளை உபயோகிக்கும்போது நம் தலைவரும் ராஜாவுமான இயேசு கிறிஸ்து மிகவும் சந்தோஷப்படுகிறார். ஆகவே அவ்வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு, மெய் தேவனுக்குப் பயப்படுவதால் வரும் ஆசீர்வாதங்களை அனுபவிப்போமாக.
[அடிக்குறிப்பு]
a நீதிமொழிகள் 14:1-25 வசனங்களுக்கான விளக்கத்திற்கு, காவற்கோபுரம் நவம்பர் 15, 2004, பக்கங்கள் 26-9 மற்றும் ஜூலை 15, 2005, பக்கங்கள் 17-20 ஆகியவற்றைக் காண்க.
[பக்கம் 15-ன் படம்]
தேவபயத்தைக் காண்பிக்க நம்மால் கற்றுக்கொள்ள முடியும்