இயேசு கிறிஸ்து நடந்தபடியே தொடர்ந்து நடவுங்கள்
‘தேவனுக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் [இயேசு] நடந்தபடியே தானும் [“தொடர்ந்து,” NW] நடக்க வேண்டும்.’—1 யோவான் 2:6.
“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை [“உற்று,” NW] நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்று எழுதினார் அப்போஸ்தலன் பவுல். (எபிரெயர் 12:1, 2) ஆகையால், தொடர்ந்து விசுவாசமுள்ளவர்களாக நடப்பதற்கு நாம் இயேசு கிறிஸ்துவை உற்று நோக்க வேண்டும்.
2 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘உற்று நோக்கு’ என்பதற்கான மூல வார்த்தை, “கவனச்சிதறலின்றி கூர்ந்து கவனித்தல்,” “பார்வையை ஒன்றிலிருந்து விலக்கி, வேறொன்றை உன்னிப்பாகப் பார்த்தல்,” “வைத்த கண் வாங்காமல் உற்று கவனித்தல்” என்றெல்லாம் அர்த்தப்படுத்துகிறது. “விளையாட்டு அரங்கிலுள்ள கிரேக்க ஓட்டப்பந்தய வீரர் ஒருவர், தான் ஓடிக்கொண்டிருக்கிற தளத்திலிருந்தும் இறுதிக்கோட்டிலிருந்தும் தன் கவனத்தைத் திருப்பி, அரங்கிலுள்ளவர்களைப் பார்க்க எப்போது திரும்புகிறாரோ அப்போதே, அந்த நிமிடமே, அவருடைய ஓட்டத்தின் வேகம் குறைந்துவிடும். கிறிஸ்தவர்களுக்கும் அதுதான் நடக்கிறது” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. ஆம், கவனச்சிதறல்கள் நம்முடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக ஆகிவிடலாம். எனவே இயேசு கிறிஸ்துவை நாம் உற்று நோக்க வேண்டும். விசுவாசத்தைத் துவக்குகிறவரான அவரை நாம் எதற்காக உற்று நோக்க வேண்டும்? ‘விசுவாசத்தைத் துவக்குகிறவர்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை “எல்லாக் காரியங்களையும் முன்னின்று நடத்துவதன் மூலம் உதாரணமாகத் திகழ்கிற பிரதான தலைவர்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. அப்படியானால், இயேசுவை உற்று நோக்குவதில் அவருடைய உதாரணத்தைப் பின்பற்றுவது உட்பட்டிருக்கிறது.
3 ‘தேவனுக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் [இயேசு] நடந்தபடியே தானும் [“தொடர்ந்து,” NW] நடக்க வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 2:6) இயேசு தம்முடைய பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததைப் போல், நாம் இயேசுவுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் தேவனுக்குள் நிலைத்திருக்க வேண்டும்.—யோவான் 15:10.
4 ஆகையால் இயேசு நடந்தபடியே நாம் நடப்பதற்கு, பிரதான தலைவரான அவரை உன்னிப்பாகக் கவனிப்பதும், அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதும் அவசியம். இது சம்பந்தமாகச் சிந்திக்க வேண்டிய முக்கிய கேள்விகள் பின்வருமாறு: கிறிஸ்து இன்று நம்மை எப்படி முன்னின்று நடத்துகிறார்? அவர் நடந்துகொண்ட விதத்தைப் பின்பற்றுவது நம்மில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்? இயேசு கிறிஸ்து வைத்த மாதிரியைப் பின்பற்றுவதால் வரும் நன்மைகள் யாவை?
தம்மைப் பின்பற்றுபவர்களை கிறிஸ்து முன்னின்று நடத்துகிற விதம்
5 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து பரலோகத்திற்குச் செல்லும் முன் தம் சீஷர்களுக்குத் தரிசனமானார், அப்போது ஒரு முக்கியமான வேலையை அவர்களிடம் ஒப்படைத்தார். ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’ என்று அவர் சொன்னார். இந்த வேலையை அவர்கள் செய்யும்போது தாம் அவர்களோடு கூடவே இருப்பதாகவும் அந்தப் பிரதான தலைவர் பின்வருமாறு வாக்குக் கொடுத்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:19, 20) இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு காலத்தில் இயேசு கிறிஸ்து எந்த அர்த்தத்தில் தம்மைப் பின்பற்றுபவர்களுடனே இருக்கிறார்?
6 “என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என இயேசு சொன்னார். (யோவான் 14:26) இயேசுவின் பெயரில் அனுப்பப்படுகிற பரிசுத்த ஆவி, இன்று நம்மை வழிநடத்தி, பலப்படுத்துகிறது. நமக்கு ஆன்மீக அறிவொளியை அளித்து, “தேவனுடைய ஆழங்களையும்” புரிந்துகொள்ள உதவுகிறது. (1 கொரிந்தியர் 2:10) அதுமட்டுமல்ல, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய குணங்கள் ‘ஆவியின் கனியாக’ இருக்கின்றன. (கலாத்தியர் 5:22, 23) பரிசுத்த ஆவியின் உதவியால்தான் இந்தக் குணங்களை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.
7 வேதவசனங்களைப் படித்து, அவற்றைப் பொருத்திப் பிரயோகிக்க கற்றுக்கொள்ளும்போது ஞானத்திலும், புத்தியிலும், அறிவிலும், நியாயத்திலும், நல்யோசனையிலும் வளருவதற்கு யெகோவாவின் ஆவி நமக்கு உதவும். (நீதிமொழிகள் 2:1-11) சோதனைகளிலும் பிரச்சினைகளிலும் சகித்திருப்பதற்குக்கூட பரிசுத்த ஆவி நமக்கு உதவும். (1 கொரிந்தியர் 10:13; 2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13) ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை . . . பூரணப்படுத்தும்படி’ கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. (2 கொரிந்தியர் 7:1) பரிசுத்த ஆவியின் உதவியில்லாமல், கடவுள் எதிர்பார்க்கிற விதத்தில் பரிசுத்தமாக நம்மால் வாழ முடியுமா என்ன? இன்று நம்மை முன்னின்று நடத்துவதற்கு இயேசு பயன்படுத்துகிற ஒரு வழி பரிசுத்த ஆவியாகும்; அதைப் பயன்படுத்த யெகோவா தேவன் அவருக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்.—மத்தேயு 28:18.
8 கிறிஸ்து இன்று சபையை முன்னின்று நடத்துகிற மற்றொரு வழியைக் கவனியுங்கள். தம்முடைய பிரசன்னத்தைப் பற்றியும் இந்தப் பொல்லாத உலகின் முடிவைக் குறித்தும் இயேசு இவ்வாறு சொன்னார்: ‘ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள அடிமை யார்? எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற அடிமையே பாக்கியவான். தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.’—மத்தேயு 24:3, 45-47; NW.
9 இயேசு கிறிஸ்துவே அந்த “எஜமான்.” பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவத் தொகுதியினரே அந்த “அடிமை.” இயேசுவின் பூமிக்குரிய காரியங்களைக் கவனிக்கிற வேலையும் ஏற்ற வேளையில் ஆன்மீக உணவை அளிக்கிற வேலையும் இந்த அடிமை வகுப்பாரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பைச் சேர்ந்த தகுதிவாய்ந்த கண்காணிகளின் ஒரு சிறு தொகுதியினர் ஆளும் குழுவாக ஆகிறார்கள்; இவர்கள் அடிமை வகுப்பை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை இவர்கள் வழிநடத்துகிறார்கள், அதோடு ஏற்ற வேளையில் ஆன்மீக போஷாக்கையும் அளிக்கிறார்கள். இவ்வாறு ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமும் அதன் ஆளும் குழு மூலமும் கிறிஸ்து இன்று சபையை முன்னின்று நடத்துகிறார்.
10 கிறிஸ்துவுடைய தலைமை வகிப்பின் மற்றொரு வெளிக்காட்டு ‘மனிதரில் வரங்களான’ கிறிஸ்தவ மூப்பர்கள், அதாவது கண்காணிகள் ஆவர். “பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்” அவர்கள் அளிக்கப்பட்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:8, 11, 12) அவர்களைக் குறித்து எபிரெயர் 13:7 இவ்வாறு சொல்கிறது: “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” மூப்பர்கள் சபையை முன்னின்று நடத்துகிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதால், அவர்களுடைய விசுவாசம் நாம் பின்பற்றத்தக்க விசுவாசமாக ஆகிறது. (1 கொரிந்தியர் 11:1) ‘மனிதரில் வரங்களான’ மூப்பர் குழுவினருக்குக் கீழ்ப்பட்டு, அடங்கி நடப்பதன் மூலம் இந்த ஏற்பாட்டிற்கு நம்முடைய நன்றியைக் காண்பிக்கலாம்.—எபிரெயர் 13:17.
11 ஆம், இயேசு கிறிஸ்து இன்று தம்மைப் பின்பற்றுபவர்களை பரிசுத்த ஆவி மூலமும், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” மூலமும், சபை மூப்பர்கள் மூலமும் முன்னின்று நடத்துகிறார். கிறிஸ்து நடந்தபடியே நாம் நடக்க வேண்டுமானால், அவர் முன்னின்று நடத்துகிற விதத்தைப் புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிவது அவசியம். அதோடு, அவர் நடந்துகொண்ட விதத்தை அப்படியே பின்பற்றுவதும் அவசியம். “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 2:21) இயேசுவின் பரிபூரண முன்மாதிரியைப் பின்பற்றுவது நம்மில் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்?
அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் நியாயத்தன்மை காட்டுங்கள்
12 இயேசு தம்முடைய பிதாவிடமிருந்து ஈடற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்த போதிலும், அதை அவர் நியாயமான விதத்தில் பிரயோகித்தார். எனவே, சபையிலுள்ள எல்லாரும், குறிப்பாக கண்காணிகள், தங்களுடைய ‘நியாயத்தன்மை எல்லா மனுஷருக்கும்’ தெரியும்படி நடந்துகொள்ள வேண்டும். (பிலிப்பியர் 4:5; 1 தீமோத்தேயு 3:2, 3, NW) சபையில் மூப்பர்களுக்கு ஓரளவு அதிகாரம் இருப்பதால், அதைப் பிரயோகிப்பதில் அவர்கள் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது மிக முக்கியம்.
13 இயேசு தம் சீஷர்களின் வரையறைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டார். அவர்களால் முடியாத காரியங்களைச் செய்யச் சொல்லி அவர்களை அதிகாரம்பண்ணவில்லை. (யோவான் 16:12) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் ‘விறுவிறுப்பாகப் பிரயாசப்படுமாறு’ அவர்களை ஊக்கப்படுத்தினாரே தவிர, கட்டாயப்படுத்தவில்லை. (லூக்கா 13:24, NW) முன்னின்று நடத்துவதன் மூலமும் அவர்களுடைய இருதயங்களைத் தூண்டுவதன் மூலமும் அவர்களை ஊக்கப்படுத்தினார். அதேபோல, இன்றைய கிறிஸ்தவ மூப்பர்களும் மற்றவர்களுடைய மனதில் குற்றவுணர்வை ஏற்படுத்துவதன் மூலம் கடவுளுக்குச் சேவை செய்யுமாறு அவர்களை மிரட்டுவதில்லை. மாறாக, யெகோவா மீதும், இயேசு மீதும், சக மனிதர்கள் மீதும் உள்ள அன்பினால் அவருக்குச் சேவை செய்யுமாறு அவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.—மத்தேயு 22:37-39.
14 ஜனங்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் இயேசு தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவில்லை. எட்ட முடியாத தராதரங்களையும் அவர் வைக்கவில்லை, கணக்குவழக்கில்லா சட்டங்களையும் வகுக்கவில்லை. மோசே மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்களுக்கு அடிப்படையாக இருந்த நியமங்களால் அவர்களுடைய இருதயத்தைச் சென்றெட்டி செயல்படத் தூண்டினார், இதுவே அவருடைய அணுகுமுறையாக இருந்தது. (மத்தேயு 5:27, 28) இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, மூப்பர்கள் இன்று தங்கள் இஷ்டப்படி சட்டங்களை வகுப்பதில்லை, தங்கள் சொந்தக் கருத்துகளையும் திணிப்பதில்லை. மாறாக, ஆடை அலங்கார விஷயத்திலோ பொழுதுபோக்கு விஷயத்திலோ சபையாரின் இருதயத்தை எட்டுவதற்கு மீகா 6:8; 1 கொரிந்தியர் 10:31-33; 1 தீமோத்தேயு 2:9, 10 போன்ற வசனங்களிலுள்ள தெய்வீக நியமங்களையே பயன்படுத்துகிறார்கள்.
அனுதாபமிக்கவராயும் மன்னிக்கிறவராயும் இருங்கள்
15 சீஷர்களின் குற்றங்குறைகளைக் கையாண்ட விதத்தில் இயேசு நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்தார். ஒரு மனிதனாக அவர் பூமியிலிருந்த கடைசி இரவன்று நடந்த இரண்டு சம்பவங்களைக் கவனியுங்கள். கெத்செமனே எனும் இடத்திற்கு இயேசு வந்த பிறகு, “பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக் கொண்டுபோய் . . . விழித்திருங்கள்” என்று சொன்னார். பிறகு ‘சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து . . . ஜெபம் செய்தார்.’ அதன்பின், திரும்பி வந்தபோது ‘அவர்கள் நித்திரை பண்ணுகிறதைக் கண்டார்.’ அப்போது அவர் என்ன சொன்னார்? “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என்றார். (மாற்கு 14:32-38) பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை வன்மையாகக் கடிந்துகொள்வதற்குப் பதிலாக, அவர்களைக் குறித்து அனுதாபப்பட்டார்! அதே இரவன்று, இயேசுவை பேதுரு மூன்று முறை மறுதலித்தார். (மாற்கு 14:66-72) அப்படி அவர் மறுதலித்த பிறகு, இயேசு அவரை எவ்வாறு நடத்தினார்? ‘கர்த்தர் உயிர்த்தெழுந்து சீமோனுக்கு [பேதுருவுக்கு] தரிசனமானார்.’ (லூக்கா 24:34) “கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:5) அப்போஸ்தலன் பேதுருமீது மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளாமல், மனந்திரும்பிய அவரை இயேசு மன்னித்ததோடு பலப்படுத்தவும் செய்தார். பிற்பாடு, அவரிடம் மாபெரும் பொறுப்புகளைக்கூட ஒப்படைத்தார்.—அப்போஸ்தலர் 2:14; 8:14-17; 10:44, 45.
16 எனவே, நம்முடைய சக விசுவாசிகள், மனித அபூரணத்தின் காரணமாக ஏதோவொரு விதத்தில் நம் மனதை நோகடித்தாலோ, நம்மைத் தவறாக நடத்தினாலோ, நாமும் இயேசுவைப் போலவே அனுதாபமிக்கவர்களாயும் மன்னிக்கிறவர்களாயும் இருக்க வேண்டும், அல்லவா? பேதுரு தம் சக விசுவாசிகளை இவ்வாறு உந்துவித்தார்: “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, . . . ஆசீர்வதியுங்கள்.” (1 பேதுரு 3:8, 9) ஆனால், ஒரு நபர் இயேசுவைப் போல நம்மீது அனுதாபத்தைக் காண்பிக்கவோ நம்மை மன்னிக்கவோ மறுக்கும்போது என்ன செய்வது? அப்போதும்கூட, இயேவைப் பின்பற்றுவதற்கும் அவரைப் போலவே நடந்துகொள்வதற்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.—1 யோவான் 3:16.
ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுங்கள்
17 மற்றொரு விதத்திலும் நாம் இயேசு கிறிஸ்து நடந்தபடியே நடக்க வேண்டும். கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதே இயேசுவின் வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. சமாரியாவிலுள்ள சீகார் நகரில் வசித்த ஒரு சமாரியப் பெண்ணிடம் பிரசங்கித்த பிறகு, இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) பிதாவுடைய சித்தத்தைச் செய்தது இயேசுவுக்குப் பலத்தையும் ஊக்கத்தையும் தந்தது; போஜனத்தைப் போல போஷாக்கையும், திருப்தியையும், புத்துணர்ச்சியையும் அளித்தது. இயேசுவைப் பின்பற்றி கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நாம் குறியாக இருந்தோமானால், மிக அர்த்தமுள்ள, திருப்தியான வாழ்க்கை நமக்குக் கிடைக்காமல் போய்விடுமா என்ன?
18 பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை முழுநேர ஊழியம் செய்யும்படி ஊக்கப்படுத்தும்போது அவர்கள் மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளும் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். ஒரு தந்தை, பயனியர் சேவையை இலக்காக வைக்கும்படி இரட்டைப் பிள்ளைகளான தன் மகன்களைச் சிறுபிராயத்திலிருந்தே ஊக்கப்படுத்தினார். அதன்படியே, அந்த இரட்டையர் தங்கள் படிப்பை முடித்தபின் பயனியர்களாக ஆனார்கள். இதனால் பூரித்துப்போன அந்தத் தந்தை இவ்வாறு எழுதுகிறார்: “எங்களுடைய மகன்கள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை. அதனால், ‘பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் சொத்து’ என எங்களால் நன்றியுணர்வோடு சொல்ல முடியும்.” (சங்கீதம் 127:3, NW) அப்படியானால், முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவது பிள்ளைகளுக்கு எப்படி நன்மை அளிக்கிறது? ஐந்து பிள்ளைகளை உடைய ஒரு தாய் இவ்வாறு சொல்கிறார்: “பயனியர் சேவை, யெகோவாவோடு என் பிள்ளைகள் அதிக நெருக்கமான ஒரு பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவியிருக்கிறது, அவர்களுடைய படிப்புப் பழக்கத்தை மேம்படுத்தியிருக்கிறது, நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவது எப்படியென்று அவர்களுக்குக் கற்பித்திருக்கிறது, தங்கள் வாழ்க்கையில் ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கும் அது கற்பித்திருக்கிறது. அவர்கள் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தபோதிலும், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதையை நினைத்து அவர்களில் ஒருவர்கூட வருத்தப்படவில்லை.”
19 இளைஞர்களே, உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன? ஏதோவொரு தொழில்துறையில் சிறந்து விளங்க முயற்சிக்கிறீர்களா? அல்லது முழுநேர ஊழியத்தை உங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்வதற்குத் தேவையான படிகளை எடுத்து வருகிறீர்களா? “நீங்கள் ஞானமற்றவர்களைப் போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப் போல் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பவுல் அறிவுறுத்தினார். “நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என்றும் அவர் அறிவுறுத்தினார்.—எபேசியர் 5:15-17.
உண்மைத்தன்மையோடு இருங்கள்
20 இயேசு நடந்தபடியே நடக்க வேண்டுமானால், நாம் அவருடைய உண்மைத்தன்மையைப் பின்பற்றுவது அவசியம். இயேசுவின் உண்மைத்தன்மையைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்.” இயேசு, யெகோவாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் அவருடைய பேரரசுரிமையை உண்மைத்தன்மையோடு ஆதரித்தார். கழுமரத்தில் துடிதுடித்து இறக்கும் தருவாயிலும் அவர் கீழ்ப்பட்டே இருந்தார். இந்தச் “சிந்தையே” நம்மிலும் இருக்க வேண்டும், கடவுளுடைய சித்தத்திற்கு நாம் உண்மைத்தன்மையோடு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்.—பிலிப்பியர் 2:5-8.
21 இயேசு தம் உத்தம அப்போஸ்தலரிடமும் உண்மைத்தன்மை காண்பித்தார். அவர்களுக்குக் குறைபாடுகள் இருந்தபோதிலும், அவர்களை ‘முடிவுபரியந்தம்’ நேசித்தார். (யோவான் 13:1) அதேபோல, நாமும்கூட நம்முடைய சகோதரர்களுடைய குறைபாடுகளைப் பற்றிக் குறைகூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
இயேசு வைத்த மாதிரியை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்
22 அபூரண மனிதர்களான நாம், நம்முடைய பரிபூரண முன்மாதிரியான இயேசுவின் அடிச்சுவடுகளிலேயே நடக்க முடியாது என்பது உண்மைதான். என்றாலும், அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுவதற்கு நாம் உழைக்கலாம். அவ்வாறு பின்பற்றுவதற்கு, அவர் முன்னின்று நடத்துகிற விதத்தைப் புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிவதும், அவருடைய மாதிரியின்படி நடப்பதும் அவசியம்.
23 கிறிஸ்துவைப் பின்பற்றும்போது, ஏராளமான ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கின்றன. நம்முடைய சித்தத்தின்படி அல்லாமல், கடவுளுடைய சித்தத்தின்படி நடப்பதே நம் குறியாக இருப்பதால் நம் வாழ்க்கை அதிக அர்த்தமுள்ளதாயும், அதிக திருப்தியளிப்பதாயும் ஆகிறது. (யோவான் 5:30; 6:38) மனசாட்சி சுத்தமாக ஆகிறது. நாம் நடந்துகொள்கிற விதம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைகிறது. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிற அனைவரும் தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை, அதாவது புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மிடம் வருமாறு இயேசு அழைப்பு விடுத்தார். (மத்தேயு 11:28-30) இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றும்போது நாமும்கூட நம்முடைய தோழமையினால் மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்க முடியும். அப்படியானால், இயேசு நடந்தபடியே நாமும் தொடர்ந்து நடப்போமாக!
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கிறிஸ்து இன்று தம்மைப் பின்பற்றுபவர்களை எவ்வாறு முன்னின்று நடத்துகிறார்?
• கடவுள் கொடுத்துள்ள அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் மூப்பர்கள் கிறிஸ்துவை எவ்வாறு பின்பற்றலாம்?
• மற்றவர்களுடைய குற்றங்குறைகளைக் கையாளுவதில் இயேசுவின் உதாரணத்தை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
• ராஜ்ய அக்கறைகளுக்கு இளைஞர்கள் எவ்வாறு முதலிடம் கொடுக்கலாம்?
[கேள்விகள்]
1, 2. இயேசுவை உற்று நோக்குவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
3, 4. (அ) இயேசு கிறிஸ்து நடந்தபடியே நடப்பதற்கு நம் பங்கில் என்ன செய்வது அவசியம்? (ஆ) என்ன கேள்விகளை நாம் சிந்திக்க வேண்டும்?
5. பரலோகத்திற்குச் செல்லும் முன், இயேசு தம் சீஷர்களிடம் என்ன வாக்குக் கொடுத்தார்?
6, 7. பரிசுத்த ஆவி மூலம் இயேசு எப்படி நம்மை முன்னின்று நடத்துகிறார்?
8, 9. தலைமை வகிப்பிற்காக கிறிஸ்து ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ எவ்வாறு பயன்படுத்துகிறார்?
10. மூப்பர்களைக் குறித்து நமக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டும், ஏன்?
11. கிறிஸ்து இன்று தம்மைப் பின்பற்றுபவர்களை என்னென்ன வழிகளில் முன்னின்று நடத்துகிறார், அவர் நடந்தபடியே நடப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
12. கிறிஸ்துவின் உதாரணத்தில் முக்கியமாய் எந்த அம்சம் சபையிலுள்ள மூப்பர்களுக்கு அக்கறைக்குரியதாய் இருக்கிறது?
13, 14. கடவுளுக்குச் சேவை செய்ய மற்றவர்களை ஊக்கப்படுத்தும் விஷயத்தில் மூப்பர்கள் எவ்வாறு கிறிஸ்துவைப் பின்பற்றலாம்?
15. சீஷர்களின் குற்றங்குறைகளை இயேசு எவ்வாறு கையாண்டார்?
16. சக விசுவாசிகள் ஏதோவொரு விதத்தில் நம் மனதை நோகடித்தாலோ, நம்மைத் தவறாக நடத்தினாலோ, இயேசு நடந்தபடியே நாம் எவ்வாறு நடக்கலாம்?
17. இயேசு தம் வாழ்க்கையில் கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு முதலிடம் கொடுத்தார் என்பதை எது காண்பிக்கிறது?
18. பிள்ளைகளை முழுநேர ஊழியம் செய்வதற்கு ஊக்கப்படுத்தும்போது என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
19. எதிர்காலத்திற்கான என்ன திட்டங்களை இளைஞர்கள் ஞானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?
20, 21. இயேசு எவ்விதத்தில் உண்மைத்தன்மை காண்பித்தார், நாம் எப்படி அவருடைய உண்மைத்தன்மையைப் பின்பற்றலாம்?
22, 23. இயேசு வைத்த மாதிரியை நெருக்கமாகப் பின்பற்றுவதால் வரும் நன்மைகள் யாவை?
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்குக் கீழ்ப்படிய கிறிஸ்தவ மூப்பர்கள் நமக்கு உதவுகிறார்கள்
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
இளைஞர்களே, பலனளிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையை அனுபவிப்பதற்காக என்ன திட்டங்களைப் போடுகிறீர்கள்?