எத்தகைய கல்வி உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக்கும்?
நீர்ச்சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிப்பதுபோல எப்பொழுதாவது பிரச்சினைகளில் சிக்கித் தவித்திருக்கிறீர்களா? அந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கும்போது நீங்கள் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதனால் எவ்வளவு கஷ்டம் உண்டாகும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! யாருமே எல்லா பிரச்சினைகளையும் வெற்றிகரமாய் தீர்க்கும் திறமையுடன் பிறப்பதுமில்லை, எல்லா சமயத்திலும் சரியான தீர்மானத்தை எடுப்பதுமில்லை. இங்குதான் கல்வி நமக்கு தேவைப்படுகிறது. வாழ்க்கை பிரச்சினைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க உதவும் கல்வி எங்கே கிடைக்கும்?
இளைஞராக இருந்தாலும் முதியோராக இருந்தாலும், கல்விக்கு அநேகர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். “கல்லூரி படிப்பு இல்லையென்றால், உங்களுக்கு ஒரு [நல்ல] வேலை கிடைக்கவே கிடைக்காதென நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றும்கூட நிபுணர்கள் சிலர் சொல்கிறார்கள். என்றாலும், வெறுமனே பெரிய படிப்பால் பூர்த்திச் செய்ய முடியாத பல தேவைகள் மனிதருக்கு இருக்கின்றன. உதாரணமாக, ஓர் அன்பான பெற்றோராவதற்கோ கணவராவதற்கோ மனைவியாவதற்கோ அல்லது நண்பராவதற்கோ உயர்ந்த படிப்பு உங்களுக்கு உதவுகிறதா? சொல்லப்போனால், மக்களால் பாராட்டப்படும் அறிவுஜீவிகளிடமே ஒருவேளை மோசமான குணங்கள் இருக்கலாம், தாம்பத்திய வாழ்க்கையில் அவர்கள் தோல்வியுறலாம், அல்லது தற்கொலைகூட செய்துகொள்ளலாம்.
வழிநடத்துதலுக்காக சிலர் மதத்தை நம்பியிருக்கிறார்கள்—கல்வி புகட்டும் ஒன்றாக அதைக் கருதுகிறார்கள். ஆனால் கடைசியில் ஏமாற்றத்தைத்தான் அடைகிறார்கள், ஏனென்றால் வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொள்ள தேவையான நடைமுறை உதவி அங்கு கிடைப்பதில்லை. உதாரணமாக, மெக்சிகோவைச் சேர்ந்த ஏமிலியாa சொல்வதை கேளுங்கள்: “15 வருஷத்திற்கு முன்பு, இனியும் என் கணவரோடு சேர்ந்து வாழவே முடியாதென நினைத்தேன். எப்போது பார்த்தாலும் நாங்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம். அவருடைய குடிப் பழக்கத்தை என்னால் நிறுத்தவே முடியவில்லை. அதனால் அடிக்கடி என்னுடைய பிள்ளைகளைத் தனியாக விட்டுவிட்டு, என்னுடைய வீட்டுக்காரரைத் தேடி அலைய வேண்டியிருந்தது. உணர்ச்சி ரீதியில் அப்படியே சோர்ந்து போயிருந்தேன். ஏதாவது தீர்வு கிடைக்காதா என்று நினைத்து, பல தடவை சர்ச்சுக்குப் போனேன். அங்கு எப்போதாவது பைபிள் பயன்படுத்தப்பட்டாலும், என்னுடைய பிரச்சினைக்கு நேரடியான பதிலை ஒருநாளும் கேட்டதில்லை; யாரும் வந்து எனக்கு எதுவும் சொன்னதுமில்லை. சும்மா சர்ச்சில் உட்கார்ந்து கொண்டிருந்ததும் சொன்ன ஜெபத்தையே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்ததும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.” நல்வழி காட்டவேண்டிய ஆன்மீக தலைவர்களே மோசமான வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கும்போது மற்றவர்கள் மனக்கசப்படைந்து விடலாம். அதனால், அநேகர் மதத்தில் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள், வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் பயிற்சியோ கல்வியோ வழங்கும் ஒன்றாக அதைக் கருதுவதில்லை.
ஆகவே, நீங்கள் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம்: ‘வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், எப்படிப்பட்ட கல்வியைக் கற்க வேண்டும்?’ முக்கியமான இந்தக் கேள்விக்கு மெய் கிறிஸ்தவம் பதில் அளிக்கிறதா? இது அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.