மிகச் சிறந்த கல்வியிலிருந்து பயன் அடையுங்கள்!
மனிதர் உட்பட அனைத்தையும் படைத்தவர் யெகோவா தேவன் என பைபிள் காட்டுகிறது. (ஆதியாகமம் 1:27; வெளிப்படுத்துதல் 4:11) அவரே மாபெரும் ஆசிரியர், முதல் மானிட ஜோடியான ஆதாம் ஏவாளுக்கு அவர் கல்வி புகட்டினார். அதோடு, எழில்மிகு தோட்டமான ஏதேனில் வாழ அவர்களை ஆயத்தப்படுத்தினார். அவர்களுக்குத் தொடர்ந்து கல்வி புகட்டி, நித்திய காலமாக அவர்களை அன்புடன் கவனித்துவர வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. (ஆதியாகமம் 1:28, 29; 2:15-17; ஏசாயா 30:20, 21) அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட எதிர்காலம் காத்திருந்தது!
ஆனால், அந்த முதல் ஜோடியோ எல்லாவற்றையும் அடியோடு தூக்கியெறிந்துவிட்டார்கள். கீழ்ப்படியாத இத்தகைய செயல் முழு மனிதகுலமும் ஒழுக்க ரீதியிலும் உடல் ரீதியிலும் சீர்குலைய அடிகோலியது. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 5:12) மனிதகுலம் தோன்றி சில தலைமுறையினருக்குப் பிற்பாடு வாழ்ந்தவர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கண்டார்.’—ஆதியாகமம் 6:5.
மனுஷனுடைய சிந்தனைகள் எப்பொழுதும் மோசமானவை என்று யெகோவா சொல்லி கிட்டத்தட்ட 4,500 வருடங்கள் உருண்டோடிவிட்டன; இன்றோ மனுஷனுடைய நிலைமை என்றுமில்லாத அளவுக்குப் படு மோசமாக இருக்கிறது. அநேகர் துணிந்து பொய் சொல்கிறார்கள், திருடுகிறார்கள், பிறரை தாக்குகிறார்கள். நாளுக்கு நாள் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன, அதேசமயத்தில் சக மனிதர் மீதுள்ள அக்கறையோ குறைந்துகொண்டே போகிறது. நண்பர்கள் மத்தியில், ஏன் குடும்ப வட்டாரத்திற்குள்ளேயே உறவுகள் முறிவடைந்து வருகின்றன, அல்லவா? என்றாலும், இதற்கெல்லாம் கடவுள் காரணரும் அல்ல, இன்றைய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படாதவரும் அல்ல. மனிதருடைய நலனில் எப்பொழுதும் யெகோவா அக்கறை காண்பித்து வந்திருக்கிறார், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ அவரை வழிகாட்டியாக நாடி வருகிறவர்களுக்கு கல்வி புகட்ட தயாராகவும் இருக்கிறார். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் தம்முடைய மகன் இயேசு கிறிஸ்துவை இந்தப் பூமிக்கு அனுப்பினார்; இதன் மூலம் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு கல்வி புகட்டுவதில் தமக்கு ஆர்வம் இருப்பதை மெய்ப்பித்துக் காட்டினார். இயேசு தலைசிறந்த கல்விக்கு மாதிரியை வைத்துச் சென்றார், ஏனென்றால் யுகா யுகங்களாக மாபெரும் ஆசிரியரால் போதிக்கப்பட்டிருந்தார்.
மெய் கிறிஸ்தவம்—ஒரு கல்வி
இயேசு கிறிஸ்து மெய் கிறிஸ்தவத்தை ஸ்தாபித்து வைத்தார், அது அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை. கிறிஸ்தவத்தில், எல்லாருடைய சிந்தனைகளும் செயல்களும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக இருக்க வேண்டும். எதற்காக? கடவுளுடைய பெயருக்கு மகிமையையும் கனத்தையும் சேர்ப்பதற்காக. (மத்தேயு 22:37-39; எபிரெயர் 10:7) இந்த வாழ்க்கை முறையைப் பற்றிய இயேசுவின் போதனைக்கு வழிகாட்டி அவருடைய பிதாவான யெகோவாவே. கடவுளுடைய ஆதரவு இயேசுவுக்கு இருந்ததைக் குறித்து யோவான் 8:29-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை.’ ஆம், இயேசுவின் ஊழியக் காலம் முழுவதும் அவருடைய பிதாவின் ஆதரவும் வழிநடத்துதலும் அவருக்கு இருந்தது. இயேசுவின் ஆரம்பகால சீஷர்களுக்கு வாழ்க்கையின் சவால்களை எதிர்ப்பட எல்லாவித வழிநடத்துதலும் இருந்தது. யெகோவா தமது மகன் மூலம் அவர்களுக்குக் கல்வி புகட்டினார். இயேசுவின் போதனைகளையும் முன்மாதிரியையும் அவர்கள் பின்பற்றியதால் சிறந்த மனிதர்களாக விளங்கினார்கள். இன்று இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுடைய விஷயத்திலும் இதுவே உண்மை.—பக்கம் 6-ல், “இயேசுவும் அவரது போதனைகளும் செலுத்திய செல்வாக்கு” என்ற பெட்டியைக் காண்க.
மெய்க் கிறிஸ்தவத்தின் முக்கியமான ஓர் அம்சம் கல்வியாகும்; இது மக்களுடைய மனதிலும் இருதயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களுடைய குணத்தையே மாற்றுகிறது. (எபேசியர் 4:23, 24) உதாரணமாக, மணத்துணைக்கு துரோகம் செய்யாமல் உண்மையுடன் இருப்பதைப் பற்றி இயேசு கற்பித்ததைக் கவனியுங்கள்: “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.” (மத்தேயு 5:27, 28) இதன் மூலம் இயேசு தமது சீஷர்களுக்கு என்ன கற்பித்தார்? இருதயத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; மோசமான சிந்தனைகளும் ஆசைகளும்—அவற்றை இன்னும் செயலில் காண்பிக்காவிட்டாலும்கூட—படுபயங்கரமான விளைவுகளை உண்டுபண்ணலாம் என்பதைக் கற்பித்தார். மோசமான சிந்தனைகள் கடவுளையும் மற்றவர்களையும் புண்படுத்தும் செயல்களுக்கு வழிநடத்தும் என்பது உண்மையல்லவா?
ஆகவே, பைபிள் பின்வரும் அறிவுரையை அளிக்கிறது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” ‘கல்வியின் வாயிலாக மனதைப் புதிதாக்குவது உண்மையிலேயே சாத்தியமா?’ என நீங்கள் ஒருவேளை கேட்கலாம். நம் மனதை கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள நியமங்களாலும் அறிவுரைகளாலும் நிரப்பி, அதை வித்தியாசமான பாதையில் செல்ல உந்துவிப்பதன் மூலம் அதைப் புதிதாக்கலாம். கடவுள் தமது வார்த்தையின் வாயிலாக தரும் கல்வியை ஏற்றுக்கொள்வதன் மூலம் இதை செய்யலாம்.
மாற்றம் செய்வதற்கு உந்துவிக்கப்படுதல்
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாய் இருக்கிறது.’ (எபிரெயர் 4:12) தனிப்பட்ட நபர்கள்மீது அது இன்றும் வலிமையோடு செல்வாக்கு செலுத்தி வருகிறது. இவ்வாறாக, அது எக்காலத்திற்கும் பொருந்துகிறது என்பதை நிரூபிக்கிறது. ஒருவர் தன்னுடைய பாதையை மாற்றிக்கொண்டு மெய் கிறிஸ்தவத்தை தழுவுவதற்கும், இவ்வாறு ஒரு மேம்பட்ட ஆளாவதற்கும் அது அவரை உந்துவிக்கிறது. பைபிள் கல்வியின் மதிப்பை பின்வரும் உதாரணங்கள் காட்டுகின்றன.
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஏமிலியா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “என்னுடைய வீட்டுச் சூழ்நிலைமையை முன்னேற்றுவிப்பதற்கு என்னுடைய சொந்த முயற்சி மட்டுமே போதவில்லை. யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தபோது, ஒரு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அதோடு என்னுடைய மனப்பான்மையை மாற்றிக்கொள்ளவும் ஆரம்பித்தேன். அதிக பொறுமையாக இருப்பதற்கும் கோபாவேசப்படாமல் இருப்பதற்கும் கற்றுக்கொண்டேன். நாளாக நாளாக, என்னுடைய கணவரும் பைபிள் படிப்பில் என்னோடு கலந்துகொண்டார். குடிப்பழக்கத்தை நிறுத்துவது அவருக்கு சுலபமாக இருக்கவில்லை, ஆனால் கடைசியில் அவரால் அதைக் கைவிட முடிந்தது. இது எங்களுடைய மண வாழ்க்கைக்குப் புதிய ஆரம்பத்தை அளித்தது. இப்பொழுது நாங்கள் சந்தோஷமுள்ள கிறிஸ்தவர்களாக இருக்கிறோம், பைபிளிலுள்ள சிறந்த நியமங்களை எங்களுடைய பிள்ளைகளின் மனதிலும் பதிய வைத்து வருகிறோம்.”—உபாகமம் 6:7.
மெய்க் கிறிஸ்தவம் அளிக்கும் கல்வி கெட்ட பழக்கங்களிலிருந்தும் ஒழுக்கயீனமான வாழ்க்கை பாணியிலிருந்தும் வெளிவர ஒருவருக்கு உதவுகிறது. இது உண்மை என்பதை மான்வெல்a கண்டார். அவர் 13 வயதில், வீட்டைவிட்டு ஓடிப்போனார், மாரிஜூவானா என்ற போதைப்பொருளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். காலப்போக்கில், ஹெராயினையும் பயன்படுத்தத் தொடங்கினார். தனக்கு பணமும் உறைவிடமும் கொடுத்த ஆண்களோடும் பெண்களோடும் பாலுறவு கொண்டார். சில சமயங்களில், ஆட்களை மிரட்டி அவர்கள் வைத்திருப்பதைப் பறித்துக்கொள்வதன் மூலமும் மான்வெல் தன் வயிற்றைக் கழுவினார். ஏறக்குறைய எப்பொழுதும் போதையிலேயே மிதந்தார். அவருடைய மூர்க்கத்தனமான நடத்தையால் அடிக்கடி சிறைக்குச் சென்றார். ஒருசமயம் நான்கு ஆண்டுகளாக சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தார்; அப்பொழுது, ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதில் ஈடுபட ஆரம்பித்தார். அவருக்குக் கல்யாணம் ஆனபிறகும், அவருடைய வாழ்க்கைப் போக்கினால் அநேக பின்விளைவுகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அவர் சொல்கிறார்: “கடைசியில், முன்பு கோழிக் கூண்டாக இருந்த இடத்தில் நாங்கள் வாழ வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. என்னுடைய மனைவி செங்கல் வைத்து உணவு சமைத்தது இன்றும் என் நினைவுக்கு வருகிறது. எங்களுடைய சூழ்நிலைகள் அந்தளவுக்கு மோசமாக இருந்ததால், என்னைவிட்டு ஓடிப்போகும்படி என்னுடைய சொந்தக்காரர்களே என் மனைவியைத் தூண்டிவிட்டார்கள்.”
எது அவருடைய வாழ்க்கையை மாற்றியது? மான்வெல் பதிலளிக்கிறார்: “எனக்குத் தெரிந்தவர் ஒருவர் பைபிளைப் பற்றி பேசுவதற்காக என் வீட்டுக்கு வந்தார். மனிதர்மீது கடவுளுக்கு அக்கறையே இல்லை என்பதை அவருக்கு காட்டுவதற்காக எங்கள் வீட்டுக்கு அவர் வந்துபோக அனுமதித்தேன். அதற்கு நானே உயிருள்ள அத்தாட்சி என நினைத்துக்கொண்டேன். அந்தச் சாட்சி பொறுமையோடும் மரியாதையோடும் நடந்துகொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆகையால், ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கு வருவதாக ஒத்துக்கொண்டேன். என்னுடைய பின்னணியைத் தெரிந்த சிலர் அங்கே இருந்தபோதிலும், அவர்கள் என்னை சிநேகப்பான்மையுடன் வரவேற்றார்கள். அவர்களில் ஒருவராக என்னை உணரச் செய்தார்கள். இது எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஒரு நல்ல வேலை செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு பைபிள் படிப்பு ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குப்பின், பிரசங்க வேலையில் கலந்துகொள்வதற்கு தகுதிபெற்றேன். இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக முழுக்காட்டுதல் பெற்றேன்.”
மான்வெல்லுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் மெய் கிறிஸ்தவம் என்ன செய்திருக்கிறது? “பைபிள் கல்வி கிடைக்காதிருந்தால் பல வருஷங்களுக்கு முன்பே நான் செத்திருப்பேன். இயேசு கற்பித்த வாழ்க்கை முறை என்னுடைய குடும்பத்தை என்னிடம் திருப்பித் தந்திருக்கிறது. நான் வாலிபனாக இருந்த சமயத்தில் அனுபவித்தவற்றையெல்லாம் என்னுடைய இரண்டு பிள்ளைகளும் அனுபவிக்க வேண்டியதில்லை. இப்பொழுது என்னுடைய மனைவியுடன் ஒரு நல்ல உறவு வைத்திருப்பதைக் குறித்து ரொம்ப பெருமைப்படுகிறேன், அதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன். என்னுடைய முன்னாள் நண்பர்களில் சிலர் என்னை பாராட்டியிருக்கிறார்கள், நான் இப்போது செல்லும் பாதையே மிகச் சிறந்த பாதை என நினைப்பதாகச் சொன்னார்கள்.”
கிறிஸ்தவ வாழ்க்கை முறையில், ஒழுக்க சுத்தத்தோடு உடல் சுத்தமும் அவசியம். தென் ஆப்பிரிக்காவில் வறுமையால் பீடிக்கப்பட்ட ஒரு பகுதியில் வசிக்கும் ஜான் என்பவர் இதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுடைய மகள் சிலசமயங்களில் ஒரு வாரம் வரையாகக்கூட குளிக்க மாட்டாள், அதைப் பற்றி நாங்களும் ஒருநாளும் கவலைப்பட்டதே இல்லை.” அவர்களுடைய வீடு மிக மோசமாக இருந்தது என்பதை அவருடைய மனைவி ஒத்துக்கொள்கிறாள். ஆனால் கிறிஸ்தவ கல்வியால், நிலைமைகள் முன்னேறின. கார் திருடும் கும்பலுடன் கூட்டுறவு வைத்திருந்ததை ஜான் நிறுத்திவிட்டு, தன்னுடைய குடும்பத்திற்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். “கிறிஸ்தவர்களாக இருப்பதால், நம்முடைய உடலையும் உடைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டோம். 1 பேதுரு 1:16-ல் உள்ள வார்த்தைகள் எனக்குப் பிடித்தமானவை, யெகோவா தேவன் பரிசுத்தராக இருப்பதால் நாமும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென அது நமக்கு புத்திமதி கூறுகிறது. எங்களுடைய எளிமையான வீட்டை நன்றாக வைத்துக்கொள்ளவும் நாங்கள் முயற்சி செய்கிறோம்.”
மிகச் சிறந்த கல்வியைப் பெறலாம்
மேலே குறிப்பிடப்பட்ட அனுபவங்களெல்லாம் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடந்த சம்பவங்கள் அல்ல. பைபிள் கல்வியின் விளைவாக, ஆயிரக்கணக்கான மக்கள் மேம்பட்ட வாழ்க்கை வாழ கற்றிருக்கிறார்கள். நேர்மையானவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய முதலாளிகள் அவர்களை உயர்வாக மதிக்கிறார்கள். நல்ல அயலாராகவும் நண்பர்களாகவும் மாறியிருக்கிறார்கள், சக மனிதருடைய நலனில் அக்கறை காட்டுகிறார்கள். கெட்ட பழக்கங்களையும் ஆசைகளையும் தவிர்ப்பதற்கு திடத்தீர்மானமாக இருக்கிறார்கள், அதனால் உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தங்களுடைய ஆரோக்கியத்தை நன்றாக வைத்துக்கொள்கிறார்கள். கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டு தங்களுடைய பொருட்செல்வங்களை வீணாக்குவதற்குப் பதிலாக, தங்களுடைய சொந்த நலனுக்காகவும் குடும்பத்தின் நலனுக்காகவும் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். (1 கொரிந்தியர் 6:9-11; கொலோசெயர் 3:18-22, 24) சந்தேகமின்றி, மெய் கிறிஸ்தவத்தின்படி வாழ்வதே மிகச் சிறந்த வாழ்க்கை முறை, வேறெந்த கல்வியிலும் அதுவே மிகச் சிறந்த கல்வி என்பதை பைபிள் நியமங்களின்படி வாழ்வதால் வரும் பலன்கள் காட்டுகின்றன. ஒருவர் கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாக வாழ்வது சம்பந்தமாக, பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்.”—சங்கீதம் 1:3, [திருப்பாடல்கள்] பொது மொழிபெயர்ப்பு.
சர்வ வல்லமையுள்ள கடவுளான யெகோவா நமக்குக் கல்வி புகட்டுவதற்கு விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதை அறிவது சந்தோஷத்தைத் தருகிறது. அவர் தம்மைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய [யெகோவா] நானே.’ (ஏசாயா 48:17) ஆம், யெகோவா தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரி மற்றும் போதனைகள் வாயிலாக நமக்கு வழி காட்டியிருக்கிறார். அவர் பூமியில் வாழ்ந்தபோது அவரைப் பற்றி அறிந்திருந்த அநேகருடைய வாழ்க்கையை அவருடைய போதனைகள் மாற்றின; இன்று அவருடைய போதனைகளின்படி வாழ்கிற அநேகருடைய விஷயத்திலும் இதுவே உண்மை. இந்தப் போதனைகளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்வதற்கு ஏன் நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது? நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் இத்தகைய மதிப்புமிக்க கல்வியை உங்களுக்கு புகட்ட ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
இயேசுவும் அவரது போதனைகளும் செலுத்திய செல்வாக்கு
முதன்மை வரி வசூலிப்பவர் என்ற தனது பதவியைப் பயன்படுத்தி, பாமர ஜனங்களிடமிருந்து பணம் பறிப்பதன் மூலம் சகேயு பணக்காரராக ஆகியிருந்தார். ஆனால் இயேசுவின் போதனைகளைப் பின்பற்றி, தனது வாழ்க்கை முறையை அவர் மாற்றிக்கொண்டார்.—லூக்கா 19:1-10.
தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டு, கிறிஸ்தவத்திற்கு மதம் மாறி, அப்போஸ்தலன் பவுலாக ஆனார்.—அப்போஸ்தலர் 22:6-21; பிலிப்பியர் 3:4-9.
கொரிந்து பட்டணத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் ‘வேசி மார்க்கத்தாராகவும், விக்கிரகாராதனைக்காரராகவும், விபசாரக்காரராகவும், ஓரினப்புணர்ச்சிக்காரராகவும், திருடராகவும், பொருளாசைக்காரராகவும், குடிவெறியராகவும், உதாசினராகவும், கொள்ளைக்காரராகவும் இருந்தார்கள்’. என்றாலும், மெய் கிறிஸ்தவத்தைப் பற்றி கற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் ‘கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் கழுவப்பட்டார்கள், பரிசுத்தமாக்கப்பட்டார்கள், நீதிமான்களாக்கப்பட்டார்கள்.’—1 கொரிந்தியர் 6:9-11.
[பக்கம் 7-ன் படம்]
வாழ்க்கையில் வெற்றி பெற பைபிள் உங்களுக்கு வழி காட்டுகிறது