“என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் இனிய நாள்”
“மனச்சோர்வு இளைஞர்களை பாதிக்கக்கூடிய மிகப் பெரிய மனநலப் பிரச்சினை, அதுவே மிக அதிகமாக அறிக்கை செய்யப்படுகிற பிரச்சினை” என்று ஆஸ்திரேலியாவில் உள்ள பியான்டுபுளு என்ற அரசு உதவிபெற்ற தொண்டு நிறுவனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 1,00,000 இளைஞர்கள் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவ இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. என்றபோதிலும், யெகோவாமீது அவர்கள் வைக்கும் திடநம்பிக்கை, சோர்வளிக்கும் எண்ணங்களை சமாளிக்கவும் அதே சமயத்தில் இளமைப் பிராயத்தை நன்கு பிரயோஜனப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. இதனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து நற்பெயரைச் சம்பாதிக்கவும் முடிகிறது. எவ்வாறு?
18 வயது கிளார் என்பவளின் அனுபவத்தை கவனியுங்கள். அவளும் அவளுடைய அம்மாவும், மெல்பர்னில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்களுக்கு சென்றுகொண்டிருந்தார்கள். கிளாருடைய அப்பா அவர்களை அம்போவென்று விட்டுவிட்டு சென்றபோது கிளார் மனச்சோர்வடைந்தாள். ஆனால், பரலோக தகப்பனான யெகோவாமீது அவளுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது. லிடியா என்ற குடும்ப டாக்டர், உடம்பு சுகமில்லாதிருந்த கிளாரின் அம்மாவைப் பார்த்துவிட்டுப் போவதற்காக அவளுடைய வீட்டிற்கு ஒருநாள் சென்றார். அதன் பிறகு, ஷாப்பிங் சென்டருக்கு காரில் தன்னோடு வருமாறு கிளாரை அன்பாக அழைத்தார். போகும் வழியில், கிளாருக்கு பாய்ஃபிரெண்ட் யாராவது உண்டா என்று கேட்டார். அதற்கு கிளார், தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதால் அனாவசியமாக பசங்களோடு வெளியே சுற்றுவதில்லை என்று விளக்கினாள். அதைக் கேட்டு அந்த டாக்டருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பிறகு கிளார், தன்னுடைய வாழ்க்கையில் ஞானமான தீர்மானங்களை எடுக்க பைபிள் எப்படி உதவியது என்றும் விளக்கினாள். முடிவில், தனக்கு மிகவும் உதவியாக இருந்த புத்தகத்தைக் கொண்டுவந்து தருவதாக சொன்னாள். அது இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற பைபிள் சார்ந்த புத்தகம்.
புத்தகம் கிடைத்த மூன்று நாட்களுக்கு பிறகு, கிளாரின் அம்மாவுக்கு லிடியா ஃபோன் செய்து, அந்தப் புத்தகத்தை ரசித்துப் படித்ததாக சொன்னார். அவருடன் வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்க இன்னும் ஆறு புத்தகங்கள் கிடைக்குமா என்று கேட்டார். கிளார், புத்தகங்களைக் கொடுக்க சென்றபோது, அவளுடைய விசுவாசத்தைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருப்பதாக டாக்டர் விளக்கினார். கிளார் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி விளக்கினாள். அந்த டாக்டர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.
பல மாதங்களாக, டாக்டரின் மதிய உணவு இடைவேளையின் போது கிளார் பைபிள் படிப்பு நடத்திவந்தாள். பிறகு, இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வைப் பற்றி ஒரு கருத்தரங்கில் பேச முடியுமா என்று கிளாரிடம் அந்த டாக்டர் கேட்டார். முதலில் கிளார் தயங்கினாலும், பிறகு ஒத்துக்கொண்டாள். அந்த கருத்தரங்கிற்கு 60-க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். நான்கு மனநல நிபுணர்கள் முதலில் பேசினார்கள். பிறகு இளம் கிளார் பேச வேண்டியிருந்தது. இளைஞர்கள் கடவுளோடு ஒரு நல்ல உறவை வளர்க்கவேண்டியது ஏன் மிக முக்கியம் என்பதை அவள் சிறப்பித்துக் காட்டினாள். யெகோவா தேவனுக்கு இளைஞர்கள்மீது ஆழ்ந்த அக்கறை இருக்கிறது என்றும் அவரிடம் வருகிறவர்களுக்கு ஆதரவையும் ஆறுதலையும் தருகிறார் என்றும் விளக்கினாள். அதோடு யெகோவா தேவன் வெகு சீக்கிரத்தில் எல்லா வகையான உடல்நல மற்றும் மனநலப் பிரச்சினைகளையும் நீக்கிவிடப்போகிறார் என்று பலமான நம்பிக்கையோடு சொன்னாள். (ஏசாயா 33:24) அவள் சாட்சி கொடுத்ததன் விளைவு?
கிளார் இவ்வாறு சொன்னாள்: “நிகழ்ச்சி முடிந்த பிறகு அநேகர் என்னிடம் வந்து, ஓர் இளம் பெண் கடவுளைப் பற்றி பேசுவதை கேட்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னார்கள். இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தின் பிரதிகளை மொத்தம் 23 பேருக்கு அளித்தேன். வந்திருந்தவர்களில் மூன்று இளம் பெண்கள் இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்காக அவர்களுடைய ஃபோன் நம்பரை எனக்குத் தந்தார்கள். அவர்களில் ஒரு பெண் இப்பொழுது பைபிளைப் படித்து வருகிறாள். கருத்தரங்கில் கலந்துகொண்ட அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் இனிய நாள்.”