உங்கள் பிள்ளை நன்கு பதிலளிக்க...
பெற்றோர்களே: பிள்ளைகளுடன் சேர்ந்து ஒத்திகை பார்ப்பது சம்பந்தமாக ஜனவரி 15, 2010 இதழில் பக்கங்கள் 16-20-ல் குறிப்பிட்டிருந்தோம். பிள்ளைகள் பள்ளியில் எதிர்ப்படும் சவால்களைச் சந்திப்பதற்கு உதவும் சில ஆலோசனைகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் குடும்ப வழிபாட்டின்போது இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஒத்திகை பார்க்கலாம்.
யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் நிறையச் சவால்களைச் சந்திக்கிறார்கள். கொடி வணக்கம், பிறந்த நாள் கொண்டாட்டம், விடுமுறை நாட்களுக்கான நிகழ்ச்சிகள்/புராஜெக்ட்கள் போன்றவற்றில் ஏன் ஈடுபடுவதில்லை என அவர்களுடைய சக மாணவர்கள் கேட்கலாம். உங்கள் மகனோ மகளோ இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்ப்பட்டால் எப்படிப் பதிலளிப்பார்கள்?
கிறிஸ்தவப் பிள்ளைகள் சிலர், “நான் இதைச் செய்ய மாட்டேன். இது என் மதத்திற்கு விரோதமானது” என்று வெறுமனே பதிலளிக்கிறார்கள். இந்த விஷயத்தில் உறுதியாக இருப்பதற்காகப் பிள்ளைகளைப் பாராட்ட வேண்டும். இப்படிப் பதிலளிக்கும்போது மற்றவர்கள் கூடுதலாக வேறொன்றும் கேட்க மாட்டார்கள். ஆனால், ‘நம் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராயிருக்கும்படி’ பைபிள் அறிவுரை கூறுகிறது. (1 பே. 3:15) அப்படியானால், “நான் இதைச் செய்ய மாட்டேன்” என்று சொன்னால் மட்டும் போதாது. இந்த விஷயத்தில் மற்றவர்கள் நம்மோடு ஒத்துப்போகாவிட்டாலும், நாம் ஏன் உறுதியாயிருக்கிறோம் என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள சிலர் விரும்புவார்கள்.
சாட்சிகளாக இருக்கும் பிள்ளைகள் பலர், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் போன்ற பிரசுரங்களைப் பயன்படுத்தி சக மாணவர்களுக்கு பைபிள் சம்பவங்களை விளக்கியிருக்கிறார்கள். சாட்சிகள் சில காரியங்களை ஏன் செய்கிறார்கள் அல்லது ஏன் செய்வதில்லை என்பதை விளக்க இப்பிரசுரங்கள் உதவுகின்றன. சில மாணவர்கள் பைபிள் கதைகளை ஆர்வத்தோடு கேட்கிறார்கள்; இதனால் நிறைய பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சிலர் முழு கதையையும் கேட்க விரும்பமாட்டார்கள். முழுவதுமாக விளக்கினால் தவிர சில கதைகளைப் புரிந்துகொள்வது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கலாம். தோழி ஒருத்தி பிறந்த நாள் விழாவிற்கு அழைத்தபோது மின்ஹி என்ற 11 வயது சிறுமி இவ்வாறு பதிலளித்தாள்: “பிறந்த நாளை கொண்டாடும்படி பைபிள் நமக்குச் சொல்வதில்லை; ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது யோவான் ஸ்நானகர் என்பவர் கொல்லப்பட்டார் என்று பைபிள் சொல்கிறது.” ஆனால், தான் சொன்னதை தோழி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று மின்ஹி சொல்கிறாள்.
சில நேரங்களில் நம் பிரசுரங்களிலிருந்து ஒரு படத்தையோ ஒரு பதிவையோ காட்டலாம். ஆனால், மத சம்பந்தமான புத்தகங்களை சக மாணவர்களிடம் கொடுப்பதை பள்ளி தடை செய்தால் என்ன செய்வது? எந்தப் பிரசுரங்களும் இல்லாமலே உங்கள் பிள்ளைகளால் நன்றாக விளக்க முடியுமா? இந்த விஷயத்தில் அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?
ஒத்திகை பாருங்கள்
பெற்றோர் சக மாணவர்களைப் போல நடித்து, பிள்ளைகளோடு வீட்டில் ஒத்திகை பார்ப்பது நல்லது; பிள்ளைகள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து சொல்ல முயலும்போது அவர்களைப் பாராட்டுங்கள்; இன்னும் நன்றாக எப்படி விளக்கலாம்... அப்படி விளக்குவது ஏன் முக்கியம்... என்றெல்லாம் சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, சக மாணவர்களுக்குப் புரிகிற வார்த்தைகளைப் பயன்படுத்தச் சொல்லுங்கள். ஜோசுவா என்ற ஒன்பது வயது பையன் தன் சக மாணவர்களுக்கு “மனசாட்சி,” “உண்மைத்தன்மை” போன்ற வார்த்தைகள் புரிவதில்லை என்று சொல்கிறான். அதனால், அவர்களுக்குப் புரியும் வார்த்தைகளை அவன் பயன்படுத்த வேண்டியிருந்தது.—1 கொ. 14:9.
சில மாணவர்கள் கேள்வி கேட்டாலும், அவர்களுக்கு நீண்ட விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தால் கேட்க வேண்டுமென்ற ஆர்வமே போய்விடும். உரையாடல் முறையில் பேசி, காரணங்களை எடுத்துக் காட்டும்போது அவர்களுடைய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். “என்கூடப் படிக்கிறவர்களுக்கு விளக்கம் கொடுத்தால் பிடிக்காது, உரையாடினால்தான் பிடிக்கும்” என்று சொல்கிறாள் பத்து வயது சிறுமி ஹான்யூல். உரையாடல் முறையில் பேசுவதற்கு, கேள்விகளைக் கேளுங்கள் பிறகு அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
சக மாணவர்களுக்குக் காரணங்களை விளக்கிச் சொல்ல கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடல்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளுக்கு உதவும். இந்த உரையாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை; ஏனென்றால், எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு பதில்கள் சொல்ல வேண்டியிருக்கும். எனவே, என்ன சொல்ல வேண்டுமென்பதை யோசித்து, சூழ்நிலைக்கும் மாணவர்களுக்கும் தகுந்தாற்போல் உங்கள் சொந்த வார்த்தைகளில் பதிலளியுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் உங்களுக்கு இருந்தால் அவர்களோடு இந்த உரையாடல்களை ஒத்திகை பார்க்கலாம், அல்லவா?
பிள்ளைகளைப் பயிற்றுவிக்க நேரமும் முயற்சியும் தேவை. கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பைபிள் நியமங்களைக் கருத்தாய் போதிக்கவும், அதன்படி பிள்ளைகள் நடப்பதைப் பார்க்கவுமே விரும்புகிறார்கள்.—உபா. 6:7; 2 தீ. 3:14.
அடுத்த குடும்ப வழிபாட்டின்போது, இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரையாடல்களை உங்கள் பிள்ளைகளோடு ஒத்திகை பாருங்கள். இது எந்தளவு பிரயோஜனமுள்ளது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள். இதை மனப்பாடம் செய்வது உங்கள் இலக்கு அல்ல என்பதை மனதில் வையுங்கள். ஒரே விஷயத்தைப் பற்றி வித்தியாசமான கேள்விகள் கேட்டு, அதற்குப் பிள்ளைகள் எப்படிப் பதில் சொல்கிறார்கள் என்பதை ஓரிரு முறை ஒத்திகை பாருங்கள். பிள்ளைகள் தங்கள் நம்பிக்கையைக் குறித்து விளக்கும்போது, மரியாதையாகவும் சாமர்த்தியமாகவும் எப்படிப் பதிலளிக்கலாம் என்று சொல்லிக் கொடுங்கள். போகப்போக, தங்கள் நம்பிக்கையைக் குறித்து சக மாணவர்களிடமோ அக்கம்பக்கத்தாரிடமோ ஆசிரியர்களிடமோ எப்படி நன்றாகப் பேசுவது என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கலாம்.
[பக்கம் 4, 5-ன் பெட்டி/ படங்கள்]
பிறந்த நாள் கொண்டாட்டம்
மேரி: ஜான், நீ என்னுடைய பிறந்த நாள் பார்ட்டிக்குக் கண்டிப்பாக வர வேண்டும்.
ஜான்: என்னைக் கூப்பிட்டதற்கு ரொம்ப நன்றி மேரி. அன்றைக்கு மட்டும் ஏன் ஸ்பெஷலாக பார்ட்டி வைக்கிறாய் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?
மேரி: என் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குத்தான். நீ உன் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டாயா?
ஜான்: இல்லை, கொண்டாட மாட்டேன்.
மேரி: ஏன் கொண்டாடுவதில்லை? நான் பிறந்தபோது என் வீட்டில் எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதனால்தான் கொண்டாடுகிறோம்.
ஜான்: நான் பிறந்தபோதும் என் வீட்டில் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், அந்தவொரு காரணத்துக்காக வருஷா வருஷம் பிறந்த நாளைக் கொண்டாடுவது எனக்குச் சரியாகப் படவில்லை. பிறந்த நாள் கொண்டாடும்போது நிறையப் பேர் தங்களை முக்கியமானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால், கடவுள்தான் முக்கியமானவர் இல்லையா? அவர் நமக்கு உயிரைக் கொடுத்ததற்காக அவருக்குதான் நாம் நன்றி காட்ட வேண்டும் இல்லையா?
மேரி: அப்படியானால், நான் பிறந்த நாள் பார்ட்டி வைக்கக் கூடாதென்று சொல்கிறாயா?
ஜான்: மேரி, அது உன் விருப்பம். ஆனால், இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார். பிறந்த நாள் கொண்டாடுபவருக்கு நிறையப் பேர் பரிசுகளைக் கொடுக்கிறார்கள், ஆனால், மற்றவர்களிடமிருந்து வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறதென்று பைபிள் சொல்கிறது. பிறந்த நாளில் நமக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கடவுளுக்கு நன்றி காட்டுவதுதான் முக்கியம். அதுமட்டுமல்ல, எப்போதுமே மற்றவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்து அவர்களுக்கு உதவி செய்வதும்தானே நல்லது?
மேரி: நான் இப்படி யோசித்ததே இல்லை, ஜான். அப்படியென்றால், உன் அப்பா அம்மா உனக்கு எந்தப் பரிசும் கொடுக்க மாட்டார்களா?
ஜான்: கொடுப்பார்களே. எப்போதெல்லாம் விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் கொடுப்பார்கள். என் பிறந்த நாள் வரும்வரைக் காத்திருக்க மாட்டார்கள். சரி, பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி ஆரம்பித்தது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா?
மேரி: சரி, சொல்.
ஜான்: கண்டிப்பாகச் சொல்கிறேன், ரொம்ப காலத்துக்கு முன்னால் நடந்த ஒரு பிறந்த நாள் பார்ட்டியைப் பற்றி நாளைக்கு உனக்குச் சொல்கிறேன்.
தேசிய கீதம்
சோஃபி: கிஷோர், ஏன் நீ மட்டும் தேசிய கீதம் பாடுவதில்லை?
கிஷோர்: அதைப் பற்றி சொல்வதற்கு முன் நான் உன்னிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். நீ ஏன் தேசிய கீதம் பாடுகிறாய்?
சோஃபி: என் நாட்டைக் குறித்துப் பெருமைப்படுகிறேன், அதனால்தான்.
கிஷோர்: நானும்தான் இந்த நாட்டில் வாழ்வதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். அதற்காக, ஒரு நாட்டைவிட இன்னொரு நாட்டைப் பெரிதாக நான் நினைக்கவில்லை.
சோஃபி: ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை, என் நாடுதான் எனக்குப் பெரிது.
கிஷோர்: ஆனால், எல்லாவற்றையும் கடவுள் எப்படிப் பார்க்கிறாரோ அப்படித்தான் நான் பார்க்கிறேன். கடவுளுக்குப் பாராபட்சம் கிடையாது என்று பைபிள் சொல்கிறது. எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, எல்லாரையுமே அவர் நேசிக்கிறார். அதனால்தான், என்னுடைய நாட்டை நான் மதித்தாலும் தேசிய கீதம் பாடுவதில்லை, கொடியையும் வணங்குவதில்லை.
சோஃபி: இந்த சாதாரண விஷயத்திற்கெல்லாம் ஏன் கடவுளை இழுக்கிறாய்?
கிஷோர்: அப்படியில்லை, சோஃபி. நான் மட்டுமல்ல, நிறையப் பேர் இப்படித்தான் நினைக்கிறார்கள். இதே போல் நடந்துகொண்ட சில இளைஞரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்கள் வாழ்ந்துவந்த நாட்டின் சின்னத்தை வணங்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்யப்படுவார்கள் என்று அந்த நாட்டு ராஜா அவர்களுக்குக் கட்டளை போட்டார். இருந்தாலும், அவர்கள் அதை வணங்கவே இல்லை.
சோஃபி: நிஜமாகவா? இதைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே!
கிஷோர்: அப்படியென்றால், அதைப் பற்றி மத்தியான இடைவேளையில் சொல்கிறேன்.
தேர்தல்
பிலிப்: மோகன், உனக்கு ஓட்டுப் போட உரிமை இருந்தால் நீ யாருக்கு ஓட்டுப் போடுவாய்?
மோகன்: யாருக்கும் போட மாட்டேன்.
பிலிப்: ஏன்?
மோகன்: நான் ஏற்கெனவே ஓட்டு போட்டுவிட்டேன்.
பிலிப்: அதெப்படி, உனக்குத்தான் ஓட்டுப் போடுவதற்கு இன்னும் வயசு ஆகவில்லையே?
மோகன்: நான் ஏற்கெனவே ஒரு நல்ல அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அதற்கு ஓட்டு போட இத்தனை வயசு ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.
பிலிப்: அது என்ன அரசாங்கம்?
மோகன்: அந்த அரசாங்கத்தில் இயேசு ஆட்சி செய்கிறார். அவர்தான் சிறந்த தலைவர். அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறாயா?
பிலிப்: அதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள எனக்கு இஷ்டமில்லை.
மோகன்: சரி, என்றைக்காவது அதைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால் நீ தாராளமாக என்னிடம் கேட்கலாம்.
[படம்]
“ஜான், நீ என்னுடைய பிறந்த நாள் பார்ட்டிக்குக் கண்டிப்பாக வர வேண்டும்”
[பக்கம் 3-ன் படம்]
“நீ ஏன் தேசிய கீதம் பாடுவதில்லை?”