அர்மகெதோன்—சர்வ நாசமா?
அர்மகெதோன்! இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சர்வமும் நாசமடைகிற காட்சியோ பிரபஞ்சமே எரிந்து சாம்பலாகிற காட்சியோ உங்களுடைய மனக்கண்களில் ஓடுகிறதா? உலகின் அநேக பகுதிகளில், அர்மகெதோன் என்ற வார்த்தையைப் போல் வேறெந்த பைபிள் வார்த்தையும் அன்றாட பேச்சில் அந்தளவு அடிபடுவதில்லை. மனிதகுலத்தின் எதிரே இருக்கும் ஓர் இருண்ட எதிர்காலத்தை வர்ணிப்பதற்கு இந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பொழுதுபோக்குத் துறையும் “அர்மகெதோனை” பற்றிய திகிலூட்டும் காட்சிகளை மக்களுடைய கற்பனையில் கலந்திருக்கிறது. இந்த வார்த்தை ஒரு புரியாப்புதிர் போல் தவறான கருத்துகளால் மூடிமறைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகிறபோதிலும், இவற்றிற்கும் அர்மகெதோனைப் பற்றிய பைபிளின் போதனைக்கும், அதாவது இந்த வார்த்தைக்குரிய ஊற்றுமூலத்தின் போதனைக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை.
அர்மகெதோனை ‘உலகத்தின் முடிவுடன்’ பைபிள் இணைத்துப் பேசுவதால், இந்த வார்த்தை உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது முக்கியம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள், அல்லவா? (மத்தேயு 24:3) அர்மகெதோன் என்றால் என்ன, அது உங்களையும் உங்களுடைய குடும்பத்தாரையும் எப்படி பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு சத்தியத்தின் ஒளிவிளக்காய் விளங்கும் கடவுளுடைய வார்த்தையிடம் நமது கவனத்தைத் திருப்புவது நியாயமாக இருக்கும், அல்லவா?
அர்மகெதோன் சர்வ நாசத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, நீதியான புதிய உலகில் வாழ்வதற்கும் செழித்தோங்குவதற்கும் ஆசைப்படுகிற மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஆரம்பமாக இருக்கும் என்பதை இத்தகைய ஆராய்ச்சியில் நீங்கள் கண்டுகொள்வீர்கள். அடுத்த கட்டுரையில், அர்மகெதோனின் உண்மையான அர்த்தத்தை அலசி ஆராயும்போது, இந்த முக்கியமான பைபிள் சத்தியத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெறுவீர்கள்.
[பக்கம் 3-ன் பெட்டி/படம்]
அர்மகெதோன் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்?
• அணு ஆயுதப் பேரழிவு
• சுற்றுச்சூழல் நாசம்
• வான்கோள்கள் பூமியுடன் மோதுவது
• பொல்லாதவர்கள் கடவுளால் அழிக்கப்படுவது