உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 12/1 பக். 18-பக். 21 பாரா. 10
  • இரண்டு நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இரண்டு நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவுக்கு ஒரு ராஜா ஆலயத்தைக் கட்டுகிறார்
  • (2 நாளாகமம் 1:1–9:31)
  • தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்கள்
  • (2 நாளாகமம் 10:1–36:23)
  • செயல்படத் தூண்டிய ஒரு புத்தகம்
  • பைபிள் புத்தக எண் 14—2 நாளாகமம்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • யெகோவாவுடைய வீட்டின்மீது பக்திவைராக்கியத்தைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 12/1 பக். 18-பக். 21 பாரா. 10

யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது

இரண்டு நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்

சாலொமோன் இஸ்ரவேலில் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்ற தகவலுடன் இரண்டு நாளாகம புத்தகம் ஆரம்பிக்கிறது. பாபிலோனியாவில் சிறைப்பட்டிருந்த யூதர்களுக்கு பெர்சிய ராஜாவான கோரேசுவின் பின்வரும் வார்த்தைகளோடு அது முடிவடைகிறது: “யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி [யெகோவா] எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் [எருசலேமுக்கு] போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக.” (2 நாளாகமம் 36:23) ஆசாரியனான எஸ்றா பொ.ச.மு. 460-⁠ல் இப்புத்தகத்தை எழுதி முடித்தார்; பொ.ச.மு. 1037 முதல் பொ.ச.மு. 537 வரையாக 500 வருட காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை இது உள்ளடக்குகிறது.

கோரேசு அவ்வாறு உத்தரவிடுவதால் யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பிவந்து யெகோவாவின் வணக்கத்தை மீண்டும் ஆரம்பிக்கிறார்கள். என்றாலும், பாபிலோனில் இத்தனை அநேக ஆண்டுகள் அடிமைகளாக இருந்தது அவர்களைப் பெரிதும் பாதித்திருந்ததால் தாயகம் திரும்பிய யூதர்களுக்கு நாட்டின் சரித்திரமே தெரிவதில்லை. இரண்டு நாளாகம புத்தகம் தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களுடைய காலத்தின்போது நடந்த தத்ரூபமான சம்பவங்களை அவர்களுக்குத் தொகுத்தளிக்கிறது. இந்த விவரங்கள் நமக்கும் ஆர்வத்திற்குரியது; ஏனென்றால், மெய்க் கடவுளுக்குக் கீழ்ப்படிவதால் வரும் ஆசீர்வாதங்களையும் கீழ்ப்படியாமல் போவதால் வரும் விளைவுகளையும் இது சிறப்பித்துக் காட்டுகிறது.

யெகோவாவுக்கு ஒரு ராஜா ஆலயத்தைக் கட்டுகிறார்

(2 நாளாகமம் 1:1–9:31)

ஞானத்துக்காகவும் அறிவுக்காகவும் சாலொமோன் ராஜா யெகோவாவிடம் இருதயப்பூர்வமாக விண்ணப்பிக்கிறார், அதன்படியே அவற்றை யெகோவா அவருக்குக் கொடுக்கிறார், அதோடு ஐசுவரியத்தையும் மகிமையையும்கூட கொடுக்கிறார். எருசலேமில் யெகோவாவுக்குச் சிறப்புமிக்க ஓர் ஆலயத்தைக் கட்டுகிறார், ஜனங்கள் ‘சந்தோஷமும் மன மகிழ்ச்சியுமாயும்’ இருக்கிறார்கள். (2 நாளாகமம் 7:10) சாலொமோன் ‘பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்து’ விளங்குகிறார்.​—⁠2 நாளாகமம் 9:22.

இஸ்ரவேலை 40 வருடங்கள் அரசாண்ட பிறகு, சாலொமோன் ‘தன் பிதாக்களோடே நித்திரையடைகிறார். அவர் ஸ்தானத்திலே அவருடைய குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவாகிறார்.’ (2 நாளாகமம் 9:31) சாலொமோன் மெய் வணக்கத்தைவிட்டு விலகிப்போனதைப் பற்றி எஸ்றா குறிப்பிடுவதில்லை. ஆனால், ஞானமற்ற விதத்தில் அவர் எகிப்திலிருந்து அநேக குதிரைகளை வாங்கிச் சேர்த்தது, பார்வோனின் மகளைத் திருமணம் செய்தது ஆகிய சில தவறுகளை மட்டுமே குறிப்பிடுகிறார். இவ்வாறு இப்புத்தகத்தின் எழுத்தாளர் பயனுள்ள விவரங்களை மட்டும் அளிக்கிறார்.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

2:14​—⁠இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கன்னானின் வம்சாவளி ஏன் 1 இராஜாக்கள் 7:14-⁠லிருந்து வேறுபடுகிறது? ஒன்று இராஜாக்கள் புத்தகம் கன்னானின் தாயை ‘நப்தலி கோத்திரத்தாளாகிய கைம்பெண்’ எனக் குறிப்பிடுகிறது; ஏனெனில் அவளுடைய கணவன் நப்தலி கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவளோ தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவள். கணவன் இறந்த பிறகு, அவள் தீரு தேசத்தைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்தாள்; அப்படி அவளுக்குப் பிறந்த மகனே இந்த கன்னான்.

2:18; 8:10​—⁠இந்த வசனங்கள், பணியாளர்களின் வேலைகளைக் கவனிப்பதற்குத் தலைவர்களாகவும் மேஸ்திரிகளாகவும் 3,600 பேரும் 250 பேரும் நியமிக்கப்பட்டதாகக் காட்டுகின்றன; ஆனால் 1 இராஜாக்கள் 5:16; 9:23 (NW) வசனங்களில் அவர்கள் 3,300 பேர் மற்றும் 550 பேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன் இந்த வேறுபாடு? இந்தத் தலைவர்கள் பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனத் தெரிகிறது. அதாவது, தலைவர்களாக இருந்தவர்களில் இஸ்ரவேலரல்லாத 3,600 பேரை இஸ்ரவேலரான 250 பேரிலிருந்து இரண்டு நாளாகம புத்தகம் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது; ஒன்று இராஜாக்கள் புத்தகமோ 3,300 மேஸ்திரிகளை உயர் பதவியிலிருந்த 550 தலைமை விசாரிப்புக்காரரிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. எப்படியானாலும், தலைவர்களாகச் சேவை செய்தவர்கள் மொத்தம் 3,850 பேர்தான்.

4:2-4​—⁠வெண்கலக் கடல்தொட்டியின் அடிப்பகுதியில் காளையின் உருவச் சிலைகள் ஏன் வைக்கப்பட்டன? வேதாகமத்தில், காளைகள் பலத்திற்கு அடையாளமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. (எசேக்கியேல் 1:10; வெளிப்படுத்துதல் 4:6, 7) காளையின் உருவங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பொருத்தமானதே, ஏனெனில், அந்த 12 வெண்கலக் காளைகள் 30 டன் எடையுள்ள அந்த மாபெரும் ‘கடலை’ தாங்க வேண்டியிருந்தது. இந்த நோக்கத்திற்காக காளையின் சிலைகள் உண்டாக்கப்பட்டது, நியாயப்பிரமாணத்தின் இரண்டாவது கட்டளையை மீறுவதாய் இருக்கவில்லை. ஏனெனில், வழிபாட்டிற்காக உருவங்களை உண்டாக்குவதையே அது தடைசெய்தது.​—⁠யாத்திராகமம் 20:4, 5.

4:5​—⁠இந்த வெண்கலக் கடலின் மொத்தக் கொள்ளளவு எவ்வளவு? அதில் முழுமையாக மூவாயிரம் குடம் தண்ணீர், அதாவது சுமார் 66,000 லிட்டர் தண்ணீர் நிரப்ப முடியும். ஆனால், பொதுவாக அதன் கொள்ளளவில் சுமார் மூன்றில் இரண்டு பாகத்துக்கு மட்டுமே தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒன்று இராஜாக்கள் 7:26 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘அது [அந்தக் கடல்] இரண்டாயிரம் குடம் [44,000 லிட்டர்] தண்ணீர் பிடித்தது.’

5:4, 5, 10​—⁠பூர்வ ஆசரிப்புக் கூடாரத்திலிருந்த எந்தப் பொருள்கள் சாலொமோனுடைய ஆலயத்தில் வைக்கப்பட்டன? அந்த ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து சாலொமோனுடைய ஆலயத்தில் வைக்கப்பட்ட ஒரே பொருள் உடன்படிக்கைப் பெட்டிதான். ஆலயம் கட்டப்பட்ட பின், அந்த ஆசரிப்புக் கூடாரம் கிபியோனிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டு அங்கு வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.​—⁠2 நாளாகமம் 1:3, 4.

நமக்குப் பாடம்:

1:11, 12. ஞானத்தையும் அறிவையும் பெறுவதற்கு இருதயப்பூர்வமான ஆசை சாலொமோனுக்கு இருந்ததை அவருடைய விண்ணப்பத்தின் மூலம் யெகோவா அறிந்துகொண்டார். நம்முடைய ஜெபங்களும்கூட இருதயத்திலிருப்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே, ஜெபத்தில் எதைக் கேட்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது ஞானமானது.

6:4. யெகோவாவின் அன்புள்ள தயவுக்கும் நற்குணத்திற்குமான இதயப்பூர்வ நன்றியுணர்வு, அவரைத் துதிப்பதற்கு, அதாவது நேசத்தோடும் நன்றியோடும் அவரைப் புகழ்வதற்கு, நம்மைத் தூண்ட வேண்டும்.

6:18-21. எந்தவொரு கட்டடமும் கடவுள் வாசம்பண்ணுவதற்குப் போதுமானதல்ல; என்றாலும் அந்த ஆலயம் யெகோவாவுடைய வணக்கத்திற்கு மையமாகத் திகழ்ந்தது. இன்று, யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்கள் சமுதாயத்தில் மெய் வணக்கத்திற்கான மையங்களாகத் திகழ்கின்றன.

6:19, 22, 32. ராஜாமுதல் எளியோர்வரை, தேசத்தில் உள்ள எல்லாருடைய ஜெபங்களையும் யெகோவா கேட்கிறார், உண்மை மனதுடன் தம்மை அண்டிவரும் அந்நியருடைய ஜெபங்களையும் கேட்கிறார்.a​—⁠சங்கீதம் 65:2.

தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்கள்

(2 நாளாகமம் 10:1–36:23)

ஒன்றுபட்டிருந்த இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டுபடுகிறது; பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யமாகவும் யூதாவும் பென்யமீனும் சேர்ந்து இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யமாகவும் பிளவுபடுகிறது. இஸ்ரவேல் முழுவதிலுமுள்ள எல்லா ஆசாரியர்களும் லேவியர்களும் தேசப்பற்றைவிட ராஜ்ய உடன்படிக்கைக்கே அதிக பற்றைக் காண்பித்து, சாலொமோனின் மகனான ரெகொபெயாமை ஆதரிக்கிறார்கள். ஆலயம் கட்டப்பட்டு 30-⁠க்கும் சற்று அதிகமான ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது, அதற்குள் அதன் பொக்கிஷங்களெல்லாம் கொள்ளையடிக்கப்படுகின்றன.

ரெகொபெயாமுக்குப் பின்வருகிற 19 ராஜாக்களில் ஐவர்தான் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறார்கள், மூவர் உண்மையுள்ளவர்களாய் இருந்து பிற்பாடு உண்மையற்றவர்களாய் மாறிவிடுகிறார்கள், மற்றொரு ராஜாவோ தவறான வழியைவிட்டு மனந்திரும்புகிறார். மீதமுள்ள ராஜாக்கள் யெகோவாவுக்குப் பிரியமில்லாத காரியங்களையே செய்கிறார்கள்.b யெகோவாவின் மீது நம்பிக்கை வைக்கிற ஐந்து ராஜாக்கள் செய்த காரியங்கள் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன. ஆலய சேவைகளை எசேக்கியா மீண்டும் ஆரம்பித்து வைப்பது பற்றிய பதிவும், ஒரு பெரிய பஸ்காவை யோசியா ஏற்பாடுசெய்வது பற்றிய பதிவும் யெகோவாவின் வணக்கத்தை மீண்டும் எருசலேமில் ஆரம்பிக்க ஆர்வம் காட்டிய யூதர்களுக்கு அதிக உற்சாகம் அளிப்பதாய் இருந்திருக்கும்.

வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:

13:5 (NW)​—⁠“உப்பு உடன்படிக்கை” என்பது என்ன? கெடாமல் பாதுகாக்கும் தன்மை உப்புக்கு இருப்பதால், நிலையானது, மாறாதது என்ற பண்புகளுக்கு அது சின்னமாகத் திகழ்கிறது. அப்படியானால், “உப்பு உடன்படிக்கை” என்பது மாறாத ஓர் உடன்படிக்கையாகும்.

14:2-5; 15:17​—⁠ஆசா ராஜா எல்லா “மேடைகளையும்” அகற்றினாரா? இல்லை என்றே தெரிகிறது. ஒருவேளை பொய்க் கடவுட்களுக்கான மேடைகளை மட்டுமே அகற்றிவிட்டு, யெகோவாவின் வணக்கத்திற்கான மேடைகளை அவர் அகற்றாமல் இருந்திருக்கலாம். ஆசாவுடைய ஆட்சிகால முடிவில் மேடைகள் திரும்பவும் கட்டப்பட்டிருக்கலாம். இப்படி அகற்றப்படாத மேடைகளை அவரது மகன் யோசபாத் அகற்றினார். உண்மையில், யோசபாத்தின் ஆட்சியின்போதுகூட மேடைகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை.​—⁠2 நாளாகமம் 17:5, 6; 20:31-33.

15:9; 34:6​—⁠இஸ்ரவேல் ராஜ்யம் பிளவுபட்ட சமயத்தில் சிமியோன் கோத்திரத்தின் நிலை என்ன? யூதாவின் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகள் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்திருந்ததால் யூதா, பென்யமீன் ஆகிய ராஜ்யங்களின் நடுவே அது அமைந்திருந்தது. (யோசுவா 19:1) ஆனால் வணக்கம், ராஜ்யம் ஆகிய காரியங்களில் அது வடக்கு ராஜ்யத்தையே ஆதரித்தது. (1 இராஜாக்கள் 11:30-33; 12:20-24) ஆகவே, சிமியோன் கோத்திரம் பத்துக் கோத்திர ராஜ்யத்தின் பாகமாகவே கருதப்பட்டது.

16:13, 14 (NW)​—⁠ஆசாவின் உடல் தகனம் செய்யப்பட்டதா? இல்லை, ‘மாபெரும் தீ வளர்த்தியதாக’ குறிப்பிடப்பட்டிருப்பது ஆசாவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அல்ல, ஆனால் நறுமணப் பொருள்கள் எரிக்கப்பட்டதையே அர்த்தப்படுத்துகிறது.​—⁠NW அடிக்குறிப்பு.

35:3​—⁠யோசியா பரிசுத்தப் பெட்டியை எங்கிருந்து ஆலயத்திற்குக் கொண்டுவரச் செய்தார்? கெட்ட ராஜாக்கள் யாராவது அவருடைய காலத்திற்கு முன்பு பெட்டியை அகற்றியிருந்தார்களா அல்லது ஆலயத்தை செப்பனிடும் வேலை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டபோது அப்பெட்டி பத்திரமாய் இருப்பதற்காக யோசியா அதை வேறு இடத்திற்கு மாற்றி வைத்திருந்தாரா என்பது பற்றி பைபிள் எதுவும் குறிப்பிடுவதில்லை. சாலொமோனின் காலத்திற்குப் பிறகு யோசியா அப்பெட்டியை ஆலயத்திற்குக் கொண்டுவந்தார் என்பதுதான் அதைப் பற்றிய ஒரே சரித்திரப்பூர்வ விவரமாகும்.

நமக்குப் பாடம்:

13:13-18; 14:11, 12; 32:9-23. யெகோவாமீது சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தின் பேரில் எப்பேர்ப்பட்ட பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்!

16:1-5, 7; 18:1-3, 28-32; 21:4-6; 22:10-12; 28:16-22. அந்நியர்களோடு அல்லது அவிசுவாசிகளோடு ஒப்பந்தங்கள் செய்வதால் மோசமான பாதிப்புகளே ஏற்படும். இந்த உலகக் காரியங்களில் தேவையில்லாமல் நாம் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.​—⁠யோவான் 17:14, 16; யாக்கோபு 4:4.

16:7-12; 26:16-21; 32:25, 26. ஆசா ராஜா மனமேட்டிமையால் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி வருடங்களில் தவறாக நடந்துகொண்டார். உசியாவின் வீழ்ச்சிக்குக் காரணமாயிருந்ததும் மனமேட்டிமைதான். பாபிலோன் ராஜா அனுப்பிய ஆட்களிடம் தன் பொக்கிஷங்களைக் எசேக்கியா காண்பித்தபோது ஞானமற்ற விதத்தில் நடந்துகொண்டார், ஒருவேளை பெருமையினால் அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம். (ஏசாயா 39:1-7) “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என பைபிள் எச்சரிக்கிறது.​—⁠நீதிமொழிகள் 16:18.

16:9. தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடு இருக்கிறவர்களுக்கு யெகோவா உதவுகிறார், அவர்களுக்காகத் தம்முடைய வல்லமையைப் பயன்படுத்தவும் அவர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார்.

18:12, 13, 23, 24, 27. மிகாயாவைப் போல் யெகோவாவையும் அவரது நோக்கங்களையும் பற்றி நாமும் தைரியத்தோடும் துணிவோடும் பேச வேண்டும்.

19:1-3. சில சமயங்களில் நம்முடைய செயல்கள் யெகோவாவைக் கோபப்படுத்தினாலும், நம்மிடம் உள்ள நல்லதையே அவர் பார்க்கிறார்.

20:1-28. தாழ்மையோடு வழிநடத்துதலுக்காக யெகோவாவை நாடினால், அவர் நமக்கு உதவுவார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.​—⁠நீதிமொழிகள் 15:29.

20:17. (NW) ‘யெகோவா செய்யும் இரட்சிப்பைப் பார்ப்பதற்கு,’ அவருடைய ராஜ்யத்தை நாம் ஊக்கமாக ஆதரிக்கும் ‘நிலையில் இருப்பது’ அவசியம். காரியங்களை நம்முடைய விருப்பப்படி செய்வதற்குப் பதிலாக, “அசையாமல் நின்று,” யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்பது அவசியம்

24:17-19; 25:14. விக்கிரகாராதனை யோவாசுக்கும் அவரது மகன் அமத்சியாவுக்கும் கண்ணியாக அமைந்தது. இன்றும்கூட விக்கிரகாராதனை, நேரடியாக இல்லாவிட்டாலும் பொருளாசை அல்லது தேசப்பற்று எனும் வடிவில் நமக்குக் கண்ணியாக அமைந்துவிடலாம்.​—⁠கொலோசெயர் 3:5; வெளிப்படுத்துதல் 13:4.

32:6, 7. ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொண்டு’ ஆன்மீகப் போரில் ஈடுபடுகையில் நாமும்கூட தைரியமுள்ளவர்களாயும் பலமுள்ளவர்களாயும் இருக்க வேண்டும்.​—⁠எபேசியர் 6:11-18.

33:2-9, 12, 13, 15, 16. தவறான போக்கைத் தவிர்த்து சரியானதைச் செய்ய மனப்பூர்வமாக முயற்சி எடுப்பது ஒருவருடைய உண்மையான மனந்திரும்புதலுக்கு அடையாளமாக இருக்கிறது. மனாசே ராஜாவைப் போல தவறாக நடந்த ஒருவர்கூட, உண்மையான மனந்திரும்புதலைக் காட்டும்போது யெகோவாவின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

34:1-3. சிறுபிராயத்தில் எதிர்ப்பட்ட எந்தவொரு மோசமான சூழ்நிலையும் கடவுளைப் பற்றி அறிந்துகொண்டு, அவருக்குச் சேவை செய்ய நமக்குத் தடைக்கல்லாக இருக்க வேண்டியதில்லை. யோசியா ஏதாவது நல்ல காரியங்கள் செய்திருந்தால், அதற்குக் காரணம் மனந்திரும்பிய அவருடைய தாத்தா மனாசேயாக இருந்திருக்கலாம். வேறு யாரும்கூட அதற்குக் காரணமாக இருந்திருந்தாலும், அவை கடைசியில் நல்ல பலன்களையே விளைவித்தன. நமக்கும் அதுபோன்றே நடக்கலாம்.

36:15-17. யெகோவா பாசமும் பொறுமையும் உள்ளவர். என்றாலும், அவரது பாசத்திற்கும் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. இந்தப் பொல்லாத உலகிற்கு யெகோவா முடிவைக் கொண்டுவருகையில் அதிலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமானால், பிரசங்கிக்கப்பட்டு வருகிற ராஜ்ய செய்திக்கு ஜனங்கள் கட்டாயம் செவிசாய்க்க வேண்டும்.

36:17, 22, 23. யெகோவாவின் வார்த்தை எப்போதும் நிறைவேறும்.​—⁠1 இராஜாக்கள் 9:7, 8; எரேமியா 25:9-11.

செயல்படத் தூண்டிய ஒரு புத்தகம்

“யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்” என 2 நாளாகமம் 34:33 குறிப்பிடுகிறது. இதைச் செய்வதற்கு யோசியாவைத் தூண்டியது எது? புதிதாய்க் கண்டெடுத்த யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை யோசியா ராஜாவிடம் சம்பிரதியான சாப்பான் கொடுத்தபோது, அவர் அதைச் சப்தமாக வாசிக்க சொன்னார். கேட்ட விஷயங்கள் மனதைத் தொட்டதால், தனது வாழ்நாளெல்லாம் தூய வணக்கத்தை வைராக்கியமாய் அவர் முன்னேற்றுவித்தார்.

கடவுளுடைய வார்த்தையை வாசித்து, தியானிக்கையில் அவ்விஷயங்கள் நம் மனதை ஆழமாகத் தொடலாம். தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்களின் பதிவைக் குறித்து சிந்தித்தது, யெகோவாவில் நம்பிக்கை வைத்தவர்களின் மாதிரியைப் பின்பற்றுவதற்கும் நம்பிக்கை வைக்காதவர்களின் மாதிரியைத் தவிர்ப்பதற்கும் நம்மை ஊக்கப்படுத்தவில்லையா? இரண்டு நாளாகம புத்தகம், மெய்க் கடவுளுக்கு முழு பக்தியைச் செலுத்துவதற்கும் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கும் நம்மை உந்துவிக்கிறது. இப்புத்தகத்தின் செய்தி ஜீவனும் வல்லமையுமான செய்தி என்பதில் சந்தேகமே இல்லை.​—⁠எபிரெயர் 4:12.

[அடிக்குறிப்புகள்]

a ஆலயப் பிரதிஷ்டை சம்பந்தமான கேள்விகளுக்கும் அச்சமயத்தில் சாலொமோன் செய்த ஜெபம் சம்பந்தமான பிற பாடங்களுக்கும் காவற்கோபுரம், ஜூலை 1, 2005, பக்கங்கள் 28-31-ஐக் காண்க.

b யூதாவின் ராஜாக்களுடைய காலவரிசை அட்டவணையை காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 2005 பக்கம் 12-⁠ல் காண்க.

[பக்கம் 18-ன் படம்]

வெண்கலக் கடலின் அடிப்பகுதியில் இருந்த காளையின் உருவங்கள் ஏன் பொருத்தமானவை என்று உங்களுக்குத் தெரியுமா?

[பக்கம் 21-ன் படங்கள்]

குழந்தையாய் இருந்தபோது யோசியாவுக்கு அதிக உதவி கிடைக்காவிட்டாலும், யெகோவாவுக்கு உண்மையுள்ளவராகவே வளர்ந்துவந்தார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்