ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
“யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன் . . . தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.”—2 ரா. 20:3.
1-3. யெகோவாவுக்கு “முழு இதயத்தோடு” சேவை செய்வது என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடுங்கள்.
நாம் எல்லாருமே அபூரணர்களாக இருப்பதால் தவறுகள் செய்துவிடுகிறோம். இருந்தாலும், யெகோவா நம்மை மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறார், நமக்காக மீட்புவிலையைக் கொடுத்திருக்கிறார். “நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி” யெகோவா நம்மை நடத்துவதில்லை. நாம் மனத்தாழ்மையாக இருக்கும்போதும், மனம் திருந்தும்போதும் நம்மால் அவரிடம் மன்னிப்புக் கேட்க முடியும். இந்த எல்லாவற்றுக்கும் நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! (சங். 103:10) நம் வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், “அவருக்கு முழு இதயத்தோடு” சேவை செய்ய வேண்டும். (1 நா. 28:9) அபூரணர்களாக இருக்கும் நம்மால் இதை எப்படிச் செய்ய முடியும்?
2 இதைத் தெரிந்துகொள்வதற்கு, ஆசா ராஜா மற்றும் அமத்சியா ராஜாவின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்த ராஜாக்கள் நல்ல காரியங்களைச் செய்தார்கள். ஆனால், அவர்கள் அபூரணர்களாக இருந்ததால் தவறுகளும் செய்தார்கள். இருந்தாலும், “ஆசா தன்னுடைய வாழ்நாளெல்லாம் கடவுளுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 15:16, 17; 25:1, 2; நீதி. 17:3) யெகோவாவைப் பிரியப்படுத்த அவர் எப்போதுமே முயற்சி செய்தார், முழு இதயத்தோடு பக்தி காட்டினார். (1 நா. 28:9) ஆனால், அமத்சியா, “முழு இதயத்தோடு” யெகோவாவுக்குச் சேவை செய்யவில்லை. கடவுளுடைய எதிரிகளைத் தோற்கடித்துவிட்டுத் திரும்பும்போது, அவர்களுடைய தெய்வங்களைக் கொண்டுவந்தார்; பிறகு, அவற்றைக் கும்பிடவும் ஆரம்பித்தார்.—2 நா. 25:11-16.
3 “முழு இதயத்தோடு” யெகோவாவுக்குச் சேவை செய்கிற ஒருவர், யெகோவாவை மிகவும் நேசிப்பார்; அவரை என்றென்றும் வணங்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார். பைபிளில் இருக்கும் “இதயம்” என்ற வார்த்தை, பொதுவாக, நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. நம்முடைய ஆசைகள், யோசனைகள், குணங்கள், திறமைகள், லட்சியங்கள் ஆகியவை இதில் உட்பட்டிருக்கின்றன. நாம் அபூரணர்களாக இருந்தாலும், நம்மால் முழு இதயத்தோடு யெகோவாவை வணங்க முடியும். வெறும் கடமைக்காகவோ, வேறு வழியில்லாமலோ நாம் யெகோவாவுக்குச் சேவை செய்வதில்லை, உண்மையிலேயே அவரை நேசிப்பதால்தான் அவருக்குச் சேவை செய்கிறோம்.—2 நா. 19:9.
4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
4 ஆசா ராஜா மற்றும் யூதாவின் மற்ற 3 ராஜாக்களான யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகியவர்களின் வாழ்க்கையைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கலாம். அப்படி யோசித்துப் பார்க்கும்போது, முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்வது என்றால் என்ன என்பதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இந்த 4 ராஜாக்களும் தவறுகள் செய்தார்கள் என்பது உண்மைதான். ஆனாலும், யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் முழு இதயத்தோடு தனக்குச் சேவை செய்ததாக யெகோவா கருதினார். யெகோவா அப்படிக் கருதியதற்கு என்ன காரணம்? நாம் எப்படி அந்த ராஜாக்களைப் பின்பற்றலாம்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஆசா—யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்
5. ராஜாவாக ஆன பிறகு ஆசா என்ன செய்தார்?
5 இஸ்ரவேல் தேசம், இஸ்ரவேல் ராஜ்யமாகவும் யூதா ராஜ்யமாகவும் பிரிக்கப்பட்ட பிறகு, ஆசா, யூதா ராஜ்யத்தின் 3-ஆம் ராஜாவாக ஆனார். அவர் ராஜாவாக ஆன பிறகு, தன்னுடைய ராஜ்யத்தில் இருந்த பொய் வழிபாட்டையும் அருவருப்பான பாலியல் முறைகேட்டையும் ஒழிப்பதற்குத் தீர்மானமாக இருந்தார். மக்கள் கும்பிட்டுக்கொண்டிருந்த சிலைகளை அழித்தார். கோயில்களில் இருந்த ஆண் விபச்சாரக்காரர்களைத் துரத்தினார். தன்னுடைய பாட்டி “அசிங்கமான சிலையைச் செய்து வைத்திருந்ததால்” அவரை ‘ராஜமாதா அந்தஸ்திலிருந்து’ இறக்கினார். (1 ரா. 15:11-13) “யெகோவாவை வழிபட வேண்டும்” என்றும், ‘திருச்சட்டத்துக்கும் கட்டளைகளுக்கும்’ கீழ்ப்படிய வேண்டும் என்றும் மக்களை உற்சாகப்படுத்தினார். மற்றவர்கள் யெகோவாவை வணங்குவதற்காக, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் ஆசா செய்தார்.—2 நா. 14:4.
6. யூதாவின் மீது எத்தியோப்பியர்கள் படையெடுத்து வந்தபோது ஆசா என்ன செய்தார்?
6 ஆசா ராஜா ஆட்சி செய்த முதல் 10 வருஷங்கள்வரை, யூதா ராஜ்யத்தில் எந்தப் போரும் நடக்கவில்லை. பிறகு, 10 லட்சம் வீரர்களோடும் 300 ரதங்களோடும் எத்தியோப்பியர்கள் யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்தார்கள். (2 நா. 14:1, 6, 9, 10) யெகோவா தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவார் என்பதில் ஆசாவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதனால், போரில் வெற்றியடைய உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (2 நாளாகமம் 14:11-ஐ வாசியுங்கள்.) அவருடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார். எத்தியோப்பியப் படையை அடியோடு அழிப்பதன் மூலம் ஆசாவுக்கு முழு வெற்றி கொடுத்தார். (2 நா. 14:12, 13) ராஜாக்கள் தனக்கு உண்மையாக நடந்துகொள்ளாத போதும், தான் உண்மைக் கடவுள் என்பதைக் காட்டுவதற்காக, யெகோவா தன்னுடைய மக்களுக்கு வெற்றி கொடுத்திருக்கிறார். (1 ரா. 20:13, 26-30) ஆனால், ஆசா யெகோவாவை நம்பியிருந்தார். அதனால், யெகோவா அவருடைய ஜெபத்துக்குப் பதில் கொடுத்தார். பிறகு நிறைய சந்தர்ப்பங்களில், ஆசா ஞானமில்லாமல் நடந்துகொண்டார். உதாரணத்துக்கு, ஒரு சமயம் அவர் யெகோவாவிடம் உதவி கேட்பதற்குப் பதிலாக, சீரியா ராஜாவிடம் உதவி கேட்டார். (1 ரா. 15:16-22) இருந்தாலும், ஆசா தன்னை நேசிப்பதை யெகோவாவால் பார்க்க முடிந்தது. ஆசா, “தன்னுடைய வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்.” ஆசாவுடைய நல்ல முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?—1 ரா. 15:14.
7, 8. ஆசாவை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
7 நாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு பக்தியைக் காட்டுகிறோமா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கஷ்டமா இருந்தாலும் நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவேனா? யெகோவாவோட சபையை சுத்தமா வைச்சுக்கணுங்கிறதுல நான் உறுதியா இருப்பேனா?’ தன்னுடைய பாட்டியை ராஜமாதா அந்தஸ்திலிருந்து இறக்குவதற்கு ஆசாவுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! சில சமயங்களில், ஆசாவைப் போலவே நீங்களும் தைரியமாகச் செயல்பட வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ, நெருங்கிய நண்பரோ ஏதாவது பாவம் செய்துவிடலாம். மனம் திருந்தாததால், அவர் சபை நீக்கம் செய்யப்படலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதியாக இருப்பீர்களா? உங்கள் இதயம் உங்களை என்ன செய்யத் தூண்டும்?
8 எல்லாருமே தனக்கு விரோதமாக இருக்கிறார்கள் என்று நினைத்த ஆசாவைப் போலவே நாமும் சில சமயங்களில் நினைக்கலாம். உங்களோடு பள்ளியில் படிக்கிறவர்கள், நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதற்காக, உங்களைக் கேலி கிண்டல் செய்யலாம். அல்லது உங்களோடு வேலை செய்கிறவர்கள், மாநாட்டுக்குப் போக நீங்கள் விடுப்பு எடுப்பதாலோ, நீங்கள் அடிக்கடி ‘ஓவர் டைம்’ செய்யாமல் இருப்பதாலோ உங்களை ஒரு முட்டாள் என்று நினைக்கலாம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், ஆசாவைப் போலவே நீங்களும் கடவுளை நம்பியிருங்கள். யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள், தைரியமாக இருங்கள், சரியானதைத் தொடர்ந்து செய்யுங்கள். கடவுள் ஆசாவைப் பலப்படுத்தினார், உங்களையும் நிச்சயம் பலப்படுத்துவார்.
9. நாம் ஊழியம் செய்யும்போது, யெகோவாவை எப்படிச் சந்தோஷப்படுத்துகிறோம்?
9 கடவுளுடைய ஊழியர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பதில்லை. மற்றவர்களுடைய நலனிலும் அக்கறையாக இருக்கிறார்கள். மக்கள் யெகோவாவை வணங்குவதற்காக ஆசா நிறைய விஷயங்களைச் செய்தார். இன்று, நாமும் அப்படிச் செய்கிறோம். நாம் யெகோவாவை நேசிப்பதாலும், மக்கள் மீதும் அவர்களுடைய எதிர்காலத்தின் மீதும் நமக்கு அக்கறை இருப்பதாலும், அவர்களிடம் யெகோவாவைப் பற்றி பேசுகிறோம். இதைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!
யோசபாத்—யெகோவாவைத் தேடினார்
10, 11. யோசபாத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
10 ஆசாவின் மகன் யோசபாத், “தன்னுடைய அப்பாவான ஆசாவின் வழியில் நடந்துவந்தார்.” (2 நா. 20:31, 32) மக்கள் தொடர்ந்து யெகோவாவை வணங்குவதற்கு, தன்னுடைய அப்பாவைப் போலவே யோசபாத்தும் அவர்களை உற்சாகப்படுத்தினார். ‘யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்திலிருந்து’ மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு, அவர் யூதா நகரங்களுக்கு ஆட்களை அனுப்பினார். (2 நா. 17:7-10) மக்கள் ‘யெகோவாவைத் திரும்பவும் வழிபட ஆரம்பிக்க’ வேண்டும் என்பதற்காக இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் வரை, அதாவது, எப்பிராயீம் மலைப்பகுதிவரை போனார். (2 நா. 19:4) யோசபாத் ராஜா, ‘யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கினார்.’—2 நா. 22:9.
11 இன்று, உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் தன்னைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். இந்தக் கற்பிக்கும் வேலையை நம் எல்லாராலும் செய்ய முடியும். ஒவ்வொரு மாதமும் இந்த வேலையில் ஈடுபட வேண்டும் என்பது உங்களுடைய குறிக்கோளா? மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி கற்றுக்கொடுக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அதற்காக ஜெபம் செய்கிறீர்களா? நீங்கள் முயற்சி செய்தால், பைபிள் படிப்பு ஆரம்பிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார். மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுப்பதற்காக, உங்களுடைய ஓய்வு நேரத்தைத் தியாகம் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மக்கள் திரும்பவும் யெகோவாவை வணங்குவதற்கு யோசபாத் உதவி செய்தார். செயலற்ற பிரஸ்தாபிகள் திரும்பவும் யெகோவாவை வணங்குவதற்கு நாமும் உதவலாம். அதோடு, நம்முடைய சபை பிராந்தியத்தில் இருக்கிற சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள், முன்பு செய்துவந்த பாவத்தை விட்டிருக்கும்போது, அவர்களைப் போய் பார்த்து, அவர்களுக்கு உதவி செய்ய மூப்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.
12, 13. (அ) யோசபாத் எந்தச் சந்தர்ப்பத்தில் பயந்துபோனார், அப்போது அவர் என்ன செய்தார்? (ஆ) பலவீனங்களை ஒத்துக்கொள்ளும் விஷயத்தில் நாம் ஏன் யோசபாத்தைப் போல நடந்துகொள்ள வேண்டும்?
12 யூதாவுக்கு எதிராகப் போர் செய்ய ஒரு பெரிய படை வந்தபோது, தன் அப்பா ஆசாவைப் போலவே, யோசபாத்தும் யெகோவாவை நம்பினார். (2 நாளாகமம் 20:2-4-ஐ வாசியுங்கள்.) அவருக்குப் பயமாக இருந்ததால் உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். தங்களால் எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்றும், தனக்கும் தன்னுடைய மக்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் அவர் யெகோவாவிடம் சொன்னார். யெகோவா உதவுவார் என்பதில் யோசபாத்துக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. “எங்களுடைய கண்கள் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கின்றன” என்று அவர் யெகோவாவிடம் சொன்னார்.—2 நா. 20:12.
13 நமக்குப் பிரச்சினைகள் வரும்போது, யோசபாத்தைப் போலவே, நமக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கலாம், ஏன், பயமாகக்கூட இருக்கலாம். (2 கொ. 4:8, 9) ஆனால், யோசபாத் என்ன செய்தார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். யோசபாத் எல்லார் முன்பாகவும் ஜெபம் செய்தார்; தானும் தன்னுடைய மக்களும் பலவீனமாக உணர்வதாக ஜெபத்தில் சொன்னார். (2 நா. 20:5) குடும்பத் தலைவர்களும் யோசபாத்தின் உதாரணத்தைப் பின்பற்றலாம். பிரச்சினையைச் சமாளிக்க தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் உதவும்படி யெகோவாவிடம் கேட்கலாம்; என்ன செய்வதென்றும் அவரிடம் கேட்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு முன்னால் இப்படி ஜெபம் செய்ய வெட்கப்படக் கூடாது. குடும்பத் தலைவர்கள் இப்படி ஜெபம் செய்யும்போது, அவர்களுக்கு எந்தளவு யெகோவாமேல் நம்பிக்கை இருக்கிறது என்பதைக் குடும்பத்தில் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். யெகோவா யோசபாத்துக்கு உதவினார், உங்களுக்கும் உதவுவார்.
எசேக்கியா—யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்
14, 15. எசேக்கியா எப்படிக் கடவுளை முழுமையாக நம்பியிருந்தார்?
14 ‘யெகோவாவை உறுதியாகப் பிடித்துக்கொண்ட’ இன்னொரு ராஜாதான் எசேக்கியா. அவருடைய அப்பா ஒரு கெட்ட முன்மாதிரியாக இருந்தார், சிலைகளைக் கும்பிட்டார். ஆனால், எசேக்கியா “ஆராதனை மேடுகளை அழித்தார், பூஜைத் தூண்களைத் தகர்த்தார், பூஜைக் கம்பத்தை வெட்டிப்போட்டார். அதோடு, மோசே செய்திருந்த செம்புப் பாம்பை நொறுக்கினார்.” ஏனென்றால், இஸ்ரவேலர்கள் அதைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். எசேக்கியா, முழு இதயத்தோடு யெகோவாவுக்குப் பக்தி காட்டினார். “மோசேயிடம் யெகோவா கொடுத்த கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தார்.”—2 ரா. 18:1-6.
15 எசேக்கியா ராஜாவாக இருந்தபோது, பலம் படைத்த அசீரியப் படை யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, எருசலேமை அழிக்கப் போவதாக பயமுறுத்தியது. அசீரிய ராஜா சனகெரிப், யெகோவாவைப் பற்றி கிண்டலாகப் பேசினான், எசேக்கியாவைச் சரணடைய வைப்பதற்கு முயற்சி செய்தான். அந்த ஆபத்தான சமயத்தில், எசேக்கியா யெகோவாவை முழுமையாக நம்பியிருந்தார், உதவிக்காக அவரிடம் ஜெபம் செய்தார். அசீரியர்களைவிட யெகோவாவுக்குப் பல மடங்கு சக்தி இருக்கிறது என்பதும், அவரால் தன்னுடைய மக்களைக் காப்பாற்ற முடியும் என்பதும் எசேக்கியாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (ஏசாயா 37:15-20-ஐ வாசியுங்கள்.) அவருடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார்; 1,85,000 அசீரிய வீரர்களைக் கொல்வதற்கு ஒரு தேவதூதரை அனுப்பினார்.—ஏசா. 37:36, 37.
16, 17. எசேக்கியாவை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
16 பிறகு, எசேக்கியாவுக்கு நோய் வந்து, சாகும் நிலைக்குப் போய்விட்டார். அந்தக் கஷ்டமான சூழ்நிலையில், தான் உண்மையாக நடந்துகொண்டதை நினைத்துப் பார்க்கும்படியும், தனக்கு உதவி செய்யும்படியும் அவர் யெகோவாவிடம் கெஞ்சினார். (2 ராஜாக்கள் 20:1-3-ஐ வாசியுங்கள்.) எசேக்கியா செய்த ஜெபத்தை யெகோவா கேட்டார், அவரை குணமாக்கினார். கடவுள் நம்முடைய நோய்களை அற்புதமான விதத்தில் குணமாக்குவார் என்றும், ரொம்ப நாள் வாழ்வதற்கு நமக்கு உதவுவார் என்றும் நாம் இன்று எதிர்பார்க்க முடியாது என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். இருந்தாலும், எசேக்கியாவைப் போல நாம் யெகோவாவை நம்பியிருக்கலாம். “யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன் . . . தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள். உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று அவரிடம் சொல்லலாம். நீங்கள் நோயால் அவதிப்படும் சமயத்தில்கூட யெகோவா உங்களை அக்கறையோடு கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?—சங். 41:3.
17 வேறு எந்த விதத்தில் நாம் எசேக்கியாவைப் பின்பற்றலாம்? ஏதோ ஒரு விஷயம், நமக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற பந்தத்துக்குத் தடையாக இருக்கலாம். அல்லது அவருக்குச் சேவை செய்வதிலிருந்து நம்முடைய கவனத்தைத் திருப்பலாம். உதாரணத்துக்கு, இன்று நிறைய பேர் மற்றவர்களைக் கடவுளைப் போல நடத்துகிறார்கள். பிரபலங்களையும், தங்களுக்கு முன்பின் தெரியாதவர்களையும் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களைப் படிப்பதற்கும், அவர்களுடைய ஃபோட்டோக்களைப் பார்ப்பதற்கும் நிறைய நேரம் செலவு செய்கிறார்கள். அல்லது இன்டர்நெட்டில் மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்காக, சோஷியல் மீடியாவையும் மற்ற சில வசதிகளையும் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான வசதிகளைப் பயன்படுத்தி நம்முடைய குடும்பத்தாரிடமும் நெருங்கிய நண்பர்களிடமும் பேசுவதில் நாம் சந்தோஷப்படலாம். ஆனால், சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும்போது, நேரத்தை வீணடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இன்டர்நெட்டில் நாம் போடும் ஃபோட்டோக்களும் நாம் பகிர்ந்துகொள்ளும் கருத்துகளும் நன்றாக இருப்பதாக மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது, நமக்குப் பெருமை வந்துவிடலாம். ஒருவேளை, நாம் அனுப்பும் விஷயங்களைப் பார்ப்பதை சிலர் நிறுத்திவிட்டால், நாம் வருத்தப்படலாம். இப்போது, அப்போஸ்தலன் பவுலையும், ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாளையும் நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய உதாரணங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் ஒவ்வொரு நாளும் மற்றவர்களைப் பற்றி, முக்கியமாக, யெகோவாவை வணங்காதவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு நேரம் செலவு செய்துகொண்டிருந்தார்களா? பவுல், ‘கடவுளுடைய வார்த்தையை முழு மூச்சோடு பிரசங்கித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும், மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கவும் “கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக” விளக்கவும் நேரம் செலவு செய்ததாக பைபிள் சொல்கிறது. (அப். 18:4, 5, 26) இப்போது, நம்மை இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘மத்தவங்கள கடவுள மாதிரி நடத்தாம இருக்கேனா? முக்கியமில்லாத விஷயங்களுக்காக நிறைய நேரம் செலவு செய்றத தவிர்க்குறேனா?’—எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.
யோசியா—யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்
18, 19. யோசியாவை நீங்கள் எந்தெந்த வழிகளில் பின்பற்றலாம் என்று நினைக்கிறீர்கள்?
18 எசேக்கியாவின் கொள்ளுப் பேரனாகிய யோசியா, “முழு இதயத்தோடு” யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார். (2 நா. 34:31) டீனேஜ் வயதிலேயே, அவர் “தாவீதின் கடவுளைத் தேட ஆரம்பித்தார்.” 20-வது வயதில், யூதாவில் இருந்த சிலைகளை எல்லாம் அழிக்க ஆரம்பித்தார். (2 நாளாகமம் 34:1-3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக, யூதாவின் மற்ற ராஜாக்களைவிட யோசியா கடும் முயற்சி எடுத்தார். ஒருநாள், தலைமைக் குரு கடவுளுடைய சட்டத்தை ஆலயத்தில் கண்டெடுத்தார். அது, மோசே கைப்பட எழுதிய புத்தகமாக இருந்திருக்கலாம். செயலாளர் அதைத் தனக்கு வாசித்துக்காட்டியபோது, யெகோவாவை முழுமையாக வணங்குவதற்கு, தான் இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியிருப்பதை யோசியா புரிந்துகொண்டார். மற்றவர்களையும் அப்படிச் செய்யும்படி அவர் உற்சாகப்படுத்தினார். அதனால், யோசியா உயிரோடு இருந்தவரை, மக்கள் “யெகோவாவைவிட்டு விலகவே இல்லை.”—2 நா. 34:27, 33.
19 நீங்கள் ஒரு இளைஞராக இருந்தால், யோசியாவைப் பின்பற்றலாம், யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம். யெகோவா மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிற கடவுள் என்பதை, மனம் திருந்திய தன்னுடைய தாத்தா மனாசேயிடமிருந்து யோசியா தெரிந்துகொண்டிருக்கலாம். உங்கள் குடும்பத்திலும் சபையிலும் இருக்கிற வயதானவர்களிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளலாம். யெகோவா தங்களுக்குச் செய்த ஏராளமான நல்ல விஷயங்களைப் பற்றி அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களைக் கேட்டவுடனே, யோசியா எப்படி உணர்ந்தார் என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாவைப் பிரியப்படுத்த அவர் ஆர்வமாக இருந்தார், உடனடியாக நிறைய மாற்றங்களைச் செய்தார். பைபிளைப் படிப்பதன் மூலம், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற தீர்மானத்தில் நீங்கள் இன்னும் உறுதியாக இருக்கலாம். அப்போது, உங்களுக்கும் யெகோவாவுக்கும் இருக்கிற நட்பு இன்னும் பலமாகும், நீங்கள் இன்னும் சந்தோஷமாக இருப்பீர்கள். மற்றவர்களுக்கும் யெகோவாவைப் பற்றி சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். (2 நாளாகமம் 34:18, 19-ஐ வாசியுங்கள்.) பைபிளைப் படிக்கும்போது, கடவுளுக்குச் சேவை செய்வதில் இன்னும் முன்னேற்றம் செய்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன என்பதை உணருவீர்கள். அப்போது, யோசியாவைப் போல, மாற்றங்கள் செய்ய உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வீர்கள்.
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
20, 21. (அ) யூதாவின் 4 ராஜாக்களுக்கும் பொதுவாக இருந்த விஷயம் என்ன? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம்?
20 முழு இதயத்தோடு யெகோவாவை வணங்கிய யூதாவின் இந்த 4 ராஜாக்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வாழ்நாள் முழுவதும் யெகோவாவைப் பிரியப்படுத்தவும், அவரை வணங்கவும் இவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். பலம்படைத்த எதிரிகள் தாக்க வந்தபோது, இவர்கள் யெகோவாவை நம்பியிருந்தார்கள். மிக முக்கியமாக, யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதற்கான இவர்களுடைய நோக்கம் சுத்தமானதாக இருந்தது.
21 இந்த 4 ராஜாக்களும் தவறுகள் செய்தாலும், யெகோவா இவர்களை நினைத்து சந்தோஷப்பட்டார். இவர்களுடைய இதயத்தைப் பார்த்தார், இவர்கள் தன்னை உண்மையிலேயே நேசித்தார்கள் என்பதைப் புரிந்துகொண்டார். நாமும் அபூரணர்களாக இருப்பதால், தவறுகள் செய்துவிடுகிறோம். ஆனால், நாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்வதை அவர் பார்க்கும்போது, அவர் நம்மை நினைத்து சந்தோஷப்படுவார். யூதாவின் இந்த 4 ராஜாக்கள் செய்த தவறுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.