‘உங்கள் செயல்களுக்கேற்ற கைமாறு கிடைக்கும்’
யூதேயாவின் மேட்டுநிலப் பகுதியிலிருந்து ஆழமான பள்ளத்தாக்கின் வழியாகக் கரையோர சமவெளியை நோக்கி ஆசா ராஜா தன் படைகளை மிக வேகமாக நடத்திச் செல்கிறார். பள்ளத்தாக்கு கொஞ்சம் அகலமாக இருக்கும் இடத்தில் நிற்கிறார். கீழே எதிரியின் மாபெரும் படை கூடாரமிட்டுத் தங்கியிருப்பதைப் பார்க்கிறார்! அச்சத்தில் உறைந்து போகிறார்! அந்த எத்தியோப்பிய படையில் பத்து லட்சம் வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால், அதில் கிட்டத்தட்ட பாதிப் பேர்தான் ஆசாவின் படையில் இருக்கிறார்கள்.
போரை எதிர்கொள்ள வேண்டியிருந்த இந்த வேளையில் ஆசாவின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது? படைத் தளபதிகளுக்கு என்ன கட்டளை கொடுப்பது... படையினரை எப்படி உற்சாகப்படுத்துவது... குடும்பத்தாருக்கு என்ன எழுதுவது... என்ற விஷயங்களா? இவை எதுவுமே இல்லை! அந்தச் சமயத்தில் அவருடைய மனதெல்லாம் யெகோவாவையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதனால்தான் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்.
அந்த ஜெபத்தையும் அந்தச் சமயத்தில் நடந்தவற்றையும் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பு ஆசா எப்படிப்பட்டவர் என்று பார்க்கலாம். அந்த நெருக்கடியான சமயத்தில் ஜெபம் செய்ய அவரை எது தூண்டியது? கடவுளுடைய உதவியை அவர் நாடியது சரியா? யெகோவா தம்முடைய ஊழியர்களின் செயல்களுக்குத் தக்க பலனை அளிக்கிறார் என்பதை ஆசாவைப் பற்றிய பதிவு எவ்வாறு காண்பிக்கிறது?
ஆசாவைப் பற்றிய பதிவு
இஸ்ரவேல் இரண்டு ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டதற்குப் பின்வந்த 20 வருடங்களில் யூதா பொய் மதப் பழக்கவழக்கங்களில் ஊறிப்போயிருந்தது. கி.மு. 977-ல் ஆசா அரச பீடத்தில் அமர்ந்தபோது, அரசவையில் இருந்தவர்களும்கூட கானானியர்களின் கருவளக் கடவுட்களை வணங்குவதில் மூழ்கிப்போயிருந்தார்கள். ஆனால், நாளாகமப் புத்தகத்தில் உள்ள பதிவு, ‘ஆசா தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தார்’ என்று சொல்கிறது. ஆசா, ‘வேற்றுப் பலிபீடங்களையும், தொழுகை மேடுகளையும் அகற்றினார்; சிலைத்தூண்களை உடைத்தெறிந்தார்; அசேராக் கம்பங்களை வெட்டி வீழ்த்தினார்.’ (2 நா. 14:2, 3; பொது மொழிபெயர்ப்பு) அதுமட்டுமல்ல, மதத்தின் போர்வையில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டுவந்த விலை ஆடவர்களை யூத ராஜ்யத்திலிருந்து ஒழித்துக்கட்டினார். அதோடு ஆசா நிறுத்திக்கொள்ளவில்லை. ‘தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைத் தேடவும், [கடவுளுடைய] நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும்’ மக்களை உற்சாகப்படுத்தினார்.—1 இரா. 15:12, 13; பொ.மொ.; 2 நா. 14:4.
ஆசா உண்மை வணக்கத்திற்குக் காட்டிய பக்திவைராக்கியத்தைப் பார்த்து யெகோவா உச்சிகுளிர்ந்து போனார். அதனால், அநேக வருடங்கள் அவரது ஆட்சியில் சமாதானம் தழைக்கச் செய்தார். எனவேதான் ஆசா, ‘நம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தேடினோம், தேடினபோது சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார்’ என்று சொன்னார். மக்கள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு யூத ராஜ்யத்தின் நகரங்களைச் சுற்றி கோட்டை, கொத்தளங்களை அமைத்து நகரங்களை வலுப்படுத்தினார்கள். ‘அவர்களுடைய காரியம் வாய்த்தது’ என்று பைபிள் சொல்கிறது.—2 நா. 14:1, 6, 7.
போர்க்களத்தில்...
ஆசாவின் சரித்திரத்தைப் படிக்கும்போது... விசுவாசத்தைச் செயலில் காட்டுபவர்களுக்கு யெகோவா கைமாறு செய்கிறவர் என்பதை ஆசா அறிந்திருந்தார் எனத் தெரிகிறது. எனவே, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள படைகளிலேயே மிகப் பெரிய படையை எதிர்ப்பட்ட சமயத்தில் யெகோவாவிடம் உதவி கேட்டு ஆசா மன்றாடியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. யெகோவா மேல் சார்ந்திருந்தால்... அவருடைய ஆதரவு இருந்தால்... எதிரி படை எவ்வளவு பெரிதாக இருந்தாலும்சரி எவ்வளவு பலம்படைத்ததாக இருந்தாலும்சரி, கவலைப்படத் தேவையில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். இந்தப் போரில், யெகோவாவின் பெயர் உட்பட்டிருந்ததால், அதற்கு எந்தக் களங்கமும் வராமல் பார்த்துக்கொள்ளும்படி அவரிடம் ஆசா மன்றாடினார். ‘எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்’ என்று அவர் ஜெபம் செய்தார். (2 நா. 14:11) ‘யெகோவாவே, இந்த எத்தியோப்பியர் உங்களைத்தான் தாக்குகிறார்கள். உம்முடைய பெயரை ஏற்றிருக்கும் மக்களை இந்தச் சாதாரண மனிதர்கள் தோற்கடிக்க விடாதீர்கள்; அப்படித் தோற்கடிக்க விட்டீர்கள் என்றால்... உம்முடைய பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும்’ என்று சொல்வதுபோல் இந்த ஜெபம் இருந்தது. ஆசாவின் ஜெபத்தைக் கேட்டு, ‘யெகோவா அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள்.’—2 நா. 14:12.
இன்றைக்கு, யெகோவாவின் மக்களைச் சுற்றிலும் பயங்கரமான எதிரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இஸ்ரவேலரைப் போல் ஆயுதம் ஏந்தி போர்க்களத்தில் நின்று அவர்களோடு நாம் போரிடுவதில்லை. இருந்தாலும், அவருடைய பெயரில் ஆன்மீகப் போரில் ஈடுபடும் உண்மையுள்ள ஒவ்வொருவருக்கும் யெகோவா வெற்றியைப் பரிசளிப்பார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம். அந்த ஆன்மீகப் போரில் இதெல்லாம் உட்படலாம்: இந்தச் சீர்கெட்ட உலகின் மனப்போக்கை எதிர்த்து நிற்பது, நம்முடைய பலவீனங்களை எதிர்த்துப் போராடுவது, நெறிகெட்ட சமுதாயத்தின் பிடியிலிருந்து நம் குடும்பத்தைக் காப்பாற்றுவது. எப்படிப்பட்ட கஷ்டங்களை நாம் எதிர்ப்பட்டாலும், ஆசாவின் ஜெபத்திலிருந்து ஆறுதலைப் பெறலாம். அவருக்குக் கிடைத்த வெற்றி, யெகோவா கொடுத்த வெற்றி. எந்த மனித சக்தியும் யெகோவாவை எதிர்த்து நிற்க முடியாது. கடவுளை நம்பியிருக்கிற எல்லாரும் அதில் உறுதியாய் இருக்கலாம் என்பதை ஆசாவின் பதிவு காட்டுகிறது.
உற்சாகமும் எச்சரிக்கையும்
போர்க்களத்திலிருந்து திரும்பி வந்த ஆசாவை அசரியா தீர்க்கதரிசி சந்தித்தார். அந்தச் சமயத்தில் அவரை உற்சாகப்படுத்தியதோடு ஓர் எச்சரிக்கையும் கொடுத்தார்: ‘ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் யெகோவாவோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். . . . உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு.’—2 நா. 15:1, 2, 7.
இந்த வார்த்தைகள் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன. நாம் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யும்வரை அவர் நம்மோடு இருப்பார் என்று உறுதியளிக்கின்றன. உதவி கேட்டு அவரிடம் மன்றாடினால் நிச்சயம் அவர் நமக்குச் செவிகொடுப்பார். “திடன்கொள்ளுங்கள்” என்று அசரியா சொன்னார். எனவே, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்ய நமக்குப் பெரும்பாலும் அதிக தைரியம் தேவைப்படுகிறது. என்றாலும், யெகோவாவின் உதவியோடு நாம் சரியானதைச் செய்ய முடியும்.
ஆசாவின் பாட்டியான மாக்கா, “அசேராவுக்கு அருவருப்பான உருவமொன்றை” செய்ததால் அரச அன்னைப் பதவியிலிருந்து ஆசா அவளை நீக்கிவிட்டார். அது அவருக்குக் கஷ்டமாக இருந்தபோதிலும் செய்தார். அதோடு, அவள் செய்து வைத்த உருவத்தையும் சுட்டெரித்தார். (1 இரா. 15:13, பொ.மொ.) ஆசா காட்டிய உறுதியையும் தைரியத்தையும் பார்த்து யெகோவா அவரை ஆசீர்வதித்தார். நம் உறவினர்கள் யெகோவாவுக்கு உண்மையாய் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, நாம் யெகோவாவையும் அவருடைய நீதிநெறிகளையும் ஆசாவைப் போல் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். நாம் அப்படிச் செய்தால், நம்முடைய உண்மைத்தன்மைக்கு யெகோவா நிச்சயம் பலன் அளிப்பார்.
விசுவாசதுரோகத்தில் மூழ்கிக் கிடந்த வடக்கு ராஜ்யத்திலிருந்த இஸ்ரவேலரில் அநேகர் யூதாவிற்குத் திரண்டு வருவதைப் பார்க்கும் பாக்கியத்தை ஆசா பெற்றார். இது அவர் பெற்ற பலன்களில் ஒன்று. ஆசாவோடு யெகோவா இருப்பதை அந்த மக்கள் உணர்ந்துகொண்டார்கள். உண்மை வணக்கத்தை அவர்கள் அந்தளவு மதித்ததால் யெகோவாவின் மக்களோடு சேர்ந்து வாழ தங்கள் சொந்த வீடுவாசல்களை விட்டுவிட்டு வந்தார்கள். ஆசாவும் யூதாவிலிருந்த அனைவரும், ‘தேவனாகிய யெகோவாவைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவதற்கு’ சந்தோஷமாய் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அதன் பலன்? ‘யெகோவா அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப் பண்ணினார்.’ (2 நா. 15:9-15) இன்றும்கூட... நல்மனம் படைத்தவர்கள் உண்மை வணக்கத்தார் ஆவதைப் பார்க்கும்போது நாம் ஆனந்தப் பரவசமடைகிறோம், அல்லவா?
அசரியா தீர்க்கதரிசி ஆசாவுக்கு உற்சாகம் அளித்ததோடு, ‘யெகோவாவை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்’ என்ற எச்சரிப்பும் கொடுத்தார். நாம் ஒருபோதும் யெகோவாவை விட்டு விலகாதிருப்போமாக. விலகினால், விளைவு விபரீதமாக இருக்கும்! (2 பே. 2:20-22) யெகோவா ஏன் ஆசாவுக்கு இந்த எச்சரிக்கையைக் கொடுத்தார் என்று வேதவசனங்கள் சொல்வதில்லை. ஆனால், ஆசா அதற்குக் கீழ்ப்படியாமல் போனார்.
“மதியீனமாய் நடந்துகொண்டாய்”
ஆசா அரசாண்ட 36-வது வருடத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்தான். யெகோவாவுக்கும் ஆசாவுக்கும் சேவை செய்ய தன்னுடைய மக்கள் யூதாவுக்குப் போவதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தேசத்தின் எல்லையில் இருந்த ராமா நகரத்தை பாஷா கட்ட ஆரம்பித்தான். இந்த நகரம் எருசலேமுக்கு வடக்கே 8 கிலோமீட்டர் (ஐந்து மைல்) தொலைவில் இருந்தது. எத்தியோப்பிய படையை எதிர்கொண்டபோது கடவுளுடைய உதவியை நாடிய ஆசா இந்தச் சமயத்தில் மனிதர்களின் உதவியை நாடினார். சிரியா ராஜாவுக்குப் பரிசுகளை அனுப்பி இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தைத் தாக்கச் சொன்னார். சிரியர் தாக்க ஆரம்பித்தபோது ராமாவைக் கட்டுவதை பாஷா விட்டுவிட்டான்.—2 நா. 16:1-5.
ஆசா இப்படிச் செய்தது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. அனானி தீர்க்கதரிசியை அனுப்பி ஆசாவுக்கு அதைத் தெரிவித்தார். எத்தியோப்பியரைக் கடவுள் பூண்டோடு அழித்ததைக் கண்கூடாகப் பார்த்திருந்த ஆசா, ‘தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் உணரவில்லை. ஒருவேளை யாராவது அவருக்குத் தவறான அறிவுரையைக் கொடுத்திருக்கலாம். அல்லது, பாஷாவையும் அவனுடைய படையையும் தானே எளிதில் வீழ்த்திவிடலாம் என்றும், ‘அது ஒன்றும் பெரிய படையில்லை’ என்றும் அவர் தப்புக்கணக்குப் போட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் ஆசா, யெகோவாவைச் சார்ந்திருக்காமல் மனிதர்களைச் சார்ந்திருந்தார். அதனால்தான், ‘நீ மதியீனமாய் நடந்துகொண்டாய்; எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்’ என்று அனானி சொன்னார்.—2 நா. 16:7-9; பொ.மொ.
அதைக் கேட்டு ஆசா பொங்கியெழுந்தார். அனானி தீர்க்கதரிசியைக் காவலறையில் போட்டார், அதாவது, தொழுமரத்தில் பூட்டினார். (2 நா. 16:10) ‘இத்தனை வருஷமா உண்மையா சேவை செய்து வந்திருக்கிற என்னை தண்டிக்கப்போவதாக யெகோவா சொல்றது நியாயமா?’ என்று ஆசா நினைத்திருக்கலாம். வயதான காலத்தில் சரியாக யோசிக்கும் திறனை ஆசா ஒருவேளை இழந்து போயிருந்திருப்பாரோ? இதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை.
ஆசாவின் 39-வது வருட ஆட்சியின்போது, அவருடைய பாதங்களை ஒரு கொடிய நோய் தாக்கியதால் அவருடைய உடல்நிலை பயங்கரமாகப் பாதிக்கப்பட்டது. ‘அவர் தன் வியாதியிலும் யெகோவாவை அல்ல, பரிகாரிகளையே தேடினார்’ என்று பைபிள் சொல்கிறது. அந்தச் சமயத்தில் யெகோவாவிடம் முன்புபோல் அவர் நெருக்கமாய் இருக்கவில்லை என்று தெரிகிறது. அப்படிப்பட்ட நிலைமையில்... அவருடைய 41-வது வருட ஆட்சியின்போது இறந்துபோனார்.—2 நா. 16:12-14.
என்றபோதிலும், ஆசாவின் நல்ல குணங்களும் உண்மை வணக்கத்திற்காக அவர் காண்பித்த வைராக்கியமும் அவருடைய தவறுகளையும் விஞ்சி நின்றன. தன்னுடைய கடைசி மூச்சுவரை அவர் யெகோவாவைத்தான் வணங்கினார். (1 இரா. 15:14) அப்படியானால், அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கடந்த காலங்களில் யெகோவா நமக்கு எப்படி உதவினார் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், ஏதாவது பிரச்சினைகள் தலைதூக்கும்போது உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய தூண்டப்படுவோம். என்றாலும், நாம் அநேக வருடங்களாகக் கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்து வந்திருப்பதால் பைபிள் தரும் எந்த ஆலோசனையும் நமக்கு அவசியமில்லை என்று நினைத்துவிடக் கூடாது. நாம் ரொம்ப காலமாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வந்திருந்தாலும்கூட, தவறு செய்தால் அவர் நம்மை நிச்சயம் கண்டிப்பார். அப்படி அவர் நம்மைக் கண்டிக்கும்போது அதை நாம் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், நாம்தான் பயனடைவோம். முக்கியமாக, யெகோவாவுக்கு நாம் உண்மையோடு இருக்கும்வரை, அவர் நமக்குப் பக்கபலமாக இருப்பார். தமக்கு உண்மையாய் இருப்பவர்களை யெகோவாவுடைய கண்கள் பூமியெங்கும் தேடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் சார்பாகத் தம் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்குக் கைமாறு செய்கிறார், ஆம் பலன் அளிக்கிறார். ஆசாவின் நற்செயல்களுக்கு யெகோவா பலன் அளித்தார் என்றால், நமக்கும் பலன் அளிப்பார்.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
ஆன்மீகப் போரில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் யெகோவா வெற்றியைப் பரிசளிப்பார்
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்ய நமக்கு அதிக தைரியம் தேவை