தேவதூதர்கள்—அவர்கள் யார்?
பலம்படைத்த ஒரு சாம்ராஜ்யத்தின் மாமன்னனுக்குத் தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. நெருப்புச் சூளையில் வீசப்பட்டிருந்த மூன்று பேர் மரணத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்கப்பட்டிருந்தார்கள்! அவர்களைக் காப்பாற்றியது யார்? விடுவிக்கப்பட்ட அந்த மூவரிடம் மன்னரே இவ்வாறு கூறினார்: ‘[உங்களுடைய] தேவனுக்கு ஸ்தோத்திரம்; . . . அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.’ (தானியேல் 3:28) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த இந்த பாபிலோனிய மன்னன் ஒரு தேவதூதனின் மீட்புச்செயலை நேருக்குநேர் கண்டார். பூர்வ காலத்தில் கோடிக்கணக்கானோர் தேவதூதர்கள் இருந்ததாக நம்பினார்கள். இன்று ஏராளமானோர் தேவதூதர்கள் இருப்பதாக மட்டுமல்ல, ஆனால் தங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் ஏதோவொரு விதத்தில் செல்வாக்கு செலுத்தி வருவதாகவும் நம்புகிறார்கள். தேவதூதர்கள் யார்? அவர்களுடைய ஆரம்பம் என்ன?
கடவுள்தாமே எப்படி ஓர் ஆவியாக இருக்கிறாரோ, அப்படியே தேவதூதர்களும் ஆவிகளாக இருக்கிறார்கள் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 104:4, NW; யோவான் 4:24) தேவதூதர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:11) அவர்கள் எல்லாருமே ‘பலத்த சவுரியவான்களாய்,’ அதாவது வல்லமைமிக்கவர்களாய் இருக்கிறார்கள். (சங்கீதம் 103:20) மனிதர்களைப் போலவே தேவதூதர்களுக்கு ஆளுமையும், தெரிவுசெய்வதற்கான திறனும் இருக்கின்றன; என்றாலும், அவர்கள் மனிதர்களாகப் படைக்கப்படவில்லை. சொல்லப்போனால், மனிதகுலம் ஆரம்பமாவதற்கு வெகு காலம் முன்னரே—ஏன், இந்தப் பூமி படைக்கப்படுவதற்கும் வெகு காலம் முன்னரே—தேவதூதர்கள் கடவுளால் படைக்கப்பட்டிருந்தார்கள். கடவுள் இந்த ‘பூமியை அஸ்திபாரப்படுத்தியபோது . . . விடியற்காலத்து நட்சத்திரங்கள் [தேவதூதர்கள்] ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே’ என பைபிள் சொல்கிறது. (யோபு 38:4, 7) தேவதூதர்கள் கடவுளால் படைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தேவபுத்திரர் என அழைக்கப்படுகிறார்கள்.
தேவதூதர்களைக் கடவுள் எதற்காகப் படைத்தார்? மனிதர்களுடைய வாழ்க்கையில் தேவதூதர்கள் எந்த விதத்திலாவது பங்குவகித்திருக்கிறார்களா? இன்று நம்முடைய வாழ்க்கையில் அவர்கள் ஏதேனும் செய்துவருகிறார்களா? சொந்தமாகத் தெரிவுசெய்யும் சுதந்திரம் அவர்களுக்கு இருப்பதால், அவர்களில் யாராவது பிசாசாகிய சாத்தானின் வழியைப் பின்பற்றி, கடவுளுடைய எதிரிகளாக ஆகியிருக்கிறார்களா? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் உண்மையான பதில்களை அளிக்கிறது.