வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
யெகோவாவின் உண்மையுள்ள ஊழியனான யோசேப்பு குறிபார்ப்பதற்கு ஒரு விசேஷ வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்தியதாக ஆதியாகமம் 44:5 (NW) குறிப்பிடுவதுபோல் தோன்றுவது உண்மையா?
உண்மையில், யோசேப்பு மாயமந்திர செயலில் ஈடுபட்டார் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மாயமந்திரத்தின் மூலம் எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதை யோசேப்பு உண்மையில் எப்படிக் கருதினார் என பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. முன்பு ஒருமுறை பார்வோனின் கனவுகளுக்கு விளக்கம் சொல்லும்படி யோசேப்புவிடம் கேட்கப்பட்டபோது கடவுள் ஒருவரால் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றி ‘உத்தரவு அருள’ முடியும் என்று திரும்பத்திரும்ப அவர் வலியுறுத்தினார். அதன் விளைவாக, எதிர்காலத்தைப் பற்றி யோசேப்புக்கு அறிவித்தது அவர் வணங்கின உண்மைக் கடவுள்தான், மாயமந்திர சக்திகள் அல்ல என்பதைப் பார்வோனே ஒத்துக்கொண்டார். (ஆதியாகமம் 41:16, 25, 28, 32, 39) பிற்காலத்தில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தில், குறிசொல்வதையும் அஞ்சனம் பார்ப்பதையும் யெகோவா கண்டனம் செய்தார். இவ்வாறு, எதிர்காலத்தை தாம் ஒருவரால் மட்டுமே அறிவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தினார்.—உபாகமம் 18:10-12.
அப்படியென்றால் ‘திறமையாக குறிபார்ப்பதற்கு’ தான் ஒரு வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்தியதாக யோசேப்பு ஏன் தன் வேலைக்காரன் மூலம் குறிப்பிட்டார்?a (ஆதியாகமம் 44:5, NW) அதைத் தெரிந்துகொள்ள யோசேப்பு எந்தச் சூழலில் இந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதை நாம் ஆராய்ந்துபார்க்க வேண்டும்.
கடும் பஞ்சத்தின் காரணமாக யோசேப்பின் சகோதரர்கள் உணவு வாங்குவதற்காக எகிப்திற்குச் சென்றார்கள். பல வருடங்களுக்கு முன்பு இதே சகோதரர்கள்தான் யோசேப்பை அடிமையாக விற்றிருந்தார்கள். இப்போது யோசேப்பு தங்கள் சகோதரன் என்று தெரியாமலேயே அவரிடம் உதவி கேட்டார்கள். அந்தச் சமயத்தில் யோசேப்பு எகிப்தின் உணவு நிர்வாகியாக இருந்தார். யோசேப்பு தன் சகோதரர்களிடம் தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் அவர்களைச் சோதிக்க வேண்டுமென்று நினைத்தார். அவர்கள் உண்மையிலேயே தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தியிருந்தார்களா என்பதை யோசேப்பு தெரிந்துகொள்ள விரும்பினார். அவர்கள் தங்கள் சகோதரனான பென்யமீனையும் அவன்மீது உயிரையே வைத்திருந்த தங்கள் தகப்பனான யாக்கோபையும் உண்மையிலே நேசித்தார்களா, எந்தளவு நேசித்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பினார். அதனால் யோசேப்பு ஒரு நாடகமாடினார்.—ஆதியாகமம் 41:55–44:3.
யோசேப்பு தன் சகோதரர்களின் பைகளில் உணவுப் பொருட்களை நிரப்பி, அவர்களுடைய பணத்தையும் அதிலேயே போட்டுவிடும்படி தன் வேலைக்காரன் ஒருவனுக்குக் கட்டளையிட்டார். அதோடு, தன் வெள்ளிப் பாத்திரத்தை பென்யமீனுடைய பையிலே போடும்படி கட்டளையிட்டார். அந்நிய தேசத்தின் நிர்வாகி என்று தன்னைக் காட்டிக்கொள்வதற்காகவே இவற்றையெல்லாம் செய்யச் சொன்னார். அந்த ஸ்தானத்திற்கேற்ப தன்னையும், தன் நடவடிக்கைகளையும், தன் மொழியையும் மாற்றிக்கொண்டார். அதனால், ஒன்றுமறியாத தன் சகோதரர்களின் கண்களுக்கு அவர் எகிப்தின் நிர்வாகியாகவே காட்சியளித்தார்.
யோசேப்பு தன் சகோதரர்களிடம் பேசியபோதுகூட தொடர்ந்து நாடகமாடுபவராய், “என்னைப் போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா” என்று கேட்டார். (ஆதியாகமம் 44:15) ஆக, அந்தப் பாத்திரம் யோசேப்பு போட்ட நாடகத்தின் ஓர் அம்சம்தான். பென்யமீன் யோசேப்பின் பாத்திரத்தைத் திருடியது எப்படி உண்மையில்லையோ அதே விதமாக யோசேப்பு குறிபார்க்க அந்தப் பாத்திரத்தைப் பயன்படுத்தியதும் உண்மையில்லை.
[அடிக்குறிப்பு]
a இந்தப் பூர்வகால பழக்கத்தைக் குறித்து விளக்குகையில் எஃப். சி. குக் என்பவர் தி ஹோலி பைபிள், வித் எக்ஸ்பிலனேட்டரி அன்டு கிரிட்டிக்கல் கமென்ட்டரி என்ற தனது நூலில் இவ்வாறு சொல்கிறார்: “தங்கம், வெள்ளி, அல்லது மணிக்கற்களை தண்ணீருக்குள் போட்டு அவற்றின் தோற்றத்தை ஆராய்வதன் மூலம் குறி சொல்லப்பட்டது. அல்லது கண்ணாடியில் பார்ப்பதுபோல வெறுமனே தண்ணீருக்குள் பார்க்கப்பட்டது.” பைபிள் கருத்துரையாளரான கிறிஸ்டஃபர் உவர்ட்ஸ்வர்த் இவ்வாறு சொல்கிறார்: “சில சமயங்களில் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அதில் சூரியன் ஏற்படுத்தும் நிழலைப் பொறுத்து குறி சொல்லப்பட்டது.”